Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

மும்பைக் கதவுகளில் தலைகீழாகத் தொங்கும் இந்திய முகம்
புதியமாதவி., மும்பை

மும்பை பாலிவுட்டில் மட்டுமல்ல சமூக மையத்திலும் தனக்கென ஒரு தனியிடத்தைப் பல்வேறு போராட்டங்களுக்கு நடுவில் நிலைநிறுத்திக் கொண்டிருப்பவர் நடிகை ஷப்னா ஆஷ்மி. தான் முஸ்லீம் என்பதால் மும்பையில் தன்க்கு வீடு வாங்குவது முயல் கொம்பாகிவிட்டது என்று அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியபோது பாலிவுட்டிலிருந்தே பலர் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். அதன் பின் மும்பையின் பத்திரிகைகள் பல சிலரின் நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட போது அதுவரை மவுனமாக இருந்த மற்றும் சிலர் நேரில் தன் அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டதும் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. நான் வளர்ந்த என் மும்பை, நாங்கள் வளர்த்த எங்கள் மும்பை எங்களை விட்டு எங்கள் மதிப்பீடுகளை விட்டு ரொம்பவே விலகிவிட்டதாக உணர்ந்தேன்.

Muslim women in mumbai மும்பையின் மக்கள்தொகையில் 15% முஸ்லீம்கள் வாழ்கிறார்கள். அண்மையில் அவர்களில் சிலர் இம்மாதிரியான பிரச்சனைகளைச் சந்திப்பதை மிகவும் வெளிப்படையாக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார்கள்.

*ஆமிர் அலி - தொலைகாட்சி தொடர்களில் நடிப்பவர் அந்தேரி லோகன்வாலா குடியிருப்புகளில் வீடு வாங்க முயற்சி செய்த போது "ஒரு முஸ்லீவுக்கு வீடு விற்க வீட்டுக்காரர் விரும்பவில்லை" என்று அவருடைய மதம் ஒரு காரணமாக சொல்லப்பட்டது.

* கல்கத்தாவிலிருந்து பணிமாற்றலாகி மும்பை வந்திருக்கும் நுஷாட் அஷிஸ் (Nuzhat Aziz- asst editor of HT) நான்கு மாதங்களாக வீடு தேடி அலைந்ததையும் அவருடைய பெயரைக் கேட்டு அதன் மூலம் மட்டுமே அவர் முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர் என்பதைத் தெரிந்து கொண்டவர்கள்.. "ஆளையும் ஆடையையும் பார்த்தா முஸ்லீம் மாதிரியா இருக்கு..!" என்று பலர் கருத்து சொல்ல இறுதியாக வீட்டுத் தரகர்.. "உங்க ஆட்களா இருக்கிற இடத்திலே வீடு பார்க்கலாமா..?" என்று கேட்கிறார். தரகர் சொல்கிறபடி பார்த்தால் நுஷாட் அவர்கள் வொர்லி, மகிம், குர்லா, நாக்பாடா என்று முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் மட்டுமே வீடு வாடகைக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.." என்பது தெளிவாகிறது.

*ஸிஷான் ஷேக்.. என் தாய் ஒரு இந்துப் பெண், மராத்திய பார்ப்பன வகுப்பைச் சார்ந்தவர். மதக்கலப்பும் மதச்சகிப்புத்தன்மையும் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவன், என்னாலும் என் முஸ்லீம் மத அடையாளத்துடன் மும்பையில் வீடு வாங்க முடியவில்லை என்கிறார். எப்படியொ வீட்டுத்தரகருக்கு இருக்கும் சிவசேனா தொடர்பு காரணமாக எப்படியோ ஒரு வீட்டை வாங்கும் வாய்ப்பு எனக்கு இப்போது கிடைத்துவிட்டது" என்று சொல்கிறார்.

மற்றும் சிலர் தங்கள் மனைவியர் பெயரில் வீடு வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக சாதி/மத கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு இப்படியும் ஒரு தீர்வு இருபதற்காக சந்தோஷப்படவா வெட்கித்தலை குனியவா தெரியவில்லை.

