 |
கட்டுரை
கழுகு, வல்லூறுகள், பருந்துகள் தேவமைந்தன்
புலால் உண்ட வாயால்
வள்ளலாரின் பெருமைகள்.
பன்னாட்டுத் தொடர்பினால்
பலகோடிப் பணஇருப்புகள்.
அன்று வியட்நாம்
"இன்றுபோய் நாளை
வராதே!" என்றது.
ட்ரூமனுக்குக் கற்பிக்க
ஜப்பான் மறந்ததை
வியட்நாம்
கற்றுக் கொடுத்துக்
கழற்றியது.
நேற்று ஈராக்.
வீரபாண்டியக் கட்டபொம்மன்
படத்துச் சிவாஜியாய்
விசாரணையின் பொழுது
சதாம் உசேன்.
இன்று ஈரான்.
இப்பொழுது
"என்னிடம் விளையாட்டு
வைத்துக் கொள்ளாதே!"
வெனிசுலா அதிபர்
ஹியூகொ சாவெஸ்
கண்டலிஸா ரைஸுக்கு
விழிப்பூட்டல்.
கழுகுக்கு வயது ஆனது.
வன்முறையில்தான்
ஆழ்ந்த நம்பிக்கை அதற்கு.
உதடுகளில் உலகக் காவலன்.
ஈசாப்பின் 'பூனைத் தவம்.'
லஃபோந்தேனின் அரிமா.
அதெல்லாம் இருக்கட்டும்.
'டாமிபுளூ' மருந்து
ஏராளமாயும்,
பறவைநோய்த் தடுப்பு மருந்து
இருபதுலட்சம் டோஸும்
பன்னாட்டு வல்லூறு ஒன்று
கடந்த மூன்றாம் மாதம்
வரவேற்று வாங்கப் பட்டதாமே.
கழுகு தன் குஞ்சுகளுக்கு
உணவூட்டட்டும்.
ஏனைய எந்தப்பறவையும்
உலகில் வாழலாகாது
என்று முடிவெடுப்பதற்கு
அதற்கோ
அதன் தூதுப் பருந்துக்கோ
அதிகாரத்தை
யார் கொடுத்தது?
- தேவமைந்தன் ([email protected] )
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|