 |
கவிதை
மனக்காடு எஸ்தர் லோகனாதன்
தூக்கணாங்குருவியின்
கூடு!
சுகமாக அடை வைக்கப்பட்ட
சந்தோஷம்
கலாச்சாரத்தின் தடித்தனங்கள்
சட்டை உலுக்கும்
வெந்து தணிந்தது
மனக்காடு!
ததும்பி விட்டுப் போகட்டும்
தவளை குதிக்கும்
கண்குளம்.
இடுகாட்டு சோகங்களுக்கு
முகவரியாகும்
காகிதப்பூக்களை
தபாலிட்டிருக்கிறாய்.
தகிக்கும் வெயிலில் குடை மருந்து,
கால் நடைப் பொழுதுகளில்
நினைவு மேகம்
கருக்கட்டி மழை தழுவும்.
என் தேசத்தில்
கவிதை உயிர்த்தெழும்,
நீ காணாமல் போன
மழை இரவொன்றில்
இரவு இன்னும் விடியவே இல்லை.
கருப்பு விடியல்கள்
எதிரி நாட்டுப்படையாய்
பார்க்கும் இடமெல்லாம்
ஆயுதம் ஏந்தி நடக்கும்
காற்று வந்து சாலை கூட்டும்.
தெருவெங்கும்
மரங்கள் மட்டும் கதை பேசும்.
தூரத்தில் ஓடி வரும்
ஞாபகங்கள் கால் வலிக்க
இலையுதிர் காலம்
சொல்லும் உன் கோபங்களை,
ஒழுகும் கூரையின் மழை இரவு
சொல்லும் உன் வீட்டு வறுமை...
வசந்தகாலம் சொல்லும்
நீ பரிசளித்து பேனையை
நிச்சலன யாத்திரை சொல்லும்
உன் அமைதி சுமந்த
ஆத்மானந்த முகத்தை.
இப்படி இப்படி எல்லாம் சொல்லியும்
இயலாமலே போனது.
அழகற்ற காதலையும்
இடுகாட்டில் பதிலில்லாமல் போன
ஆயுளையும்...
- எஸ்தர் லோகனாதன், ([email protected])
இலங்கை
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|