பேராசிரியர் சமீராமீரான் - மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் சொல்கிறார்.. "மகளுக்கு வீடு பார்க்கவேண்டும். அதிலும் பேத்தி ஸ்கூலுக்குப் போவதற்கு முன்பே முலுண்ட் ஏரியாவில் வீடு பார்க்க வேண்டும். முலுண்டில் இருந்தால் தான் வாணி வித்யாலா ஸ்கூலில் போட்டு பேத்தி தமிழ்ப் படிக்க முடியும்.. ஆனா இப்போதெல்லாம் எங்களுக்கு வீடு விற்கவோ வாடகைக்குத் தரவோ யாரும் தயாரா இல்லை" என்று.

இவர்களுக்கு வீடு விற்கவோ வாடகைக்குத் தரவோ மறுக்கும் தரப்பிலிருந்து சொல்லப்படும் காரணங்கள்:

"நம் வீட்டுக்கு முன்னால் ஆடு கத்துவதையும் ஆடு அறுத்து பலி கொடுப்பதையும் சகித்துக் கொண்டிருக்க முடியுமா"

"இதை வேண்டும் என்றே பெரிய குற்றமாக சொல்கிறார்களே.. அவர்கள் அதிகம் குடியிருக்கும் இடத்தில் ஓர் இந்துவுக்கு வீட்டை விற்பார்களா?"

“இந்து-இசுலாமியர் இரண்டுமே தனித்தனி அடையாளங்கள் தான். இசுலாமியர்களைச் சிறுபான்மையினர் என்று சொல்வது இன்றைய வளர்ந்து வரும் உலகமயமாதலில் அர்த்தமில்லாதது. இந்தியாவில் எப்படி இசுலாமியர்களோ அதுபோலவே உலக அரங்கில் இந்துக்களும் என்பதும் உண்மைதானே!.”

*

இந்தப் பிர்சசனைகள் குறித்து இந்தியச் சட்டம் என்ன சொல்கிறது?

" வீட்டுச் சொந்தக்காரருக்கும் வாங்குபவருக்குமான ஒப்பந்தம் இது. தன் சொந்த வீட்டை யாருக்கு விற்க வேண்டும், யாருக்கு வாடகைக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை முழுக்க முழுக்க வீட்டுச் சொந்தக்காரரின் உரிமை. எனவே இதில் இன்னாருக்கு வீட்டை வாடகைக்கோ/ விற்கவோ மறுக்கிறார் என்பதும் அதற்கான காரணங்கள் சட்டத்திற்குப் புறம்பாக இருப்பதையும் வைத்துக் கொண்டு எதுவும் செய்துவிடமுடியாது" என்கிறார் வழக்கறிஞர் முஸ்தாபா மோடிவாலா.

"வீட்டை ஒரு முஸ்லீமுக்கு விற்க வீட்டுச் சொந்தக்காரர் முடிவெடுத்தால் அதை மறுக்கும் அதிகாரம் அந்த கோ ஆப்ரெடிவ் ஹவுஸிங் சொஸைட்டிக்கு உண்டா என்றால் "கிடையாது" என்கிறார் வழக்கறிஞர் மகேந்திர கல்யாண்குமார். "அவர்களின் விற்பனை ஒப்பந்தத்தை ஏற்காமல் மறுக்கும் அதிகாரம் சொஸைட்டிக்கு கிடையாது. அதுவும் மதம் காரணமாக சொஸைட்டி மறுப்பது சட்டத்திற்குப் புறம்பான செயல். இம்மாதிரியான சூழலில் சொஸைட்டியை எதிர்த்து வழக்குப் போடலாம்.

*

1992/93க்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த மனநிலை வளர்ந்து இன்று மும்பையின் இந்திய முகத்தை அரித்து தின்று கொண்டிருக்கிறது.

