 |
கட்டுரை
கடவுளின் கண்கள் ஆதவன் தீட்சண்யா
கடவுளின் கண்களென அந்தரத்தில் சுழலும்
செயற்கைக்கோளுக்கு கீழே
நிற குண மாறுபாடுகளற்ற
இரு சரிநிகர் புள்ளிகள் நாம்
நிலவொளியின் குளுமை கூட்டி
நேற்றிரவு அருந்திய பானத்தின் வாடையையும்
துல்லியமாய் படமெடுக்கும் அதன்கீழ்
எதுவொன்றையும் மறைக்க முடியாதவர்களாயுமாகி
பதற்றமாய் அலுவலகம் கிளம்பும் நம்மைப் பின்தொடரும் கடவுளுக்கு
தயாரித்தளிக்கிறோம் புதிய கண்களை
யாரோ புதைத்த கண்ணிவெடிகள்
செவ்வாய் கிரகத்துப் பனிப்பொழிவு
மகாசமுத்திரங்களில் மையங்கொண்டெழும் புயற்சின்னங்கள்
ஜீவநதிகளில் உயிர்குடிக்கும் நீர்ச்சுழிகளென
கடவுளின் புதிய கண்களுக்கு எதுவும் தப்பாதபோது
எம்மாத்திரம் நாமென்று
கணினியின் எலிப்பொறி மீதேறி
உள்ளங்கைக்குள் கிராமமாய் சுருங்கிச் சுழலும்
ஹைடெக் உலகின் பிரஜைகளாகிறோம்
என்னம்மாவின் பாதத்து பித்தவெடிபோல
பூமியின்மீது விரிசலோடிக்கிடக்கும்
தேசங்களின் எல்லைக்கோடுகளை அழித்து
கிராபிக்ஸ் நுட்பங்களால் வலைதளங்களில் உலவவிடுகிறோம்
புதிய வரைபடங்களை
பணிமுடிந்த பின்னிரவில்
கழுத்துப்பட்டையை நெகிழ்த்தி தளர்த்தியபடி
உனக்கும் எனக்கும்
கோக்கும் பீட்ஸாவும் தட்டுப்பாடின்றி கிடைக்கும் நிம்மதியில்
கண்மூடி மெல்லச்சாவதை
இமெயில் எஸ்எம்எஸ் வழியாக யாவருக்கும் அறிவிக்கிறோம்
எல்லாக் குற்றங்களையும் கண்காணிக்கும்
கடவுளின் கண் பார்த்திருக்க
உன்னையும் என்னையும் புதைக்கின்றனர்
அவரவர் சாதி சுடுகாட்டில்.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|