 |
கட்டுரை
ஞானக்கல்லுடன் சகவாசம் ஆதவன் தீட்சண்யா
பிரத்யேக புஷ்பக விமானமேறி
நேரடியாய் மூலஸ்தானத்திலேயே
பிரசன்னமாவாரென
கணிக்கப்பட்ட கடவுள்
கோவிலுக்கு வெளியிலேயே கலங்கி நின்றிருந்தார்
ஆமை அல்லது நெருப்புக்கோழி போல
தானிட்ட முட்டை பொரிந்து உருவானதில்லை இவ்வுலகென
கற்பூரம் அணைத்து சத்தியம் செய்ததோடு
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பக்தர்களே
ஆக்கியோ அழித்தோ
தனக்கு யாவற்றையும் படைத்தளிப்பதாயும்
தானிதுவரை படைத்ததும் அழித்ததும் ஏதுமில்லையென்றும்
வாக்குமூலத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்
பரிதாபமாயிருந்த அவரை மன்னித்து
டீக்கடைக்கு அழைத்துப்போனால்
என்னொத்து அவரும்
சிரட்டையைக் கழுவியே குடிக்க நேர்ந்த அவமானத்தில்
எதுவொன்றாயினும் என்னையே பொறுப்பாக்கி சபிக்காமல்
இனியாவது கண்டடை எதிரியை என்றார்
ஆமோதித்த நற்பொழுதில்
இதுவரை சொல்லப்பட்டு வந்த ஏழுவழிகளிலுமல்லாது
விகாரமாய் கொல்லப்பட்டிருந்தேன்
கடவுளும்கூட குமைந்து இறுகியிருந்தார் சிலையாக.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|