 |
கவிதை
நானும் காதலும் – 5
கோகுலன்
நீ வரைந்த கோலத்தின்
வண்ண மயில்கள் அகவி விடியுமென் காலையில்
பனித்த கூந்தலுடன் தேனீர் கொணர்வாய்
முந்தைய இரவின் மீந்த காதலை இழுத்தணைக்க
மாவிளந்தளிரின் பெயர் சூட்டப்பெறாத
வண்ணத்தினாலான உன் வெட்கம்
காதோரச் சுருள்முடியில் நனைந்து நிற்கும்
பொய்க்கோபம் சிணுங்கி
மார்பில் கைவைத்துத் தள்ளுவதாய் பாவித்தும்
சுற்றிய கரங்களைத் தாண்டாது நிற்குமுனை
மீண்டுமாய்க் குளிக்க வைக்கிற பகற்பொழுதுகள்
சொல்லப்போனால் வெட்கமற்றவையே
முன்னறையில் காய்வெட்டும் அம்மாவின்
தொலைக்காட்சிக் கவனம் அறிந்தவனாகவே
அடுக்களை நுழைவேன் திருட்டுப் பூனையென
வெகு புதிதாய்க் கற்றிருக்கும்
சமையல் கவனத்தில் ஆழ்ந்தவளை
பின்னாலணைக்கப் பதறும் அடுப்பின் நீலச்சுவாலை
செல்லமாய்ச் சலித்து சமையலின் வேகங்குறைத்து
திட்டுவதாய்க் கொஞ்சித் தீர்ப்பாய்; பின்
காய்வெட்டி முடிந்து இங்கிதமாய்
கதைபேசச் சென்றுவிட்ட அம்மாவினை
யாரழைத்து வருவதென குழம்பிச் சிரிப்போம் நாம்
- கோகுலன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|