Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஒரு கிலோ செய்தி எவ்வளவு ரூ?
ரசிகவ் ஞானியார்


ஒரு நாள் பத்திரிக்கை படிக்காவிட்டாலும் அன்றைய பொழுதே விடியாதது போல நினைக்கின்ற அளவுக்கு பத்திரிக்கை ஆர்வலர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். காலையில் பத்திரிக்கை படிக்காவிட்டால் பலருக்கு அலுவலகத்தில் வேலை ஓடாது.

எனக்கும் அப்படித்தான் ஒருநாள் பத்திரிக்கை படிக்கவில்லையென்றால் கூட ஏதோ உலகத்தொடர்பை துண்டித்துவிட்டு நாம் இருக்கின்றோமோ என்ற உணர்வு ஏற்படும்.நம்மில் நிறைய பேருக்கு அப்படியே.

ஆனால் அந்தப் பத்திரிக்கைகள் நியாயமான முறையில்தான் செய்திகளை வெளியிடுகின்றார்களா? ஜனநாயகத்தின் முக்கியமான தூண்களில் பத்திரிக்கைத் துறையும் ஒன்று. அப்படிப்பட்ட துறை கறை படிந்து இருக்கலாமா..? எத்துணை பொறுப்பாய் செய்திகளை வெளியிடுவேண்டும். அப்படித்தான் நடக்கின்றதா இப்பொழுது? சமூக அக்கறையோடுதான் பத்திரிக்கைத் துறை இருக்கின்றதா..?

எனக்குத் தெரிந்து பெருன்பான்மையான பத்திரிக்கைகள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கின்றனரே தவிர சமூகஅக்கறை என்பது துளி கூட இல்லை.

கல்லூரிக் காலத்தில் நான் பத்திரிக்கை ஒன்றிற்கு நேர்முகத்தேர்வு செல்ல நேரிட்டது. என்னிடம் கேட்கப்பட் கேள்வி ஒன்று

"சாலையில் ஒரு பெண் சென்று கொண்டிருக்கின்றாள் அப்பொழுது பேருந்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் அந்தப் பெண் மீது எச்சில் துப்பி விடுகின்றார். அதனால் அந்தப்பெண் கோபமடைந்து பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றாள். இதனால் அந்தச் சாலையில் பரபரபரப்பு ஏற்பட்டது."

"இதுதான் சம்பவம். இந்தச் சம்பவத்திற்கு எப்படி தலைப்பு கொடுப்பீர்கள் ?" என்றார்

"பெண்ணின் மீது எச்சில் துப்பிய வாலிபருடன் சண்டை - போக்குவரத்து பாதிப்பு என்று எழுதுவேன் சார்"

அந்த அதிகாரி சிரிக்க ஆரம்பித்து," அப்படி எழுதினால் சாதாரணமாகிவிடும். எப்படி எழுதவேண்டும் தெரியுமா?" என்று அவர் அந்த தலைப்பை கூறினார்.

"பட்டப்பகலில் பருவப்பெண் பாவாடையில் எச்சில் துப்பிய வாலிபர்"

மிகப் பிரபலமான பத்திரிக்கையில் பெரிய பொறுப்பில் இருக்கின்ற அவரே அப்படி கூறியது எனக்கு மிகவும் வேதனையாகிவிட்டது. தகவல்கள் சரியாக நியாயமாக மக்களிடம் சென்று சேரவேண்டும். இதுதான் பத்திரிக்கைகளின் பொறுப்பு. ஆனால் மக்களை கிளுகிளுப்புண்டாக்கி அதன் மூலம் சம்பாதிக்கும் இதுபோன்ற பத்திரிக்கைகள என்ன செய்வதாம்?

தகவல்கள் சரியாகத் தருவது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் மக்கள் வாங்கவேண்டும் என்பதற்காக தகவல்களை குழப்பி உண்மையை திரித்து கூறுகின்ற பத்திரிக்கைகள் ஏராளம்.

