Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureInterview
நேர்காணல்

வியாபாரப் பொருளாகி விட்டது தமிழ் இலக்கியம்: யுகபாரதி
நேர்காணல்: மினர்வா & நந்தன்


கவிஞர், பாடலாசிரியர், பதிப்பக உரிமையாளர், பத்திரிகையாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் யுகபாரதி. பொய்ம்மையும், அலங்காரமும் நிறைந்த திரையுலகில் இருந்தாலும், தனது அடையாளங்களைத் தொலைக்காமல் இயங்கி வருபவர். கீற்றுவுக்காக ஓர் அதிகாலை நேரத்தில் யுகபாரதியை சந்தித்தோம். தனக்கு சரியெனப் பட்டதை எந்தத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாகச் சொல்லும் அவரது இயல்பு பேட்டியை செறிவானதாகவும், சுவாரசியமானதாகவும் மாற்றியது.

Yugabharathi உங்க குடும்ப பின்னணி குறித்து?

என்னோட ஊர் தஞ்சாவூர். அப்பா கம்யூனிஸ்டுக் கட்சியின் நகரச் செயலாளராக இருந்தார். இப்பவும் இருக்கார். அப்பா கட்சியில் இருக்கிறதாலே, வீட்டில் எப்போதும் ஆட்கள் இருப்பார்கள். அரசியல், இலக்கியம்னு சூடா விவாதம் நடக்கும். இலக்கியம்னா மார்க்ஸிம் கார்க்கியோட ‘தாய்’ தான். அவங்க ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டு இதுதான் சரின்னு சொல்லும்போதே அப்ப இதுக்கு எதிரானது எதுன்னு தெரிஞ்சிக்கிற ஆர்வம் வந்தது. சாமி இல்லைன்னு சொன்னா கோவிலுக்கு போகணுமுன்னு தோணிச்சு. என்னோட அம்மா தீவிர பக்தை. ஆனா அவங்க நம்பிக்கையில் அப்பா தலையிட்டது இல்லை. அதேபோல் அப்பாவையும் அம்மா கேள்வி கேட்கிறது இல்லை.

ரொம்பவும் ஜனநாயகமா இருந்தது என்னோட வீடு. பள்ளிப்பாடம் பத்தி என்னோடு அப்பா பேசினதே இல்லை. ஆனா எப்பவும் ஏதாவது படின்னு சொல்லிட்டே இருப்பார். வீடு முழுக்க ரஷ்ய புத்தகங்கள் இருந்ததால் அதைத்தான் படிக்க முடிஞ்சது. படிக்கும்போது அந்த வயதுக்கே உரிய சந்தேகங்கள் நிறைய வந்தது. அப்பா அதை மென்மையா சொல்லிக் கொடுப்பார். பொதுவாவே இயக்கவாதிகள் கிட்ட ஒரு விஷயத்தை சொல்றதில் எளிமையும், அரவணைப்பும் இருக்கும். அது எங்க அப்பாகிட்ட அதிகமாவே இருந்தது.

வீட்டில் எப்பவும் ஆட்கள் அதிகம் இருக்கிறதால ஏதாவது விவாதங்கள் நடந்துக்கிட்டே இருக்கும். நானும் விவாதத்தில் கலந்துப்பேன். என்னோட கருத்துக்களையும் சொல்லுவேன். அது தவறா இருந்தா மென்மையா சொல்லிக் கொடுப்பாங்க. ஒரு கருத்தை ஆணித்தரமா சொல்லணும்னா அதுக்கு ஆதாரம் வேணும்னு தோணிச்சு. அப்பதான் படிக்க ஆரம்பிச்சேன்.

ஒருகட்டத்தில இந்த விவாதங்களால எந்தப் பயனும் இல்லைன்னு தோணிச்சு. சொன்ன விஷயத்தையே எல்லாரும் திருப்பித் திருப்பி சொல்லிக்கிட்டிருக்காங்க. இதுல இருந்து தப்பிக்க நினைச்சப்ப இலக்கியம், கவிதைகள் பக்கம் மனசு திரும்பிச்சு. அது ரொம்ப ஆத்மார்த்தமா இருந்தது. .

அப்ப ஈழத்தில் போராட்டம் தொடங்கி தமிழகத்தில அதன் தீவிரம் வெளிப்பட்ட தருணம். இடதுசாரிகள் அப்ப அதை ஆதரிக்கவில்லை. ஆனா அப்பாவுக்கு அதில் ஆர்வம் இருந்தது. அந்த நேரத்தில் வீட்டுக்கு நிறைய ஈழத் தமிழர்கள் வர ஆரம்பிச்சாங்க. அதில் நித்தின்னு ஒருத்தர் வருவார். அதிகாலையில தான் வருவார். அவர் வந்ததும் இரண்டு நாற்காலிகள் வெளியே போகும். வீட்டுக்கு வெளியே இருக்கிற ஒரு வேப்பமரத்தடியில் அப்பாவும் அவரும் உட்கார்ந்து பேசுவாங்க. அம்மா காஃபி எடுத்துட்டு போவாங்க. அப்பா மட்டும் குடிப்பார். நித்தி வேண்டாம்னு சொல்லுவார். விடியறதுக்குள்ள நித்தி கிளம்பி போயிடுவார்.

ஒருவாரம் போயிருக்கும். அம்மா காஃபி எடுத்துட்டு போறதும், திருப்பி எடுத்துட்டு வர்றதும் தொடர்ந்தது. ஒருநாள் அம்மா கேட்டாங்க, ‘காஃபி குடிக்கிற பழக்கம் இல்லைன்னா முதநாளே சொல்லியிருக்கலாமே, நான் இப்படி தினமும் எடுத்துட்டு வரமாட்டேனே’. அப்பதான் அவர் சொன்னார், ‘இல்லை. இப்ப தினமும் நீங்க தர்றீங்கன்னு குடிச்சா, நாளைக்கு களத்தில ஒரு காஃபிக்காக கூட நான் சோரம் போயிடலாம் இல்லையா” என்னை அதிரவைத்த பதில் இது. இப்படியும் ஒருத்தர் சமூகத்தை நேசிக்க முடியுமா, அதுக்காக தன் விருப்பங்களை விட்டுக்கொடுத்து இவ்வளவு கட்டுப்பாடா இருக்க முடியுமான்னு கேள்வி வந்தது. நானும் இதுமாதிரி ஒரு வேறுபட்ட தளத்தில் தான் இயங்கணும்னு முடிவு பண்ணினேன்.

அப்பதான் ஈழப்போராட்டம் பத்தி ஒரு கவிதை எழுதினேன். என்னுடைய முதல் கவிதை அது. அப்ப எனக்கு 13 வயது. தமிழர் கண்னோட்டம் பத்திரிகையில் வெளிவந்தது. அந்தக் கவிதை வெளிவந்த பிறகு தமிழாசிரியரா இருந்த என் அப்பாவோட நண்பர் செல்வகணேசன் என்னைக் கூப்பிட்டுப் வாழ்த்தினார். கவிதை எழுத மரபு முக்கியம்னு சொல்லிக் கொடுத்தவர் அவர்தான். அடுத்த நான்கு வருடங்கள் எல்லா மாலைவேளைகளும் அவர் வீட்டில் தான் செலவழிச்சேன். எங்க வீட்டை விட அங்க புத்தகங்கள் அதிகம் இருக்கும். அவர் மனைவி வைரமுத்து கவிதைகள்ல ஆராய்ச்சி பண்ணவங்க. அவங்க தான் என்னிடம் புதுக்கவிதை பத்தி பகிர்ந்துகிட்டவங்க.

அப்புறம் தொடர்ச்சியா கவிதை எழுத ஆரம்பிச்சேன். என்னோட இந்த செயல்கள் எல்லாம் அம்மாவுக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. அப்பா மாதிரி இல்லாம நான் வேறு ஒரு துறையை தேர்ந்தெடுத்தது அவங்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது. வீட்டுக்கு வர்ற எல்லார்கிட்டயும் என்னோட கவிதைகள் பத்தி பேச ஆரம்பிச்சாங்க.

மார்க்சிய குடும்ப சூழல் உங்களோடது. அவங்களோட விவாதம் பண்றதுக்காக படிக்க ஆரம்பிக்கிறீங்க. இலக்கியம் மேல் ஆர்வம் வந்து கவிதைகள் எழுதியிருக்கீங்க. ஈழப்போராட்டத்திலும் தொடர்பு இருக்கு. உங்களோட இயங்குதலின் சித்தாந்தம் எதுவா இருக்கு?

