 |
கட்டுரை
அபகாரியின் சரிதம் ஆதவன் தீட்சண்யா
அபயமெனக் கேட்டிருந்தால்
தசையறுத்து புசிக்கக் கொடுத்திருப்போம்
ஆனால்
ஒரு அகதிக்குரிய நேர்மையை
ஒருபோதும் கைக்கொண்டதில்லை அவர்கள்
நட்சத்திரஒளி பொழியும்
இரவுகளின்மீது இருள்கவித்து
கன்றுகாலிகளையும் தவசங்களையும்
களவாடிப்போனதை
வயிற்றுப்பிழைப்புக்கான
திருட்டென மன்னித்திருக்கையில்
ஆயுதமுனையில் அடிமைகளாக்கி
வியர்வையின் ஆவிமேவிய
எமது மண்ணை
அவர்கள் அபகரித்த
வரலாற்றை திசைகளறியும்
பால்குடிமறவா எமது
பெண்சிசுக்களின் மார்பிலும்
பதிந்தன அவர்களது பற்குறிகள்
விஷமாகிக் கலந்த அவர்களின் ரத்தத்தால்
சீழ்கட்டி இன்றும் அழுகும் நாளங்கள்
எல்லாவகையிலும் களங்கமாக்கிய பின்
தூய்மைபேசி ஒதுக்கினர் எம்மை
உழைப்பின் நரம்புகள்
புடைத்துக் கொழுத்த
எமது ஏர்க்காளைகளை
யாகங்களில் பொசுக்கித்தின்று விட்டு
எம்மையேப் பூட்டினர் நுகத்தில்
நஞ்சேறியப் பாம்பென
நெளியும் புரிநூல் தரித்து
நாடெங்கும் நத்திப் பரவிய பின்
துகள்களாய் தூக்கிவந்து
கரையான் கட்டியப் புற்று
பாம்புப் புற்றென ஆனதுபோல்
இப்போது சொல்கின்றனர்
அவர்களுடையதாம் இந்நாடு.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|