Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle

தமிழ்த் தேசக் குடியரசு - ஒரு விவாதம்
பெ.மணியரசன்

தேசியம் என்பது என்ன?

தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும்.

தேசம் என்றால் என்ன?

சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின்.

ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை பொது மொழி, மூன்றாவது தேவை பொதுப் பொருளியல், நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான 'நாம்’, 'நம்மவர்’ என்ற தேசிய இன ஒருமை உணர்வு.

ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழுவிய பொருத்தம் உடையது. இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு.

பொது மொழி உருவாகாத நாகர்கள் தாயகம், பொருளியல், பண்பியல் அடிப்படையில் தேசிய இனமாகவும் நாகாலாந்து அவர்கள் தேசமாகவும் விளங்குகிறது. இது போன்ற சில விதிவிலக்குகளும் உண்டு.

தேசம் என்பதும் நாடு என்பதும் ஒன்றா?

இல்லை. தேசம்(Nation) வேறு; நாடு (Country) வேறு. ஒரு தேசிய இனத்திற்குச் சொந்தமானது தேசம். ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதி நாடு. ஒரு தேசம் ஒரு நாடும் ஆகும். ஏனெனில் ஒரு தேசத்திற்கோர் ஆட்சி இருக்கும்போது, அதற்குட்பட்ட நிலப்பகுதி நாடு ஆகிறது. ஆனால் ஒரு நாடு ஒரு தேசமாகவும் இருக்கலாம்; பலதேசங்களைக் கொண்டு ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதியாகவும் இருக்கலாம். வரலாற்று நிர்பந்தத்தால் ஒரு தேசமே இருநாடுகளாகப் பிளவுபட்டும் இருக்கலாம். எ-டு: கொரியா.

தேசம் என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி (Compact Oxford Dictionary Thesaurus and Wordpower Guide- Indian Edition) கூறும் விளக்கத்தைப் பார்ப்போம்.

'ஒரே பண்பாடு, மொழி, வரலாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு ஒர் அரசின் கீழ் அல்லது ஒரு நிலப்பகுதியில் வாழும் பெருந் தொகையான ஒரு மக்கள் கூட்டம்’.

நாடு என்பதற்கு அந்த அகரமுதலி கூறும் விளக்கம்: 'ஒரு குறிப்பிட்ட ஆட்சிப்பரப்பில் சொந்த அரசைக் கொண்டுள்ள தேசம்’. மேலும் அது கூறுகிறது: பேரரசு, மன்னர் அரசு, நிலம், தேசம், அரசு, ஆட்சி எல்லை போன்றவை நாடு என்று அழைக்கப்படும்.

நாம் முன்னரே குறிப்பிட்டது போல், நாடு என்பது முதன்மையாக ஆட்சி நிலப்பரப்பைக் குறிக்கிறது. அந் நிலப்பரப்பில் ஒரு தேசம் இருக்கலாம்; சிதைக்கப்பட்ட ஒரு தேசமோ, பல தேசங்களோ இருக்கலாம். எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் ஒரு தேசம். பிரஞ்சு தேசிய இனத்திற்கு உரியது. அதே சமயம் பிரான்ஸ் ஒரு நாடும் ஆகும். சுவிட்சர்லாந்து ஒரு தேசமல்ல, அது ஒரு நாடு. அதில் செர்மானிய, இத்தாலிய, பிரஞ்சு, ரொமான்ஷ் தேசிய இனங்கள் இருக்கின்றன. இந்நாட்டின் அதிகாரப் பூர்வ பெயர் சுவிஸ் பெருங்கூட்டரசு (Swiss confederation) என்பதாகும்.

இந்தியா ஒரு நாடு. ஆனால் இந்தியா ஒரு தேசமல்ல. இந்தியாவில் பல தேசங்கள், பல தேசிய இனங்கள் இருக்கின்றன. அதனால் இந்திய அரசமைப்புச் சட்ட முதல் விதி இந்தியாவை ஒரு தேசம் என்று குறிப்பிடாமல் ஒர் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது. (Article 1(1) India, that is Bharat shall be a Union of States)

தேசிய இனம் என்பது என்ன? தமிழர், திராவிடர், இந்தியர் என்பவை என்ன?

ஒர் இனக்குழு மூலத்திலிருந்து தோன்றிய பழங்குடிகள் பொதுமொழி அடிப்படையில் இனமாக (Race) ஒருங்கிணைந்து வளர்ந்து, காலவளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பொதுமொழியும் பொது பண்பாடும் கொண்டு நிலைத்துவிட்ட சமூகம் ஒரு தேசிய இனமாகும். இனம் என்பது இரண்டு நிலை வளர்ச்சி பெறுகிறது. முதல் கட்டம் மரபு இனம் (Race) அடுத்த கட்டம் தேசிய இனம் (Nationality). ஒரு மரபு இனம் பல தேசிய இனங்களில் கலந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஒரு தேசிய இனத்தில் குறிப்பான ஒரு மூல மரபினமும், அதனோடு கலந்துவிட்ட வேறு மரபினங்களும் இருக்கலாம். பல மரபினங்கள் கலந்தும் தேசிய இனம் உருவாகியிருக்கலாம்.