இயங்குதலோட சித்தாந்தத்தை யாருமே விவரிக்க முடியாது என்பதுதான் இயங்குதலோட சித்தாந்தமே. நான் சரின்னு நினைச்ச எல்லாமே இன்னிக்கு தவறா இருக்கு. நான் தவறுன்னு நினைச்ச எல்லாமே ஒருகட்டத்தில் சரின்னு தோணியிருக்கு. தனிநபர் வளர்ச்சி, தனிநபர் ஒழுக்கம் இதைப் பத்தியெல்லாம் யோசிக்கும்போது இரண்டு விஷயம் தான் எனக்குத் தோணுது.

தனியா ஒருத்தன் வளர்ந்துடவே முடியாது. அப்ப நமக்குன்னு ஒரு அரசியல் தேவைப்படுது. அது அரசியல் கட்சியாக இருக்கணுங்கிற அவசியம் இல்லை. குறிப்பா தமிழ்ச்சூழல்ல படைப்பாளிக்கு கட்சி அரசியல் அவசியமே இல்லை. தமிழ்ல குறிப்பா சொன்னா சங்க இலக்கியத்தில் இருந்தே எந்த படைப்பாளனும் தன்னை குழு அடையாளத்தோடு பிரதிபலிச்சதே கிடையாது. பொதுத்தன்மையோடு தான் இயங்கியிருக்காங்க.

பொதுவாகவே படைப்பாளிகள் முற்போக்கு, இடதுசாரி சிந்தனைகளோடு தான் இயங்குவாங்க. நானும் அப்படித்தான் இயங்கிட்டிருக்கேன். சிலர் முரண்படலாம். அவர்களைப் பற்றி பேச விரும்பவில்லை. மக்கள் விரோத கருத்துக்களை சினிமாவில எழுதக்கூடாதுன்னு கவனமா இருக்கேன்.

உங்களோட ‘வணக்கம் காம்ரேட்’ங்கிற கவிதையை இடதுசாரிகளைத் தாக்குவதற்கு அதிகம் பயன்படுத்தினார்கள். அந்தக் கவிதை எழுதும்போது இருந்த மனநிலைதான் இப்போதும் இருக்கிறதா?

கவிதையின் ஆகப்பெரும் பயன்பாடு குறித்து ஒரு படைப்பாளி எப்போதுமே சிந்திக்கக்கூடாது. இந்தக் கவிதை, அல்லது கதை எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற முன்யோசனையோடு ஒரு படைப்பாளி எதையும் எழுதக்கூடாது. அந்தக் கவிதை எழுதும்போது என்னோட வயசு 18. எங்க வீட்டுல நான் இருந்த சூழ்நிலையில் நீங்க இருந்தா உங்களுக்கு கம்யூனிசமே பிடிக்காது.

எங்க வீட்டு அடுப்பு அணையவே அணையாது. வீட்டுக்கு யாராவது வந்துட்டே இருப்பாங்க. அம்மா அடுப்படியிலேயே இருப்பாங்க. காஃபி, சாப்பாடு ஏதாவது ஒண்ணு நடந்துக்கிட்டே இருக்கும். இவங்களுக்கு வேற வேலையே கிடையாதா, இதுதான் புரட்சியான்னெல்லாம் எனக்குத் தோணும். புரட்சி மீது எனக்கு விரக்தி கிடையாது. எப்ப பார்த்தாலும் அம்மா அடுப்படியிலேயே இருக்காங்களேங்கிற தாய் மீதான அதீத நேசம்தான் அக்கேள்வியைக் கேட்க வைத்தது.

நான் என்னோட உலகத்தை என் வீட்டிலிருந்துதான் பார்க்கறேன். உலகம் முழுவதையும் வீடா பார்க்கிற மனோபாவம் எனக்கு வளரலைன்னு நினைக்கிறேன். எங்க வீடு ரொம்ப கொடுமையா இருக்கும். திடீர்னு வீட்டுக்குத் தோழர்கள் வந்து அடுத்த மாதம் பத்தாம் தேதி திண்டிவனத்துல செயற்குழு கூட்டம்னு சொல்லிட்டுப் போவாங்க. போகிறதுக்கு காசு வேணும். ஒன்பதாம் தேதி எங்க அம்மாவோட ஏதாவது ஒரு நகை அடகுக்கடைக்குப் போகும்.

அப்பா முழுநேர கட்சி ஊழியரா இருந்தார். அதுக்காக கட்சி கொடுக்கிற பணத்தையும் அவர் வாங்கிக்கலை. மக்களுக்கு சேவை செய்யணும்னு முழு மனதோடும், தார்மீக ஆசையோடும் தான் அதை அவர் செய்தார். அவர் ஊதாரியோ, குடிகாரரோ இல்லை. மக்களை நேசிக்கிறார். அதனால் ஏன் வேலை செய்யலைன்னு அப்பாவை நாங்கள் கேள்வி கேட்கவும் துணியவில்லை.

குடும்ப சூழ்நிலை வேற மாதிரி இருந்தது. வீட்ல நானும் தம்பியும் படிச்சிட்டிருந்தோம். பரீட்சைக்குப் பணம் கட்டணும்னு அப்பாக்கிட்ட போய்க் கேட்டா, நாளைக்கு போஸ்டர் வாங்கணும் முன்னூறு ரூபாய் தான் இருக்குன்னு சொல்வார். பரீட்சை முக்கியமா, போஸ்டர் முக்கியமான்னு கேட்டா, ‘எல்லாம்...புரட்சி வந்தா மாறிடும்டா, அப்ப இந்த பீஸ் எல்லாம் தேவைப்படாதுன்னு சொல்லுவார். மாறுவது இருக்கட்டும். இன்னிக்கு இருக்கிற சூழ்நிலையில் வாழ்ந்தாகணுங்கிற எதார்த்தம் அவருக்குப் புரியாது.

இதைத்தான் கவிதையா எழுதினேன். பக்கத்து வீட்டு தாத்தா இயேசு வரார், இயேசு வரார்னு சொல்லிக்கிட்டே இருக்கிற மாதிரி இவரும் புரட்சி வருது, புரட்சி வருதுன்னு சொல்லிக்கிட்டே இருக்கார்னு எழுதினேன். அது ஒரு விடலைத்தனமான குறும்பு. அதைப் பதிவு பண்னினேன் அவ்வளவுதான்.

அந்தக் கவிதை இந்தளவுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும், எங்க அப்பாவை கட்சியில் இருந்தே விலக்கி வைக்கிற சூழ்நிலை உருவாகும்னு நான் நினைக்கவே இல்லை. அப்பவும் அப்பா என்னை எதுவும் சொல்லலை. கவிதை எழுதறது அவனோட விருப்பம். அதுல நான் தலையிட மாட்டேன். அது அவனோட கருத்துச் சுதந்திரம். ஆனா கட்சி சார்பில் இந்தப் புத்தகத்தை எரிக்கணும்னா நானும் வரேன்னு சொல்லிட்டு வந்தார்.

இப்படி ஒரு அப்பாவை பார்த்த பிறகு ஒருத்தனுக்கு எப்படி மார்க்சியத்தின் மீது வெறுப்பு வரும்? ஆனா வீட்டுச் சூழ்நிலை இப்படித்தான் இருந்ததுன்னு நான் எப்படி சொல்லாம இருக்க முடியும்? அந்த நேரத்து ஆதங்கம்தான் அந்தக் கவிதை. அதை எந்தவித பிரச்சாரத் தொனியும் இல்லாம அந்த நேரத்து மொழிப்பயிற்சியோட எழுதியிருப்பேன். எனக்கு என்ன தோணுதோ அதை எழுதறதுக்கான முழுச் சுதந்திரமும் எனக்கு இருக்கு. எப்போதுமே நான் எதிர்வினையை நோக்கி எழுதியதில்லை.

மார்க்சியம் பிடிக்கலைங்கிறது அந்த நேரத்து ஆதங்கமா, இல்லை அது உங்களோட சித்தாந்தமா?

சித்தாந்த ரீதியா எப்படி மார்சியத்தை எதிர்க்க முடியும்? அதன்பிறகு வந்த என்னோட நிறையக் கவிதைகள் மார்க்சியத்தை ஆதரித்தவைதான். அந்த நூல் வெளியீட்டு விழாவில் கூட அந்தக் கவிதை குறித்து நிறைய விவாதங்கள் வந்தன. அப்போது நான் குறிப்பிட்டது இதுதான். “இந்த மண்னுக்கு எது முக்கியமோ அதை யோசிக்கணும். நீங்க வர்க்கப் புரட்சி தான் சரின்னு சொல்றீங்க. இங்கே சாதிப் பிரச்சனை பெரிசா இருக்கு.”

