Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

சிவலிங்கத்தின் கதை(வரலாறு)
முனைவர்.வே. பாண்டியன்

உலகிலுள்ள வழிபடு தெய்வ உருவங்களிலேயே விசித்திரமானதும் தனித்துவமானதும் ஆகியது சிவலிங்கமே. இதனுடைய கதை என்ன? இந்து மதத்தைக் கட்டி ஆள்பவர்கள் பார்ப்பனராக இருப்பதால், அவர்களால் உருவாக்கப் பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், உலகின் மூத்த, தமிழரின் நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகத்தில் இடம் பெற்றுள்ளதாலும், அதற்கப்பால் வெகு காலத்திற்கு பின்தான் ஆரியர்கள் சிந்துவெளிப்பகுதிக்கு வந்தனரென்பதாலும் இது பழந்தமிழரின் வழிபடுபொருள் என்பது புலனாகும்.

Sivalingam யார் படைத்தனர் என்பதோடு எதற்காக படைக்கப்பட்டது என்பதும் ஆய்வுக்குரிய பொருள். இதைப்பற்றி திரு. மஞ்சை வசந்தன் அவர்கள் 'தமிழா நீ ஓர் இந்துவா?' என்ற நூலில் சிறப்பானதொரு வாதத்தை முன்வைத்திருக்கிறார். உலகின் இனங்களிலேயே தமிழினம் தான் இயற்கையை நேசித்து இயற்கையையே மிகுதியாக வழிபடுபொருளாக கொண்டு வாழ்ந்த இனம். தன்னை வாழ்விக்கும் மழையை தெய்வமாக்கி மாரியம்மை என்று இன்றும் வழிபட்டு வருகின்றது. ஒளியால் இவ்வுலகத்தை உய்விக்கும் ஞாயிற்றை ஒவ்வொரு வருடமுகிழ்விலும் தை 1ல் நன்றியோடு வணங்குகிறது. உழவுக்கு உதவிடும் ஆடு, மாடுகளையும் நன்றியறிதலோடு மாட்டுப்பொங்கலன்று வழிபடுகிறது. தான் பயன்படுத்தும் கருவிகளைக்கூட ஆயுத பூசையன்று நன்றியோடு நினைவு கூறுகின்றது. இந்த தமிழர் பண்பாட்டைத்தான் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்கள் 'வளமை வழிபாடு' என்று அழைக்கின்றார். (காண்க: தமிழரின் அடையாளங்கள், பாலம் பதிப்பகம்.) ஆக, தனக்கு பயன்படும் கருவிகளைக்கூட நன்றியறிதலோடு போற்றும் மாண்புதான் தமிழரின் மாண்பு. நன்றியுள்ளவன் தான் தமிழன்.

இந்த முறையில் தான், தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ள உதவிய இனப்பெருக்க உறுப்புகளை வணங்கும் வழக்கத்தை உண்டாக்கினான். இது தமிழரின் வளமை வழிபாட்டின் ஒரு கூறுதான்.

மேற்கூறிய, மஞ்சை வசந்தன் அவர்களின் கருத்தே உறுதியானது என்பதை அடுத்து வரும் வரிகளில் நிறுவுவோம். உலகில் நம்மையொத்த மனிதன் தோன்றியபின், அவன் முதன்முதலில் வாழ்விடமாக தேர்ந்தெடுத்த இடம் மலைகள் தாம். ஏனெனில், அங்குதான் அவனுக்கு இயற்கையான வாழ்விடங்களாகிய குகைகள் கிடைக்கப்பெற்றன. அதோடு, தான் வேட்டையாடும் மிருகங்களை மேலிருந்து நோட்டமிடவும், தன்னை வேட்டையாடும் மிருகங்களிலிருந்து தப்பிக்கவும் மலைகளே இயற்கையான அரண்களாக அமைந்தன. இந்த கருத்து உலக அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப் பட்டதும், பாவானரால் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டதுமான கருத்து. (காண்க: தமிழர் வரலாறு,, தேவநேயப்பாவாணர்).

