 |
கட்டுரை
வெளிச்ச விரோதிகள் அனுஷிராம்
காக்கையில்லாத தேசமுண்டு
மழையில்லா தேசமுண்டு
பக்தியில்லா தேசமுண்டு
எங்கே? தாசியில்லாத தேசம்
காட்டுங்கள் ஒன்று.
நாங்கள்
இரவுலகின் ஜீவராசிகள்;
வெளிச்ச உலகின் விரோதிகள்
நாங்கள், பிறர்
அவிழ்ப்பதற்காகவே உடுத்துகிறோம்;
கலைப்பதற்காகவே
அலங்காரம் செய்கிறோம்.
ஆதியிலிருந்து சாதிஒழிப்பு
ஓதிநிற்பது எங்களிடம் தான்
ஆமாம் எவனும்
சாதிகேட்டு படுப்பதில்லை.
பிறந்தது பெண்ணென்றால்
வரவேற்பு பத்திரம்
வாசிப்பது எங்கள்
குலத்தில் மட்டும்தான்.
எத்தனை விதமான ஆண்கள்?
எத்தனை விதமான பேச்சுகள்?
“உன்னைப் பார்க்கும்போது
இறந்துபோன மனைவிமாதிரி
இருக்கிறாய். அவளைப்போல
கொஞ்சம் வெட்கப்படேன்”
“ப்ரெண்ட்ஸ் கம்ப்பெல் பண்ணி
கூப்பிட்டு வந்தாங்க
எனக்கு இதில் இஷ்டமில்லை
கொஞ்சம்நேரம் உட்கார்ந்துட்டு
போயிறேன். தப்பா நினைக்காதே”
“சிகரெட் குடிப்பியா?”
“இல்லை”
“பின்னே வாசம் வருது?”
“அது முன்னவன் கொடுத்த
முத்தத்தின் மிச்சம்”
“ஆயிரம் ரூபா தர்றோம்
நாங்க மூணுபேரும்
ஒரே நேரத்தில் உன்னை”
எத்தனை விதமான ஆண்கள்!
எத்தனை விதமான சரசங்கள்!
அம்மா போலிருக்கிறாய்
என்றவனும் அணைக்காமல்
போகவில்லை.
நட்சத்திர ஓட்டலுக்கு
அழைத்துப் போனான் ஒருவன்
காரல்மார்க்ஸ் என்றான்
பெரியார் என்றான்
சோஷலிசம் வேண்டுமென்றான்
‘பெண்ணிற்கு இழைக்கப்படும்
அநீதி இது’ என்றான்
அரைமணி பேச்சிற்குப்பின்
‘இத்தொழிலை விட்டுவிடு’ என்றான்
‘விட்டுவிடுகிறேன். என்னைக்
கல்யாணம் செய்துகொள்வாயா’
என்று கேட்டேன்.
நாளை வருவதாய்ச்
சொன்னவன் வரவேயில்லை.
வேண்டிக்கொண்டா
இத்தொழில் செய்கிறோம்?
சந்தர்ப்பம் நிர்ப்பந்தம்
செய்ததால் செய்கிறோம்.
சக பெண்களின் முன் ஆடையும்
ஆண்களின் முன் நிர்வாணத்தையும்
அணிந்து கொண்டிருக்கிறோம்.
அந்தரங்கம் கண்டால்
வரவேண்டிய கூச்சம்போய்
ஆண்களின் அம்மணம்
தெருவிலோரு நாயைப்பார்ப்பது
போல் சகஜமாகிவிட்டது.
சில இரவுகளில் பஞ்சுமெத்தை
சில இரவுகளில் புல்தரை
சில இரவுகளில் நின்று கொண்டே
புணர்ந்தவன் அகன்று
போகும்போது பணத்தை
மட்டுமா விட்டுச்செல்கிறான்?
உடலெங்கும் வியர்வையும்,
பல்லால் கடித்த வலியையும்,
இயந்திரமான உணர்வையும்,
முக்கிய உறுப்புகளில்
எச்சிலையும் அல்லவா
மிச்சங்களாக்கிப் போகிறான்.
சொல்லுங்கள்! விரும்பியா
இவ்வாழ்க்கை வாழ்கிறோம்?
பருவவயதில், இதயத்தில்
உன்னைச் சுமக்கிறேன்
என்றவனை நம்பியதில்
வயிற்றில் இரண்டுமாதம்
சுமந்ததுதான் மிச்சம்.
பிள்ளையில்லை என்று
தத்தெடுத்த சித்தப்பாவை
நம்பியதில், நால்வர் கெடுத்து,
இத்தொழிலுக்கு துரத்தியது மிச்சம்.
சினிமாவில் ஹீரோயினாக்குகிறேன்
என்றவனை நம்பியதில்
கூலியில்லாத இரண்டுமாத
இரவுகள்தான் மிச்சம்.
நிறைய ஆண்கள்.
நிறைய ஏமாற்றங்கள்.
மறக்க இயலாத
இரத்த இரவுகள்.
ஆண்களின் இடிதாங்கியாய்
இவ்வாழ்க்கை வாழ்கிறோம்.
மோக லீலைகள்
ஏக சுகமாய் இருப்பது
உமக்குத்தான்
எமக்கு அலுத்துவிட்டது.
மதனபீடம் மண்பிடமாய்
உணர்ச்சியற்றுப் போய்விட்டது.