எடுத்துக்காட்டாக ஆரியர்கள் ஒரு மரபினம். ஆரிய மரபு இனம் ஐரோப்பிய தேசிய இனங்களிலும் இந்திய தேசிய இனங்களிலும் கலந்துள்ளது. தேசிய இனங்களில் கலந்தும் மனதளவில் ஒருங்கிணையாமல், தங்களை ஆரியர்களாகவே கருதிக் கொள்ளும் பார்ப்பனர்களின் மனக்கோணல், இந்தப் பொதுவரையறைக்கு விதிவிலக்கே தவிர அது உலகப் பொது நிலை அல்ல.

தமிழர் என்பது ஒரு மரபினம். அது இன்று தமிழ்த் தேசிய இனமாகவும் உள்ளது. இந்தியாவின், பாகிஸ்தானின் பல பழங்குடிகளிலும் தேசிய இனங்களிலும் தமிழ் மரபினம் கலந்து உள்ளது. திராவிடர் என்பது ஒரு மரபினம் அல்ல, அது ஒரு தேசிய இனமும் அல்ல. அது ஒரு மொழியும் அல்ல. ஆரியர்கள் இந்திய மண்டலத்திற்கு வந்தபோது தமிழ் பேசிய மக்களைக் கொச்சையாகத் 'திராவிட’ என்று அழைத்தனர். 'தமிழ்’ என்பதை ஒலிக்கத் தெரியாமல் 'த்ரமிள்’ என்று உச்சரித்து அதுவே பின்னர் 'த்ரமிள’, 'த்ராவிட’ என்று மாறியது என்றும் ஆய்வாளர்கள்(பாவாணர் உள்ளிட்டோர்) கூறுகின்றனர்.

இந்தியாவில் சமஸ்கிருத மொழிக் குடும்பம் மட்டுமே இருக்கிறது, இந்தியாவின் மொழிகள் அத்தனையும் சமஸ்கிருத மூலத்திலிருந்தே பிறந்தவை என்ற கருத்து ஐரோப்பிய ஆய்வாளர்களிடம் இருந்தது. சமயப்பணிக்காகத் தமிழகம் வந்த கால்டுவெல், சமஸ்கிருதத் துணையின்றி இயங்கக்கூடிய மொழி தமிழ் என்பதைக் கண்டறிந்தார். அதுகுறித்து மேலும் ஆய்வு செய்தபோது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகள் தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற முடிவுக்கு வந்தார். இந்த மொழிக் குடும்பத்தில் தமிழ் மூத்தமொழி என்றும் ஆனால் இவை அனைத்திற்கும் ஒரு மூலமொழி(Proto Language) இருந்திருக்க வேண்டும் என்றும் கருதினார். அந்த மூலமொழி எது என்பதிலும் அதன் பெயர் என்ன என்பதிலும் கால்டுவெல் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

சமஸ்கிருத நூல்களில், சமஸ்கிருதம் அல்லாத மொழிக்கும், ஆரியர் அல்லாத இனத்திற்கும் ஆரியர்கள் வைத்த பெயரான ‘த்ராவிட’ என்பதை எடுத்துக் கொண்டு இந்த மொழிக் குடும்பத்தின் மூலமொழிக்கு ‘திராவிடம்’ என்று பெயர் சூட்டிக் கொண்டார். திராவிடம் என்று பெயர் சூட்டியதற்கு வேறு மொழியியல் சான்றுகள் எதையும் கால்டுவெல் காட்டவில்லை. ஆய்வு வசதிக்காக அவர் ஆரிய வழக்கிலிருந்து எடுத்துக் கொண்ட அடையாளப் பெயரே திராவிடம்.

பிரித்தானிய ஆட்சியில் தமிழக, ஆந்திர, கேரளப் பகுதிகளைக் கொண்டிருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் தோன்றிய பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்திற்கு 'திராவிடர் கழகம்’ என்று பெயர் சூட்டிக் கொண்டது அன்றைய சூழ்நிலையையும் தேவையையும் பொறுத்ததே ஆகும். அதற்கு மேல் அப்பெயரில் முக்கியத்துவம் எதுவும் இல்லை, தனித்தன்மை எதுவுமில்லை. அப்பெயருக்கான மொழி, இன அடிப்படையில் அமைந்த வரலாற்றுக் காரணங்கள் எதுவுமில்லை.