ஆக, உலகின் முதல் மாந்தன் வாழந்த இடம் மலைகளே. இயல்பாகவே, இம்மக்கள் எண்ணிக்கையில் மிகக்குறைவாகவே இருந்தனர். ஆனால், இவர்களின் வாழ்வு ஒவ்வொரு நாளும் பெருத்த அச்சுறுத்தலுக்கிடையே தான் நிகழ்ந்து கொண்டிருந்தது. கொடிய மிருகங்கள், நச்சுப்பூச்சிகள், வகைவகையான பாம்புகள், இயற்கை சீற்றங்கள், நோய்களென்று இத்தனையும் அவர்களின் எண்ணிக்கையை பதம்பார்த்துக் கொண்டிருந்தன. மட்டுமில்லாமல், குறைப்பிரசவம், பிரசவத்தில் தாய், சேய் இழப்பு என்ற வகையிலும் அவனுக்கு சோதனைகள். குழந்தை பிறப்பு கூட எத்தகைய சிக்கலானது என்பதும் ஒவ்வொரு முறையும் தாயோ, சேயோ அல்லது இருவருமோ பிழைப்பது அரிது என்பதால் தான் கருவுற்றவளுக்கு ஐந்து, ஏழு மேலும் ஒன்பது மாதங்களில் வளைகாப்பு (குழந்தை பிறப்பின் சிக்கல்களிலிருந்து காக்கும் வளை(யல்)) நிகழ்த்துகின்றனர்.

இத்துணை இடர்களுக்கு இடையே வாழ்ந்த அவர்களுக்கு தங்களின் இனப்பெருக்க தேவை எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை எளிதே ஊகித்தறியலாம். மிருகங்களிடமிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள ஆட்பலம் தேவையல்லவா? இந்த நிலையில் தான் தன்னுடைய இருப்பிற்கே அடித்தளமான இனப்பெருக்க உறுப்புகளை நன்றியோடும், மரியாதையோடும் பார்த்தான். நமது தற்போதய வாழ்க்கையை மறந்து, மனவெளியில் அக்கால கட்டத்திற்கு பயணித்துப் பாருங்கள் அதன் தேவையும், வலியும் புரியும். அந்த உறுப்புகளை ஒரு மாயையானவைகளாகக்கூட அவன் பார்த்தான். இன்று உள்ள அறிவியல் தெளிவு அன்று அவனிடம் இல்லையென்பதையும் சேர்த்து நினைவு கூறுங்கள். இன்றுள்ள அறிவியல் தெளிவோடு பார்த்தாலும் இது ஒரு மாயையான விடயம் தானே.

இனப்பெருக்கத் தேவை எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை மனிதனின் மலைவாழ் காலத்திற்கு வெகுகாலத்திற்கு பிறகுகூட ' பழய ஏற்பாடு' பைபிள் காலத்தில் இருந்த நிலையை ம. செந்தமிழன் தனது ' நிலம், பெண்ணுடல் நிறுவனமயம்' (பண்மைவெளி வெளியீட்டகம்) என்ற நூலில் வேரொறு விடயமாக எடுத்துக்காட்டியுள்ளார். இங்கே இரண்டு பெண்களும் அவர்களது தகப்பன் மட்டும் இருப்பர். அந்த பெண்களில் ஒருத்தி மற்றவளிடம் இயம்புவாள். நம் இனத்தைப்பெருக்க நம் அப்பனைத்தவிர இங்கு வேறு ஆண்மகன் யாரும் இலர். எனவே, நம் தகப்பனுக்கு மது கொடுத்து விட்டு நாம் அவனோடு படுத்துக்கொள்வோம் என்று. ஆக, மலைவாழ் காலத்தில் இனப்பெருக்க தேவையின் வீச்சு எத்தகையதாக இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்ப்பது எளிது. இவைகளை வைத்துப் பார்க்கும் போது லிங்க வழிபாடு தோன்றியதன் தேவையைப் புரிந்து கொள்ளலாம்.

