Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தாவோ வாழ்வியல்
ஆங்கில மூலம்: ஆலன் வாட்ஸ் / தமிழாக்கம்: புதுவை ஞானம்


தாவோ வாழ்வியலுக்குள் நுழைவது என ஒருவர் முடிவெடுத்து விட்டால் அதனைப் புரிந்து கொள்ள இயலுமோர் உறுதியான மனக்கட்டுப்பாட்டோடு உள் நுழையத் தொடங்க வேண்டும். எப்படி உங்களது வெற்றுக் கரங்களைக் கொண்டு காட்டாற்று வெள்ளத்தைத் தடுத்து விட இயலாதோ, அவ்வாறே உங்களை இத்தகைய மனக்கட்டுப்பாட்டுக்குள் திணித்துக் கட்டுப்படுத்திக் கொள்வதும் கடினமானதாகத்தான் இருக்கும். ஆனால், நமது தொடக்கப்புள்ளியானது நமக்குத் தெரிந்ததை எல்லாம் மறந்து விடுவது அல்லது நமக்குத் தெரியும் என நம்புவதையெல்லாம் மறந்து விடுவது என்பதாகவும், நடைமுறையில் ஒவ்வொன்றைப் பற்றியும் எடைபோடும் பழக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு இன்னமும் எந்த மொழியையோ அல்லது எந்தப் பெயரையோ கற்றுக்கொள்ளாத பச்சிளங்குழந்தையாக மாறி விட வேண்டும் என்பதாகவும் இருந்திடல் வேண்டும்.

இத்தகையதொரு மனோநிலையில், நமக்கு மிகவும் உணர்வுப் பூர்வமான உடலும் விழிப்புணர்வும் இருந்திட்ட போதிலும் நடப்பவற்றைப் பற்றிய அறிவார்த்தமான சொல்லாடல் எதையும் செய்யும் வழிவகை நம்மிடம் இராது. இந்த நிலையில் நீங்கள் அப்பழுக்கற்ற அப்பாவி ஆக இருக்கிறீர்கள், ஆனாலும் விழிப்புடன் இருக்கிறீர்கள். எதையும் பெயரிட்டு அழைக்காமலேயே /எதற்கும் பெயர் சூட்டாமலேயே அது என்னவெனப் புரிந்து கொள்கிறீர்கள். வெளி உலகம் என அழைக்கப்படுவது பற்றி எதுவுமே உங்களது அகமனதுக்குத் தெரியாது. நீங்கள் யாரென்று உங்களுக்குத் தெரியாது. ‘நீ’ அல்லது ‘நான்’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் ஏற்கனவே இருந்தது என்பதே தெரியாது.

உங்களுக்கு சுயக்கட்டுப்பாடு பற்றி யாருமே எதுவும் சொல்லித்தரவில்லை என்பதனால் ஒரு விரைந்தோடும் வாகனத்தின் ஓசைக்கும் உங்கள் உள்ளுக்குள் நுழைந்து அலைபாயும் சிந்தனைக்குமான வேறுபாடு ஏதும் விளங்காது. அவை இரண்டுமே வெறும் சம்பவங்கள் தான்/நிகழ்வுதான். உங்களது அகக்கண்ணின் விழித்திரையில் மிதந்து செல்லும் மேகங்கள் அல்லது விரைந்து ஓடும் இயங்கூர்திகள் பற்றிய பிம்பங்கள் கருத்துக்களாகப் பதிவாவதில்லை அவை நிகழுகின்றன, உங்களது சுவாசம் நிகழுகிறது, வெளிச்சமும் உங்களைச் சுற்றி அனைத்தும் நிகழுகின்றன. கண் சிமிட்டி நீங்கள் எதிர்வினை புரிவதுவும் நிகழ்கிறது.