ஆந்திர, கர்நாடக, கேரள தேசங்களில் ‘திராவிட’ என்ற பெயருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. 'இந்தியர்’ என்பது மரபினமும் அல்ல, தேசிய இனமும் அல்ல. அது ஒரு புவி அரசியல் பெயர் (Geo political name). ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்வோரை 'ஐரோப்பியர்’ என்று சொல்வது போல், இந்திய மண்டலத்தில் வாழ்வோரை 'இந்தியர்’ என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. அது மட்டுமல்ல, இந்தியாவில் வாழும் அனைவரையும் இந்துக்கள்(Hindus) என்றே மேற்கத்திய ஆய்வாளர்கள் அழைத்தனர். இந்துக்கள் என்று அவர்கள் அழைத்தது மத அடிப்படையில் அல்ல. புவிசார் அடிப்படையிலேயே. எ-டு: முதல் இந்திய விடுதலைப் போர்- காரல் மார்க்ஸ்.

இந்திய அரசமைப்புச் சட்டம், 'இந்தியர்’ என்று ஒரு தேசிய இனம்(Nationality) இருப்பதாகக் கூறவில்லை. ஒர் அரசின்- நாட்டின்- குடியுரிமை(Citizenship) பற்றி மட்டுமே பகுதி2-இல் உள்ள விதிகள் 5 முதல் 10 வரை உள்ளவை கூறுகின்றன. 'இந்தியாவின் குடிமகன்’(Citizen of India) என்பது பற்றி மட்டுமே அரசமைப்புச் சட்டம் பேசுகிறது.

இந்தியப் பெருமுதலாளிய-இந்தி ஆதிக்க-பார்ப்பனிய சக்திகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் 'இந்தியன்’ என்று ஒரு தேசிய இனம் இருப்பது போல் சட்டவிரோதமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர். அதே போல் இச்சக்திகள் இந்தியாவை ஒரு தேசம் என்றும் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர். இவையெல்லாம், சுரண்டல் சக்திகளும், ஆதிக்கசக்திகளும் கிளப்பிவிடும் இந்திய தேசிய வெறிப் பரப்பல் முறையாகும்.

சமூக அறிவியலைப் பின்பற்றும் நேர்மையாளர்கள், மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்ட நேர்மையான கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவை ஒரு தேசம் என்று கூறமாட்டார்கள். 'இந்தியர்’ என்று ஒரு தேசிய இனம் இருப்பதாகவும் கூற மாட்டார்கள். இந்திய தேசிய இனம், இந்திய தேசம் என்று மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்டோர் பேசினால் அவர்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகள் ஆவர், கவரிங் தங்க நகை போல!

அரசு விண்ணப்பங்களில் தேசிய இனம் எது என்று கேட்பதும், அதற்கு 'இந்தியர்’ என்று எழுத வேண்டும் என்று வலியுறுத்துவதும் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையாகும். ஆதிக்க சக்திகளும் சுரண்டல் சக்திகளும் இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக 'இந்தியர்’ என்ற இல்லாத தேசிய இனத்தைத் திணிக்கின்றனர். 'தமிழர்’, 'தெலுங்கர்’, 'வங்காளி’ என்பன போன்ற இயற்கையான தேசிய இனங்களையும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை. 'இந்தியக் குடியுரிமை’ என்று மட்டுமே அது கூறுகிறது. 'தமிழர்’ போன்ற இயற்கையான- நடைமுறையில் நிலவுகின்ற தேசிய இனங்களை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்பது நமது கோரிக்கையாகும்.

லெனின் தலைமையில் உருவான சோவியத் ஒன்றியத்தில், ரசியர், பைலோ ரசியர், ஜார்ஜியர் போன்ற தேசிய இனங்கள் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தைத் தேசங்களின் ஒன்றியம் (Union of nations) என்றே அழைத்தனர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் விதி 371A(1) நாகர்களைத் தனிச்சமூகமாக ஏற்று அதற்கான தனிஉரிமைகளை அங்கீகரிக்கிறது.

சமூகம், மக்கள், தேசிய இனம் ஆகியவை வெவ்வேறா?

இவை மூன்றிற்கும் ஒற்றுமை உண்டு. ஆனால் மூன்றும் அச்சாக ஒன்றே அல்ல. சமூகம் என்பது ஒர் இனக் குழுவின் விரிவாக்கமே. குறிப்பான நில எல்லைகளுக்குள் வாழ்ந்து, மொழி, பண்பு மற்றும் குணநலன்களைப் பொதுவாகப் பெற்றிருக்கும் ஒரு மக்கள் குழு சமூகம் ஆகும்.(Webster's Pocket dictionary)

அரசியல் பொருளில், மக்கள் என்பது மனிதக் கூட்டம் அல்ல. ஒரே மொழி, ஒரே பண்பாடு ஆகியவற்றைக் கொண்டு, ஒரு தேசத்தில் அல்லது ஒர் அரசின் கீழ் உள்ள மனிதர்கள் மக்கள் ஆவர். The People என்று ஆங்கிலத்தில் சொல்லும் போது அது ஒரு தேசத்திற்குரிய மக்களைக் குறிக்கிறது. ஐ.நா.உரிமை அட்டவணையில் தேசிய இனம் The People என்றே குறிக்கப்படுகிறது. நடைமுறையில் சாதாரணப் பொருளில், மக்கள் என்பது மனிதக் கூட்டத்தைக் குறிக்கிறது.