இப்ப நிலைமை மாறியிருக்கு. பெரியார் சிலைக்கு மாலை போட்டுட்டு தான் கம்யூனிஸ்டு கட்சி மாநாடு நடத்த வேண்டிய சூழல் இன்னிக்கு இருக்கு. அந்த அவசியம் ஏற்பட்டிருக்கு. ஒரு பிரச்சனைக்காக போராடுவது இருக்கட்டும். அந்தப் பிரச்சனையை கையில் எடுப்பதற்கே கம்யூனிஸ்ட்கள் நிறைய தாமதம் செய்கிறார்கள். தமிழ்நாட்ல ஒரு கிராமத்தில் ஒரு பிரச்சனை நடக்குது. அங்க போறதுக்கே யோசிப்பாங்க. அதில் தலையிடலாமா, வேண்டாமான்னு முடிவெடுக்கிறதுக்கு மத்தியக் குழுவை கூட்டுவாங்க. அதுக்குள்ள இங்க பிரச்சனை தீர்ந்து போயிடும். இதெல்லாமே உறுத்தலான விஷயங்கள் தான். நான் சொல்றது மண்ணுக்கேத்த மார்க்சியம்

வரலாற்றில் மாற்றங்களை செய்த எல்லோருமே சூழலை புரிந்து கொண்டு விரைவாக முடிவெடுத்தவர்கள் தான். என்னுடைய வீடு, என்னுடைய ஊர், என்னுடைய நாடு இதைப் பத்திதானே நான் யோசிக்க முடியும். எங்கேயோ கியூபாவில் புரட்சி நடந்தது. இருக்கட்டும். கியூபா எந்த மாதிரியான நாடு? அங்குள்ள உணவு, தட்பவெப்பம், மனிதர்கள், வாழ்க்கை சூழல், நில அமைப்பு எல்லாமே வேறு. இது எல்லாவற்றையும் சார்ந்தது தான் மார்க்சியம், மாற்றம், புரட்சி எல்லாமே. இதை சரியாப் புரிஞ்சிக்கிட்ட ஒரே கம்யூனிஸ்டு தலைவர் எனக்குத் தெரிஞ்சு ஜீவா ஒருத்தர் தான். தமிழின உணர்வுகளோடு யோசித்தவர் அவர்.

அதன்பிற்கு மார்க்சிஸ்ட் தலைவர்கள் யாரும் அவர் மாதிரி சிந்திக்கவில்லை. தமிழிலக்கியம், தமிழர் வரலாற்றையெல்லாம் மறுதலிச்சிட்டு ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம்னு பேசிட்டு இருந்தா இங்கிருக்கிற சாதாரண மக்களுக்கு அது புரிய வேண்டாமா? மார்க்ஸ், ஏங்கல்ஸ்னு தொடர்ந்து பேசுறது எளிய மக்களுக்கு பிரமிப்பாயிடுது. அறிவு எப்பவுமே நெருங்குறதுக்கு தடையா இருக்கிறது இயல்புதானே. ரொம்ப எளிமையான, தோள் மேல் கைபோட்டுட்டு போற கட்சியா இருந்தாலுமே தலைவர்கள் அப்படி இல்லைங்கிறது தான் உண்மை. நான் சொல்வது எல்லாமே பத்து வருடத்துக்கு முந்தைய பார்வை.

பொதுவாகவே படைப்பாளிகள் எல்லாருக்குமே அம்மா மீது அதீத அன்பும், அப்பா மீது வெறுப்பும் இருக்குது. இதை எல்லாருமே பதிவு பண்ணியிருக்காங்க. உங்களோட படைப்புகளிலும் அது தெரியுது. இதை உங்களோட அப்பா எப்படி எடுத்துக்கிட்டார்?

ஏற்கனவே சொன்னமாதிரி அப்பா ரொம்ப ஜனநாயக ரீதியானவர். அவரை விமர்சிக்கிற அளவுக்கு நான் வளர்ந்ததை அவர் ரொம்ப சந்தோஷமா எடுத்துக்கிட்டார். அப்புறமா நான் சினிமாவில பாட்டு எழுத ஆரம்பிச்ச பிறகும் அவர் என் விருப்பங்களில் அதிகம் தலையிட்டது கிடையாது. ஆனந்தம் படத்தில் முதல் பாட்டெழுதினப்போ அவருக்குப் போன் பண்ணிச் சொன்னேன். பாட்டைக் கேட்டுட்டு மறுபடியும் எனக்கு போன் பண்னினார்.

பாட்டு ரொம்ப நல்லா இருந்தது. இதே மாதிரி உன்னோட எல்லாப் பாடல்களும் பாராட்டும்படியா இருந்தா எனக்கு சந்தோஷம் தான். ஆனால் சமூகத்தில பாட்டு எழுதறது பெரிய லட்சியமாகவோ, ஆகச் சிறந்த காரியமாகவோ கருத வேண்டியதில்லைன்னு நான் நினைக்கிறேன்னு சொன்னார்.

ஏன் அம்மா பத்தி அதிகம் பதிவு பண்ணினேன்னு கேட்டா, எல்லா ஆண்களுக்கும் அம்மாவும், எல்லா பெண் குழந்தைகளுக்கும் அப்பாவையும் பிடிக்கிறது இயல்பான விஷயம். படைப்பாளியா இருக்கிறதுல ஒரு வசதி, அதை எழுதிப் பார்த்திடலாங்கிறது. ஆனா அதையும் தாண்டி என்னோட அம்மா எனக்குத் தோழியா இருந்தாங்க. நான் ஆங்கில மீடியம் படித்ததால் ஆரம்பத்தில் கவிதை எழுதும்போது நிறைய ஒற்றுப் பிழைகளோடு எழுதுவேன். அம்மா தான் அதை சரிப்படுத்தித் தருவாங்க.

நான் கவிதை எழுதுவதில் என்னை விட அதிகம் சந்தோஷப்பட்டது என்னுடைய அம்மா தான். என்னோட பேர் பிரேம்குமார். அதை மாத்தி புனைப்பெயர் வைக்கணும்னு ஆசைப்பட்டப்ப எனக்கு யுகபாரதின்னு பேர் வைச்சது என்னோட அம்மாதான்.

அம்மாவைப் பற்றி நான் எழுதிய கவிதைகள் எல்லாமே கொஞ்சம் அதீதமான உணர்வுகள் தான். அவங்களோட எல்லாக் கஷ்டங்களும் தெரிஞ்சதால் அவங்க மேல் எனக்கு வியப்பு அதிகம். அம்மா அவங்க வாழ்க்கையில் இரண்டு தடவை மயங்கி விழுந்தாங்க. ஒண்ணு என்னோட முதல் கவிதை வெளியானப்ப, இரண்டாவது என்னோட முதல் பாட்டு வெளிவந்தப்ப.

அப்பா பத்தியும் நிறைய கவிதைகள் எழுதியிருக்கேன். அவர் வெற்றிலை போடறதே ரொம்ப அழகாவும், பிரமிப்பாவும் இருக்கும். அதைப் பத்தி கூட எழுதியிருக்கேன்.

Yugabharathi உங்களோட கல்லூரி வாழ்க்கை பத்தியும், எப்ப சென்னை வந்தீங்க என்பதைப் பத்தியும் சொல்ல முடியுமா?

பள்ளிப்படிப்பு படிக்கும் போதே நிறையக் கவிதைகள் (கவிதை மாதிரி) எழுதியிருக்கேன். அது எதையும் இப்ப என்னால கவிதைன்னு ஒத்துக்க முடியலை. குடும்ப மலர், வாரமலர்ல வரும் துணுக்குகள் மாதிரிதான் அதெல்லாம்.

ஞாயிற்றுக்கிழமையானா என்னோட நண்பர் கல்யாணராமன் என் வீட்டுக்கு வருவார். கோவில் குருக்களா இருந்தார் அவர். ரயிலடிக்கு போய் அந்த வார இதழ்கள் எல்லாத்தையும் வாங்கிக் கொடுப்பார். அர்ச்சனைத் தட்டு காசை எடுத்து எனக்கு விடுதலை, உண்மையின்னு வாங்கிக் கொடுப்பார். இதே மாதிரி சீனிவாசன்னு ஒருத்தர். அவரும் கோவில் குருக்களா இருந்தவர். என் மேல ரொம்ப அன்பா இருந்தவர்.

கல்யாணராமன் தான் என்னை பெரியார் மையத்துக்கு அழைச்சுட்டுப் போவார். ‘இன்னும் நிறைய எழுதணும்னா இதையெல்லாம் படிக்கணுமாம்’ அப்படின்னு எனக்கு வாங்கிக் கொடுப்பார். வாழ்க்கை எவ்வளவு முரண்பாடா இருக்கு பாருங்க. அவர்கிட்ட போய் நான் எப்படி சாதி பார்க்கவோ, பார்ப்பனர்னு சொல்லி ஒதுக்கவோ முடியும்? பார்ப்பனீயத்தைத் தான் ஒதுக்கணுமே தவிர பார்ப்பனர்களை இல்லைன்னு நான் புரிஞ்சுக்கிட்டது அப்பதான்.

