 |
கட்டுரை
டிசே தமிழன் கவிதைகள்
புத்தக அலுமாரியில்
பெயரறியாப் பூச்சிகள குடிபெயர்கின்றன
புததகமொன்றைத் தொலைப்பதென்பது
காலம் வரைந்த வரைபடத்தின்
கோடொன்றை பறிகொடுப்பதாகும்
அன்றொரு பூச்சியை நசுக்கிக்கொல்கையில்
இரத்தம் வராதது ஆச்சரியமாயிருந்தது
பின்னாளில் என் வரைபடத்திலிருந்து
இந்நாட்டுப்பூர்வீகக்குடியொருவன்
காணாமற்போயிருந்தான்.
------------------------
மாவிளக்கு போட்டுச்சுவைக்க
திருவிழாக்கள் வரும்
எதிர்பார்க்காத் தருணத்தில்
விரலநீவி கண்ணசைத்து
கற்றைகோதி கரைவாய்
என் நாசியைப் பின் தொடர்வது
மாவிளக்குநெய்யா
இல்லை நம்முடல்கள் நேற்றிரா
பகிர்கையில் கசிந்த வியர்வையா?
கடவுளர் உக்கிரவிழி உருட்டினாலும்
தூண்களில் விழித்திருக்கும்
முலைதிறந்த சிலைகளுக்கும்
பொங்கிப் பிரவாகரிக்கும் காமமுண்டு
விலக்கப்பட்ட மூன்றுநாட்களையும் சேர்த்து.
-----------------------------
சதுரம் சதுரமாய் வரைந்த பெட்டிகளில்
முன்னும் பின்னுமாய்
நகர்ந்தபடியிருக்கின்றான் சிறுவன்
அவனது தங்கையொருத்தி
சதுரங்களில் வட்டங்களை வரைகின்றாள்
தோற்றுப் போக விரும்பா எத்தனத்துடன்
புதிது புதிதாய் சதுரங்களை
ஆக்குகின்றான் சிறுவன்
யாரோவொருவர் தோற்றுப்போவதைப்
பார்க்க விரும்பாது
முகத்தை வேறுதிசையில் திருப்ப
அதிருகின்றது மனது
சதுரங்களும் வட்டங்களும்
முந்நூற்றறுபது பாகையினால் ஆனது.
--------------------------------------------
உன்னுடைய பட்டியலில்
இல்லாமற்போய்க் கொண்டிருக்கின்றேன் நான்
அகற்றப்படும் இழைகளிலிருந்து
சிதைந்துகொண்டிருப்பது அருமையான நேசம்
புரட்டாதிச் சனிக்கு காகாவென்று அழைக்க
வந்து தரைபரவும் ஊர்க்காகங்களின் அலகுகளுக்குள்
சிக்கிக்கொண்டிருப்பது மனிதவுடல்கள்
அரளிக்காய் அம்மியில் அரைத்துக் குடித்தவளுக்கு
ச்வர்க்காரத் தண்ணீர் பருக்கியது போல
உனக்கும் எனக்குமான ஸ்நேகிதம்.
- டிசே தமிழன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|