உலகம் ஒன்று, உலக மக்களின் ஒருமைப்பாடு உண்டாக வேண்டும் என்ற உயர்ந்த மனித நேயக் கருத்துகள் வளர்ந்து வரும் காலத்தில் தேசிய இனம் பேசி மனித குலத்தைப் பிரிக்கலாமா?

உலகம் ஒன்று, மனித குலம் ஒன்று என்ற மனித நேயப் பார்வை மிகச் சரியானது. ஆனால் இன்று உலகமும், உலக மனித குலமும் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இல்லை என்ற நடைமுறை உண்மையைப் பார்க்க வேண்டும். ஏன் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இல்லை? இதற்கான புவியியல், சமூகவியல், வரலாற்றியல் காரணங்கள் மனித மனநிலைக்குப் புறத்தே இருக்கின்றன.

புவிக்கோளம் வேறுபட்ட புவி அமைப்பு உள்ளிட்ட இயற்கை நிலைகளைக் கொண்டு ஐந்து கண்டங்களாகப் பிரிந்துள்ளது. இதில் வாழும் மக்களுக்கு ஒரே மொழி இல்லை, ஒரே பண்பாடு இல்லை. உணவு வகை வேறுபடுகிறது. உடை வேறுபடுகிறது. செடிகொடிகளும் விலங்குகளும் கூட வேறுபடுகின்றன. வெவ்வேறு நாடுகளாக இருக்கிறது. கடவுச்சீட்டு அனுமதி இல்லாமல் ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டிற்குள் நுழைய முடியாது. இந்த நாடுகளில் வெவ்வேறு கொள்கை உடைய அரசுகள் இருக்கின்றன. வலிமையுள்ள நாடுகள் வலிமைக் குறைவான நாடுகளையும், ஏமாந்த மக்களையும் ஆக்கிரமித்துச் சூறையாடுகின்றன. எடுத்துக்காட்டாக, சர்வதேச பயங்கரவாத அரசு அமெரிக்காவில் இருக்கிறது. அந்நாட்டு மக்களில் பெரும்பாலோர் அப்படிப்பட்ட அரசை ஆதரிக்கின்றனர். அதற்கான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

உலக நிலையில் மனித சமத்துவத்திற்கான மாற்றம் வர இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. நாம் விரும்புவதால் மட்டுமோ, நமது கற்பனையினால் மட்டுமோ மனிதகுலச் சமத்துவத்தை உடனே படைத்துவிட முடியாது.

இந்தியாவில் தேசிய இனங்களின் சமத்துவம் இருக்கிறதா? சாதி ஆதிக்கமற்ற, வர்க்கச் சுரண்டலற்ற சமத்துவம் இருக்கிறதா? தமிழ்நாட்டில் சாதி ஆதிக்கமற்ற, வர்க்கச் சுரண்டலற்ற சமத்துவம் இருக்கிறதா?

இல்லை. உலகத்தில் வாள் வலிமைக்கேற்ப அரசுகள் உருவாகக்கூடாது, ஒரு தேசிய இனத்திற்கு ஒரு தேசம் அமையவேண்டும் என்ற முதலாளிய ஜனநாயகக் கருத்து ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலத்தை ஒட்டி எழுந்தது. தேச அரசு உருவாக்கம் (Nation State formation) என்று இதை அழைத்தார்கள். தேச அரசு உருவாக்கம் இன்னும் உலகில் முழுமை அடையவில்லை. விடுதலையின்றி வேற்றார் ஆதிக்கத்தில் இருந்த தேசிய இனங்கள் ஒவ்வொன்றாக இப்பொழுது விடுதலைபெற்று சொந்த தேச அரசை உருவாக்கி வருகின்றன.

தேச அரசு நிறுவும் பணி நிறைவடைந்த பின், ஒரு தேசத்தின் உள்விவகாரத்தில் இன்னொரு தேசம் தலையிடக்கூடாது என்ற சனநாயகம் முழு அளவில் மலர்ச்சியடைந்த பிறகு, முடிந்தவர் முடியாதவரையும் ஏமாந்தவரையும் சுரண்டலாம், ஆதிக்கம் செய்யலாம் என்ற வர்க்க ஆதிக்கம், இனஆதிக்கம், சாதி ஆதிக்கம் ஆகியவை ஒழிந்த பிறகு உலக மனித குல ஒற்றுமை மெய்யாக உருவாகிடக் கதவு திறக்கும்.

