 |
கவிதை
தமிழச்சி செ.ஹேமலதா கவிதைகள்
அகநானூறு
காதல் உணர்வில்
உயிரது பாதியாய்
பறிபோகின்ற வேதனையை
சிந்தாமல் சிதறாமல்
அள்ளியெடுத்து அழகாய்
கோர்த்த பாமாலையே
அகநானூறு.
சிலைவடிக்கும் சிற்பியின்
கவனமும் சிலநொடிகள்
சிறகடித்துப் பறக்கமுடியும்
கதவோரம் சாய்ந்து
கால்கடுக்க காத்து
கண்ணிமைகள் இமைத்தால்
கண்ணாளன் வருகின்ற
வழிதனை மறைத்திடுமென
கண்ணிமைக்காமல் கிடக்கும்
பெண்ணவள் உணர்ச்சியே
அகநானூறு.
காதோரம் சுருண்டிருக்கும் கூந்தல்
கன்னத்தை வருடுகையில்
காதலன் தீண்டலென அலைபாயும்
அவளது கண்களின் ஏக்கமே
அகநானூறு.
ஆனால்,
சின்னதொரு குழப்பம்
ஈருடலும் ஓருயிருமே
காதல்.
பிரிவென்பது நினைப்பவர்க்கு
பிரியாத மனமிருக்க
உணர்வென்பது உடனிருக்க
பிரிவென்ற பொய்யெதற்கு
காதலில்,
காதலென்னும் ஊடலில்
பிரிவு பொய்யானால்
பிரிவென்னும் பொய்யினை
மீண்டும் மீண்டும் கூறுவதே
அகநானூறு.
காதல் ஊற்றினைக்
காமக் கடலினைக்
கண்முன் விரித்து
கண்களைக் கட்டிக்கொண்டு
விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டே
அகநானூறு.
காதல் திருட்டு
களவுபோன
கன்னியின் இதயம்
களவாடிச் சென்ற
கள்வனுக்கு எழுதுவது.
இப்பொழுதெல்லாம்
என் இதயம் துடிப்பதில்லையடா
என் இதயம் திருடப்பட்ட இடத்தில்
குடிவந்திருக்கும் உன் நினைவுகளே
என்னில் விடாமல் துடிக்கின்றன
காதல் திருட்டின்போது
நீ விட்டுச்சென்ற அடையாளமாய்
என் கன்னத்தில்
உன் உதடுகளின் ரேகைகள்
தண்ணீர் கேட்ட அம்மாவிடம்
தலையணை எடுத்துக் கொடுக்கும்
கிறுக்கியாய் என்னை மாற்றிவிட்டாயடா
என் கண்களுக்குள்ளும்
காதல்நோய் பற்றிக் கொண்டதடா*
என்ன புரியவில்லையா?
சட்டென வந்த காற்று
சம்மதம் கேட்காமல்
என் உடையினை சாதிக்க
என் கண்கள் காற்றிடம் மொழிகின்றன
இதற்கு உரிமையானவன் நீயல்லவென்று
என்னை வாட்டியெடுக்கும்
காதல்நோயில் தீவிரத்தால்
உன் இதயமென்னும் சிறையில்
நான் கைதியாகிவிட்டேனடா*
திருடியது நீ
சிறைப்பட்டதோ நான்*
என் உயிருக்குள்
அணையாத நினைவென்னும் தீவைக்கும்
காதல்நோயின் தீவிரம் தணிக்க
உன் மணமென்னும் மணவறையில்
என்னை மனைவியாக்க வாடா.
இப்படிக்கு
உன் திருட்டுக்கு
உன்னுள்ளேயே காதல் கைதியான
காதலி இதயம்.
- தமிழச்சி செ.ஹேமலதா ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|