குழந்தைகளுக்கு உடம்புக்கு முடியாமல் ஆகிவிட்டால் குழந்தையுடன் பள்ளிவாசல் அருகில் நின்று கொண்டிருக்கும் தாய்மார்களை நான் பார்த்திருக்கிறேன். மும்பை மகாலட்சுமி கோவிலுக்குப் போகும் எல்லோரும் அருகிலிருக்கும் தர்க்காவுக்கும் போய்வருவது தொடர்கதை. அதுவும் கல்வி நிலையங்கள், பணியிடங்களில் எவ்விதமான வேறுபாடுகளுமின்றி வாழ்ந்து கொண்டிருந்த இடம் தான் மும்பை. குண்டுவெடிப்புகள், தீவிரவாதங்கள் என்று மும்பை இரத்தம் சிந்தியதும் அதற்கு எந்த வகையிலும் குறைவின்றி குஜராத்தில் இசுலாமியர்கள் பாதிக்கப்பட்டதும் நாம் வாழும் காலத்தில் நிகழ்ந்திருக்கும் தலைகுனிவுகள்.

ஒருவன் குற்றவாளி என்பதாலேயே அந்த ஒட்டுமொத்த மார்க்கத்தையோ அதைச் சார்ந்தவர்களையோ குற்றம் சொல்வதும் குறை காண்பதும் எந்த வகையிலும் பிரச்சனையைத் தீர்த்துவிடாது. தொலைநோக்குப் பார்வையுடன் சமூகப் பிரச்சனைகளை அணுகி அதற்கான தீர்வுகளைக் கண்டடைய வேண்டும்.

ஒரு சிலர் 100க்கு 5 வீடுகளாவது மும்பையில் முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று "இடஒதுக்கீடு" தீர்வை முன்வைக்கிறார்கள். ஆனால் முஸ்லீம் இளைய சமுதாயம் இந்த இடஒதுக்கீடு தீர்வை வன்மையாக கண்டித்து குரல் கொடுக்கிறது. "ஏன் இட ஒதுக்கீடு? அதுவே இந்திய சமூகத்திலிருந்து எங்களை ஒதுக்கும் நிலையைத் தானே காட்டும். நாங்களும் உங்களில் ஒருவராக எவ்விதமான ஒதுக்கீடுகளாலும் ஒதுக்கப்படாமல் குறைந்த பட்சம் நாங்கள் விரும்பும் இடத்தில் வாழ்கிற வாழ்வாதார உரிமைகளுடன் வாழவே விரும்புகிறோம் என்று சொல்கிறார்கள்.

பிரதமர் மன்மோகன்சிங் 2005ல் முஸ்லீம்களின் சமூக பொருளாதர நிலையை கண்டறிய உருவாக்கிய சச்சார் கமிட்டி (Sachar committee) தன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

> முஸ்லீம் என்ற மத அடையாளம் அவர்களின் தினசரி வாழ்க்கையை பல்வேறு வகைகளில் பாதித்துக் கொண்டிருக்கிறது. வீடு வாடகைக்கு பார்ப்பதிலிருந்து அவர்கள் குழந்தைகளை பள்ளிகூடத்தில் சேர்ப்பது வரை அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

> பல்வேறு குடியிருப்புகள், ஹவுசிங் சொசைட்டிகளில் "முஸ்லீம்களுக்கு இடமில்லை" என்பது எழுதாதச் சட்டமாக்கப்பட்டு அனைத்து தரப்பு மக்களாலும் எவ்விதமான உறுத்தல்களுக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இருக்கிறது.

> முஸ்லீம்களுக்கு கடன் வசதி வழங்குவதிலும் இதேநிலைமை தான் தொடர்கிறது

> முஸ்லீம்கள் பெரும்பான்மையாக குடியிருக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை.

> மற்றவர்களுடன் ஒப்பிடும்போது மின்சாரம், எரிவாயு, தண்ணீர் வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இன்றியே பெரும்பான்மையான முஸ்லீம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

>மிகவும் பிற்படுத்தப்பட்ட அட்டவணை சாதிகளின் வாழ்க்கை, பொருளாதர சமூக நிலைக்கும் பெரும்பான்மையான முஸ்லீம்களின் நிலைக்கும் பெருத்த வேறுபாடுகள் எதுவுமில்லை.

நமது நாட்டின் சாபக்கேடு கமிட்டிகளும் அறிக்கைகளும் தூசித்தட்டப்படாமல் எவராலும் வாசிக்கப்படாமல் அப்படியே மழையில் நனைந்து மண்ணில் கரைந்து போய்விடுவதுதான்.

- புதியமாதவி, மும்பை ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com