Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

எழுத்துவியாபாரி எஸ்.ராமகிருஷ்ணனின் அபத்த அரசியல்
ம.மணிமாறன்

முஸ்தீபு:

காவல்கோட்டத்தை கண்ட நாள்முதல் துவங்கிய நடுக்கம் நின்றபாடில்லை எஸ்.ராமகிருஷ்ணனுக்கு. நடுக்கம் பெரும் காய்ச்சலாகி வெப்பம் உள்ளிறங்கிட வயிற்றெரிச்சல் எனும் வாயுக்கோளாறாகிக் கிடக்கிறது உடலெங்கும். ஏதாவது மருந்துண்டா என விருதுநகர் கரடிச்சித்தரை அணுகிக் கேட்டபோது அவர் உரைத்தவை ரசமானவையாக இருந்தது. மாத்திரைகளும், குளிக்கைகளும் இதற்கு மருந்தாகாது. வசனங்களும் வார்த்தைகளும் தின்று செரித்த உடலது. ஆதி வைத்தியமான வசனாதி வைத்தியமே சாலச்சிறந்தது என்றான். நாமும் அவருக்கு இதையே பரிந்துரைப்போம். அவரின் வயிற்றெரிச்சல் அவரை விட்டு விலகக்கடவதாக.

பூர்வாசிரமம்: தம்மீது வீசப்படும் கூர் கத்திகளுக்குக் கூட வாய்திறந்து பழக்கப்படாதவர் எஸ்.ராமகிருஷ்ணன். உள்ளுக்குள் ஆயிரம் நமைச்சல் இருந்தாலும் சகலத்தையும் மறைத்துக்கொண்டு கனத்த மௌனத்தால் யாவற்றையும் கடப்பவர். இதில் பகிரங்கப்படுத்தப்பட்டவை பாதி. நட்பு வட்டத்தில் கிசுகிசுக்கப்பட்டவை கணக்கிலடங்காது. இப்போதைக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லி வைப்போம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம்.

கடந்த வருடம் வெளிவந்த "சிலேட்" சிற்றிதழில் எழுத்தாளர் லட்சுமி மணிவண்ணன் ராமகிருஷ்ணன் குறித்து கூறிய சொற்களை படித்தவர் அறிவர். படித்தறியா வாசகனுக்கு பகிர்ந்துகொள்ளத் தருகிறேன். "பெருநகரத்து பிளாட்பாரத்தில் நின்று கொண்டு, தெருவில் வருவோர் போவோரை எல்லாம் விபச்சாரத்திற்கு அழைக்கும் வேசையைப் போன்ற எழுத்து வியாபாரி எஸ்.ராமகிருஷ்ணன்"

இதற்கு எஸ்.ராமகிருஷ்ணனின் எதிர்வினை கனத்த மௌனத்தைத் தவிர வேறு எதுவுமில்லை. விஷத்தை விழுங்குவதைப் போல விழுங்கி செரித்த எஸ்.ராமகிருஷ்ணன் இப்போது தன்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை எனச் சொல்லிக்கொண்டே காவல்கோட்டத்தின் மீதும் அதன் எழுத்தாளர் மீதும் இத்தனை காய்தல் காய்வது ஏன்?

புறக்கணிப்பின் அரசியல் முற்றிலும் தெரிந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். நூறுபேர் மட்டும் வாசித்தறிகிற "சிலேட்" பத்திரிகையையெல்லாம் சட்டை செய்துகொண்டிருந்தால் தன்னுடைய இலக்கிய பெரும்பணிகளை எல்லாம் யார்செய்வது? அதிலும் ரஜினி சார் மாதிரியான மகா இலக்கிய ஆளுமைகளுக்கு எல்லாம் பாபா பிளாக் ஷிப் எனும் தத்துவ முத்துக்களை தாம் தூம் என தன்னைத் தவிர எவர் உதிர்ப்பது? லட்சுமி மணிவண்ணன் என்ன ஆனந்தவிகடனிலா எழுதிவிட்டார் பொருட்படுத்திப் பேச? எது எதற்கு எந்த அளவில் எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாதவர் அல்ல எஸ்.ராமகிருஷ்ணன்.

தரவுகள் நகலாகாது. சரித்திரமும் இல்லை. பூகோளமும் இல்லை. தஸ்தாவேஜ்கள், ரிக்கார்டுகள் என்று புலம்பத் துவங்கி "காவல்கோட்டத்தில் எதுவுமில்லை, அப்பாடி நிம்மதியா எல்லாத்தையும் சொல்லியாச்சு" என நிம்மதி அடைந்திருக்கிறார். இப்படி ஆகிப்போச்சே என அவர் மனம் சாந்தம் அடையாமல் சொல்லிக் கொண்டேயிருக்க தன்னையறியாது தமிழ் இலக்கிய வாசகனைப் பார்த்து "நாவலை புறக்கணியுங்கள்" என சிபாரிசு செய்கிறார். இப்போது அவர் தன்னை சந்திக்க வருபவர்களிடம் பேசும் ஒற்றை வார்த்தை "ஒன்னுமே இல்லை" என்பதுதானாம். நோய்க்கூறு முற்றித்தான் போய்விட்டது.

மருத்துவ ஆலோசனை:

வசனாதி வைத்தியத்தில் நோய்க்கிருமிகளுக்கு மருந்து அல்ல. நோய்க்கூறுகளை கண்டறிவதே முதல் பணி. கரடிச்சித்தர் கண்டறிந்த நோய்க் கூறுகளின் படி வரிசைகள்.

நோய்க்கூறு-1:

சும்மாதான் சொல்லிக்கிட்டு திரியுறாங்கன்னு பாத்தா, நெசமாவே வந்திருச்சய்யா... அஞ்சு பக்க நாவலா இருந்தாலும், ஆயிரம் பக்க நாவலா இருந்தாலும் அத நாந்தான தமிழ்ல எழுதனும். நெடுங்குருதி நாவலுக்கு பல கதைகளைச் சொல்லி சரக்கு குடுத்த ஆளுதான இவெ. இவெனல்லாம் பேசிக்கிட்டுதான் திரிவான். ஒரு நாளும் எழுதமாட்டான்னு நெனச்சது தப்பாப்போச்சே. ராத்திரியெல்லாம் தூக்கமில்ல. தூங்கி பல நாளாச்சு. தூக்கத்துலயும் நாவலோட சைஸ் தொந்தரவு செஞ்சிகிட்டே இருக்கப்பா.

நோய்க்கூறு-2:

என்னது 2008-ல வெளிவந்த சிறந்த நாவல் காவல்கோட்டமா? தாங்க முடியலப்பா...! வேறு எவனாவது சிங்கப்பூர் தமிழ்ச்சங்கம், சிலோன் தமிழ்ச்சங்கனும்னு அறிவிச்சிருந்தா கண்டுக்கிடாம விட்டுறலாம். சொன்னது ஆனந்த விகடனாச்சே... சும்மா விட்டுற முடியுமா? நா வேற ‘யாமம்’ங்கிற நவீன மீப்பொருண்மை உலகை (உபயம்:ஜெயமோகன்) சமீபத்துல தான் தமிழுக்குத் தந்தேன். அதப்பத்தியெல்லாம் ஆனந்த விகடன் கண்டுக்கிடல. இப்ப இவனுக்குப் போயி விருது கொடுத்தா...! இத நெனச்ச நிமிஷத்துல இருந்து இடது கண்ணு சும்மா டப்பு டப்புனு அடிச்சுக்கிட்டேயிருக்கு. நின்ன பாடு இல்ல.

