 |
கவிதை
ஓர் அக்னிப்பறவையும் அதன் தாகமும்
கோகுலன்
வானின் வர்ணங்கள் மட்டும்
ரசிக்கும் நம் கண்களுக்கு
அதன் இதயத்தின் ஓட்டைகள்
அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
நாமும் நமது ஆடம்பர நாய்க்குட்டிகளும்
மென்றுதுப்பிய நச்சுகளே
வானின் இதயத்தை சல்லடையாய்
அரித்துப்போனதையும் அறியாதிருக்கிறோம்
உதயத்திலும் அந்தியிலும்
கண்கொட்டாமல் ரசிக்கப்படும் இதே சூரியனை
ஏறிட்டும் பார்க்காமல் வெறுத்து ஒதுக்குமொருநாள்
நம் சந்ததிக்கு காத்திருப்பதையும்
நாம் உணர்ந்திருக்கவில்லை
வானத்தின் கிழிசல் வழி
சூரியன் ஒழுகிக்கொண்டிருக்க
அதில் நனைந்துதுடிக்கும்
குளிர்பாறைகள் கண்ணீர் வடிக்கின்றன
வானம் கிழிக்கும் நாமோ
கரைந்துபோகுமொரு தோணியுடன்
சிறிதும் கவலையற்றிருக்கிறோம்
அனைவரும் அவரவர் சுயங்களுடன் சுகமாயிருக்க
வெம்மையில் உலாவருமொரு நீர்ப்பறவை
தன் தாகம் தீர்க்கவேண்டி கொஞ்சம் கொஞ்சமாய்
குடிக்கத்துணிகிறது நிலமனைத்தையும்
வெம்மையில் விரியுமொரு திரவப்போர்வையோ
தன் சிறகுகள் விரித்து பூமிப்பந்தை
சுருட்டிக்கொள்ள முயல்கிறது
சூரியனும் பூமிப்பெண்ணின் மேல்
தன் மயிலிறகு முத்தங்கள் மறந்து
கோரமுகம்காட்டத் துணிந்தமைமைக்கு
அவளின் குளிர்முகம் வடிக்கும் கண்ணீரே சாட்சி!
பூமியின் கருப்பை வாசத்திலிருந்தபடியே
அவளின் நீர்க்குடம் உடைவதில்
கொஞ்சமும் அக்கறையில்லாதிருந்தால் எப்படி?
வாருங்கள் மனிதர்களே!
பூமித்தாயின் கண்ணீர் துடைக்க வழி தேடுவோம்,
தாயின் கண்ணீருடன் எந்த பிள்ளையும் சுகமாய் வாழ்ந்ததாய் சரித்திரமில்லை!
- கோகுலன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|