 |
கவிதை
நிர்வாணம் ...! மட்டுவில் ஞானக்குமாரன்
நீ ஒரு வல்லரசென்பது
மெத்தச் சரிதான்
மண்டை ஓடுகளின் மேலே
வேறு யார் வந்து கொடி நாட்டுவார்...?
உனக்கோ
கிழித்துப் படிக்க உடல் இல்லை
என்ற கவலை
எமக்கோ
உன்னால்
விழுந்த சடலங்களை புதைத்தழிக்க
திடலில்லை எனும் கவலை.
நீ ஒரு சனநாயக நாடாமே
கஞ்சனுக்கு
கர்ணன் என்ற பெயர் போலிருக்கிறது.
காந்தி சிலை போலவே
உனது அறநெறியும்
நடுத் தெருவிலேயே நிற்கிறது ...
நீ கொடுத்த நிவாரணம் கூட
ஆக்கிரமிப்பெனும்
நிர்வாணத்தை மறைக்கும் ஆடைதானே
உன்னிடம்
நாம் கேட்ட தஞ்சம் கூட
கசாப்புக்கடைக்காரனிடம் அடைக்கலம் புகுந்த
ஆடு போலில்லையா ....?
நீ வலிசெய்தால் மனிதநேயமென்றும்
உனக்கு வலிசெய்கில்
மானிடவிரோதமென்றும் கூறுவதானது
கோவணத்தை
எடுத்து
தலைப்பாகை கட்டுவது போலில்லையா....?
- மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி) ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|