லிங்க வழிபாடு தோன்றியதின் தேவையின் மூலத்தையும், அது தோன்றியது ஆதி காலமென்றும், அது தோன்றிய இடம் மலை என்றும் கண்டோம். தற்கால சிவனும் ஒரு மலைவாழ் தெய்வம். ( இப்போது இமயமலையிலே வைக்கப்பெற்றாலும் அது முதன்முதலில் தோண்றிய இடம் தற்போது நீரில் மூழ்கியுள்ள குமரிக்கண்ட பொதிகை மலையே.) முதல் மாந்தன் வாழ்ந்த இடம் மலை. சிவன் வாழ்விடமும், மரபுவழியாக, மலையே.

'தென்னாடுடைய சிவனே போற்றி - என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்ற மறபுவழி போற்றலின்படியும், இது பழந்தமிழரால் வழிபட்ட வடிவம். இதன் வழி, தமிழரே உலகின் மூத்த குடியென்று உறுதியாக நிறுவலாம். தமிழரே உலகின் மூத்த குடியென்பது உறுதியாக முன்பே நிறுவப்பட்ட தென்றாலும், இந்தச் சான்றும் அதற்கு அரண் சேர்க்கிறது.

(இத்தகைய வழிபடு தெய்வம் உலகில் வேறெந்த குடிக்கும் இல்லையென்பது தெரிந்ததே. இன்று இந்திய நிலப்பரப்பெங்கும் பரவியுள்ள இவ்வழிபடுபொருள், அன்று இந்தியாவெங்கும் பரவியிருந்த தமிழரின் வழிவந்ததே. இந்திய சிவன் கோயில்களில் 90 சதவீதம் தமிழ் நாட்டில் மட்டுமே உள்ளது. 1500 ஆண்டுகளுக்கு முன்பும் கர்நாடகம், தமிழ் பேசிய பகுதிதான். அங்குள்ள லிங்காயத்து சமூகத்தினரும் தமிழினத்தைச் சேர்ந்தவரே! கருநாடகம் என்பதே, 'மேடான நாடு' என்று பொருள்படும் தமிழ்ப் பெயர் தான். காளிக் கோட்டம் -> காளிக் கோட்டா -> கல்கத்தா என்பதும் தமிழ்ப் பெயர்தான். இந்தியாவின் தமிழ்ப் பூர்வீகத்திற்கான சான்றுகள் ஏராளம், ஏராளம். இப்போதைக்கு இந்த சான்றுகள் போதும் என்று மேல் செல்வோம்.)

லிங்கம் என்ற பெயர் எப்போது ஏற்பட்டதென்பது தெரியவில்லை. ஆனால், சிவம் என்பது மட்டும் முதலில் தோன்றிய பெயர் எனத்துணிய இடமுண்டு. இனப்பெருக்கத்தோடு உடன்பட்ட இன்னொன்று, பெண்களின் பூப்புக்குருதி. குருதியின் நிறம் சிவப்பு. இதனடிப்படையில் லிங்கத்திற்கு முதலில் பெயர் வைத்தவன் குருதியின் நிறத்தை வைத்து 'சிவம்' என்று அழைத்திருக்கலாம். (கடலின் நிறத்தை வைத்து நீரை, நீலு என்று அழைத்தது போல.) பிற்காலத்தில், நாளடைவில் சிவம் குறித்த சிவந்த நிறத்தை நெருப்போடு தொடர்பு படுத்தியிருக்கலாம். பழங்காலத்தில் நெருப்பால் ஆக்கத்தை விட அழிவே மிகையாயிருந்திருக்க வேண்டும். மிக அடர்ந்த மலைக்காடுகளில் மரங்களின் உராய்வுகளால் அடிக்கடி தீப்பிடித்து பெரும் சேதங்கள் ஏற்படுவது தொடர்கதையாயிருந்திருக்க வேண்டும். எனவே, காலப்போக்கில் சிவம் அழிவுக்கடவுளாகக் கருதப்பட்டிருக்கலாம். அல்லது, பார்ப்பனர்கள் இதே கருத்தாக்கத்தின் ( அதாவது சிவம் -> சிவப்பு -> நெருப்பு) அடிப்படையில் சைவத்தையும், வைணவத்தையும் இந்து மதம் என்ற புனைவுக்குள் அடைக்கும் போது சிவனுக்கு அழிவுத்துறையை ஒதுக்கியும் இருக்கலாம்.