பள்ளிப்படிப்பு முடிஞ்சதும் வீட்டில் என்னை தமிழ் படிக்கச் சொன்னாங்க. நான் தான் தமிழ் படிச்சா வேலை கிடைக்காதுன்னு அறந்தாங்கி பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். கல்லூரியிலும் தொடர்ந்து கவிதை எழுதினேன். அங்கும் நிறைய நண்பர்கள் இருந்தார்கள். நான் கவிதை எழுதறதால எனக்கு அங்கு அதிக மரியாதை இருந்தது. தொடர்ச்சியா பத்திரிகைகள்ல என் படைப்புகள் வந்தது. இதையெல்லாம் கட் பண்ணி அம்மா ஒரு ஆல்பம் தயார் பண்ணி வைச்சிருந்தாங்க.

படிப்பு முடிஞ்சதும் அந்த ஆல்பத்தைக் கொடுத்து, சென்னை போய் பத்திரிகையில வேலை பார்க்கலாமேன்னு அம்மா தான் சொன்னாங்க. நானும் என்னோட நண்பன் சரவணனும் சேர்ந்து சென்னை போகலாம்னு முடிவு பண்ணினோம். சரவணன் கரந்தைக் கல்லூரியில் படிச்சவர். அவர்தான் தமிழில் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தார். சரவணன் எனக்கு இன்னொரு வகையில் பிரமிப்பா இருந்தார்.

எங்க இரண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது. அவங்கப்பா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தவர். ஆனா அவருக்கு திராவிடக் கட்சிகளை விட கம்யூனிசம் அதிகம் பிடிக்கும். ஆனா எனக்கு திராவிடக் கட்சிகளை அதிகம் பிடிக்கும். அதுக்கு வர்ற கூட்டத்து மேல எனக்கு எப்பவுமே ஆசை அதிகம். பொதுவாவே கம்யூனிஸ்டு கட்சி மீட்டிங்குக்கு அவ்வளவு கூட்டம் வராது. ஆனா சரவணனுக்கு இப்படி அதிகமா கூட்டம் வர்றது பிடிக்காது.

தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் கைத் தட்டுறாங்களேன்னு எரிச்சல் படுவார். ஒரு விஷயத்தை அறிவுப்பூர்வமா சொல்லணும்னா அது கம்யூனிஸ்ட் கட்சியிலே தான் இருக்குன்னு சொல்வார். ஒரு விஷயத்தை அழகாச் சொல்ல வேண்டாமான்னு நான் சொல்வேன்.

1200 ரூபாய் பணம், கவிதை ஆல்பத்தோட, சரவணனோடு சேர்ந்து சென்னை வந்தேன். வந்து எல்லாப் பத்திரிகைகளுக்கும் வேலை தேடிப் போனேன். கொண்டு வந்த எல்லாப் பணமும் அஞ்சு நாள்ல தீர்ந்து போச்சு. ஊருக்கு திரும்பலாம்னு யோசிச்சப்ப ஒரு நண்பர் கவிஞர் வித்யாசங்கரை போய்ப் பார்க்கச் சொன்னார். நான் ஏற்கனவே வித்யாசங்கரோட சன்னதம் கவிதைத் தொகுப்பை படிச்சிருக்கேன். எனக்கு ரொம்ப பிடித்த கவிதைகள் அது.

அப்ப அவர் ராஜரிஷி பத்திரிகை ஆசிரியரா இருந்தார். அவர்கிட்ட என்னோட கவிதைகளைக் காண்பிச்சேன். ரொம்ப கம்மியா பேசினார். மறுநாள் வரச்சொன்னார். அன்னிக்கு தான் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய விஷயம் நடந்தது. ஜெயலலிதா அரெஸ்ட்.. அதைப் பத்தி ஒரு கட்டுரை எழுதித் தரச் சொன்னார். அப்படித்தான் சென்னையில் என்னோட வேலை தொடங்கிச்சு.

கணையாழியில் வேலை பார்த்தீங்க இல்லையா? அந்த அனுபவம் பத்திச் சொல்லுங்க

ராஜரிஷி மூடினதும் வேலையில்லாமப் போயிடுச்சு. எனக்கு பத்திரிகை வேலையில ரொம்ப ஆர்வம் வந்தது. இனி பத்திரிகையாளனாயிடலாம்னு முடிவு பண்ணினேன். அடுத்த வேலை கிடைக்கிற வரைக்கும் கவிதைகளைத் தொகுத்து புத்தகமா போடலாமேன்னு வித்யாசங்கர்தான் என்னை ஊக்குவிச்சார். அந்தக் கவிதைகளை தொகுத்து மனப்பத்தாயம்னு ஒரு புத்தகம் கொண்டு வந்தேன். அதுக்கு தமிழக அரசோட விருது கிடைச்சது.

என்னோட புத்தகத்தைப் படிச்சுட்டு கணையாழிக்கு வரமுடியுமான்னு கேட்டதா நண்பர் ஒருவர் சொன்னார். அங்க போன பிறகு வேறு மாதிரியான வாழ்க்கை. அரசியல் பத்திரிகையாளரா இருந்துட்டு இப்ப முழுக்க இலக்கியம் தொடர்பான வேலை. மாசத்தில நாலு நாள்தான் வேலை இருக்கும். படிக்கிறதுக்கு அதிக நேரம் இருந்தது.

வாழ்க்கையில் எனக்குப் பயிற்சி கிடைக்கிற மாதிரியே ஆட்களும், வேலையும் இருந்தது. கஸ்தூரிரங்கன், இந்திரா பார்த்தசாரதி எல்லாம், குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கிற மாதிரி எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தாங்க. கணையாழியில் இருந்தப்போதான் என்னோட இலக்கியக் கொள்கைகள் எல்லாம் மாறிச்சு. எல்லாத்துக்கும் இன்னொரு பக்கம் இருக்கும்னு புரிய ஆரம்பிச்சது. வேற ஒரு மாதிரியாவும் பார்க்கிற பார்வை வந்தது. தஞ்சாவூர்ல இருக்கிற வரைக்கும் மரபுதான் சரின்னு சொல்லிட்டிருந்த நான் மரபு மாதிரி கேவலமானது இல்லைன்னு பேச ஆரம்பிச்சேன்.

கவிதைன்னா புரியற மாதிரி இருக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்த நான் கவிதை ஏன் புரியணும்னு கேட்க ஆரம்பிச்சேன். இது வளர்ச்சியா நான் சொல்ல வரலை. வேற வேற தளங்கள்ல இயங்கற வாய்ப்பு கிடைச்சிதுன்னு சொல்றேன். நிறைய இசங்கள் பேச ஆரம்பிச்சேன்.

கவிதைகளை விட உரைநடையை அதிகம் காதலிக்கிறதாவும், பரீட்சை எழுதற மாதிரியான அனுபவம்னும் உங்களோட ‘கண்ணாடி முன்’ உரைநடைத் தொகுப்பில சொல்லியிருக்கீங்க இல்லையா?

நான் கவிஞனாகவோ, பாடலாசிரியராகவோ அறியப்படறேனே தவிர உண்மையில் நான் 100 சதவீதம் கவிஞனோ, பாடலாசிரியனோ கிடையாது. சூழ்நிலைகள் என்னை எதெதுவாவோ மாத்தியிருக்கு. பத்திரிகைத் துறையில் வேலை பார்த்ததால உரைநடை எழுதவேண்டிய அவசியம் இருந்தது. ஏதாவது படிச்சா உடனே பகிர்ந்துக்க ஆள் தேடுறவன் நான். அப்படி யாரும் பகிர்ந்து கொள்ள இல்லாத சந்தர்ப்பங்களில் தான் அதை எழுத ஆரம்பிச்சது. அப்படி எழுதி வெளிவந்தது தான் ‘கண்ணாடி முன்’ தொகுப்பு.

கவிஞர்கள் உரைநடை எழுதறதுல ஒரு பிரச்சனை இருக்கு. கவிதை மாதிரியே எழுதுவாங்க. ‘மூன்றாம் வீட்டில் இருக்கும் முக்கிய மனிதனின் முகவரி தெரியவில்லை’ன்னு எழுதறது ரொம்ப எரிச்சலான விஷயம். அது அல்ல உரைநடை. கவிஞனா உரைநடையை சரியா எழுதுனது எனக்குத் தெரிஞ்சு கண்ணதாசன் தான். தாய்மையோட எழுதுவார். எதுக்கு எழுதறோமோ அதுக்குத் தக்கவாறு எழுதணும். கணையாழியில் வேலை பார்த்துட்டு ராஜரிஷிக்கு எழுதற மாதிரி எழுதக்கூடாது. அதே மாதிரிதான் உரைநடையும், உரைநடை மாதிரி இருக்கணும்.