பத்திரிக்கைகள் சாதி மதம் சாராமல் அரசியலைச் சாராமல் இருக்கவேண்டும். இல்லையெனில்; தகவல்கள் முழுமையாகவும் உண்மையாகவும் மக்களைப் போய் சேராது.

தாங்கள் இருக்கின்ற இனத்தை - அல்லது அரசியல் கட்சியைப் பற்றி உயர்வாகவே எழுதுவார்களே தவிர அதிலுள்ள குறை எழுதுவதற்கு இன்னொரு பத்திரிக்கைதான் வரவேண்டும்.

அரசாங்கமும் பத்திரிக்கைகள் தொடங்குவதற்கு அல்லது இப்பொழுது வைத்திருப்பவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

எந்தச் செய்திகளையும் வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக தவறான தகவல்களை வெளியிடுகின்றது என்றால் அந்தப் பத்திரிக்கையின் உரிமையாளருக்கு மற்றவர்களுக்கு பாடம் தருகின்ற அளவுக்கு தண்டனை தரப்படவேண்டும்.

சமீபத்தில் இங்குள்ள ஒரு கல்லூரியில் மாணவ மாணவிகளை அதிகமாக ஏற்றி சென்ற கல்லூரிப்பேருந்து ஒன்றுக்கொன்று மோதியதால் சில மாணவிகள் மாணவர்கள் காயம் அடைந்தனர். அதில் ஒரு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்தச் செய்தி சில மாணவர்கள் மூலம் பத்திரிக்கைக்கு கிடைக்கின்றது. ஆனால் அந்தக் கல்லூரியின் உரிமையாளரோ தன்னுடைய கல்லூரியின் பெயர் பத்திரிக்கையில் வந்துவிடக்கூடாது என்பதற்காக பணம் கொடுத்து காவலர்களின் மற்றும் பத்திரிக்கைகளின் கைகளை கட்டிப்போட்டுவிடுகின்றார். அந்தச் செய்தி எந்தப் பத்திரிக்கைகளிலுமே வரவில்லை.

பின் 3 நாட்கள் கழித்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் தருவதாக கூறிய பணம் முழுமையாக தரப்படவில்லை என்று கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தபொழுதுதான் பொதுமக்களுக்கு செய்தி தெரியவருகின்றது. இனிமேலும் செய்தி வெளியிடாவிட்டால் பத்திரிக்கை பெயர் கெட்டுவிடும் என்று பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட ஆரம்பித்தது.

செய்திகளே விலைக்கு வாங்கப்படும் பொழுது எப்படி அவர்கள் பத்திரிக்கைகளை நாம் வாங்குவது. ? எப்படி அவர்கள் வெளியிடுகின்ற செய்திகளை நம்பி படிப்பதாம்? இது போன்ற காசுக்கு மாரடிக்கும் கூட்டங்களை எல்லாம் அடையாளம் கண்டு அகற்றிவிடவேண்டும். இல்லையென்றால் செய்திகளும் விளம்பரகள் போல ஆகிவிடும்.

சில மாலைப் பத்திரிக்கைகள் மிகவும் மோசமாக தரம் தாழ்ந்து செய்திகளை வெளியிடுகின்றன. கிளுகிளுப்புக்காகவே வார்த்தைகள் மோசமாக பயன்படுத்தப்படுகின்றன. என் நண்பர் ஒருவர் இதுபோன்ற ஒரு பத்திரிக்கைக்கு மஞ்சள் பத்திரிக்கை என்றே பெயர் வைத்திருக்கின்றார்.

பெரும்பாலும் அந்தப் பத்திரிக்கைகளில் கற்பழிப்பு, பாலியல் சம்பந்தமான செய்திகளையே தலைப்பில் போட்டு விளம்பரப்படுத்தி பத்திரிக்கைளை விற்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் இந்தச் செய்திகளை படிக்கும்பொழுது மிகவும் மனவேதனை படும் அளவிற்கு அவர்களின் விவரிப்புகளும் கற்பனைகளும் ஊறிப்போய்கிடக்கும்.

