 |
கவிதை
உன்னால் கலைந்த என் தூக்கம் அசரீரி
கட்டையான மீசையுடையவனும்
அயன்குலையாத ஜிப்பாவை அணிபவனுமாகியவனின்
ஆண்குறித்தனமாய்
உன்னை வழி முழுக்க
நிறுத்தி வைத்திருக்கிறது என் தேசம்.
நிலவிடம் பலவீனப்பட்டு விழுந்து
வீதி நெடுகக் கரைந்து கிடக்கிற இருளும்,
உன் தடுத்து நிறுத்தலில்
மோதிக் கலைந்து
மனம் முழுக்க சிதறிக்கிடக்கும்
நித்திரைத் துண்டுகளுமாக பயணிக்கிறேன்.
கடைசியாகவும் ஒன்பதாவதாகவும் சந்தித்த
நீயும் கூட
ஈரம் காய முன் அவசரமாகச் சுற்றி
சொப்பிங் பேக்குக்குள் வைத்த
என் ஜட்டிவரை பிரித்துப்பார்த்த பின்
என் தேசப்பற்றில் நம்பிக்கை கொண்டவனாய்
என்னை விட்டாய்
தூங்க முடியாமலேயே பிரிய நேர்ந்த
அந்தக் கடைசியிரவின் அலறல்
விடிகாலை கொழும்பில் வைத்து
இப்படிச் சபித்தபடி மறைந்து போனது
அமைதி பற்றியும், ஆழ்சயனம் பற்றியும்
உன் காதுகளுக்குள்
விடிய விடிய ஓதுபவனுகளை
செருப்பாலடிக்கக் கடவது
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|