12 சிறுகதைகள் எழுதியிருக்கேன். அந்தக் கதைகளை கொஞ்ச நாட்களுக்கு பிறகு படிச்சப்ப எனக்கே பிடிக்கலை. அதனால் நிறுத்திட்டேன். ஒருவேளை பிடிச்சிருந்தா அதையும் எழுதியிருப்பேன்.

நகரத்துக் கவிதை, கிராமத்துக் கவிதை, பெண் கவிதை என்று வகை பிரித்து ஒருவரை ஒருவர் நிராகரிக்கும் போக்கை நீங்க கடுமையா உங்க கட்டுரைகளில் எதிர்க்கீறிங்க?

என்னோட வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்கள் எல்லாருமே நல்லவர்களா இருக்காங்க. எல்லாரோடவும் நெருக்கமாக இருந்திருக்கேன். அதனால் எனக்கு இதில் யாரோடும் எந்தப் பிரச்சனையும் இல்லை. அதையும் தாண்டி மத்தவங்களோட படைப்புகளை விமர்சிக்கிறதில எனக்கு உடன்பாடு இல்லை. அது அவங்களோட படைப்பு. நாம ஒண்ணும் இங்க படைப்புகளை சந்தையில வைச்சு வியாபாரம் பண்ணலை. படைப்பு என்பது ஒரு அனுபவம் அவ்வளவு தான். என்னுடையது பெரிசு, உன்னுடையது நல்லா இல்லைன்னு சொல்றது இல்லை படைப்பு.

நீங்க ஒரு கவிதை எழுதறீங்க, எனக்குப் புரியலைன்னா அது புரியலைன்னு சொல்லலாம். அதை விட்டுட்டு அது நல்ல கவிதை இல்லை, தேறவே தேறாதுன்னு நான் எப்படி சொல்ல முடியும்? ஆகச்சிறந்த கவிஞரா கொண்டாடப்பட்டவனெல்லாம் பின்னால் காணாமப் போயிருக்காங்க. வாழ்ந்த காலத்தில் கொண்டாடப்பட்டவங்களை வரலாறு தூக்கிப் போட்டிருக்கு. அதனால இந்த வகைப்பாடு, குழு மனோபாவம் எல்லாத்தையும் நான் எதிர்க்கிறேன்.

பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு சிற்றிதழ்ல ஜெயகாந்தன் கதைகள் மோசம்னு இன்னொரு படைப்பாளன் எழுத மாட்டான். ஆனா இன்னிக்கு சுந்தரராமசாமி எழுத்துக்கள் எழுத்துக்களே அல்லன்னு இன்னொருத்தர் எழுதறார். காரணம் இரண்டு பேருமே பதிப்பகங்கள் நடத்துறாங்க. தங்களோட பொருள் தான் சிறந்ததுன்னு சொல்றதுக்கு அடுத்தவங்க பொருள் மோசம்னு சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கு.

நான் அறியப்படுவதற்கு எனக்கு மிகப்பெரிய வெகுஜன அடையாளம் இல்லாதபோது எனக்கு இருக்கும் மிகச்சிறிய வட்டத்திலிருந்து என்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கு என் மீதான விமர்சனங்கள் வாய்ப்பாக இருந்தன. ஞானதிருஷ்டி வாங்கிட்டு வந்த மாதிரி விமர்சிக்கிறவங்கல்லாம், ‘இது சரியில்லை’ன்னு சொன்னா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது. ஒருவேளை ஏதாவது தேவதைகள் வந்து இவங்கிட்ட, ‘நீங்க தான் சிறந்த எழுத்தாளர், நூறு வருஷம் கழிச்சு நீங்க ஒருத்தர் தான் நிக்கப் போறீங்கன்னு’ சொல்லியிருக்கலாம். தன்னோட வியாபாரத்திற்காக தமிழில்ல இருக்கிற மொத்த விஷயத்தையும் காலி பண்ணிட்டிருக்காங்க.

எனக்குத் தெரிந்த மனிதர்கள், எனக்குக் கிடைத்த அனுபவம் இவற்றோடு நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உனக்குக் கிடைத்த அனுபவம் என்னைவிட கூடுதலாக இருந்திருக்கலாம். நான் வாழ்ந்த சூழல், நான் படித்த விஷயங்கள் இவற்றை சார்ந்தது தான் என்னோட எழுத்து. இது உனக்கு மோசமானதாகத் தெரியலாம். ஆனால் எனக்கு இது முக்கியமான விஷயமில்லையா. உன்னோட வீட்டில நல்ல சோபா இருக்கலாம். என்னோட வீட்டில் ஒரு உடைந்த நாற்காலி தான் இருக்கிறது. ஆனாலும் என்னோட வீடு எனக்குப் பெரிசுதானே. அதை நீ எப்படி கொச்சைப்படுத்தலாம்? படைப்பு என்பது அவ்வளவுதான். படைப்பாளனாய் இருப்பதில் கர்வம் கொள்ளத் தேவையில்லை.

‘நான் முழுநேரமும் கலைஞனா இருக்கிறேன். அதனால் நான் குடிக்கிறேன்’னு சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீ ஊதாரியா இருக்கிறதுக்கெல்லாம் படைப்பு காரணமா இருக்க வேண்டிய அவசியமில்லை. அது அவரவரோட மனநிலை அவ்வளவுதான். இது எல்லாத்தையும் தாண்டி நிக்கிறது மனிதம் ஒண்னுதான். உலகமே கொண்டாடற ஒரு புத்தகம் எனக்கு பத்துப் பக்கத்து மேல படிக்க முடியலைன்னா அது என்னோட பிரச்சனைதான். அதுக்காக நான் ஏன் புத்தகத்தை குறை சொல்லணும்?

பெண் எழுத்தாளர்கள் நல்லா எழுதறாங்க. அவங்க எழுதற விஷயங்கள், அனுபவங்களும் புதிய மொழியில் இருக்கிறதால எனக்குப் பிடிக்குது. இதைச் சொன்னா அது எப்படி நல்லா இருக்கும்னு கேட்டா என்ன பதில் சொல்றது?

ஒரியக் கவிஞர் ஆஷா மெகந்தியோட ஒரு கவிதை படிச்சேன். ஒரு கணவன் அல்லது காதலனிடம் பேசுற மாதிரியான கவிதை அது. உன்னிடம் இருக்கிற அன்பைக் கொடுன்னு ஆரம்பிச்சு உடம்பிலிருக்கிற ஒவ்வொன்றாகக் கேட்பார். முடிக்கும்போது உன் உடம்பிலுள்ள முதுமையைக் கொடுன்னு கேட்பார். இதுதான் பெண் மனோபாவம். இது ஒரு பெண்ணால் மட்டும்தான் முடியும். ஒரு ஆணால் பெண்ணிடம் உன் முதுமையைக் கொடுன்னு கேட்கவே முடியாது. நிறையப் படிக்கிறபோது நிறையப் பெண் கவிஞர்களிடம் இதுமாதிரியான எழுத்து இருப்பது தெரிந்தது.

கமலாதாஸ் ஒரு கவிதையில் ‘உன் சிதைந்த சௌந்தரியமே என் சரணாலயம்’னு எழுதியிருந்தாங்க. ஆண்களால் முடியாத இதுபோன்ற நுட்பமான வரிகளை பெண்களால் மட்டும்தான் எழுத முடியும்னு தோணிச்சு. பாகுபாடுகளைச் சொல்லி கோஷ்டி சண்டை போடாமல் நுட்பமான விஷயங்களை உள்வாங்கிட்டு இயங்கினால் போதும்னு நான் நினைக்கிறேன்.

பெண் கவிஞர்கள் பத்தி பேசுறதால இந்தக் கேள்வி. சில வருடங்களுக்கு முன்னால் திரைப்படப் பாடலாசிரியர் ஒருத்தர் பெண் கவிஞர்களை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்த வேண்டும்னு சொன்னார். நீங்க இதை எப்படி பார்க்கறீங்க?

அப்படிச் சொன்னவன் என்னோட நண்பன் தான். நீங்க அவனோட பெயரைக் கூட குறிப்பிடலாம். அவனோட அறிவுத்தளம் எவ்வளவுன்னு எனக்குத் தெரியும். அவன் ஒரு அப்பாவி. தமிழிலக்கியம் மட்டுமல்ல, 80களுக்குப் பிறகு வந்த தமிழ் எழுத்தாளர்களோட பெயர்கள் கூட அவனுக்குத் தெரியாது.

