 |
கவிதை
கோகுலன் கவிதைகள்
காதலிக்கு
அன்புக்காதலியே,
சாதாரணமாய்க் கேட்டுவிட்டாய்
நீ எனக்கு யாரென்று
கவலை சுமந்த
என் கனவுக்கழுதைகளை
கவிதை சுமக்க வைத்தவள் நீ
வேர் அறுபட்ட
இந்த பிஞ்சுச் செடிக்கு
தன்னுயிர் பிரித்து ஒட்டுப் போட்டவள் நீ
வாழ்க்கை சாரளத்தின்
யதார்த்தக் கண்ணாடிகளில்
முட்டிமுட்டி சோர்ந்த தேனிக்கு
சாரளம் திறந்த தென்றல் நீ
சாக்கடைக்கு பயணித்த
ஒரு மழைத்துளியை
உதடேந்திய சக்ரவாகம் நீ
இருந்தும்,
சாதாரணமாய்க் கேட்டு விட்டாய்
நீ எனக்கு யாரென்று
மழை
மேகங்கள் கூடி
தூரல் ஆரம்பித்த மதிய வேளையில்
கொடியில் காய்ந்த துணிகளையும்
முற்றத்தில் காய்ந்த வடகத்தையும்
அவசரமாய் அள்ளிக் குவித்தேன்
நடு வீட்டில்!
ஜன்னல் கம்பிகளின் வழி கைநுழைத்து
கதவுகள் இழுத்து சாத்தும் முன்பே
முகத்தில் முத்தமிட்டன
நான்கு மழைத்துளிகள்
வழக்கம் போல் கால் மிதிபட்டு
அழிந்து போகாமல்
மழைத்துளிகளில் கரைந்து
அங்குமிங்கும் சடுசடு
ஆடிக் கொண்டிருக்கிறது
அள்ளிவைக்க முடியாத
முற்றத்து வர்ணக்கோலம்
கோலத்தின் குதூகலமும்
முகத்தில் விழுந்த மழைத்துளியும்
என்னையும் அழைக்க,
நானும் நனைந்து திளைக்கையில்,
என்னை பொறாமையில்
முறைக்கின்றன
அள்ளிக்குவித்த துணிகளும்
காய்ந்துபோன வடகமும்!
பட்டாம்பூச்சிகளே!!
வாழ்க்கைத் தோட்டத்தில்
பறந்து பறந்து தேன்தேடி
சோர்ந்துபோன பட்டாம்பூச்சிகளே
என் சன்னல் சட்டத்தில்
வந்தமர்ந்து சற்று நேரம்
இளைப்பாறுங்கள்!
என் தூரிகை
உங்கள் இறகு வருடும்
என் பார்வை
உங்கள் சோர்வை
சுளுக்கெடுக்கும்
என் முத்தங்கள்
உங்கள் தாகம் தீர்க்கும்
என் கற்பனைகள்
உங்கள் காயங்களுக்கு
மருந்திடும்
என் கவிதைகள் சில
உங்கள் இதயத்தின்
வெற்றறைகளை நிரப்பும்
திரும்புகையில்
மறக்காமல் தருகிறேன்
ஒரு மூன்றாவது கண்
வாங்கிச்சென்று
உலகை புதிதாய் பாருங்கள்
அதன் பின்
தேன் தேடும் நீங்களெ
தேன் சுரக்கும் பூக்களாய்ப் போவீர்கள்!!
வாழ்க்கை
இன்னும் எழுதப்படாத
என் வாழ்க்கையை
எழுத எத்தனிக்கும்
ஒவ்வொரு முறையும்
சரியாய்த் தீர்ந்து போகிறது
பேனாவின் மை,
இருந்தும்,
தொடர்ந்து கொண்டுதான்
இருக்கிறேன் நான்
சன்னல் சட்டங்களில் சிதறிக் கிடக்கும்
கோடையின் வெம்மையொத்த
என் காலடித் தடங்களில்
மீனுக்காய்த் தூண்டிலிட்டுக்
காத்திருக்கிறது காலம்
எனதறைக்குள் பத்திரமாய்
பூட்டி வைத்திருக்கும்
தொடுவானத்திற்கும்
எனக்கும் மட்டுமே தெரியும்
என் கைகளின் வீர்யம்
வியர்வைகள் மட்டுமே தெளித்து
தூர்வாரிக் கொண்டிருக்கிறேன்
என் கனவுக்குளத்தை
நாளை அதிகாலை மழையில்
அது நிச்சயம் நிரம்பித்தான் ஆக வேண்டும்
என் வளைகுடாக் கணவனே!!
எனக்கு மட்டும் ஏன்
தவணை முறையில் மரணம்?
ஒவ்வொரு முறையும்
நீ என்னை பிரியும் நேரத்தில்
உடலைக் கிழித்து உயிர் பிரியும்
மரணத்தின் வலிதான் எனக்கு
விமானம் நோக்கி நீ நடக்கையில்
குளுகுளு அறையும்
பாலைவனமாகிப் போகிறதே
நீ இறங்கும் பாலைவனம் உனக்கு?
உன் மனதை மட்டும் இங்கு
விட்டுச்செல்வதாய்ச் சொல்கிறாய்
என் உடல் தவிர அனைத்தையும்
நீ அள்ளிச்செல்வதை அறிவாயா?
நீ இல்லாத என் பொழுதுகளை
நீ எங்ஙனம் அறியக்கூடும்?
மாலையின் முதல் விளக்கை
நான் தான் ஏற்றிகிறேன்
இரவின் இறுதி விளைக்கையும்
நான் தான் அணைக்கிறேன்
அத்தனை நீளமான இரவுகளின்
சொந்தக்காரி நான்
பூக்களை வருடும் போது
கையில் ஒட்டிக்கொள்ளும் மகரந்தமாய்
உன் நினைவு வருடும் எனக்கு
கைகளில் ஒட்டிக்கொள்ளும் கண்ணீர்
தொந்தரவுகள் நிறைந்த நள்ளிரவும்
தனிமை நிறைந்த உணவுப்பொழுதிலும்
தோல்விகள் மட்டுமே
பரிமாறிக்கொள்கிறேன் நான்
தூக்கம் வராத இரவில்
துணையிருக்கும் கடிகார ஓசை
பின்முற்றத்தின் காய்ந்த பறவை எச்சமாய்
ரசனையற்றதும்
அருவறுப்பற்றதுமாய் இருக்கிறது
என் வாழ்க்கை
நீ வரும் நாளில் பெய்யும்
மழைக்குப்பின்னரே
அழகாய் இருக்கும் முற்றம், கூடவே நானும்
- கோகுலன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|