நோய்க்கூறு-3:

இவனுக நடத்துற "செம்மலர்" பேட்டியில நா சொன்னது தப்பாப்போச்சு. "எழுதுறதோட முடிஞ்சு போகல படைப்புப்பணி. வாசகனுக்கு பக்கமா, கன்னியாகுமரி வரைக்கும் கொண்டுபோய் சேர்ப்பது வரை படைப்பு பணி நீடிக்குது." இப்படி பொத்தாம் பொதுவா சொல்லியிருக்கக்கூடாது. படைப்புனா, அதோட ஆழமான அர்த்தம் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புங்குறத சொல்லாம விட்டாச்சு. இப்ப பாருங்க, "யாமம்" அடஞ்சு கிடக்கு. இம்புட்டு பெரிய புத்தகத்தப் பற்றி ஊர் ஊரா பேசிக்கிட்டு அலையுறாங்க. எப்படி என்னால தாங்க முடியும்?

நோய்க்கூறு-4:

கோயம்புத்தூரில் நடைபெற்ற நாவல் அறிமுக விழாவில் ஞாநின்னு ஒரு ஆளு பேசியிருக்காரு "எஸ்.ராமகிருஷ்ணனின் மந்திர மொழி நடையின் மீது எனக்கு பெரிய மயக்கம் இருந்தது. ஆனால் ராமகிருஷ்ணனின் மொழி நடையை காவல்கோட்டத்தின் பல இடங்களில் துச்சமென கடந்து செல்கிறார் வெங்கடேசன்..." இது கூடப் பரவாயில்ல. நம்ம நாஞ்சில் நாடன், "மெட்ராசுல உக்காந்துகிட்டு, இலக்கிய பீடாதிபதிகள்னு தன்ன நெனச்சுக்கிட்டு இருக்குற பல நிரந்தர பீடங்கள் இந்த காவல் கோட்ட வருகையால தகருது" அப்படீன்னு பேசியிருக்காரு. இதயெல்லாம் கேட்டபிறகு என்னுடைய காய்ச்சல் நிரந்தரமா உடல்ல தங்கி வயிற்றெரிச்சல் கூடிப்போச்சு. வாந்தி எடுத்தா ஒரே பொறாமையா பொங்கி விழுது. எப்படி இதுல இருந்து வெளியேறனும்னு தான் புரியவே இல்லை.

கரடிச்சித்தர்:

பொறாமையையும், பொச்சுக்காப்பையும் அப்படியே படியெடுங்க கட்டுரையா வடிங்க எல்லாம் சரியாப் போயிரும்... படியெடுத்து முன்வைக்கப்பட்ட வரிசைகளும் அவற்றின் மீதான எளிய பதில்களும்

வயிற்றெரிச்சல்-1:

"இதை சரித்திர நாவல் என்கிறார்கள். ஆனால் நாவலில் சரித்திரமும் இல்லை. நாவலும் இல்லை. இரண்டும் கெட்டான் வகை"

"கம்மவாருகளை விடவும் கொல்லவாருக்களே வீரமானவர்கள். கம்மவாருகள் ஒன்றும் பெரிய வீரர்கள் இல்லை என்று சாதி உட்பிரிவு குழப்பத்தை உருவாக்கும் முயற்சியைத் தவிர பெரிதாக நாயக்கர் வரலாற்றில் எந்த வெளிச்சத்தையும் நாவல் உருவாக்கி சாதித்துவிடவில்லை"

மருந்துகளும் குளிகைகளும்:

கண்களை மூடிக்கொண்டால் கூட வெளிச்சத்தை உணர முடியுமே. முடி அரசு எனும் முதல் பாகத்தில் சாளுவகட்டாரியையும் சந்திரஹாசத்தையும் பின் தொடரும் வாசகன் நாவல் முன்வைக்கும் வெளிச்சத்தையும் நிகழும் அதிகார மாற்றத்தையும் எளிதில் புரிந்துகொள்வான். கொல்லவாருகளின் மூத்த குடி சக்கிலிய மாதங்கி என்பதும், சக்கிலிய குடிகளுக்கான வாழ்த்துப்பாடல் பாட தாசரிகள் இருந்தார்கள் என்பதும் தமிழ் பரப்பிற்கு முற்றிலும் புதிய செய்தி. முடி அரசு எனும் தலைப்பிடப்பட்ட முதல் பாகத்தில் நாயக்கர் வரலாறு நகருகிறது என்ற ஒற்றைப்பார்வை தவறான வாசிப்பின் அடையாளம் கூட அல்ல குதர்க்கமான நோக்கத்தின் வெளிப்பாடு. இதை விரிவாக விளக்குவதாக இருந்தால் இராமகிருஷ்ணனின் நோக்கத்திற்கு இரையானவனாக நான் மாறிவிடுவேன். 300 ஆண்டுகால வரலாற்றின் ஊடே பயணப்படும் சாளுவக்கட்டாரியும், சந்திரஹாசமும் எழுதிச் செல்லும் உபகதையாடல்களை பின் தொடர்வதற்கு முன் அரசியல் குறித்த அக்கறை வேண்டும். தலித் கதையாடல்கள் பற்றிய நேர்மையான பார்வை வேண்டும். இவையெதுவும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இருப்பதாக நான் ஒருபோதும் நம்பவில்லை.

போரில் தளபதிகளுக்கு தரப்படும் சாளுவக்கட்டாரியை மங்கம்மா கொண்டையாவிற்கு பரிசெனத் தருமிடம் காவல்கோட்டம் முன்வைக்கும் நுண் அரசியல் புள்ளி. "சக்கிலியர்களுக்கு போரில் முன்நின்று பலிதரவே விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டாரிகளையெல்லாம் எங்கள் வீட்டில் வைக்க இடமில்லை" என்ற கொண்டையாவிற்கு மங்கம்மா சாளுவக்கட்டாரியை தந்து அனுப்புவதும், இருவருக்குமிடையேயான உரையாடல்களும் நாவல் பேசுவது நாயக்கர் பெருமையையா? அல்லது இன்றைக்கு வீழ்ந்துபோன இனக்குழுவை பற்றிய உண்மையையா? போர் இனக்குழுவான சக்கிலிய மாதாங்கிகள் இன்றைக்கு மலக்குழிக்குள் வீழ்த்தப்பட்டது ஏன் என்ற அரசியல் கேள்வியை நாவலைப் படிக்கும் ஒவ்வொரு வாசகனும் தனக்குள் உணர்வான்.

அரசியல் உட்கூடற்ற வெற்று எழுத்தாள பெருந்தகைக்கு இவையெல்லாம் எட்டுமென்று ஒரு வேளை நாம் எதிர்பார்ப்பதுதான் தவறு.