ஒரு புறம் உங்களால் எதுவும் செய்ய இயல்வதில்லை மறுபுறம் நீங்கள் எதுவும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதுமில்லை. நீங்கள் எதையும் செய்ய வேண்டும் என யாரும் உங்களுக்குச் சொல்வதில்லை. முற்றிலும் உங்களால் எதுவும் செய்ய முடிவதில்லை. ஆனால் அந்த பரபரப்பை ஆரவாரத்தினைப் பற்றிய பிரக்ஞை உங்களுக்கு இருக்கவே இருக்கிறது. கண்ணுக்குப் புலனாகும் காட்சிகளின் சலனம் காதுகளில் அதிரும் ஓசைகளின் தாக்கம், தசைகளில் சலனிக்கும் தொடு உணர்வின் அதிர்வுகள், நாசியில் படரும் நாற்ற உணர்வுகள் _ இப்படியாக சூழ நிகழும் சலனங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றைக் கவனியுங்கள். யார் கவனிக்கிறார்கள் ? எனக் கேட்காதீர்கள்.

அது பற்றிய தகவல் ஏதும் உங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை. ஒன்றைக் கவனிக்க ஒரு கண்காணிப்பாளர் தேவை என்பது உங்களுக்குத் தெரியாது. அது யாரோ ஒருவரின் கருத்து ஆனால் அதுவும் உங்களுக்குத் தெரியாது.

“ஒரு படிப்பாளி ஒவ்வொரு நாளும் புதியதாக எதையாவது கற்றுத் தெரிந்து கொள்கிறார். ஆனால் தாவோ வாழ்வியலைப் பின்பற்றுபவரோ தனக்குத் தெரிந்தவற்றை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக மறந்து வருகிறார். அவர் செயலற்ற நிலையை எட்டும்வரை இது தொடருகிறது” என்பதாக 'லாவோட்சு' சொல்கிறார்.

எந்தவொரு விமரிசனமும் இன்றி எளிமையாக மண்டையில் எந்தவொரு சிந்தனையும் அற்ற நிலையில் சலனமற்று இருங்கள். நீங்கள் வேறு என்ன செய்ய இயலும்? விழிப்புடன் இருக்க முயற்சி செய்யாதீர்கள், அப்போது நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள். மண்டைக்குள் எழும் கூச்சலை நிறுத்த முடியவில்லையே என்பதைக் கண்டுணர்வீர்கள் என்பது உண்மைதான்! ஆனாலும் அது உள்ளுக்குள்ளான கூச்சல் என்பதாகவே பொருட்படுத்துவீர்கள். ஒரு பாத்திரத்தினின்று எழும் சீழ்க்கை ஒலியை செவிமடுத்துக் கேட்பது போல் இரைச்சலிடும் சிந்தனைகளைக் கவனியுங்கள்.

நமக்கு என்ன தெரியும் என்பது நமக்குத் தெரியாது. குறிப்பாக அனைத்தையும் ஒருசேரக் காணும்போது ஏதோ நிகழுகிறது என்பதாகப் புலப்படும். ‘ஏதோ நிகழுகிறது’ என்பதாக நான் சொன்ன போதிலும், அந்த ‘ ஏதோ’ என்பது என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் அது ஒரு கருத்து, வார்த்தைகளின் ஒரு வடிவம். ஏதோ குறிப்பிட்ட ஒன்று நிகழ்வதாக உண்மையில் என்னால் சொல்ல முடியாது, வேறொன்று அல்ல என எனக்குத் தெரியும்வரை! நிலைப்புக்கு எதிரானது இயக்கம் என்பது எனக்குத் தெரியும். இயக்கத்தைப் பற்றிய பிரக்ஞை எனக்கிருக்கும் போதே நிலைப்பு பற்றிய பிரக்ஞையும் இருக்கிறது.

நிலைத்து (ஓய்வாக) இருப்பது இயக்கத்தில் இல்லை என்பதும், இயங்கிக் கொண்டிருப்பது (சலனத்தில் இருப்பது) ஓய்வாக இல்லை என்பதும் எனக்குத் தெரியும்.ஆனால் இந்தக் கோட்பாட்டினை நான் பயன் படுத்த மாட்டேன் ஏனெனில் புரியவைப்பதற்காக இரண்டையுமே நான் உள்ளடக்கி அணைத்துப்போக வேண்டும். அது இங்கே இருக்கிறது என நான் சொல்லப்புகுந்தால் எது இல்லையோ அதனை விலக்குவதாக ஆகி விடுகிறது வெளியினைப்போல. இது அதனைத் தவிர்த்தது எனச் சொல்லப்புகுந்தால் மவுனத்தில் ஆழ நேரிடுகிறது. ஆனாலும் நான் எது பற்றிப் பேசுகிறேன் என்பதனை நீங்கள் உணர முடியும். அது தான் ‘தாவோ’ என அழைக்கப்படுகிறது. அங்கிருந்துதான் நாம் தொடங்குகிறோம்.