அதற்க்குள் உலக ஒற்றுமை விரைவான எதிர்காலத்தில் உருவாகிவிடும் என்று கற்பனை செய்வது, நடைபழகும் குழந்தையை மோட்டார் சைக்கிள் ஒட்டச் சொல்வது போல் ஆகிவிடும். மிதிவண்டியைக் கண்டுபிடித்தவன் ஏன் விமானத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்று கேட்பது போல் ஆகிவிடும்.

உலக ஒற்றுமைக்கு முதல் தேவை ஒரு தேச மக்களின் ஒற்றுமை. உலக நாடுகள் ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முதல் தேவை தேசங்களின் விடுதலை.

இந்தியா போன்ற பல தேசிய இன நாட்டில் ஒரு குறிப்பிட்ட தேசிய இன விடுதலையை முன்னிறுத்துவது, பாட்டாளி வர்க்க சர்வதேசிய ஒற்றுமைக்கு எதிரானதாகாதா?

பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற தொடர், அனைத்துத் தேசங்களின் ஒற்றுமை என்பதைத்தான் குறிக்கிறது. தேசங்களற்ற உலக ஒற்றுமையை அது குறிப்பிடவில்லை. தனது சொந்த தேச அரசை அமைத்துக் கொள்ளாத பாட்டாளி வர்க்கம் சர்வதேச ஒற்றுமைக்குப் பாடுபடும் ஆற்றலற்றது என்றார் எங்கெல்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முன்னுரை). ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடம் சிக்குண்ட ஐரிஷ் தேசிய இனம் நடத்திய விடுதலைப் போராட்டத்தை மார்க்ஸ் ஆதரித்தார். ஐரிஷ் தேசிய இன விடுதலையை ஆங்கிலேயப் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும் என்றார்.

ஒரு தேசிய இனம் தனக்கான தேசத்தை நிறுவிக் கொள்ளும் உரிமையைப் பிறப்புரிமையாகக் கொண்டுள்ளது என்றார் லெனின். அந்த உரிமையைத் தன்னுரிமை(சுயநிர்ணய உரிமை) என்றார். ஜார் மன்னனால் வலுக்கட்டாயமாக ரசியாவில் இணைக்கப்பட்டிருந்த தேசிய இனங்களுக்கு ரசியப் புரட்சி வெற்றி பெற்ற பின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை(Right to Self determination with the right to secede) வழங்கினார். விரும்புகின்ற தேசிய இனங்கள் சோவியத் கூட்டாட்சி ஒன்றியத்தில் இணையலாம், விரும்பாதவை தனி நாடாகப் பிரிந்து போய் விடலாம் என்ற உரிமை வழங்கப்பட்டது. பின்லாந்து பிரிந்து போக வேண்டும் என்றது. லெனின் அது பிரிந்து போக அனுமதித்தார்.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வுதான் நடத்த வேண்டும். பட்டப்படிப்பிற்கான தேர்வை எழுதச் சொல்லக்கூடாது. பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அமைவதற்கு முதல் தேவை சொந்த தேசியம் ஆகும்.

இந்தியாவில் எல்லா தேசிய இன மக்களிடமும் வறுமை, வேலை இன்மை, சாதி ஒடுக்குமுறை போன்றவை உள்ளன. அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தேசிய இனங்களையும் ஒன்று திரட்டி புரட்சி நடத்தி, தேசிய இனங்களுக்கு முழு உரிமை வழங்கக்கூடிய ஒர் அரசை நிறுவிட போராடக்கூடாதா?

வறுமை, வேலையின்மை, சாதி ஒடுக்குமுறை அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டியவையே. இவற்றை ஒழிக்கப் போராடும் இதர தேசிய இனமக்களுக்குத் தமிழ்த் தேசிய இனம் ஆதரவு கொடுக்க வேண்டும். ஆனால், இங்குள்ள முதன்மையான சிக்கல் தேசிய இனஒடுக்குமுறையே! அதற்குத் தீர்வு கண்டால் தான் வறுமை, வேலையின்மை, சாதி ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கும் தீர்வு காணமுடியும்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒர் ஏழை அல்லது தலித், தமிழ்நாட்டில் உள்ள ஒர் ஏழை அல்லது தலித் இருவரும் வறுமை மற்றும் சாதி ஒடுக்குமுறைக்கு உள்ளாவதில் ஒற்றுமை உண்டு. ஆனால் இந்திமொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாகத் திணிப்பதில் இருவர்க்குமிடையே முரண்பாடு உள்ளது. உ.பி.காரர்களுக்கு அது சொந்த மொழி, தமிழர்க்கு அது அயல்மொழி. இந்தி அல்லது ஆங்கிலத்தில் ரயில்வே போன்ற இந்திய அரசு நிறுவனங்களின் வேலைக்குத் தேர்வு நடக்கிறது. இரண்டுமே தமிழர்க்கு அயல்மொழி. உ.பி.காரர்களுக்கோ இவற்றுள் ஒன்று சொந்த மொழி.

