 |
கட்டுரை
தாத்தா மரம் கோவி. லெனின்
தெருவிலிருந்த
பத்து பனிரெண்டு
வேப்ப மரங்களைவிட
குளக்கரையில் நின்ற
ஒற்றை வில்வ மரத்துக்கு
என்ன குறைச்சலென்று
தெரியவில்லை.
வேப்பம்பழக்
கொட்டைகளுக்கிருந்த
விலை
வில்வம் பழத்துக்கில்லை.
“ஒங்க தாத்தா
வச்ச மரம்டா”
பாட்டி மட்டும்
முனகுவாள்
ஒவ்வொரு சமயங்களில்.
வாசல் வேப்பமரத்தில்
ஆட்டுக்கு தழை
ஒடிப்பவரின்
கையை ஒடித்துப்
போடுவது போல்
சத்தம் போடுவார்
மருந்துகடைக்காரர்.
ஆடிட்டரும் அப்படித்தான்
தன் வீட்டு முன் உள்ள
மரத்தை பாதுகாப்பதில்.
வில்வ மரத்துக்கோ
அதன் முள்தான்
வேலி.
வேண்டுதல் நிறைவேற்றி
வேப்ப மரத்தில்
மஞ்சள் கயிறு
கட்டும் பெண்கள்
வில்வ மரத்தை
விட்டுவிடுவார்கள்
விதவைக் கோலத்தில்
புயல் வீசிய
கொடும்பொழுதில்
ஒன்றிரண்டு வேம்புகள்
சாய்ந்துவிட
குளக்கரையில் நின்றது
ஒற்றை வில்வம்
உறுதியாக.
மண்ணெண்ணெய்,
அரிசியெல்லாம்
மக்களுக்கு நிவாரணமாய்
கொடுத்த சர்க்காரோ
சாமியை மட்டும்
கண்டு கொள்ளவில்லை.
பூசைக்கு வில்வம் தேடி
குளக்கரை வந்த
பெரிய கோயில் குருக்கள்
தாத்தா பெயரை
பெருமையோடு சொல்லி
முள் குத்தாமல்
பறித்து வாங்கிச்
சென்றுவிட்டார்
வில்வ இலைகளை.
புயலெதிர்த்த வில்வம்
பூச்சி அரிப்பில்
செத்துப் போனது திடீரென.
மொட்டையாகிக்
கொண்டிருந்த
மரத்திலிருந்து
காய்ந்த இலைகள் உதிர்ந்தன.
தாத்தா நினைவினை
உதிர்க்கும்
தலைமுறையைப் போல.
- கோவி. லெனின்([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|