இதிலே இனொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். 'அன்பே சிவம்' என்ற போற்றுதல். பொதுவாக இறை என்பது அன்பு வடிவமானதென்றாலும், சிவத்திற்குத்தான் அது இயல்பான சொல். காதலன்பில்தானே இனப்பெருக்கம் நிகழ்கின்றது? ஆண்-பெண் காதலன்பைக் குறிப்பது தானே சிவலிங்கம். அது பொதுமைப்படுத்தப்பட்டு அனைத்து அன்பின் அடையாளமாக குறிக்கப்படுகின்றது. சிவலிங்கத்தைத்தான் தற்காலத்தில் Arrow & Clover ஆக, காதலன்பைக் குறிக்க சற்று வித்தியாசமாக பயன்படுத்துவது எண்ணத்தக்கது. இங்கும் Clover சிவப்பாக வரையப்படுவதை நோக்குக! (Clover என்பது பெண்ணுறுப்பைப் போன்ற இலை உருவம் கொண்ட செடி. Heart & Arrow என்பது அவையடக்கச் சொல். )

மேற்கண்ட இந்தக் கட்டுரை 'புகழ்ச்செல்வி' என்ற சிற்றிதழில் வெளிவந்து, பரவலான வரவேற்பைப் பெற்றது. சிவம் என்ற பெயருக்கான மூலத்தை ஊகித்த நான், லிங்கம் என்ற பெயர் எப்போது ஏற்பட்டது என்று தெரியவில்லை என்று எழுதியிருந்தேன். கட்டுரையைப் படித்த ஒர் ஆய்வாளர் என்னைத் தொடர்பு கொண்டு கீழ்வருமாறு விளக்கம் சொன்னார்.

"அந்தக் காலத்திலே வீர மரணம் எய்துபவர்களுக்கு நடுகல் நட்டு வழிபடுவார்கள். நடுகல்லுக்கு அக்காலப் பெயர் 'ஆலங்கம்' என்பது. சிவலிங்கம் நடுகல்லைப் போன்ற தோற்றம் கொண்டுள்ளதால், ஆலங்கம் என்று அழைக்கப்பட்டு, அது மறுவித்தான் லிங்கம் என்றானது."

மேற்கூறிய அவரது விளக்கத்திற்குப் பிறகு நமக்கு விளங்குவது என்னவென்றால், 'சிவம்' என்பது பெண்ணுறுப்பின் அடிப்படையில் தோன்றிய பகுதிப் பெயர்தான். அதேபோல, ஆணுறுப்பின் அடிப்படையிலான பகுதிப் பெயர் 'ஆலங்கம்' என்பது. ஆனால், இந்த உருவத்தின், (ஆண்-பெண் இனப்பெருக்க உறுப்புகளின் தொகை வடிவத்தின்), தொகைப்பெயர் ஒன்று தேவை. ஆக, இவ்வுருவத்தின் தொகைப்பெயர் (சிவம் + ஆலங்கம்) -> சிவாலங்கம். இது மருவித்தான் 'சிவலிங்கம்' என்ற பெயர் தோன்றியது என்பது திண்ணம்.

இதை எழுதும் நான், உங்களைச் சிவலிங்கத்தை வழிபடச் சொல்லவில்லை. சிவலிங்கத்தை வழிபட்ட அன்றைய தமிழனின் தேவை இன்று இல்லை. அளப்பரிய மக்கள் பெருக்கத்தால் அவதியுற்று வருகிறோம் நாம். நாம் நமது வரலாற்றையும் மரபுகளையும் முறையாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதை முன்னிருத்தி எழுதப்பட்டது தான் இந்தக் கட்டுரை. மூடநம்பிக்கையைக் காக்க வேண்டியதில்லை. ஆனால், மரபுகளைக் காக்க வேண்டும். அதற்கு வரலாற்று தேவையள்ளது. மரபைக் காக்க தெய்வ நம்பிக்கை தேவையில்லை. சிந்து சமவெளி நாகரிகம் தமிழரது என்பதற்கு இதுவும் ஒரு சான்றல்லவா?

- முனைவர். வே. பாண்டியன் ([email protected])

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com