ஒரு தொலைக்காட்சியில் வந்த அந்த நிகழ்ச்சிக்கு முதலில் அழைக்கப்பட்டவன் நான் தான். நிகழ்ச்சியில், பெண் கவிஞர்கள் பத்திப் பேசப் போறோம்னு சொன்னார்கள். பதிலுக்கு நான் ஒரே கேள்வி தான் கேட்டேன். ஆசை அதிகம் வைச்சின்னு ஒரு பாட்டுக்கு ரோகிணி ஆடியிருக்காங்க. அதுக்கான விளக்கத்தை நிகழ்ச்சியை நடத்துற ரோகிணி நிகழ்ச்சியின்போது கொடுத்தா நான் இதுல கலந்துக்கறேன்னு சொன்னேன். அவங்க மறுபடியும் எனக்குப் போனே பண்ணலை.

அந்த நிகழ்ச்சி பண்றவங்ககிட்ட ஏற்கனவே ஒரு கருத்து இருக்குது. அதை யார் சொல்வாங்களோ அவங்களைப் பேச வைக்கிறாங்க. இந்த அரசியலை நீங்க புரிஞ்சிக்கணும். அழைக்கப்பட்டவனின் இலக்கிய அறிவு, அவன்கிட்ட இந்தக் கேள்வியைக் கேட்கலாமான்னு அவங்களுக்குத் தோணியிருக்கணும். அதுவும் இல்லை. ‘நமக்கு எதுவுமே தெரியாதே, நாம் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லலாமா’ன்னு சொன்னவன் தயங்கியிருக்கணும். கடைசியா இலக்கிய அறிவற்ற ஒருத்தனோட பேச்சை பிரச்சாரமா பயன்படுத்தினதை பெண் கவிஞர்கள் தவிர்த்திருக்கணும். இது எதுவுமே நடக்கலை.

பெண் கவிஞர்களை பெட்ரோல் ஊத்திக் கொளுத்தணும்னு சொல்லும்போது ஒரு கவிஞரைக் குறிப்பிட்டு சொன்னான். ஆனா அவங்க படைப்புகளை அவன் படிச்சதே இல்லை. ரொம்ப பாவத்துக்குரியவன் அவன்.

பெண் கவிஞர்கள் மீது என்ன மாதிரியான குற்றச்சாட்டுக்களை திரைப்பட பாடலாசிரியர்கள் வைத்தார்களோ, அதைவிட மோசமான வரிகள் திரைப்படப் பாடல்களில் வருகிறதே?

திரைப்படப் பாடலாசிரியர்கள் எல்லாருமே கவிஞர்கள் கிடையாது. என்னைத் கவிஞனாக நினைத்து எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாதுன்னு நான் விரும்பறேன். ஏன்னா பாடலாசிரியரா நான் என்னை பிரகடனப்படுத்தி விட்டேன்.

இயக்குனர் சொல்லக்கூடிய வேலைகளை சொல்லக்கூடியவன் பாடலாசிரியன் அவ்வளவுதான். அவனுக்கு நீங்க கவியரசு, கவிப்பேரரசுன்னு எந்தப் பட்டமும் குடுக்க வேண்டிய அவசியமில்லை. கவிதை வேறு, பாடல் வேறுங்கிறதை தெளிவா புரிஞ்சிக்கணும். இயக்குனர் விவரிக்கிற காட்சியை எழுதுவற்கு ஒரு நபர் தேவை. அவன் கவிஞனா இருக்கணுங்கிற எந்த அவசியமும் இல்லை.

திரைப்படப் பாடல்கள் எப்பவும் சமூகத்தை போல அரசியலைப் போல ஆபாசமாத்தான் இருக்கு. இப்ப அது அதிகமா தெரியறதுக்கு காரணம் இப்ப இருக்கிற காட்சி அமைப்புதான். தொடர்ச்சியா காட்சி ஊடகம் செய்யும் மோசடியும் ஒரு காரணம். வரிகள் ஆபாசமா இருக்குங்கிறதை நான் மறுக்கலை. இது ஏற்கனவே இருந்தது தான். இன்னும் இருந்துக்கிட்டு தான் இருக்கும். இயக்குனரோ, பாடலாசிரியரோ தயங்கி அதை நிறுத்தினால் தான் உண்டு.

இங்கு இருக்கிற நடன இயக்குனர்களுக்குத் தமிழ் தெரியாது. பாடல்ல மனசுன்னு ஒரு வரிவந்தா கேமராவை மார்பு பக்கம் வைக்கிறாங்க. காட்சி அமைப்புகள் மோசமாவதற்கு இதுவும் ஒரு காரணம். இதையும் தாண்டி அந்தப் படத்தோட இயக்குனருக்கு எவ்வளவு இலக்கிய அறிவு இருக்கோ அந்த அளவிற்குத் தான் பாடல் வெளிவரும். வியாபாரத் தேவை இருக்கிறதாக ஒரு காரணத்தை சொல்வாங்க. வியாபாரத் தேவைக்காக வந்த எல்லாப் பாடல்களும் வெற்றி பெறவும் இல்லை. நான் நிறைய மெலடி பாட்டுகள் தான் எழுதியிருக்கேன். ஆனாலும் துள்ளல் இசைப் பாடல்கள் தான் சீக்கிரம் கவனம் பெறுது.

சினிமாவில் எப்படி வாய்ப்புகள் வந்தது?

என்னோட மனப்பத்தாயம் கவிதைத் தொகுப்பை படிச்சுட்டு அசோசியேட் டைரக்டரா இருந்த நண்பர் செழியன் தான் டைரக்டர் களஞ்சியம்கிட்ட அழைச்சுட்டுப் போனார். சினிமா மேல் எனக்கு எந்த ஆசையோ, மரியாதையோ கிடையாது அப்ப. அவர் என்னோட கவிதைத் தொகுப்பைப் படிச்சிருந்தார். பாடல்கள் எழுத முடியுமான்னு கேட்டார். அப்ப நான் அதை பெரிசா எடுத்துக்கலை.

இரண்டு மாசம் கழிச்சு டைரக்டர் களஞ்சியம் மறுபடியும் என்னை வரச் சொன்னார். சரத்குமாரை வைச்சு கேசவன்னு ஒரு படம் இயக்கிட்டிருந்தார். அதுக்குப் பாடல் எழுதச் சொன்னார். தேவாதான் இசையமைப்பாளர். எனக்கு பாட்டு எழுதத் தெரியாதுன்னு உண்மையைச் சொன்னேன். நீ பாட்டெழுது நான் டியூன் போடறேன்னு தேவா சார் சொன்னார். இந்த விஷயம் எனக்கு இப்பவும் ஆச்சரியமா இருக்கு, ‘இப்படியெல்லாம் கூட ஒருத்தருக்கு வாய்ப்பு கிடைக்குமா’ன்னு. எப்படியோ முதல் பாட்டை எழுதிட்டேன்.

பாட்டோட ஷூட்டிங் நடக்கிற இடத்துக்குப் போனா முதல்லே வாட்ச்மேன் என்னை உள்ளே விட மாட்டேன்னு சொல்லிட்டான். நான் கவிஞர்னு தெரிஞ்சதும் அடுத்த இரண்டு நிமிஷத்தில எல்லாமே மாறுது. அவ்வளவு மரியாதை தர்றான். அப்பதான் சினிமா உலகம் எவ்வளவு பொய்மையும், மாயமும் நிறைந்ததுன்னு புரிஞ்சது. சினிமாவே வேண்டாம்னு முடிவு பண்ணேன். கொஞ்ச நாட்களில் அந்தப் படம் நின்னுப் போச்சு.

கணையாழியில் பணியாற்றும் யுகபாரதி பாட்டு எழுதறார்னு வண்ணத்திரையில் நியூஸ் வந்திடுச்சு. ஊர்ல எல்லாரும் பார்த்துட்டு கேட்க ஆரம்பிச்சாங்க. ஆனால் படம் நின்னு போச்சு. நண்பர்களோட தொடர் கேள்விகளைத் தாங்க முடியாமல் அவங்களைத் தவிர்க்க ஆரம்பிச்சேன். அந்தக் கேள்வியை தொடர்ந்து தாங்க முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாயிட்டேன்.

அந்த இடைவெளியில் என்னோட இரண்டாவது புத்தகம் பஞ்சாரம் வெளிவந்தது. அதற்கும் தமிழக அரசு பரிசு கிடைத்தது. புத்தகத்தைப் படிச்சுட்டு தியாகுன்னு ஒரு நண்பர் அறிமுகமானார். வாழ்க்கையில் நான் ரொம்பவும் மதிக்கிற நண்பர் அவர். உதவி இயக்குனரா இருந்த அவர் என்னை இயக்குனர் லிங்குசாமிகிட்ட அறிமுகப்படுத்தினார். அவரும் என்னோட புத்தகங்களை படிச்சிருந்தார்.

