 |
கட்டுரை
பிரகடனம் ஆதவன் தீட்சண்யா
கற்சங்கிலி அழுந்தி
வடுகாய்த்த கணுவெலும்பும்
முறிந்த மணிக்கட்டும்
நொறுங்கிய கபாலமுமாக
கடைக்காலில் கண்டெடுத்தது
முப்பாட்டன் கூடாயிருக்கும்
சாணிப்பால் குடித்ததும்
சவுக்கடி பட்டதற்குமான சாட்சியங்கள்
மக்கி மறைந்திருக்கும் மண்ணோடு
அதீத பயமோடி புடைத்து
வெடித்த நாளங்களும்
பலவந்தமாய்
தோண்டியெடுக்கப்பட்டு
மண்தூர்ந்த மூளையிடமும் கூடி
அப்பனுடையது
கொழுமுனையில் சிக்கியது
நானும் புதையுற மனமற்று
அசைத்த சிறகுரசி
சிறையாய்க் கவிந்த
வானம் கிழிவதை
போராட்டம் கலகமன்றென
புனித ரகசியக்குறிப்பேடுகள்
எங்கள் குருதியில்
எழுதப்பட்டது
வேறவர் வரலாறன்று
நேற்று முதன்முதலாய் பாடும் போது
இசைமொழியின் அவலமென்று
காதுகளை அடைத்துக்கொண்டதும்
தணற்கனவுகள் வாளாய் வகிர
ஆயிரம் பாதமாகி
ஆடித்திளைக்கையில்
தெறித்த சங்கிலிக்கண்ணிகள் பட்டு
உம் சதங்கை நாவுகள்
ஊமையானதும்
ஜீவரகசிய சேர்மத்திரட்சியில்
அலையாகித்துடிக்கும்
சமுத்திரத்தை
மலட்டுச்சிப்பிகள் ஈனும்
நீர்ப்பாலையென்றே
பொருள் கொண்டதும்
அடப் போங்கடா
பற்றிப்படர பந்தக்கால் தேடாது
சுயம் தேடி சூறையில்
அலையுமெங்கள்
உயிர் வழியும்
மௌனம் அறியாத உங்களுக்கு
இக்கவிதை எதையும்
உணர்த்திவிடப்போவதில்லை
இருப்பினும்
முணுமுணுப்பென்று நீங்கள்
நிராகரித்த எமது பிரகடனம்:
கோட்டையைத் திறக்க
சாவி கேட்டு
காத்திருக்காது யானைக்கூட்டம்.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|