"தாவோ என்பது அடிப்படையில் “பாதை” எனப் பொருள்படும், எனவே போக்கு, இயற்கையின் போக்கு எனவாகும் தாவோ செயல்படும் வழியானது “தன் போக்கில்” என்பதாக 'லாவோட்ஸ¤' சொன்னார். அதாவது சொல்லப் போனால் தன்னிச்சையானது எனவாகும். .என்ன நிகழுகிறது என்பதனை மீண்டும் கவனியுங்கள். அறிவார்த்தமான வெகுளித்தனத்தில் அதனை அணுகினால் என்ன நிகழுகிறது என்பதனை நீங்கள் தரிசிக்க முடியும். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் இந்த ஆதி வழியில் நடப்பவற்றை தரிசிப்பது என்பது, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது ஒரு புறமும், உங்களுக்கு என்ன நிகழுகிறது என்பது மறு புறமுமாக இருக்கிறது

இவையனைத்தும் ஒரே நிகழ்முறைதான், உங்களது சிந்தனை உதிப்பதுவும், வெளியே இயங்கூர்தி செல்வதும் அதுபோலவே மேகங்கள் மிதப்பதுவும், தாரகைகள் மின்னுவதும். ஒரு மேற்கத்தியன் இதனைக் கேட்கும் போது இது தலைவிதித் தத்துவம் எனவோ அல்லது நிர்ணய வாதம் எனவோ நினைக்கிறான். ஏனெனில் அவனது மனதின் பின்புலத்தில் இன்னமும் இரண்டுவித மாயைகளைத் தக்கவைத்து இருக்கிறான். ஒன்று தனக்கு நிகழ வேண்டியதெல்லாம் நிகழுகிறது என்பதால் தான் ஒரு சூழ்நிலையின் கைதி என்பது!. ஆனால் நீங்கள் ஆதியான அப்பாவித்தனத்தில் இருக்கும் போது என்ன நிகழுகிறதோ அதனின்றும் நீங்கள் வேறுபட்டவரல்ல அது உங்களுக்கு என நிகழ்வதில்லை. வெறுமனே அது நிகழுகிறது. அது போலவேதான் நீங்களும் அல்லது நான் என நீங்கள் அழைப்பதுவும் அல்லது நான் என நீங்கள் அழைக்கப் போவதுவும். அது நிகழ்வின் ஒரு பகுதி என்பதுவும்!
.
ரொம்பவும் வரையறுத்துப் பேசினால், பிரபஞ்சத்துக்கு பகுதிகள் இல்லையென்ற போதிலும்கூட, நீங்கள் பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான். பிரபஞ்சத்தின் சில அம்சங்களைத்தான் நாம் பகுதி என அழைக்கிறோம். இருந்த போதிலும் நீங்கள் அதனை ‘இல்லாத ஒன்று’ என மற்றவற்றிலிருந்து பிரித்துவிட முடியாது என்பதோடல்லாமல் ‘இருந்ததேயில்லை’ எனவும் சொல்ல முடியாது. பிரபஞ்சம் இயங்குவதனையும் தான் அனுபவிப்பதனையும் ஒருசேர நிகழ்வதாக ஒருவர் உணரும்போது தற்போது நிகழ்வதானது தவிர்க்க இயலாதவாறு கடந்த காலத்தில் நடந்தவற்றின் தொடர்ச்சி என்ற மாயையில் முழுகும் ஆபத்தில் இருக்கிறார். ஆனால் உங்களது ஆதி அப்பாவித்தனத்தில் இருக்கும்போது உங்களுக்கு எதுவும் தெரிவதில்லை. காரணமும் விளைவுமா அது?