வயிற்றெரிச்சல்-2

"டாக்டர் ஆனந்த் பாண்டியன் என்ற தமிழகத்தைச் சேர்ந்த மானுடவியல் பேராசிரியர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். அவர் சிறப்பு நிதி நல்கைப் பெற்று கள்ளர் பற்றிய ஆய்வினை தொடர்ந்து பல காலமாக மேற்கொண்டு வருகிறார். அவரது கட்டுரைகளும், ஆய்வும் உலக அரங்கில் மிகுந்த கவனம் பெற்றவை. குறிப்பாக Securing the Rural citizen:The anti-Kallar movement of 1896. "An ode to an Engineer"in water lines:the Penguin Anthology of River writing in India. Race, Nature and the Politics of differences போன்றவை கள்ளர் வாழ்வியல் ஆய்வில் மிக முக்கியமானவை"

"வெங்கடேசனின் கள்ளர் விவரனைகளில் பெரும்பான்மை இவரது ஆய்வின் ஆதாரத் தரவுகளே. ஆனந்த் பாண்டியனின் பல ஆண்டுகால உழைப்பும், தனித்த பார்வைகளும் எவ்வித நன்றி தெரிவித்தலுமின்றி இந்த நாவலில் பல இடங்களில் அப்படியே பயன்படுத்தப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது"

மருந்தாக குளிகைகள் அல்ல வசனாதிகள்:

நன்றியறிதல் குறித்து, அதுவும் எஸ்.ராமகிருஷ்ணனின் நன்றியறிதல் குறித்து அறியவேண்டிய நபர்கள் எழுத்தாளர் கோணங்கி முதல் கவிஞர் தேவேந்திர பூபதி வரை எத்தனையோ பேர் இருக்கிறார்கள். கோவில்பட்டி இந்திரா நகரின் வீட்டு மாடியில் கசங்கிக் கிடந்த காகிதங்களுக்குள் இருந்து முகிழ்ந்து கிளம்பிய எஸ்.ராமகிருஷ்ணனின் ஆரம்பகால கதைகளுக்கான நன்றியை இன்னாள் வரை அவர் கோணங்கிக்கு தெரிவித்திருக்கிறாரா?

இப்படி சொல்லி மட்டும் இந்த இடத்தை கடக்க எனக்கு சம்மதமில்லை. ஒரு தகவலை எழுதுவதற்கு முன் மிக நன்றாக தீர்மானித்து எழுத வேண்டும். இது ஒன்றும் புனைவல்ல. இவர் இஷ்டத்திற்கு சுருட்டி சுருட்டி எழுதியபடி தொடர.

டாக்டர் ஆனந்த பாண்டியன் குறித்த தகவல்களும், தறுதலைகள் கூட எழுதத் துணியாத குறைபாடுள்ள குளறுபடிகளும்:

டாக்டர் ஆனந்த் பாண்டியன் ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். ராமகிருஷ்ணன் சொல்வதைப் போல பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் அல்ல. இதைக்கூட பெரிய தவறில்லை என விட்டுவிடுவோம். எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ள அவருடைய நூல்களைப் பற்றி அவசியம் வாசகர்கள் அறிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதி வருகிறவை, பேசிச் செல்கிறவை எல்லாம் தகவல்பிழைக் களஞ்சியம் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும்

முதல் புத்தகம்: Race, Nature and the Politics of differences. இது ஆனந்த் பாண்டியன் எழுதிய நூல் அல்ல. Donald Moor, Jake Kosek, Dr.Anand Pandiyan ஆகிய மூவரும் தொகுத்துள்ள கட்டுரைத் தொகுப்பு. இதில் வெவ்வேறு ஆய்வாளர்களின் 12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதில் டாக்டர் ஆனந்த் பாண்டியனின் கட்டுரை எதுவும் இடம் பெறவில்லை. தொகுப்பாளர்கள் என்ற முறையில் முன்னுரை மட்டுமே எழுதியுள்ளனர். ராமகிருஷ்ணா... தகவல் தந்தவர்கள் வெட்டிய குழிக்குள் தானாக விழுந்துவிட்டாயே உன்னை என்ன செய்ய?

இதில் கவனிக்க வேண்டிய மிக மிக முக்கியமான விஷயம். இந்த புத்தகத்திற்கும் கள்ளர் வாழ்வியலுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இயற்கை, இனம், இனவெறி பற்றிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். படித்துவிட்டு எழுதவில்லையென்றாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் புத்தகத்தைப் பார்த்துவிட்டு எழுதவேண்டாமா? என்ன செய்வது? காத்திருந்தார்கள். காலம் வந்தது. வழி தெரியாமல் விழி பிதுங்கி சிக்கிக் கொண்டீர். பிரிய நண்பர்களிடம் நட்பைத் தொடர்வதும், பிரிவதும் உமது தனிப்பட்ட விருப்பம்... இதற்கும் எழுத்துலகிற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.

ராமகிருஷ்ணனை சுழலுக்குள் சிக்கச் செய்த இரண்டாவது புததகம் An ode to an Engineer"in water lines:the Penguin Anthology of River writing in India.

River writing என்ற தலைப்பில் Amita Vavisker நதிகள் பற்றிய எழுத்துகளைத் தொகுத்துள்ளார். இதில் வெளியிடப்பட்டிருப்பதும் ஆனந்த் பாண்டியன் எழுதிய ஆய்வுக்கட்டுரையல்ல. கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி விவசாய சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ் வீட்டில் காணக்கிடைத்த பெரியார் அணை பற்றிய வழிநடைச் சிந்துப்பாடல். அந்த வழிநடைச் சிந்தைத்தான் "An Ode to an Journey" என்கிற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலுக்கு முன் பாடல் கிடைத்த விதம், பாடல் எழுதியவர் யார் என்பது குறித்து நிகழ்ந்து வரும் சர்ச்சை, தன்னுடைய கள அனுபவம், பெரியார் அணை, பெண்ணிகுக், லோகன்துரை பற்றிய அறிமுகத்தகவல் என இவற்றை உள்ளடக்கிய சிறு குறிப்பை நாலுபக்கம் எழுதியுள்ளார்.

இதில் திருடி எடுத்து பயன்படுத்துவதற்கான குறிப்புகள் இருப்பதாக டாக்டர் ஆனந்த பாண்டியனே கூட நம்ப மாட்டார். வேண்டுமானால் எஸ்.ராமகிருஷ்ணன் எடுத்தாள நிறைய விஷயங்கள் கிடைக்கக்கூடும். முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்குப் பழக்கமான வேலைதானே. அதிலும் களவு தந்தவன் வலியை உணராத வகையில் நுட்பமாக நீங்கள் நடத்திய இலக்கியத் திருட்டுக்கான சாட்சிகளை எல்லாம் தொகுத்தால் நவீன இலக்கிய களவுக் களஞ்சியம் உருவாகும் சாத்தியம் உள்ளது.