சினிமாவுக்கே வரக்கூடாதுன்னு இருந்த என்னைக் கட்டாயப்படுத்தி சினிமாவுக்கு வரவைச்சது லிங்குசாமிதான். பயந்து ஓடிக்கிட்டே இருந்த என்னை அவரும், தியாகுவும்தான் கட்டாயப்படுத்தி பாட்டெழுத வைச்சாங்க. நாணயம் பத்தி ஒரு கவிதை எழுத முடியுமான்னு லிங்குசாமி கேட்டார். நான் எழுதிக் கொடுத்தேன். அதுதான் ஆனந்தம் படத்தில் வந்த ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ பாடல். எஸ்.ஏ.ராஜ்குமார் தான் இசையமைப்பாளர். இப்படித்தான் என்னோட சினிமா அறிமுகம். படம் ஹிட்டாகி, பாட்டும் ஹிட்டாயிடுச்சு.

அப்புறம் இயக்குனர் திருப்பதிசாமி அறிமுகமானார். அவர் உயிரோட இருந்திருந்தா நான் தொடர்ந்து சினிமாவுக்குப் பாட்டெழுதி இருக்க மாட்டேன். வாழ்க்கையில் இதைத் தாண்டி வேறு ஏதாவது நீ செய்யணும்னு சொல்லிக்கிட்டே இருந்தார். திடீர்னு அவர் செத்துப்போனது என்னை பயங்கரமா பாதித்தது. தொடர்ந்து வேலைகள் கூட செய்ய முடியலை. வாழ்க்கை மேலயே ஒரு அவநம்பிக்கை வந்தது.

வேற பாட்டு எதுவும் எழுதலை. தொடர்ந்து எட்டு மாதங்கள் போயிடுச்சு. லிங்குசாமி ரன் படத்தை ஆரம்பிச்சார். அதுக்குப் பாட்டெழுதக் கூப்பிட்டார். வித்யாசாகர் தான் இசையமைப்பாளர். வித்யாசாகரை சந்திக்கிறேன். என்னை முதல் பார்வையிலேயே அவநம்பிக்கையோடு பார்த்தார். இளம் கவிஞர்கள் யாரும் நல்லா எழுதறதில்லைன்னு சொன்னார். எனக்கு பயங்கர கோபம். லிங்குசாமிட்ட சொல்லிட்டு வெளியே வந்துட்டேன்.

நாலு பல்லவியாவது எழுதிக் கொடுங்கன்னு சொன்னார் லிங்குசாமி. மறுபடியும் போன் பண்ணி கண்டிப்பா நீங்கதான் எழுதணும்னு சொன்னார். அப்புறம் இன்னொரு விஷயமும் சொன்னார். “உங்கக்கிட்ட உங்களைப் பத்தி தாழ்வு மனப்பான்மை இருக்கு. அதனால தான் நீங்க உங்களை யாரும் உயர்வா கருதலைன்னு நினைக்கறீங்க, அந்த எண்ணத்தை மாத்துங்கன்”னு சொன்னார். “நீங்க உண்மையிலேயே கவிஞனா இருந்தா வித்யாசாகர் சொல்ற மாதிரி எழுதிட்டு வாங்க”ன்னு சொன்னார்.

அன்னிக்குத் தூக்கமே இல்லை. சித்தர் பாடல்களை ஒருத்தன் நல்லாப் படிச்சிட்டான்னா சந்தம் எழுதறது ரொம்ப ஈஸி. ராத்திரி முழுக்க உட்கார்ந்து சித்தர் பாடல்களைப் புரட்டினேன். ஒரு இடத்தில வந்தது, ‘பெண் எனும் மாயப்பிசாசே’. அந்த இடத்தில் நின்னுட்டேன். அப்படி எழுதின பாட்டு தான் ‘காதல் பிசாசே’. பிசாசுங்கிறது அன்பு அதிகம் வர்ற இடத்தில் சொல்றது தான். என்னை அவநம்பிக்கையோடு பார்த்த வித்யாசாகரே அதை கொண்டாடிட்டார்.

யாரையும் பார்த்த உடனே முடிவெடுக்கக் கூடாதுன்னு நான் அப்பதான் கத்துக்கிட்டேன். அந்தப் பாட்டும் சூப்பர் ஹிட். அதன்பிறகு வித்யாசாகர் இசையில் நிறைய பாடல்கள் எழுதிட்டேன். ஒவ்வொரு தடவையும் அவரைப் பார்த்து நான் பிரமிக்கிறேன். அஞ்சு நிமிஷத்தில ஒரு பாட்டுக்கு இசையமைக்கிறார் அவர். நிறைய பாடல்கள் எழுதினதும் அந்தச் சூழல் என்னை பாடலாசிரியனா மாத்திடுச்சு. அதிலே கிடைச்ச பணமும் பெருமையும் ஒரு காரணம்.

மன்மத ராசா மாதிரியான பாடல்கள் எழுதும்போது இலக்கியவாதி யுகபாரதிக்கு பாடலாசிரியர் யுகபாரதி என்ன பதில் சொல்றார்?

எந்த பதிலும் சொல்றதில்லை. ஏன்னா மன்மதராசா மாதிரியான பாடல்கள் கேவலமானதாகவோ, அருவெருக்கத்தக்கதாகவோ நாம கருத வேண்டியதில்லை. கிராமங்களில் திருவிழாக்களில் நடக்கிற கலைநிகழ்ச்சிகளோட நோக்கம் மக்களை சந்தோஷப்படுத்துறதுதானே. கலை, இலக்கியம் எல்லாமே மக்களுக்காகத் தானே. அந்த வகையில் தான் மன்மத ராசா பாடலைப் பார்க்கணும்னு நினைக்கிறேன்.

Yugabharathi இந்தப் பாட்டைக் கேட்டு சமூகத்தில ஐம்பதாயிரம் பேர் கெட்டுப் போயிட்டாங்கன்னு சொன்னா நான் தூக்கு மாட்டிட்டி சாகணும். பத்து பேர் சந்தோஷமா இருக்காங்க, என் குழந்தை ஆடுதுன்னு சொல்றாங்களே. இந்த வகைப்பாடல்களை அருவெருக்கத்தக்கதா பார்க்க வேண்டியதில்லை. இது மோசம்னா எது நல்லது? குறைவான பேர் ரசிக்கிற சாஸ்த்ரீய சங்கீதம், கர்நாடக சங்கீதத்தை தான் கொண்டாடுறாங்க. நிஜமா கொண்டாட வேண்டியது என்னுடைய இந்தப் பாடலைத் தானே.

ஊர்ல திருவிழாக்கள்ல நடக்கற கரகாட்டத்தை குடும்பமா பார்க்கிறோம். அரசியல் கட்சி மேடைகள்ல தப்பு அடிச்சு பாடினா சிறந்த பாடல்னு சொல்றோம். அதுவே என்னோட பாட்டா சினிமாவுல வந்தா எப்படி தப்பாகும்?

சபாக்கள்ல அவனை உள்ளே விட மாட்டாங்க. ஆனாலும் அது அவனுக்கு நல்ல பாட்டு. நித்யஸ்ரீயோ, சுதா ரகுநாதனோ பாடணும். என்னோட பாட்டையே மதுபாலகிருஷ்ணன் பாடினா நல்ல பாட்டுங்கறாங்க. மன்மதராசா பாட்டை மாலதி பாடினா கேவலமா?

இதுக்கு அடிப்படைக் காரணம் மன அமைப்பு தான். நாம் என்னவாக கட்டமைக்கப்பட்டிருக்கிறோமோ, நமக்கு எது சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை உள்வாங்கிக் கொண்டு நாம் விமர்சனங்களை வைக்கிறோம். அவ்வளவுதான்.

நாமளே மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நம்மளை கேட்கணும். நாம் ஒரு குத்துப்பாட்டைக் கூட ரசிச்சதில்லையா? சமூக காரணிகளுக்காக நாம சில கருத்துக்களை உருவாக்கிட்டு, அதற்குத் தக்கவாறு கேள்விகளை முன்வைக்கிறதும், அந்தக் கேள்விகளுக்கு கவிஞர்கள் வியாபார ரீதியா இதை தவிர்க்க முடியாதுன்னு திணறலான பதில் சொல்றதும் நடக்குது.

மன்மதராசாவுக்கு அப்புறம் அதேமாதிரி ஐம்பது பாட்டெழுத வாய்ப்பு வந்தது. எழுதியிருந்தா சென்னையில் வீடு வாங்கியிருக்க முடியும். எனக்குப் பிடிக்கலை. நான் செய்யலை அவ்வளவுதான். அதனால இலக்கியவாதி யுகபாரதிக்கு என்ன பதில் சொல்லணுங்கிறதெல்லாம் அவசியமே இல்லை. இலக்கியவாதியா இருக்கிறதால இது ஒரு வசதியும் கூடத்தான். மன்மதராசா பாட்டுல ஒரு வரிவரும். ‘பாவத்தைப் போல் ஒளிச்சு வைச்சேன்’. அது பிரெஞ்சு கவிதை. அதை எளிமைப்படுத்தி சொல்லியிருந்தேன். அதனால தான் சொல்றேன். கவிதை வேற, பாடல் வேற. மன்மதராசா பாடல் எழுதியதில் எனக்கு எந்தக் கூச்சமும் இல்லை. அதுதான் என்னோட மொழி. துள்ளல் இசைதான் நம்மோட கலாச்சாரம்.

