Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கட்டுரை

குலைவதற்கு முன்னான பொறுமையின் தன்னறிக்கை
ஆதவன் தீட்சண்யா

Enemy இத்தனைக்கு பிறகும்
பொறுமையாகவே இருக்கிறேன்
வெட்டுறுகையிலும் நிழலீந்தும் மரமாக
விற்கப்பட்ட பின்னும்
குளிர்ந்தோடுமொரு நதியாக

அதிகாரத்தின் மாடத்திலிருந்து
நீங்கள் ரசிக்க
அடிமைகள் எமக்குள்
செத்துமோதிய துர்ப்பொழுதுகளில்
அல்லது
பூர்வகுடியழித்து
புதுசாம்ராஜ்யங்களை நிறுவுகையில்
ஏன்
பாமியான் சிலைகளை தகர்த்தபோதோ
பாபர்மசூதி நினைவையும்
பாதாளம் தோண்டி புதைக்கும்போதோ
அலைக்கழிப்பின் உக்கிரம் இறுகி
நான் பொறுமையாகியிருக்கக் கூடுமாதலால்
அது தற்செயலானதல்ல:
கால இட உருவெளி கடந்து பரந்தது

அடிஉதைக்குப் பழகிய
என் அம்மா போல
அவமானங்களால் கறுத்த
ஆப்பிரிக்கன் போல
அணுகுண்டால் பிளந்தாலும்
அருள் மறுக்காத பொக்ரான் பூமியாக
நானும் அமைதியாயிருப்பதாலேயே
வாலி குஜராத்தி தர்காவை
நிரவித்தள்ளியவாறே
முன்பு உடைக்க முடிந்தது
உங்களால் லெனின் சிலையை

அபயமற்று ஓடிய என் நிர்வாணத்தை
திரையிட்டு மகிழ்ந்தீர் மீரட் வீதிகளில்
மாய்த்தீர் எனதுயிரை உடன்கட்டையேற்றி
பகலில் வெளிவராமல்
பதுங்கிவாழப் பணித்ததோடு
சாதி மேன்மையைக் கொண்டாட
மலத்தை வாயில் திணித்தப் பின்னும்
திறந்தேயிருக்கும் கைபர் போலன்
கணவாயில் திரும்பியோடுமாறு
உங்களை துரத்தியடிக்காமலிருப்பதும்
என் பொறுமையின் கொடையால்தான்

எல்லாவகையிலும்
ஒரு மனிதப்பிறவியாய்
வாழத் துடிக்குமென் பெருங்கனவை
சிறைபிடித்தீர் பயங்கரவாத
தடுப்புச்சட்டங்களால்
பேனட்டால் கிழித்தீர்
என் பிறப்புறுப்பை
அவலத்தின் பேருருவான நானோ
பொறுமையாகவே இருக்கிறேன்
தாமிரபரணி மணலுக்குள் சொருகியிருக்கும்
தேயிலைக்காட்டு தொழிலாளியின் ஆவிபோல
முத்தங்காவின் நிசப்தத்தில் உறைந்திருக்கும்
ஆதிவாசியின் ஓலமாக

ஆனால்
ஈராக்கின் இடிபாடுகளிலிருந்தோ
எரிக்கப்பட்ட யாழ்நூலகத்திலிருந்தோ
அல்லது
அணைக்கட்டுகளுக்குள்
மூழ்கிப்போன ஆதிநிலத்திலிருந்தோ
என் பொறுமை குலைந்து வெளிப்படுமானால்
மூடிய ஆலையின் வெளித்தொங்கும்
பூட்டாக துருப்பிடித்தோ
ஹிட்லரின் சிரிப்பாகி மின்னும்
திரிசூல பளபளப்பாகவோ இருக்காது

செளதார் குளத்தில் நீரருந்திய தாகமாக
சீன நெடும்பயணத்தில் நடந்த பாதங்களின் வலுவாக
சியாட்டில் வீதியில் கொப்பளித்த சினமாக
வியட்நாமின் வயல்வெளியிலிருந்து விண்ணுக்கு குறிபாய்ச்சிய விழியாக
பாலஸ்தீன பதுங்குக்குழியிலிருந்து தாயகத்துக்கு பொங்கும் கனவாக
என்னாலும் அனுமானிக்கமுடியாத ஆகப்புது வடிவாக
வெடித்துக்கிளம்பும் என்பொறுமையோடு
நேருக்குநேர் மோதும் காலத்திற்காக காத்திருங்கள் என் எதிரிகளே.

- ஆதவன் தீட்சண்யா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com