ஏன் வெளிப்படையாகத் தெரிவதில்லை எனில் உண்மையில் நீங்கள் அப்பாவியாக இருப்பின் இப்போது நடப்பதன் விளைவு தான் கடந்த காலம் என்பது உங்களுக்குத் தெரியும். கப்பலின் மீது மோதிய அலையானது திரும்பிச் செல்வது போல அது பின்னோக்கி கடந்த காலத்துக்குள் செல்கிறது. இறுதியாக எல்லா எதிரொலிகளும் மறைந்தொழிவது போல அப்பாலுக்கு அப்பால் விலகித் தூரமாகச் சென்று விடுகின்றன. எல்லாமும் இப்போது இந்தக் கணத்தில் தொடங்குகின்றன. நாம் எதிர் காலம் என்றழைப்பதில் ஒன்றுமில்லை, பெரும் சூன்யம்/பாழ் தான் இருக்கிறது அந்தப் பெரும் பாழில் இருந்துதான் அனைத்தும் வருகின்றன.

நீங்கள் விழிகளை மூடிக்கொண்டு, காது கொடுத்து யதார்த்தம் என்னவென்று உற்றுக்கேட்டால் அதற்கப்பால் ஒரு மோனத்தின் பின் புலம் இருப்பதைக் காண்பீர்கள். அவை அந்த மோனத்தில் இருந்துதான் துவங்குகின்றன. விழிகளை மூடிக்கொண்டு வெறுமனே காது கொடுத்துக் கேட்பீர்களானால் ஒலிகள் வெற்றிடத்தில் இருந்து வந்தன, மிதந்து சென்றன, அதிரும் எதிரொலியாக நின்றன, மற்றொரு விதமான எதிரொலியாக ஒரு ‘நினைவு’ எனவாயின என்பது தெரியவரும். .இது மிகவும் எளிமையானதாக இருக்கிறது. எனவே தற்செயலானதாக இருக்கின்றது.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதல்ல அது ஒரு தத்துவார்த்தக் கோட்பாடு. இப்போது அது நம்ப இயலாததாகவும் இல்லை. அப்படியாயின் அதுவும் ஒரு தத்துவார்த்தக் கோட்பாடு ஆகிவிடுகிறது. முறையானது எதுவெனவும் நோக்கமற்றது எதுவெனவும் நாம் பாகுபடுத்திப் பார்க்கிறோம். ஆனால் உன்மையில் நோக்கமற்றது எதுவென நமக்குத் தெரியாது. 'Sui geniris' எனும் இலத்தீன் பதம் குறிப்பிடுவதைப்போல அது தன்னளவில் என்னவாக இருக்கிறது என்றால், தானே தோன்றுவதாக இருக்கிறது. சொல்லப்போனால் அதுதான் கன்னிப்பிரசவம்.

இதுதான் உலகம். இதுதான் தாவோ. இருந்தபோதிலும் இது உங்களை அச்சுறுத்துகிறது. “எல்லாமும் தன்னிச்சையாக நடைபெறுகிறது எனில் யார்தான் இதற்குப் பொறுப்பானவர் என நாம் கேட்கக் கூடும். நான் பொறுப்பல்ல என்பது வெளிப்படையான விஷயம். ஆனால் கடவுளோ, வேறு யாரோ, இவையனைத்தையும் கட்டுப்படுத்துவதாக நான் நம்புகிறேன்.”_ ஆனாலும் “ஏன் யாராவது அதைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்?”, இதுவரை எண்ணியும் பார்த்திராத ஒரு புதிய கவலை பிறக்கிறது.

அந்தக் கவலையானது, காவல்காரர் காவல் புரிவதில் மும்முரமாக இருந்து கொண்டு இருக்கும்போது காவல்காரரின் மகளை யார் கவனித்துக் கொள்வது?” காவல்காரர்களைக் காவல் புரிவது யார்? கடவுளைக் காப்பாற்றுவது யார்? “கடவுளை யாரும் காப்பாற்ற வேண்டியதில்லை” என நீங்கள் சொல்லக்கூடும். ஓ.! நல்லது . . . இதுவும் அவரைக் காப்பாற்றப் போவதில்லை.