பணம் வாங்கிக்கொண்டு
பிணமாகக் கீழே கிடக்கிறோம்
யாராவது உம்மைக் கீறினால்
உடலில் ரத்தம் சிந்தும்
எங்களுக்கு விந்துதான் சிந்தும்
குருதிக்குச் சரிபாதியாய்
உடலில் ஓடுவது அதுதான்.
பெண்ணென்றால் பேயுமிரங்குமாம்
நன்றாய்ப் பாருங்கள்!
அது ஆண்குலப்பேயாகத் தானிருக்கும்
இரங்கியதும் இச்சையைத்
தீர்த்துக்கொள்வதற்குத் தானிருக்கும்
பெண்ணாய்ப் பிறந்ததற்கு
மண்ணாய்ப் பிறந்திருக்கலாம்
யாராவது ஒருவர்தான்
உரிமை பாராட்டுவர்
மானத்தையும் கற்பையும்
முதலீடாய் வைத்து
தொழில் செய்கிறோம்
போலிஸ் மாமூல்
ரெளடிகளின் ஓசி
கருத்தடைச் சாதனங்கள்
இவற்றிற்குப் போக
மாறாத பழிச்சொல்லும்
தீராத வியாதிகளும் தவிர
வேறேதும் தேறாது.
மூன்றுவேளை சாப்பிடுகிறோம்
நான்குவேளை குளிக்கிறோம்
முப்பது நிமிடத்திற்கு ஒரு முறை
முகத்திற்கு வெள்ளையடிக்கிறோம்
உதட்டுச்சாயம், கண்மை அப்பி
நிஜமுகத்தை எப்போதோ
நாங்கள் தொலைத்துவிட்டோம்.
வால்மீகி ராமாயணத்தில்
ஒருவன் தொட்டதால்
பட்ட தீட்டை தீர்க்க
சீதைக்கு சிதையை
சிபார்சு செய்தான் ராமன்
சிதையும் சீதையைக் கழுவியது
எங்களுக்கு அவ்வாறு
சிபார்சு செய்யாதீர்கள்.
எம்மைத் தொட்ட
பெருமான்களின் கணக்கு
எமக்கும் தெரியாது;
எம்பெருமானுக்கும் தெரியாது
யார் பார்த்தது? எம்பெருமானும்
அந்த பெருமான்களில்
ஒருவனாய் இருக்கலாம்.
நாங்களும் தீயில்
குளித்து அழுக்கு போக்கவா?
வேண்டாம்! தீ கருகிவிடும்.
கற்பை விற்பதுதான்
விபச்சாரமா?
ஒவ்வொரு பிரச்சாரத்திலும்
வாக்குறுதிகளை விற்று
வாக்குஎண்ணிக்கை முடிவதற்குள்
வாக்குறுதிகளை மறக்கிறார்கள்...
பத்திரிக்கை விற்பதற்கு
பத்திரிக்கைத் தருமத்தையே
விற்று விடுகிறார்களே...
நிதியுடன் வாழ்வதற்கு
நீதியை விற்கிறார்களே...
பாசத்தை விற்றுவிட்டு
பங்கைப் பிரிக்கிறார்களே...
வாக்கு-தர்மம்-நீதி-பாசம்
இவையெல்லாம் விற்கலாமா?
கற்பு விற்பனை மட்டும்
தான் விபச்சாரமா?
கற்பு என்பது
உடலா? மனமா?
மனமொத்து எந்த ஆடவனையும்
யாம் அணைத்ததில்லை.
ஆனால், மேற்படி விற்பனை
எல்லாம் மனமொத்து நடக்கிறது
சொல்லுங்கள்! எது விபச்சாரம்?
விபச்சாரம் எல்லாம்
அபச்சாரம் என்பவர்களே!
வேசித்தொழில் செய்து
உடல்கூசி நாங்கள் நிற்பது
யார் செய்த குற்றம்?
புற்றீசல்கள் எனப்
பிள்ளைகளைப் பெற்று,
போற்றி வளர்க்க இயலாமல்,
ஒருவேளை சோற்றுக்கு
வழியற்றுப் போகச் செய்த,
எம்மைப் பெற்றோர் குற்றம்.
தங்கள் இந்திரியங்களை
கொட்டிச் செல்லும் ஒரு
குப்பைத் தொட்டியாய்
பெண்ணைப் பார்க்கும்
ஆண் வர்க்கத்தின் குற்றம்.
காலங்கள் பலவாய்
திட்டங்கள் பல ஆற்றியும்
சட்டங்கள் பல இயற்றியும் கூட
அனைவர்க்கும் வேலைகொடுக்க
வக்கற்று இருக்கிறதே, இந்த
அரசியலமைப்பின் குற்றம்.
மண்ணை அன்னை என்றும்
நதியை நங்கை என்றும்
சக்தியே தெய்வம் என்றும்
வாய்கூசாமல் கூறிவிட்டு
அதற்கு நேர்மாறாய் நடத்தி
வந்த சமுதாயத்தின் குற்றம்.
பெண்ணாய் இங்கு பிறந்தது
மட்டும்தான் எங்கள் குற்றம்.
இன்று மார்ச் 8
உலக பெண்கள் தினம்
ஆங்காங்கே கருத்தரங்குகள்;
மனித சங்கிலிகள். சரிதான்
சாமிசிலையை விற்றுவிட்டு
திருவிழா கொண்டாடுகிறார்கள்
நரகாசுரர்களை ஒளித்துவைத்து விட்டு
தீபாவளி கொண்டாடுகிறார்கள்.
- அனுஷிராம் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|