2001ம் ஆண்டு வரை எஸ்.ராமகிருஷ்ணன் பென்னிகுக், லோகன்துரை எனும் பெயர்களைக்கூட அறியாத மங்கானியாகத்தான் இருந்தார் என்பதையும் அவருக்கு இப்பெயர்களை அறியச் செய்ததே காவல்கோட்டம் சு.வெங்கடேசன் தான் என்பதையும் வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

"நீரில் மிதக்கும் நினைவுகள்

கருப்பணன், கழுவன், பெருங்காமன், விருமாண்டி, மூக்க விருமன், தொத்தன் என குலசாமிகளின் பெயர்களுக்கு ஊடாக லோகன்துரையும், பெண்ணி குக்கும் எப்படி கலந்தார்கள் என ஆச்சரியமாக இருந்தது. என்னோடு வந்திருந்த கவிஞர் வெங்கடேசன் இவை இரண்டும் பெரியார் அணையைக் கட்டிய வெள்ளைக்கார இன்ஜினியர்களின் பெயர்கள் என்றதோடு 'இதைவிடவும் ஒரு ஆச்சரியம் இருக்கிறது பார்க்கலாம் வாருங்கள்' என்று அழைத்துக் கொண்டு போனார். சாலையோரத்தில் இருந்த டீக்கடையினில் நுழைந்தோம். லேசான இருட்டு படிந்த திண்டில் உட்கார்ந்தபடி, சுவரைக் காட்டியபோது, அங்கே வேலும் மயிலோடு நிற்கும் முருகன் படமும், வழுக்கை விழுந்த ஏறு நெற்றியும் தொங்கு மீசையும், இடுங்கிய கண்களுடன் கறுப்புக் கோட் அணிந்த பென்னிகுக்கின் புகைப்படமும் தொங்கிக் கொண்டிருந்தன. அதனடியில் கர்னல் ஜெ. பென்னிகுக் என சிறியதாக எழுதப்பட்டிருந்தது. தெய்வத்திற்குச் சமமான வெள்ளைக்காரனைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அன்று இரவெல்லாம் பென்னிகுக் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நண்பர் வெங்கடேசன் தன் வீட்டிலிருந்த பெரியார் அணை பற்றிய ஆவணங்கள், ஒரிஜினல் ரிக்கார்டுகளின் பிரதிகளை காட்டிக் கொண்டிருந்தார்".

மேலே கூறிய தகவல் எல்லாம் சாட்சாத் எழுத்தாளர் பிதாமகன் எஸ்.ராமகிருஷ்ணன் இயம்பியவைதான். இயம்பியவை என்றால் யாரோ ஒருவரிடம் சொல்லிச் சென்றது என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். 2001ல் ஆனந்தவிகடனில் தொடராக எழுதி, பின் விகடன் பிரசுரம் தொகுத்த ‘துணைஎழுத்து’ எனும் அய்யாவின் புத்தகத்தில் இருந்துபட்ட எழுத்துப்பூர்வமான சாட்சியம். இப்போதும் தேடி எடுத்து துணைஎழுத்து பக்கங்கள் 177,178ல் படித்தறிந்து கொள்க வாசகரே.

2001ல் ஒரிஜினல் ரிக்கார்டுகளாக இருந்தவைகள் யாவும் 2009ல் திருடியதாக ஆகிவிட்டது. ஏன் இந்த மாற்றம்? வேறொன்றும் இல்லை. அவர் கவிஞராக இருந்தவரைப் பிரச்சனை இல்லை. வேலை மெனக்கெட்டு நாவல் எழுதினால், அதிலும் 1000 பக்கம் நாவல் எழுதினால் எப்படி?

இங்கே வாசகன் அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய குறிப்பு எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிச்செல்லும் கட்டுரைகளின் உண்மைத்தன்மை, தகவல்கள் பற்றிய நேர்மை ஆகியவை குறித்து கவனத்துடன் இனி வாசித்தறிய வேண்டும் என்பதுதான்.

மூன்றாவது புத்தகம்

" Securing the rural citizen ; Tha Anti - Kallar Movement of 1896" ஆவண காப்பகங்களில் 1896ல் நடைபெற்ற பண்டுக் கலவரம் குறித்த தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதன் ஒரு ஜிஓ மட்டும் 464 பக்கங்களைக் கொண்டது. காவல்கோட்டம் நாவலில் பண்டுக்கலவரத்திற்கு தலைமை தாங்கிய அம்மையப்ப கோனாரை மதுரை நகரின் முக்கிய பிரமுகர்கள் சிறைச்சாலைக்குச் சென்று சந்திப்பதாக ஒரு பதிவு வருகிறது. அதுவும் கதையின் போக்கிற்கு பயன் தரும் என்பதால்தான் என எளிய வாசகன் ஆகிய நான் அறிகிறேன். அதுவும் மொத்த நாவலில் இரண்டே பக்கம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

தத்துவமஸி எனும் தத்துவம் தெரிந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். என்ன செய்வது அவருக்கு யாரைப் பார்த்தாலும் தன்னைப் போலவே தெரிகிறது. எங்கிருந்து எடுத்தது? யாரிடமிருந்து பெற்றது? என்று யோசித்து நேரத்தை வீணடிக்காமல் உருப்படியாக 2 கதைகள் எழுதுங்கள் ராமகிருஷ்ணன்...

கடைசியாக கொஞ்சம் பேதிக்கு மருந்து

வேறு யாருக்கு? எஸ்.ராமகிருஷ்ணனுக்குதான். பல ஆண்டுகளாக களஆய்வு செய்து உலக அரங்கில் மிகுந்த கவனம் பெற்று வரும் டாக்டர் ஆனந்த்பாண்டியன் மதுரை, கம்பம் பகுதியில் மிகுந்த அக்கறையுடன் கள்ளர் வாழ்வியலைப் பற்றிய ஆய்வை செய்து வருகிறார்.

2004ம் ஆண்டு தன்னுடைய ஆய்வை " LandScapes of Redemption ;- Cultivating Heart and Soil in South India" எனும் தலைப்பில் சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இவ்வாண்டு இறுதியில் அது நூலாக வெளிவர உள்ளது. அப்புத்தகத்தின் தலைப்பு " Crooked Stalks ; Cultivating Virtue in South India" என்பதாகும். தன்னுடைய ஆய்வேட்டின் acknowledgment ல் டாக்டர் ஆனந்த்பாண்டியனின் கூற்றுக்களை வாசகர்களுக்காக தருகிறேன்.

".... I met Su.Venkatesan at a Communist Party (Marxist) even in honour of his book ' KALACHARATHIN ARASIYAL ' or The Politics of Culture " He intented next to write a tamil novel regarding the Colonial History of the Kallars and the Criminal Tribes Act from them on we traversed the region together for fragments of this history , meeting figures , such as Thavamani Kalyana Thevar in Melaorappanur, Rev D.Chellappa in Thanjavur. V. Chinna Adiakkan in Melur and George Virumandi and advocate Surendran in Madurai . I am greateful to each of this man for their insights into the Colonial and Post Colonial condition of Kallar castefolk. But especially to Venkatesan , a man of extra ordinary honousty, gentleness and intelluctual passion. His friendship remains an honour.

மேலே கூறப்பட்டவற்றின் சுருக்கம் வாசகருக்காக...

'நான் கலாச்சாரத்தின் அரசியல் எனும் புத்தக விழாவில் சு.வெங்கடேசனை சந்தித்தேன் எனத் துவங்கி, அவர் எழுதிக் கொண்டிருக்கும் நாவல்குறித்தும் அதாவது காவல்கோட்டம் காலனிய-குற்றப்பரம்பரையினர் சட்டத்திற்கு எதிரான அரசியலைப் பேசுகிற நாவல் என்கிற குறிப்பைத் தருகிறார். கள்ளர் நாட்டார் வழக்காறுகளை தொகுப்பதில் விடாது நுட்பமாக உழைத்துக்கொண்டு வருபவர், நேர்மையாளர், எங்களுடைய தொடரும் நட்பின் அடையாளம் என பெருமிதப்படுத்துகிறார்.'