தாவோ என்பது ஒரு வகையான ஒழுங்குமுறை, ஆனால் வடிவ கணிதம் போல் நாம் பெட்டிகளிலோ, வரிசைவரிசையாகவோ பொருட்களை அடுக்கி வைப்பது போன்றதல்ல, இந்த ஒழுங்குமுறை. அப்படிப்பட்ட ஒழுங்குமுறை மிகவும் செப்பமானது அதற்கென்று ஒரு செப்பமான அழகான ஒழுங்கு இருப்பது துலாம்பரமாகத் தெரியும். அது குளறுபடியானதல்ல என்பதை முதற்பார்வையிலேயே நாம் தெரிந்து கொள்கிறோம், எனினும் அது கூம்பு வடிவத்திலோ கட்டம் கட்டமாகவோ இப்பதில்லை. தாவரமானது, ஒரு சீன ஓவியம் போல் காட்சி தருகிறது. ஏனெனில் சீனர்கள் ஒன்றுக்கொன்று ஒத்திசைவாய் வடிவ கணித வகையில் இல்லாதவற்றைப் போற்றினார்கள், அவர்களது ஓவியத்தின் பிரிக்க முடியாத அம்சமாகவே அது அமைந்துவிட்டது.

இது சீன மொழியில் ‘லீ’ என அழைக்கப்படுகிறது. ‘லீ’ என்பதற்கான வடிவம் மரகதக்கல்லில்/சாளக்கிராமத்தில் அலை பாய்ந்து ஓடும் ரேகை போன்றது. அதற்கு மரத்தில் பாயும் வைரம், தசைகளின் நார் எனவும் பொருள் உண்டு. மேகங்களில் ‘லீ’ இருக்கிறது, சலவைக்கல்லில் ‘லீ’ இருக்கிறது, மனித உடம்பில் ‘லீ’ இருக்கிறது எனவும் நாம் சொல்ல முடியும். நாம் அனைவரும் இதனைப் புரிந்து கொள்கிறோம். ஓவியன் இதனை நகல் செய்கிறான்; அவன் நிலப்பரப்பினை தீட்டுபவனாக இருந்தாலும் சரி, மானுட வடிவங்களை வரைபவனாக இருப்பினும் சரி அல்லது நுட்பமான ஓவியம் தீட்டுபவனாக இருப்பினும் சரி. ‘லீ’ யின் சாராம்சத்தை/உயிரோட்டத்தை வெளிப்படுத்த அவர்கள் முயலுகின்றனர். அது என்னவென்று நமக்குத் தெரிந்த போதிலும் அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

தாவோ என்பது ஒரு போக்கு என்பதனால் ஒரு நீரோட்டம் என்பதனால், ‘லீ’ யின் வடிவங்களும் ஒடும் நீரின் ஆற்றொழுக்கு போன்றதுதான். அத்தகைய வடிவங்களின் இயக்கத்தை அது இருக்கின்ற வகையிலேயே நாம் உருவகப்படுத்துகிறோம். ஒரு சிற்பி வைரம் பாய்ந்த மரத்தில் செதுக்குவது போன்றோ சலவைக்கல்லில் நமது எலும்புகளில் தசையில் ஜீவதாது ஓடுவது போன்றோ. இவை அனைத்துமே அடிப்படையில் இந்த ஓட்டத்தைப் பொருத்தே அமைக்கப்பட்டிருக்கின்றன. ஓடும் நீரின் வடிவத்தில் நீங்கள் சீன ஓவியத்தின் தாக்கத்தைப் பார்க்க முடியும், ‘யின்_யாங்’_கின்’ S வடிவம் போன்று. எனவே ‘லீ’ என்பதன் பொருள். ஓட்டத்தின் ஒழுங்கு, நீரின் மேல் தோன்றும் அற்புதமான நடன வடிவம் என்பதனால் லாவோட்ஸ¤ தாவோவை நீரோட்டத்துக்கு ஒப்பானது என்கிறார்.