ஒருவேளை சூடான செய்திகள் என்று அவர்கள் சொல்வது இதற்காகத்தானோ?

அதுவும் பாலியல், கற்பழிப்பு சம்பந்தமான செய்திகளை வெளியிடும்பொழுது பெண்களின் முகத்தை அப்பட்டமாக வெளியிடுவது அந்தப் பெண்களின் எதிர்காலத்தை பாதிக்கின்ற செயல். அந்த நேரத்தில் அந்தப் பத்திரிக்கைக்கு செய்திகள் கிடைத்தால் போதும். ஆனால் அந்தப் பெண்களின் நிலைமையை யோசித்துப் பார்த்தார்களா? தங்கள் குடும்பப் பெண்கள் பாதிக்கப்படும்பொழுது இதுபோன்று வெளியிடுவதற்கு அவர்களுக்கு தைரியம் வருமா?

காந்தியடிகள் சொன்னது போல, பிறருடைய துன்பத்தை அவர்களுடைய மனநிலையில் இருந்து பார்த்தால்தான் அதனுடைய ஆழமும் வேதனையும் தெரியும் என்பதுபோல பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்து பார்க்கவேண்டும்.

பத்திரிக்கைகளின் இதுபோன்ற கிளுகிளுப்பான தலைப்புகளைப் பார்த்து அந்தப் பத்திரிக்கைகளை வாங்குகின்ற மக்கள் இருக்கின்ற வரை பத்திரிக்கைகளும் தங்களை மாற்றிக் கொள்ளப்போவதில்லை.

பெங்களுரில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி பிரபல மாலை நாளிதழ் நேற்று ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது எப்படி தெரியுமா..?

பெங்களுர் குண்டு வெடிப்பு விஷேஷ படங்கள்

பார்த்துவிட்டு அதிர்ந்தேன். குண்டுவெடித்ததில் அப்படியென்ன விஷேஷத்தை கண்டுவிட்டார்களோ இவர்கள்..? இதுபோன்ற சோகமான நிகழ்வுகள்தான் விஷேஷம் என்ற அர்த்தத்தில் தமிழில் வருகின்றதா..?

சக மனிதர்கள் மரணங்கள் - அழுகுரல்கள் - ஓலங்கள் - கண்ணீர்கள் இவர்களுக்கு எப்படி விஷேஷமாக தெரிகின்றது? மனசாட்சியே இல்லாமல் எப்படி இவர்களால் இப்படி தலைப்பிட முடிகின்றது? இந்த தலைப்பினை படிக்கின்ற பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

குண்டுவெடிப்பு சோகப்படங்கள் - துயரக் காட்சிகள் என்று எழுதப்பட்டிருந்தால் இவர்கள் சமூக அக்கறை உள்ள பத்திரிக்கைகள் என்று சொல்லலாம். ஆனால் சமூக அக்கறையாவது, விளக்கெண்ணையாவது என்று அலட்சியம் செய்துவிட்டு பணத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு திரிகின்ற இதுபோன்றவர்கள் சமூகத்தில் இருந்து களையப்படவேண்டியவர்கள்.

அரசாங்கம் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு இதுபோன்ற சமூக அக்கறையற்ற பத்த்திரிக்கைளின் போக்கை கண்டிக்க வேண்டும். உடனே எழுத்துச் சுதந்திரம் - பத்திரிக்கை சுதந்திரம் என்று கொடிபிடிக்கின்ற அவர்களுக்கு அவர்களின் பொறுப்பை - இந்திய ஜனநாயகத்தின் முக்கிய தூண்களான அவர்களின்; சேவை சார்ந்த முக்கிய பணிகளை - பத்திரிக்கைத் துறையின் தர்மத்தை எடுத்துரைப்பது மிக அவசியமான ஒன்றாகும்.


- ரசிகவ் ஞானியார் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com