எவரோ தந்த தகவலை எழுதுவதற்கு முன் யோசித்துப் பார்த்து எழுதவேண்டாமா? அல்லது ஆராய்ந்து அறிந்து எழுத வேண்டாமா? இப்படியா மாட்டிக்கிறது. அய்யோ பாவம்.

குறிப்பு: ஆனந்த் பாண்டியனின் ஆய்வேட்டின் பிரதி ஒன்று சென்னை ஆவணக்காப்பகத்தில் இருக்கிறது. ராமகிருஷ்ணன் அவர்களே முடிந்தால் போய்ப் பாருங்கள். காப்பக தூசிகள் உங்கள் நாசிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது நாங்கள் அறிந்ததுதான். பரவாயில்லை. இந்த ஆய்வேட்டை படித்தறிந்த ஆய்வாளர்கள் எம்.எஸ்.எஸ்.பாண்டியனிடமோ, ஆ.இரா.வெங்கடாசலபதியிடமோ கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். தேவையென்றால் உங்களுக்கு அவர்களின் கைப்பேசி எண்களை மறக்காமல் அனுப்பிவைக்கிறேன்.

வயிற்றெரிச்சல்-3:

"நாவல்களில் தரப்படும் தகவல்கள் டாக்டர் ஆனந்த் பாண்டியன், பிரெஞ்ச் மானுடவியல் ஆய்வாளர் லூயிஸ்டுமாண்ட் போன்றவர்களிடம் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது"

"தொ.பரமசிவம் தொகுத்த புத்தகங்களில் இருந்தும் கட்டுரைகளில் இருந்தும் பெருவாரியான தகவல்கள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன"

"இருள்பற்றி, நிசப்தம்பற்றி, களவுபற்றி, வேட்டை பற்றிய வர்ணனைகள் எல்லாம் கோணங்கியின் மொழியிலிருந்து உருவி எடுக்கப்பட்டவை"

குளிகைகள் அல்ல:

டாக்டர் ஆனந்த் பாண்டியனுக்கே சும்மா ஆடிப்போய் கிடக்குறீங்க எழுத்தாளரே! நீங்கள் சொல்லுகிற ஆய்வாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் மீது தமிழ்ச்சமூகத்திற்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. நாவலாசிரியருக்கும் நிச்சயம் இருக்கும். நான் அவற்றையெல்லாம் முழுமையாகப் படித்து அறிந்தவன் அல்ல, அல்லது உங்களைப்போல டவுன்லோடு கட்டுரைகளைப் படித்துவிட்டு சகலத்தையும் படித்தறிந்த பாவனையில் மாட்டிக்கொள்ளவும் தயாரில்லை.

எந்தெந்த தகவல்கள் எந்தெந்த புத்தகங்களிலிருந்து காவல்கோட்டத்தின் எப்பகுதியில் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பதை பட்டியலிடுங்கள். உங்களுடைய விவாதத்தின் உண்மைத்தன்மையை இலக்கிய உலகம் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும். சம்மதமா நண்பரே? நாவலாசிரியரையும் விவாதிக்க அழைப்போம்.

உளறல்: உபரி-1

"1.Edgar Thurston "The castes and Tribes of South India,2. The Madura country-Amanual-J.H.Nelson,3. History of the Nayaks of Madurai-R.Sathiyanathaier,4. The History of Trinevelly by Rev.R.Caldwell, 5.History of Military transaction-R.Orme போன்ற புத்தகங்களில் உள்ள குறிப்புகளை அப்படியே சேர்த்துள்ளார்"

மேற்கண்ட புத்தகங்கள் மட்டுமல்ல, இவையனைத்தும் சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டவை. இவைகளைத் தொடர்ந்து இன்றுவரை ஆய்வுலகு எவ்வளவோ பரந்து விரிந்து பரவியிருக்கிறது. இவையணைத்தும் நூலாசிரியரால் தேடப்பட்டிருக்கும். இவற்றில் பொதிந்துள்ள வரலாற்றுத் தகவல்களின் பின்னுள்ள வாழ்வையும், உண்மையையும் கண்டறிவதுதான் படைப்பாளனின் பணி.

எந்த வரலாற்று ஓர்மையும் இல்லாமல் கிடைத்த ஒற்றை வார்த்தையை கைக்கொண்டு அதை முன்னே ஓடவிட்டு, பின்னே வார்த்தைகளை அடுக்கி நகர்வது Draft manகளின் வேலை. கலைஞனின் வேலை அல்ல. Draft manகளின் பணியைச் செய்தவர், செய்துகொண்டிருப்பவர் யாரென தமிழ்வாசகர்களுக்கு நன்கு தெரியும். தாங்கள் செய்வதையே ஏன் மற்றவர்களிடமும் எதிர்பார்க்கிறீர்கள்.?

உளறல்: உபரி-2

"குற்றப்பரம்பரை குறித்து தமிழில் ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, வேல.ராமமூர்த்தி, மற்றும் நானெல்லாம் எழுதியிருக்கிறோம்"

எளிய கேள்வி:

உங்கள் அளவிற்கு நான் விரிந்த வாசகன் இல்லை. நான் அறிந்த வரை ச.தமிழ்ச்செல்வன் குற்றப்பரம்பரையினர் குறித்து யாதொரு பதிவையும் செய்ததில்லை. இருந்தாலும் கேட்டு வைப்போம் என எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனை கைபேசியில் அழைத்தேன்.

இவருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலின் வரிவடிவம் இதோ:

நான்: ஏண்ணே! நீங்க கள்ளர்களைப் பற்றி எழுதியிருக்கீங்களாமே!

ச.த: எனக்கு அவுங்களப்பற்றி தெரியாதுல்லடா எப்படி எழுதமுடியும்.

நான்: இல்லண்ணே நீங்க எழுதியிருக்கிறதா எஸ்.ராமகிருஷ்ணன் அவரோட பிளாக்குல பதிவு செஞ்சிருக்காரு. உங்களோட கோணங்கியையும், வேல.ராமமூர்த்தியையும் சேர்த்து சொல்லியிருக்காரே!

ச.த.: நான் என்ன எஸ்.ராமகிருஷ்ணனாப்பா... யாரோட அனுபவத்தையும் தன் அனுபவம் மாதிரி தகவமைச்சு எழுதுறதுக்கு, ஆனா இந்த எழுத்தாளர் சேர்மானம் ரொம்ப வில்லங்கம்மா இருக்கப்பா...

நெல்லையில் நடந்த நெடுங்குருதி நாவல் வெளியீட்டு விழாவில் ச.தமிழ்ச்செல்வனின் பேச்சு குறித்து, அவர் சாதியாக இருக்கிறார் என்று தமிழகம் முழுவதும் நீங்கள் பேசித் திரிந்தது வேறு எனக்கு இப்போது ஞாபகம் வந்து தொலைக்கிறது... காவல்கோட்டம் நாவலாசிரியர் சு.வெங்கடேசனையும் நெடுங்குருதி வெளியீட்டு விழாவிற்கு பேசக்கூப்பிட்டதும் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.

