Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தேசியவாதிகளை குழப்பும் கார்போரேட்டுகள்
சதுக்கபூதம்


white_house ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டினரால் தொடங்கப்படும் கம்பெனிகளின் வளர்ச்சிக்கும் அதற்கு சலுகைகளைக் கொடுத்து அதன் முன்னேற்றத்திற்கும் போராடுவதுதான் பல காலமாக தேசியவாதிகளின் நோக்கமாக இருந்தது. உள்நாட்டு முதலீட்டாளர்களின் வளர்ச்சியால் உள்நாட்டு தொழில் துறை வளர்ந்து, நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது தான் அதற்கான காரணமாக இருந்தது. இதில் பெருமளவு உண்மையும் இருந்தது. ஆனால் ஒரு சில உள்நாட்டு தொழில் அதிபர்களே இதையே போட்டியைக் குறைக்க ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, தனக்குக் கிடைக்கும் லாபங்களை அத்துறையின் புதிய கண்டுபிடிப்புகளுக்குச் செலவிடாமல், தவறான வழிகளில் தங்களுடைய சொந்த லாபங்களுக்கு பயன்படுத்தத் தொடங்கினர்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின் வளர்ந்த நாடுகளின் முதலாளிகளால் உலகுக்கு திணிக்கப்பட்ட உலகமயமாதல் கொள்கை (Globalalization), உலக நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் களங்களில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கின. வளரும் நாடுகள் மற்றுமின்றி வளர்ந்த நாடுகளிலும் இந்த மாற்றத்தின் தாக்கம் வெகுவாக இருக்கிறது. தேசியவாதிகளிடம் தற்போது ஏற்பட்டுள்ள மிகப் பெரிய குழப்பம், உண்மையிலேயே எந்தக் கம்பனியை தங்களுடைய நாட்டின் கம்பெனி என்று அழைப்பதுதான். இதில் எதற்குக் குழப்பம், இது மிகவும் எளிதான விஷயம் தான் என்று நினைக்கிறார்களா? தற்போது கம்பெனிகளின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நீங்களும் பாருங்களேன். உலகமயமாக்காலால் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் முக்கியமானது பொருளின் உற்பத்தியை எப்பாடுபட்டாவது மலிவாக உற்பத்தி செய்வதும், மூலதனங்கள் நாடுகளின் எல்லையைக் கடப்பது எளிதானதும் ஆகும்.

பொருளின் உற்பத்தியை மலிவாக்க கம்பெனிகள் செய்யும் முயற்சியால் ஏற்படும் பாதிப்பு பற்றி பார்ப்போம். ஒரு உற்பத்திப் பொருளை சுதேசி பொருள் என்று எப்படி அழைப்பது? அந்தப் பொருளை உற்பத்தி செய்யும் கம்பெனி துவங்கப்பட்ட நாடு சொந்த நாடாக இருந்தால் அதை சுதேசிப் பொருள் என்று அழைப்பதா? அல்லது அந்தப் பொருளின் உற்பத்தி முழுவதும் அந்நாட்டுத் தொழிலாளர்களை வைத்து உற்பத்தி செய்து, அந்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை மற்றும் வியாபாரப் பெருக்கம் செய்யும் வெளிநாட்டை தலைமையிடமாகக் கொண்ட கம்பெனி தயாரித்த பொருளை சுதேசி பொருள் என்பதா? இப்பிரச்சனை அமெரிக்க கார் தொழிலில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தற்போது பெருமளவு வெளியில் பேச தொடங்கப்பட்டுள்ளது.

உதாரணமாக போர்டு கம்பெனியின் கார்களின் பெரும்பாலான பகுதிகள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு, மெக்ஸிகோ மற்றும் கனடா நாடுகளில் இணைக்கப்படுகின்றன. ஆனால் கம்பெனி அமெரிக்காவைத் தலமையிடமாக்க் கொண்டுள்ளது. ஒரு சில டொயோட்டா நிறுவனத்தின் கார்களின் 85% பகுதிகள் அமெரிக்காவில், அமெரிக்கர்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் வெளிநாட்டினரை வைத்து வெளிநாட்டில் தயாரித்து அமெரிக்காவில் விற்கும் காரை அமெரிக்கக் கார் என்பதா? அல்லது அமெரிக்கர்களை வைத்து அமெரிக்காவில் தயாரிக்கும் வெளிநாட்டைத் தலைமையிடமாக கொண்ட காரை அமெரிக்க கார் என்பதா? (ஏனென்றால் லாபத்தை தன் சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது). இதைப் படிக்கும் உங்களுக்கு இதன் விடை தெரிந்தால் அமெரிக்கர்களுக்கு கொஞ்சம் தெரியப்படுத்துங்களேன்.