இந்திய தேசியம் என்ற கருத்தியல் உ.பி.காரர்களுக்கு பெருமிதத்தையும் உற்சாகத்தையும் ஊட்டுகிறது. தமிழர்க்கு அடிமைத் தனத்தை வலுப்படுத்துகிறது. இது போல் பலவற்றுள் தமிழராய் உள்ள ஏழை அல்லது தலித்துக்கும் இந்தி ஏழை அல்லது தலித்துக்கும் இடையே பாகுபாடு நிலவுகிறது.

வர்ண-சாதிக் கோட்பாடுடைய பார்ப்பனியத்தை வீழ்த்த வேண்டுமெனில் தமிழ்நாடு தில்லியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றார் பெரியார். பார்ப்பனியத்தின் அதிகாரத் தலைமை பீடமாகவும், அதன் வற்றாத ஊற்றுக் கண்ணாகவும் இருப்பது தில்லி அதிகார மையமே! இந்தி மாநிலங்களே! தமிழ்நாட்டில் எவ்வளவு தான் பார்ப்பனிய எதிர்ப்பு இருந்தாலும் தில்லி அதிகாரம் பார்ப்பனியத்திற்கு மீண்டும் மீண்டும் புத்துயிர் கொடுத்துவிடும்.

அடுத்து பல தேசிய இனங்களிடையே ஒரே நேரத்தில் ஒரே இலக்குகாகப் புரட்சி நடந்ததாக இதுவரை வரலாறு இல்லை. 1917 நவம்பர் 7-இல் வெற்றி பெற்ற ரசியப்புரட்சி ரசியதேசத்தில் ரசிய தேசிய இனத்தில் தான் நடந்தது. ஜார் மன்னனால் வெற்றி கொள்ளப்பட்டு இணைக்கப்பட்டிருந்த மற்ற தேசிய இனங்களில் நடைபெறவில்லை. ரசியப்புரட்சி வெற்றி பெற்றபின் இதர தேசிய இனங்களில் தனி நாட்டிற்கான போராட்டங்கள் நடந்தன. காலப்போக்கில் அவை இணைக்கப்பட்டு 1922-ஆம் ஆண்டுதான் சோவியத் ஒன்றியம் நிறுவப்பட்டது.

சீனப்புரட்சி சீன தேசிய இனத்தில்தான் நடந்தது. அந்நாட்டில் 96 விழுக்காட்டினர் சீன தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களே. கொரியப்புரட்சி கொரிய தேசிய இனத்தில் தான் நடந்தது. வியட்நாம், கியூபா நாடுகளில் நடந்த புரட்சியும் அந்தந்த தேசிய இனத்தில் தான் நடந்தது. பல தேசிய இனப் புரட்சி இதுவரை நடைபெறவில்லை.

அனைத்திந்தியப் புரட்சி என்று சொல்வது பல தேசிய இனப்புரட்சியைக் குறிப்பதாகும். அப்படி ஒரு புரட்சி நடக்கவே நடக்காது. என்பது ஆண்டுகளைக் கடந்துவிட்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் இன்றும் சமச்சீர் வளர்ச்சி கொண்ட அனைத்திந்தியக் கட்சியாக வளர முடியவில்லை. அது மேற்குவங்க, கேரள, திரிபுராக் கட்சியாகவே உள்ளது.

இந்தியாவில் இன்று ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து, அசாம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் தேசிய விடுதலைக்கான ஆயுதப்புரட்சி நடந்து கொண்டுள்ளது. நக்சல்பாரி இயக்கம் வளர்ச்சியடைந்துள்ள ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கட், ஜார்கண்ட் போன்ற மாநிங்களில் அவ்வியக்கம் முதன்மையாக பழங்குடி மக்களைச் சார்ந்துள்ளது. பழங்குடி மக்களுக்கான சிக்கல், இனக்குழு சமூகச் சிக்கலின் ஒரு பகுதியே. ஏதோ ஒரு வகையில் அங்கு தேசிய இனச் சிக்கல் தான் கையாளப்படுகிறது.

இந்தியாவில் முதலில் தேசிய இன விடுதலைப் புரட்சிகளே நடைபெறவுள்ளன. தமிழர்கள் அனைத்திந்தியப் புரட்சி நடத்த விரும்பினால், அது நடக்காது. காரணம், அதற்கான அனைத்திந்திய பல தேசிய இன அமைப்பு உருவாகாது.