மன்மதலீலைன்னு தியாகராஜர் சொன்னதைத்தான் நானும் எழுதியிருக்கேன். அத ஒத்துக்கிட்டவங்க, யுகபாரதிய மறுக்க மாட்டாங்க.

‘படித்துறை’ன்னு பத்திரிகை நடத்தினீங்க இல்லையா, அந்த அனுபவம் பத்திச் சொல்லுங்க?

சினிமாவில் பாட்டெழுத ஆரம்பிச்சாச்சு. எங்க போனாலும் மன்மதராசா பாட்டு சூப்பர்னு சொவ்லாங்க. கூடவே இப்ப கணையாழியில இருக்கீங்களான்னு ஒரு கேள்வி. அப்பதான் இரண்டுக்குமான முகங்கள் வேறன்னு தெரிஞ்சது. கணையாழியில இருந்து வெளியேறதா முடிவு பண்ணேன். அந்தப் பாடலை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன். அந்தப் பாடலை 100 சதவீதம் விரும்பித் தான் எழுதினேன்.

கணையாழியில் இருந்து வெளியேறினதும் கணையாழி வாசகர் விஜயராகவன்னு நாம ஒரு பத்திரிகை ஆரம்பிச்சா என்னன்னு கேட்டார். எட்டு இதழ்கள் வெளிவந்தது. நாங்க இரண்டு பேரும் மட்டும்தான் வேலை செய்தோம். நிறைய நேரம் வேலை செய்ய வேண்டி இருந்ததால தொடர முடியாமப் போச்சு. மீண்டும் அதை செய்யணும்னு தோணுது.

நல்ல இயக்குனர்கள்னு பெயர் வாங்கினவங்களும் சரி, இப்ப புதுசா வர்ற இயக்குனர்களும் சரி நல்ல சினிமான்னா அது பாடல்கள் இல்லாத சினிமான்னுதான் சொல்றாங்க. இதை ஒரு பாடலாசிரியரா நீங்க எப்படிப் பார்க்கறீங்க?

திரை விமர்சனத்தைப் படிச்சுட்டு படம் எடுக்க வர்றவங்க சொல்றது இதுதான். கம்யூனிஸ்டுகாரங்க ரஷ்யப் புத்தகங்களை படிச்சுட்டு இந்தியாவில் புரட்சி வரும்னு சொல்ற மாதிரிதான் இது. நம்மோட வாழ்க்கை முறையே பாடல்களோடும், நடனத்தோடும் சம்பந்தப்பட்டது. தமிழ்நாட்டோட வாழ்க்கையை பாடல்கள் இல்லாம எப்படி காண்பிக்க முடியும். ஒரு திருவிழாவை காமிக்கணும். பாடல்களே இல்லாம அதை எப்படி காண்பிப்பீங்க?

கிளாசிக்னு இவங்க சொல்ற படங்கள் எல்லாமே மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவை. அவங்களோட வாழ்க்கை முறையை அவங்க சொல்றாங்க. அதைப் பார்த்துட்டு அதுதான் திரைப்படம்னு சொல்றதெல்லாம் சினிமாவைத் தெரியாம சொல்றது தான்.

இப்ப சினிமாவில் பாடல்கள், கதையோட்டத்துக்கு சம்பந்தமில்லாமல் தானே காட்டப்படுது. பாடல் வரிகள் பின்னணியில் வருவதை யாரும் தவறுன்னு சொல்லலியே?

அத வேணா ஒத்துக்கலாம். கதைக்குத் தேவையில்லாத, வெளிநாடுகளில் போய் படமெடுக்கப்படுகிற பாடல்கள் அவசியமில்லைதான். அப்படிப்பட்ட பாடல்கள் இல்லாமலும் படம் எடுக்கலாம்.

சினிமாவில் தாமரை, தேன்மொழின்னு இரண்டு பேரைத் தவிர பெண் பாடலாசிரியர்கள் இல்லையே, இதற்குக் காரணம் என்ன?

சினிமாவில் பெண்கள் பாட்டெழுதிறதில பல சிக்கல்கள் இருக்கு. இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் எல்லாருமே ஆண்கள். ஒரு பாடலுக்குத் தேவையான காட்சி அமைப்பை விவரிக்கும்போது அதில் பலவிதமான வார்த்தைகளை பயன்படுத்துவாங்க. இதைப் பெண்கள்கிட்ட சொல்றதில சிக்கல் இருக்கு. தான் நினைக்கிற காட்சியை பெண்கள் கிட்ட அவங்களால விவரிக்க முடியாமப் போகும். அதைத் தாண்டி அந்தப் பெண்களும் அதை சரியா எடுத்துப்பாங்கன்னு சொல்ல முடியாது. இல்லையா? இது ஆண்கள் பெண்களின் மன இயல்பை புரிந்திருக்கும் விதம்தானே தவிர வேறொன்றுமில்லை. அதுக்கு அவங்க இன்னமும் நிறையத் தயாராகணும். அப்பதான் இந்த நிலைமை மாறும்.

இப்ப இருக்கிற இளம் பாடலாசிரியர்களுக்கு இடையேயான உறவு எப்படி இருக்கு? மூத்த கவிஞரான வைரமுத்துவுக்கும், உங்களை மாதிரி இளைஞர்களுக்கும் தொடர்ந்து மோதல் வந்துக்கிட்டே இருக்கே?

சினிமா ஒரு பெரிய துறை. அதில் ஒவ்வொருத்தரும் தனக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டும் பண்ணிட்டும் போறாங்க. அவ்வளவு தான். இதில அவங்களோட உறவு எப்படி இருந்தால் என்ன? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருக்காங்க. அது அவங்களோட மன இயல்பை பொறுத்தது அவ்வளவுதான்.

வைரமுத்துவை நான் ஒரே ஒரு தடவைதான் நேரில் சந்திச்சேன். கணையாழியில் வேலை பார்த்தபோது நடந்தது அது. அப்ப என்னோட கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருந்தது. ஒரு பத்திரிகைக்காக இரண்டு பேரும் சந்திச்சோம். இலக்கியம் தொடர்பா கடுமையான விவாதங்கள் நடந்தது. அவர் சொல்ற எல்லாத்தையும் நான் கடுமையா மறுத்தேன். விவாதத்தை முடிஞ்சு, பத்திரிகைக்காரங்க போன பின்னாடி, வைரமுத்து எங்கிட்ட சொன்னார். ‘நிறையப் படிக்கறீங்கன்னு தெரியுது, உங்களோட எழுத்தும் நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க’ அப்படின்னு சொன்னார். நல்ல விஷயம் தான். அந்தச் சின்னப் பாராட்டைக்கூட மத்தவங்க முன்னாடி சொல்லாம தனியாச் சொன்னார். அதுதான் வைரமுத்து.

இன்னிக்கு சினிமாவே கட்சி அரசியல் சார்ந்து இயங்கிட்டு இருக்குது. அந்த நிலை பாடலாசிரியர்களுக்கும் தொடருதா? தொடர்ந்து இயங்கறதுக்காக யாரையாவது சார்ந்து இயங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கா?

சரியாச் சொல்லணும்னா இப்பத்தான் பாடலாசிரியர்கள் சுதந்திரமா இயங்குறாங்க. பட்டுக்கோட்டை, கண்ணதாசன் அவங்கல்லாம் ஒரு கட்சியில் இருந்தவங்க. இப்ப நிலைமை அப்படி இல்லை. என்னை மாதிரி கட்சி சாராத ஆட்களும் சினிமாவில் இயங்க முடியுது. ஆனாலும் ஒரு சிலர் அவங்களோட தனிப்பட்ட லாபத்துக்காக கட்சி அரசியலை பயன்படுத்திட்டு இருக்காங்க. எனக்கு அந்த மாதிரி எந்த அவசியமும் இதுவரை ஏற்படலை.

நீங்க எப்படி அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

கொஞ்சமாவது மனிதனாக. கொஞ்சமாவது அக்கறையுள்ள ஜீவனாக. பத்திரிகையாளன், கவிஞன், திரைப்பாடலாசிரியன் என்பதிலும் பார்க்க இப்போது என் அம்மாவுக்கு பொறுப்பான மகனாக அறியப்படுவதில் கூடுதல் சந்தோசம். கீற்று எப்படி அசையும் வேரில்லாமல்?

- யுகபாரதி ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com