அடுத்ததாக ஒரு சில கம்பெனிகளை சுதேசிக் கம்பெனி என்று அரசு பல சலுகைகள் கொடுத்து அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. அந்த நிறுவனம் பலம் வாய்ந்த பன்னாட்டு நிறுவங்களோடு போட்டி போட வேண்டும் என்பதால் அதற்கு பல சலுகைகளை இந்தியா போன்ற நாடுகளின் அரசுகளும் தங்கள் நாட்டு கம்பெனிக்கு பல சலுகைகளை கொடுத்து ஊக்குவிக்கிறது. கம்பெனியும் நன்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்த பின் அதை ஒரே நாளில் மற்றொரு பன்னாட்டு கம்பெனி வாங்கிவிடுகிறது. அதுவரை அதன் வளர்ச்சிக்கு lobby செய்த தேசியவாதிகள் வாயடைத்துப் போகின்றனர். இதற்கு ரான்பாக்சி கம்பெனி ஒரு நல்ல உதாரணம். மருந்து உற்பத்தி தொழிலில் (Pharmaceutical) இந்தியத் திறமைக்கு ஒரு எடுத்துகாட்டாக உலக அரங்கில் பேசப்பட்டது. அரசும் நேரடியான மற்றும் மறைமுக சலுகைகள் பல அளித்தது. ஆனால் ஜப்பானைச் சேர்ந்த டெய்ச்சி நிறுவனம் அதை வாங்கிவிட்டது. தற்போது அது ஜப்பானிய நிறுவனமாக ஆகிவிட்டது.

உள்நாட்டு நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடைக்கலமாவது மேற்கண்ட முறையில் மட்டும் இல்லை. சில ஆண்டுகளாக ஏற்பட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றத்தாலும், உலகமயமாக்கலாலும் பல நாடுகளும் (உதாரணமாக அரபு நாடுகள்), தனியாரும் தங்களிடம் உள்ள அளவிட முடியாத செல்வங்களை சொவரைன் முதலீடு மூலமும் பிற வழிகளிலும் சிறிது சிறிதாக நல்ல எதிர்காலம் உள்ளதாக கருதப்படும் கம்பெனிகளில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இவை வளரும் நாடுகள் அன்றி வளர்ந்த நாடுகளில் உள்ள சிட்டி குரூப், UBS போன்ற நிறுவனக்களில் கூட முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். தற்போது கம்பெனிகளின் பங்குகளில் இவர்களது பங்கு பெரும் பங்கு இல்லை என்றாலும் முடிவுகளை கட்டுப்படுத்தும் அளவுக்கு அதிகாரம் உள்ள நிலையை நோக்கி அவை நகர்ந்து வருகிறது. கம்பெனி உள்நாட்டு கம்பெனியாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்துவது (நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ) வெளிநாட்டினர் என்றால் அது உள்நாட்டுக் கம்பெனியா அல்லது வெளிநாட்டுக் கம்பெனியா என்ற வாக்குவாதம் கூட வர தொடங்கியுள்ளது.

உலகமயமாக்கலாலும், சமீபத்திய பெட்ரோல் விலை ஏற்றத்தால் அதிக பணம் சிலரிடம் சேர்ந்ததாலும், அமெரிக்க நிதி நெருக்கடியால் பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது மதிப்பின் பெரும் பகுதியை இழக்க ஆரம்பித்ததாலும் இது போன்ற குழப்பங்கள் மிக அதிகமாகி பின்வரும் காலங்களில் மிகப் பெரிய வாதப்பொருளாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது.

நிறுவனங்களின் முதலீட்டாளர்களினால் நிறுவனங்களுக்கு மட்டும் இந்நிலை என்றால் பரவாயில்லை. தற்போது மேலை நாடுகளின் அரசும் ஒரு நிறுவனம் போல்தான் செயல்படுகிறது. அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறை ட்ரில்லியன் டாலரைத் தாண்டி விட்டது. அது தன் பற்றாக்குறையை ஈடுகட்ட சீனா மற்றும் ஜப்பானின் முதலீட்டைத் தான் நம்பி உள்ளது. அமெரிக்க அரசின் பெரும்பகுதி முதலீட்டாளர்களாக இந்நாடுகள் ஆகி விட்டால், அமெரிக்காவை அமெரிக்க அரசு என்றழைப்பதா? அல்லது ஆசிய அமெரிக்க அரசு என்று அழைப்பதா? என்ற விவாதம் பிற்காலத்தில் வராமல் இருந்தால் நல்லதுதான்!

- சதுக்கபூதம், ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com