நடுவர்மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கி, அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்த பின்னும், கன்னடர்களின் அனைத்துக்கட்சிகளும் காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரைத் தர மறுக்கின்றன. பெங்களுர் அல்சூர் ஏரிக்கரையில் கன்னடர் எதிர்ப்பினால் திருவள்ளுவர் சிலை திறக்கப்படாமல் 14 ஆண்டுகளாகக் கோணிப்பை போட்டு மூடப்பட்டுள்ளது.

999ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் இருந்தும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும், முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் 142 அடி தண்ணீர் தேக்க விடாமல் தடுக்கிறது கேரளம். பாட்டாளி வர்க்க சர்வதேசியமும் இந்தியத் தேசியமும் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் உள்ள கேரள அரசு தான் இவ்வாறு தடுக்கிறது. இதற்கு முன், இந்திய தேசியம் பேசும் காங்கிரஸ் கூட்டணி அரசு 142 அடி தேக்க விடாமல் தடுத்தது.

இவர்களுடன் எல்லாம் சேர்ந்து தான் அனைத்திந்தியப் புரட்சி நடக்கப்போகிறதா? ஒருக்காலும் நடக்காது. புரட்சியைக் கைவிட்டு விட்டோம் என்று நேரடியாகச் சொல்லாமல், அதைக் கைவிடுவது தான் அனைத்திந்தியப் புரட்சி பேசுவது. இன்னொரு அடிப்டையான செய்தி சொந்த தேசத்தை நிறுவிக் கொள்ளாத எந்தப் பாட்டாளி வர்க்கமும் அல்லது மக்களும் சோஷலிசப் புரட்சி நடத்தவே முடியாது. சுதந்திரமான, ஜனநாயகமான தேச அரசுகளை நிறுவுவதன் ஊடாகத் தான் சமூக மாற்றங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.

1789-இல் நடந்த பிரஞ்சுப்புரட்சி ஜனநாயக தேசியக் குடியரசுக்கான முதல் புரட்சி. அந்த ஜனநாயகம் முதலாளிய ஜனநாயகம். நிலக்கிழார்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்த மன்னராட்சியை வீழ்த்திட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முற்போக்கான முழக்கங்களின் கீழ் அப்புரட்சி நடந்தது. மன்னராட்சி வீழ்த்தப்பட்டு வாக்குரிமை அடிப்படையில் அமையும் முதலாளிய ஜனநாயக ஆட்சி நிறுவப்பட்டது.

1917-இல் ரசியப் பாட்டாளி வர்க்கம், ஜார் மன்னராட்சியை வீழ்த்தி, ஜனநாயகக் குடியரசுக்கான புரட்சியைத் தான் நடத்தியது. அதன் ஊடாகத்தான் வளர்ச்சிப் போக்கில் சோஷலிசம் நிறுவப்பட்டது. சீன, கொரிய, வியட்நாமியப் புரட்சிகள் சாரத்தில் தேசிய விடுதலைப் புரட்சிகளே. கியூபப் புரட்சி ஜனநாயகத்திற்கான தேசியப் புரட்சியே.

தமிழ்ப் பாட்டாளி வர்க்கம் தனக்கான தேசத்தை நிறுவிக் கொள்ளும் தேசியப் புரட்சியை நடத்தும் விழிப்புணர்ச்சியும் ஆற்றலும் அற்றிருந்தால், அதற்கு சோஷலிசப் புரட்சியை நடத்தும் ஆற்றல் மட்டும் எப்படி வந்துவிடும்?

தனது தாயகத்தை அடையாளம் காண முடியாமலும், அதன் மீதுள்ள அடிமை நுகத்தடியை நொறுக்க முடியாமலும் பலவீனமாய் உள்ள பாட்டாளி வர்க்கம் சோஷலிப் புரட்சி நடத்திடுமா? இந்த வினா, இந்தியாவில் அடிமை நிலையில் வைக்கப்பட்டுள்ள எல்லாத் தேசிய இனங்களுக்கும் பொருந்தும்.

ஏகாதிபத்தியத்திடமிருந்து காலனி நாடுகள் விடுதலை பெறத்தான் தன்னுரிமையை(சுயநிர்ணய உரிமையை) பயன்படுத்த வேண்டுமே தவிர, இந்தியா போன்ற விடுதலை அடைந்த நாடுகளில் தன்னுரிமையைப் பயன்படுத்தக்கூடாது என்று சில கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறுவது சரியா?