எளிய கேள்விகள்:

தரவுகள் குறித்த பதற்றம் தொற்றிக்கொண்டிருப்பதை உங்களுடைய முழுப்பதிவையும் வாசித்தறியும் வாசகனால் உணர முடியும். ஒரு இடத்தில் "தாதனூர் என்ற ஊரில் வாழும் கள்ளர்களைப் பற்றிய எண்ணிக்கையற்ற தகவல்கள், உதிரிச்சம்பவங்கள் போன்றவற்றால் நிரப்பப்பட்டுள்ளது” என்கிறீர்கள்.

மற்றோரிடத்தில் "தரவுகளை, தகவல்களை ஒன்றோடொன்று திணிக்கப்பட்டு மாபெரும் வைக்கோல் போர் போல் காட்சியளிக்கிறது” என்கிறீர்கள். பிறகு மாலிக்காபூர் ஒரு அரவாணி என்ற தகவல் இவருக்குத் தெரியவில்லை. அதை இவர் பதிவு செய்யவில்லை. திருமலை நாயக்கரின் அரண்மனை கட்டிய இத்தாலிய கட்டிட கலைஞனைப் பற்றி பெரிதாக ஒன்றும் எழுதவில்லை. நாவல் 1920துடன் முடிகிறது. குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டத்தையும் சட்டம் நீக்கப்பட்டதையும் பற்றி நாவலாசிரியர் எழுதவில்லை. (அதாவது 1948 வரை எழுதவில்லை) மீனாட்சி விஷம் குடித்தாள் என்ற தகவல் மட்டுமே இருக்கிறது. ஆனால் அது யாரால் ஏன் கொடுக்கப்பட்டது, விஷத்தின் நிறமென்ன, அதை குடித்த டப்பாவின் சைஸ் என்ன என்பதைப் பற்றியெல்லாம் நாவலில் ஒன்றுமில்லை என்கிறீர்கள்.

ஒரு பக்கத்தில் ஒரே ஆவணம், தஸ்தாவேஜ், ரிக்கார்டு என்கிறீர்கள். மற்றொரு பக்கத்தில் இதை எழுதாமல் விட்டுவிட்டார். அதை சேர்க்காமல் விட்டுவிட்டார். இதற்கெல்லாம் பாரீசில் உள்ள ஆவணக்காப்பகத்தை நாடவேண்டி இருந்திருக்கும். அது ஒன்றும் சாதாரண விஷயமல்ல... என்கிறீர்கள்.

அது இருக்கு, இது இல்ல.
இது இருக்கும்னு பாத்தா இதுவும் இல்ல
அது ரொம்ப இருக்கு ஆனா இது இல்லயே
அதுவும் இதுவும் இருக்கு ஆனா
இதுவும் அதுவும் இல்லயே...

இப்ப என்னய்யா சொல்ல வர்றீங்க- ஒரு முடிவுக்கு வாங்க. ஒரு விஷயம் தெளிவா புரியுது. தமிழ்ல நாவல் எழுதுற ஆளு இந்த இந்த தகவலத்தான் எழுதனும், இந்த இந்த தஸ்தாவேஜ்கள் இருந்தாத்தான் சரித்திர நாவல். ரிக்கார்டுகள்னா இந்தியாவில் எடுத்தா எப்படி? அதுக்கு பாரிசுக்கு போய் திரும்பனும் இப்படிங்கிற வரைமுறை உங்க கைவசம் இருக்கும்போல. அதைக் கணக்கில் எடுத்துக்கிட்டுத்தான் எவனும் தமிழ்ல நாவல் எழுதனுமா?

ஆமா... உங்களுக்கு இந்த அத்தாரிட்டியை யார் சாமீ வழங்குனது? ஒன்னு மட்டும் புரியுது. உங்களுக்குப் புடிச்சா நாவல். புடிக்காட்டி அது நாவல் இல்ல.

ஆமா நீங்க சினிமா சம்பந்தமாக தலையணை தண்டி தயாரிச்சுப் போட்டீங்களே... பாவம் கனவுப் பட்டறை பதிப்பகத்தையே மூட வெச்சீங்கள்ல- அது தயாரிக்க பாரீசு போய்ட்டு வந்தீங்களோ? போனாலும் போயிருப்பீங்க சொல்ல முடியாது.

எதுக்கு சார் நீங்க போகனும்? உங்களுக்குத்தான் கைவசம் மந்திரப்பெட்டி இருக்கே, mouse தொட்டாப்போதும் சும்மா தகவல்கள் அருவி போல கொட்டிராதா...

உங்களுடைய புத்தகங்கள் குறித்த பத்திகளை படிப்பவர்களை மிரட்டி வருகிறீர்களே, அப்பாடி எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு தகவல் இயந்திரம்... என உங்கள் எதிரில் அமர்ந்து பேசும் எளிய வாசகனை மிரட்டுவதில் உங்களுக்குள் நிகழும் குரூரத்தை உங்களின் நெருங்கிய நண்பர்கள் அறிவர்.

இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே அந்த மெகா சைஸ் (தப்பு, தப்பு வேறு யாராவது எழுதினால்தான் மெகா சைஸ். நீங்கள் எழுதினால் அதற்கு வேறு பெயர் இருக்கும். தயவு செய்து அதனை சொல்லிவிடுங்கள்) சினிமா புத்தகம் வேறு என் கண்ணில் பட்டுத் தொலைத்தது. கூடவே நீங்கள் சினிமா கலைஞர்களை மிரட்டியதும் காட்சியாக நகர்கிறது.

குழப்பத்தின் உச்சம்

நாவலை நீங்கள் தலை கீழாக வாசித்திருப்பதையும், நாவலையும் உங்கள் வக்கிர கட்டுரையையும் படித்திடும் வாசகன் யாரும் அறிய முடியும். களவைக் கொண்டாடுகிறது, காவல் என்ன? மதுரை காவல் நாயக்கர்களின் சதிதானே? கள்ளர் இனப்பெண்களின் வலி பதிவாகவில்லை, அவமானம் பதிவாகவில்லை? இன்னும் என்னென்னமோ இல்லை என நீள்கிறது உங்கள் பட்டியல்.

காவல்காரனை பொதுப்புத்தியில் களவு சம்பந்தப்பட்டவனாக மாற்றிய காலனிய அரசின் சதியைத்தான் நாவல் பேசுகிறது. ஆனால் அதைத் தலைகீழாக மாற்றி காலனிய சதியையே உங்களின் கட்டுரையில் நீங்கள் முன்மொழிகிறீர்கள். களவும், காவலும் இரட்டைப் பிறவிகள். களவின் வலியை தாதனூரை முதன்முதலாக அறியச்செய்த குறவர் சமூகத்தைச் சேர்ந்த செங்கன் உங்கள் ஞாபக அடுக்கில் இல்லாமலா போய்விட்டான்?