“எங்கெங்கும் பிரவாகிக்கிறது வலமும் இடமுமாய் மகத்தான 'தாவோ' ! அன்பு செலுத்துகிறது அனைத்தின் மீதும் _ அடக்கி ஆள்வதில்லை எந்த ஒன்றையும் !” ஏனெனில் அவர் எங்கோ குறிப்பிட்டதைப்போல், நீரானது எப்போதும் தாழ்ந்த இடம் நோக்கி ஓடுகிறது. ஆனால் மனிதர்கள் இதனை வெறுக்கின்றனர் . ஏனெனில் ஒருவர் தோள் மேல் மற்றவர் சவாரி செய்கின்ற, ஒருவரை விட ஒருவர் உயர்ந்திருக்கும் விளையாட்டினைத்தான் விரும்புகின்றனர். ஆனால் “உயர்ந்த நிலைதான் எப்போதுமே பாதுகாப்பற்ற நிலை!” என்பதாக லாவோட்ஸ¤ சொல்கிறார்.

ஒவ்வொருவரும் மரத்தின் உச்சாணிக்கொம்பில் ஏற விரும்புகின்றனர். ஆனால் அப்படி ஏறினால் மரம் ஒடிந்து விழுந்து விடும். இது தான் அமெரிக்க சமுதாயத்தின் இமாலயத் தவறுதல் ஆகும். கிடைமட்டத்தில் பதிந்து/ ஊன்றி நிற்பதுவே மிகவும் வலுவான நிலை ஆகும். இப்போதும் கூட அதனை நாம் ஜூடோ மற்றும் ஐகிடோ சண்டையில் காண முடியும். எப்போதுமே எதிரியின் கீழே குனிவதன் மூலம் உங்களைத் தாக்க வரும் எதிரி உங்கள் மேல் விழுகிற நிலை உருவாகும். அவர் மூர்க்கத்தனமாக முன்னேறும் போது அவரது சுழற்சி வட்டத்தைவிட உங்களது சுழற்சி வட்டத்தினைக் குறுகலாக்கிக் கொள்கிறீர்கள். அந்நிலையில் நீங்கள் எப்போதும் சுழன்று கொண்டு இருக்கிறீர்கள்.

சுழன்று கொண்டிருக்கும் எதுவொன்றுக்கும் மையத்தை விட்டு அப்பால் அகற்றும் சக்தி இருக்கிறது என்பதுவும், யாரொருவர் அந்த சுழற்சி மையத்திற்குள் நுழைந்தாலும் தான் நுழைந்த வேகத்திலேயே தூக்கி எறியப்படுகிறார்கள் என்பதுவும் உங்களுக்குத் தெரியும். இது மிகவும் கி.ளர்ச்சியூட்டக்கூடியது. அது போலவே, நீரோட்டத்தின் வழியே தாவோவின் வழி ஆகும். ஆங்கிலேய சாக்சன் புரெட்டஸ்டந்துகளுக்கு இது எதிர்த்து நிற்கத் திராணியற்ற செயலூக்கமற்ற சோம்பேரித்தனம் எனத் தோன்றும்.

“நீங்கள் சொல்வதையெல்லாம் பின்பற்றினால் மக்கள் மிகவும் மந்தமான கோழைகள் ஆகிவிடமாட்டார்களா?” என பலர் என்னிடம் கேட்பதுண்டு. மேலோட்டமாகப் பார்த்தால் நம்மைப் போன்றவர்களின் கலாச்சாரத்தினைச் சரி செய்ய ஓரளவு எதிர்ப்பற்ற தன்மை தேவைதான்! ஏனெனில், மற்றவர்களுக்கு நன்மை செய்கிறோம் என்ற பெயரில் கேடுதான் விளைவித்துக் கொண்டு இருக்கிறோம்!. மற்ற மக்களின் நலனுக்காக என நாம் யுத்தங்களை நடத்திக்கொண்டு இருக்கிறோம். ‘வளர்ச்சி குன்றிய’ நாடுகளில் வசிப்போர்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் அவர்களுடைய வாழ்க்கை முறையைப் பாதிக்கும் என்பதை உணராமலேயே கெடுதி செய்கிறோம்.

சுற்றுச்சூழலியல் சமநிலையை பாதிக்காத வகையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இணக்கமாய் வாழ்ந்து வந்த பொருளாதார அமைப்புகளும் கலாச்சாரங்களும் உலகம் முழுதும் நாசகாரமான கேடு விளைவிக்கும் விதத்தில் அலங்கோலம் ஆக்கப்பட்டுள்ளன நம்மால்!

- தமிழாக்கம்: புதுவை ஞானம் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com