 |
கட்டுரை
எனக்கும் எழுத வந்துவிட்டதே...! பாலசுப்ரமணியன்
துள்ளி விளையாடும்
பள்ளி பருவமது
எள்ளி நகையாடினார் என்னையே.
பக்கத்து பையன்
பாங்காக எழுதுகிறான்
விக்கித்து நிற்கின்றாய் வீணாய் என
பழித்து பேசினார் பண்பற்ற ஆசிரியர்..
அழுத்தி எழுதினேன் அவர் தொடையில்..
பாதியில் போனது பள்ளியும் படிப்பும்
வீதியில் வந்தது என் எதிர்காலமும்
பருவ வயதும் வந்தது
பசியும் பட்டினியும்
என் கூட வளர்ந்தது..
காரோட்டியாய் நான் இருக்கையில்..
முதலாளி முதலில் அன்பு காட்டினார்.
மெல்ல உண்மை முகம் காட்டினார்.
கச்சிதமாக எழுதிவிட்டேன்,
கத்தியால் கணக்கை அவர் கழுத்தில்..
மறை அறியா நான்
நரை திரை காணும் முன்.
சிறை கண்டேன், அங்கு
கல்வி.. கேள்வி கொண்டேன்.
என் அன்பு அப்பா..
நானோ எடுபிடி, வாழ்வில் உயர
புத்தகத்தை எடு.. படி.. என
புத்தி சொன்ன அப்பா.
உங்களுக்கு ஒரு நல்ல செய்தி..
எனக்கு எழுத வந்து விட்டது..
இதோ.. என் முதல் எழுத்து..
வரும்..26ம் தேதி..
எனக்கு..தூக்கு!
- பாலசுப்ரமணியன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|