காவல்துறை என்பதுதான் police என்பதற்கான ஆகச்சரியான மொழிபெயர்ப்பா என உங்கள் ஆங்கில புலமையுடனோ, கற்றறிந்த மொழி அறிஞர்களுடனோ உரசிப்பார்த்ததுண்டா? அப்படிச் செய்திருந்தால், யோசித்திருந்தால் ஒருவேளை மையச்சரடை பிடித்திருக்கலாம். நீடித்திருந்த காவல் என்கிற குடிக்காவல் அமைப்பை காலணி ஆதிக்கம் சிதைத்திட எடுத்த முயற்சிகளும் அதை முறியடிக்கிற வெகுமக்கள் நடத்திய கிளர்ச்சிகளும், ரத்தப் பலிகளும் நாவலெங்கும் உறைந்து கிடப்பது தெரிந்திருக்கும்.

நாட்டார் வழக்காற்றியல் தன்மையில் அமைந்த தாதனூர் குறித்த கதை, குத்துவிரல் கிழவிகளின் வாழ்க்கை குறித்த பதிவு, வாழ்வை அதன் நேர்மையோடு எதிர்கொண்ட பெரியாம்பிளைகள், கோவில் திருவிழாக்கள், கங்காதேவி முதல் பின்னியக்காள் வரை பெண்கள் தங்களின் முழு ஆளுமையோடு கதைப்பரப்பெங்கும் எழுந்து நிற்கும் ஆவேசம் இவை எதுவும் புனைவாக உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?

தாதுவருடப் பஞ்சத்தில் வீழ்ந்துகிடந்த ஊருக்கு தன்னையே உணவாக்கி படைத்திட்டாளே குஞ்சரத்தம்மாள், எஸ்.ராமகிருஷ்ணன் எனும் இலக்கிய விமர்சகரின் கண்களின் காட்சி எல்லைக்கு அப்பால் போய்விட்டாளே ஏன்? இன்னும் எழுத எழுத நீளும் நாவலில் பதிவுபெற்றுள்ள கள்ளர் இனக்குழுவின் வாழ்வியல் முறைகள். ராமகிருஷ்ணனின் மூளைக்கு எட்டாமல் இருக்க எந்த வாய்ப்பும் இல்லை. திட்டமிட்டு மறைக்கிறார் என்பதே நிஜம்.

இந்நாவலின் கலாப்பூர்வமான வெற்றியை, மொழி அழகை, வாசகனை கைபிடித்துக்கொண்டு காலத்தின் பிரம்மாண்ட திரைச்சீலையை அசாத்தியமாக தாண்டிச்செல்லும் இப்புனைவின் மகா சாத்தியத்தை தமிழ் வாசகன் அறிந்துவிடக்கூடாது என்பதற்காகவே தஸ்தாவேஜ்கள், ரிக்கார்டுகள், ஆய்வுகள் என்று முற்றிலும் விவாதத்தை மாற்றி மிக திட்டமிட்ட முறையில் தமது வக்கிர கட்டுரையை வடிவமைத்துள்ளார்.

இதுவரை நாவலைப் பேசியவர்கள் எல்லாம் நேர்மையுடன் தான் தங்களது பார்வையை முன்வைத்துள்ளார்கள். சென்னை முதல் மதுரை வரை அனைத்து நிகழ்விலும் அதுதான் நடந்தது. மிகக்கவனமாக எஸ்.ராமகிருஷ்ணன் சென்னையில் நடந்த காவல் கோட்ட வெளியீட்டு விழாவில் துவக்கம் முதல் முடிவு வரை இருந்து தான் பங்கேற்றதைப் பதிவு செய்யாமல் தவிர்த்துள்ளார்.

சென்னையில் ஆ.இரா.வெங்கடாசலபதி பேசியதில் நாவல் குறித்த கேள்விகளை காலச்சுவட்டில் பதிவு செய்திருக்கிறார். அதில் வாசகனின், விமர்சகனின் அக்கறையும் நேர்மையும் இருக்கிறது. அதில் அவருடன் விவாதிப்பதற்கான சகல சாத்தியங்களும் கொண்ட வெளியையும் அவரே உருவாக்கி இருப்பதை வாசகர்கள் அறிவர்.

புதுச்சேரியில் பிரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் கண்ணனும், வ.கீதாவும் நாவல் குறித்த தங்களுடைய வியப்பையும், விமர்சனத்தையும் மிக நேர்மையாகப் பதிவு செய்தார்கள். நானும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்று நாவல் குறித்த அபிப்ராயத்தைப் பதிவு செய்தேன்.

உங்களுடைய விமர்சனத்தில் (தப்பு... தப்பு... காய்ந்து பொறாமையின் உச்சத்தில் நின்று உளறியதில்) துளியாவது உண்மை இருக்குமெனில் மதுரை நிகழ்வில் மிக நேர்மையாக நீங்கள் வந்து பதிவு செய்திருக்கலாம். உருவாக்கித் தரப்பட்ட வாய்ப்பை ஏன் பயன்படுத்த இயலவில்லை? நீங்கள் உண்மையைப் பற்றி நடப்பவரல்ல. உங்கள் நடை எல்லைக்கு வெகு அப்பால் எங்கோ இருக்கிறது உண்மை.

கடைசியாக சில கேள்விகள்...

பல ஆண்டுகளாக இலக்கியத்துறையில் இயங்கிவரும் எஸ்.ராமகிருஷ்ணன் எனும் எழுத்தாளரின் சகல உரை நடைகளையும் வாசித்தறிந்த எளிய வாசகன் என்ற முறையில் இந்த உரையாடலை தங்களுடன் நடத்த எனக்கு முழுத்தகுதி இருப்பதாக கருதுகிறேன்.

பத்தாண்டு காலம் உழைத்து ஒரு படைப்பாளி உருவாக்கியிருக்கிற நாவல். அதில் நிறை குறைகளுக்கான சகல சாத்தியங்களும் உண்டு. முற்று முதலான அமரத்துவம் பெற்ற படைப்பை வாசகர் உலகம் இதுநாள் வரை கண்டதில்லை. குறைபாடுகளுடன் கூடியதே படைப்புகள் யாவும். படைப்பாளிகள் தங்கள் சகல மொழி நுட்பத்தையும் கொண்டு குறைபாட்டை களைய முயற்சிக்கிறார்கள். இதுவே படைப்புப் பணியின் ஆதார சுருதி என்று நான் நம்புகிறேன். நீங்கள் உணர்ந்த குறைபாட்டை இலக்கிய உலகோடு பகிர்ந்துகொள்வது உங்களின் விருப்பம் சார்ந்தது. இதில் தவறில்லை. ஆனால் விமர்சிக்க நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியும், அதில் ஊறிக்கிடக்கும் வக்கிரமும் ஆத்திரமும் எவருக்கும் எரிச்சல் ஏற்படுத்தக்கூடியது.

சமூகத்தின், மனித மணத்தின் இடுக்குகளில் ஊறிக்கிடக்கும் அழுக்குகளை காலம் தோறும் படைப்பாக்கி வரும் எஸ்.ராமகிருஷ்ணன் முதலில் தன் சக படைப்பாளிகளின் மீதான காழ்ப்பைப் போக்க முன்வரவேண்டும். மற்றவர்களின் படைப்பின் மீதான விமர்சனத்தை முன்வைப்பதற்கான மொழியை கற்றுக்கொள்ள முயற்சி செய்யவேண்டுமென எனக்குப் படுகிறது.

மறந்துபோன பழைய கதை

90களின் துவக்கத்தில் இலக்கிய உலகில் குறிப்பாக சிற்றிதழ் சார்ந்த இலக்கியப் பரப்பில் ஒரு பெரும் விவாதத்தை எஸ்.ராமகிருஷ்ணனும், ஜெயமோகனும் துவக்கி வைத்தார்கள். தமிழில் நாவலே இல்லை. இதுவரை எழுதப்பட்ட நாவல்கள் யாவும் அதற்கான எத்தனிப்புகள் தானே தவிர நாவல்கள் அல்ல என்றனர். இரண்டு சிறுபத்திரிகையின் வாசகன் சிக்கினால் போதும். உடனே விவாதம்தான். தமிழில் நாம் இதுவரை வாசித்து லயித்திருந்த பல நாவல்கள் நாவலே இல்லையாமே என்று என் போன்றவர்கள் எல்லாம் கொஞ்சம் தடுமாறித்தான் போனோம்.

விவாதம் கிளம்பிய புகை மூட்டத்தில் இருந்து இரண்டு பெரும் பூதங்கள் ('மெகா சைஸ்' எனும் சொல்லுக்கு மாற்றல்ல) கிளம்பி வந்தது. ஒன்று உபபாண்டவம் மற்றது விஷ்ணுபுரம். இதுதாண்டா நாவல் என தெலுங்கு சினிமா டைட்டிலை ஞாபகப்படுத்தாத குறைதான். இருவரின் நாவலையும் கொண்டாடித் தீர்த்தார்கள் வாசகர்கள். அப்போது வாசகனாக மட்டும் இருந்த சு.வெங்கடேசன் உபபாண்டவம் குறித்து என்னுடன் நடத்திய உரையாடல்கள் எனது ஞாபகங்களில் ஊறிக்கிடக்கின்றது. அதனை சு.வெங்கடேசன் ராமகிருஷ்ணனுடனும் நிகழ்த்தியிருக்கக்கூடும்.

எல்லாம் முடிந்தது. தமிழில் நிஜ நாவல் எழுதியாகிவிட்டது. அப்போது டாப்-10 நாவல்கள் பற்றிய பட்டியலை வெகுஜன இதழ் ஒன்று வாசகர்களுக்குப் பரிந்துரைத்தது. பரிந்துரை செய்திட எழுத்தாளர்கள் பத்து பேரையும் தேர்ந்தெடுத்திருந்தது. அதில் மொத்த தமிழ் நாவல்களின் அத்தாரிட்டிகளான எஸ்.ராமகிருஷ்ணனும், ஜெயமோகனும் இடம்பெற்றிருந்தார்கள். பட்டியலை வாசித்தறிந்த வாசகன் மறந்திருக்க எந்த நியாயமுமில்லை. எஸ்.ராமகிருஷ்ணனின் பட்டியலில் விஷ்ணுபுரமும், ஜெயமோகனின் பட்டியலில் உபபாண்டவமும் இடம் பிடித்திருந்து. பரஸ்பரம் இருவரும் செஞ்சோற்றுக்கடன் ஆற்றிக் கொண்டார்கள். அந்நாள் வரை தமிழில் நாவல்களே இல்லை என்கிறார்களே. பட்டியலில் ஒரே ஒரு நாவல்தான் இருக்கப் போகிறதென்று எதிர்பார்த்திருந்த என்னைப் போன்றவர்களுக்குப் பெரும் ஆச்சர்யம். இவர்களும் பத்து நாவல்களை வரிசைப்படுத்தியிருந்தார்கள்.

வாசகனின் ஞாபகமறதியை தன்னுடைய நம்பிக்கையாகக் கொண்டவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்பதற்கான எழுதப்பட்ட அவரின் சாட்சியம் அது. இவ்வளவு விரிவாக தூசிபடிந்த இந்த பழைய கதையை ஞாபகப்படுத்துவதின் நோக்கம் ராமகிருஷ்ணனின் மனநிலையை வாசகன் அறியச் செய்திடத்தான். தனக்கு முன் எழுதப்பட்டவையெல்லாம் நாவல்களே இல்லை. தன் காலத்தில் எழுதப்பட்டுக் கொண்டிருப்பவையும் நாவல் இல்லை. ஏன் இனி எக்காலமும் நாவல் எழுதப்பட சாத்தியமில்லை. அப்படி எழுதப்படும் அவசியம் ஏற்பட்டால் அதைத் தான் மட்டும்தான் எழுத முடியும். வேண்டுமானால் ஜெயமோகன் கொஞ்சம் எழுதிக் கொள்ளட்டும் என்று இந்நாள் வரை நீடித்திருக்கிற அவரின் மணநிலையையே அவருடைய பிளாக் கட்டுரை வெளிப்படுத்துகிறது.

பிளாக் கட்டுரை எஸ்.ராமகிருஷ்ணனால் எழுதப்படாமல் போயிருக்க சாத்தியம் ஏதாவது இருந்ததா?

1. கலாப்பூர்வமான வெற்றியோடு ஆயிரம் பக்கத்தை தாண்டிய நாவலாக காவல்கோட்டம் வெளிவராமல் இருந்திருந்தால்
2. வரலாறு, சமூகவியல், இனவரைவியல் என அனைத்துத் தளத்திலும் மதுரையின் நூற்றாண்டு கால நுண்அரசியல் பெரும்பரப்பில் நுட்பமாக நாவலில் பதிவாகாமல் இருந்திருந்தால்
3. நாவலின் மொழிநடை கண்டு நாஞ்சில் நாடன், கோவை.ஞாநி போன்ற பலரும் வியக்காமல் இருந்திருந்தால்
4. நாவல் முன்வைக்கும் சமூகவியல் ஆய்வுகள் குறித்து ஆ.சிவசுப்பிரமணியம், வ.கீதா, ஆ.இரா.வெங்கடாசலபதி போன்ற ஆய்வாளர்கள் அக்கறையுடன் விவாதிக்காமல் இருந்திருந்தால்
5. நாவல் வெளிவந்த இரு மாதங்களிலேயே சரிபாதி விற்றுத்தீராமல் இருந்திருந்தால்
6. ராமகிருஷ்ணனுக்கு எல்லா இடமும் தந்து கீரிடம் சூட்டி மகிழ்ந்த விகடன் நிறுவனம் சிறந்த நாவல் என காவல்கோட்டத்தை அறிவிக்காமல் இருந்திருந்தால் (இப்பொழுது திருப்பூர் கலை இலக்கியப் பேரவை வேறு 2008ன் சிறந்த நாவலாக காவல்கோட்டத்தை அறிவித்திருக்கிறது. என்னதான் செஞ்சு தொலைக்க ராமகிருஷ்ணா?)
7.தன்னுடைய (ராமகிருஷ்ணன்) இடம் குறித்த அச்சத்தை நாவல் ஏற்படுத்தாமல் போயிருந்தால்

தனது பிளாக்கில் கட்டுரையை ராமகிருஷ்ணன் ஒருபோதும் எழுதியிருக்கமாட்டார்; இந்த மகா இலக்கியவாதியின் ஒரிஜினல் முகம் இப்படி 'டாராக'க் கிழிந்து தொங்கியிருக்காது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com