இந்தக் கருத்து சரியல்ல. ஒரு தேசிய இனம் தனக்கான தேச அரசை நிறுவிக் கொள்வது அதற்குள்ள அடிப்படை உரிமையும் கடமையும் ஆகும். ஒரு மக்கள் சமுதாயம் ஒரு தேசிய இனமாக இருக்கும் காலம் வரை அது தனக்கான சுதந்திர அரசை அமைத்துக் கொள்ளும் உரிமையைப் பிறப்புரிமையாகப் பெற்றுள்ளது. ஏகாதிபத்தியத்திடமிருந்து மட்டுமல்ல ஒடுக்குகின்ற ஒரு பெருந்தேசிய இனத்திடமிருந்தும் விடுதலை பெற வேண்டும். தனது அரசியல், பொருளியல், பண்பியல் உரிமைகளையும் மொழியையும் ஒடுக்குகின்ற எந்த அரசிடமிருந்தும் ஒரு தேசிய இனம் விடுதலை பெறுவதற்கான தன்னுரிமை அதனிடம் எப்போதும் உள்ளது.

அது மட்டுமல்ல, 'ஏகாதிபத்தியம்’, 'காலனி’ என்ற வரையறுப்புகளில் ஏற்பட்டுள்ள இக்கால வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். லெனின் காலத்தில் இருந்த ஏகாதிபத்தியங்களும் காலனிகளும் அதே வடிவத்தில் இன்றில்லை.

இந்தியா காலனியாக இருந்தது மட்டுமே காரல் மார்க்சுக்குத் தெரியும். இந்தியாவில் வளர்ச்சியடைந்த பல தேசிய இனங்கள் இருப்பது அவருக்குத் தெரியாது என்று இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு கூறினார். காலனியாக இருந்த இந்தியாவில் இருந்த தேசிய இனங்கள் பற்றி லெனின் எதுவும் சொல்லவில்லை.

ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலையடைந்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெரும்பான்மை தேசிய இனம், சிறுபான்மைத் தேசிய இனங்களை ஒடுக்குகின்றன. இதற்கு வசதியாக வாக்குரிமையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஜனநாயகப்படி தான் ஆட்சி நடக்கிறது என்று பெருந்தேசிய இன ஒடுக்குமுறையாளர்கள் கூறுக்கொள்கின்றனர். தமிழர்களும் இந்திக்காரர்களும் இன்னபிற இனத்தாரும் ஒரே அரசின் கீழ் யாரால் பிடித்து வைக்கப்பட்டார்கள்? தமிழர்களையும் சிங்களர்களையும் ஒரே அரசின் கீழ் கட்டிப் போட்டவர்கள் யார்? தனித்தனி அரசு நடத்திக் கொண்டிருந்த வெவ்வேறு தேசிய இனங்களை ஒரே ஆட்சியின் கீழ் பிடித்துவைத்தவர்கள் ஏகாதிபத்திய ஆக்கிரமைப்பாளர்கள் தாம். ஏகாதிபத்தியம் போனபின், பற்பல தேசங்கள், தங்கள் ஒப்புதலின்றி ஒரே ஆட்சியில் நீடிக்க வேண்டிய கட்டாயம் என்ன? மெய்யான சம உரிமை நிலவி, தேசிய இனங்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தி, அவை தம் சொந்த விருப்பத்தின் பேரில் சேர்ந்திருந்தால் தவறில்லை.

காலனிய நிலையிலிருந்து விடுதலை பெற்ற பின், பெருந்தேசிய இனம் தனது பெரும்பான்மையைப் பயன்படுத்தி சட்டதிட்டங்களை உருவாக்கிக் கொண்டு, தனது பெரும்பான்மையின் காரணமாகத் தேர்தல்களில் கூடுதல் இடங்களைப் பிடித்துக் கொண்டு சிறுபான்மைகளை அடக்கிவைக்கிறது. அடையாளம் தெரியாமல் வைக்கிறது. அதுமட்டுமல்ல இந்தியர், இலங்கையர் என்ற தனது முகமூடியைத் தமிழர்களுக்கு மாட்டிவிட்டது. இது புதுவகைக் காலனியம் ஆகும், புதுவகை ஏகாதிபத்தியம் ஆகும்,

முன்னது அயல் ஏகாதிபத்தியம்(Foreign Imperialism), பின்னது அண்டை ஏகாதிபத்தியம்(Neighbour Imperialism) முன்னது பீரங்கிகளை வைத்துக் காலனி பிடித்தது. பின்னது வாக்குச்சீட்டுகளை வைத்து காலனியம் நடத்துகிறது. அயல் பிரித்தானிய ஏகாதிபத்தியம் அப்போது இந்தியாவிற்கு நிதிமூலதனத்தை ஏற்றுமதி செய்தது. அண்டை இந்திய ஏகாதிபத்தியம் இப்போது மார்வாடி குசராத்தி சேட்டுகள் மூலம் நிதி மூலதனத்தைத் தமிழ்நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறது.

இன்று அயல் ஏகாதிபத்தியங்களும், அண்டை ஏகாதிபத்தியமும், கூட்டு சேர்ந்தே இருக்கின்றன. ஏகாதிபத்தியமும், இந்திய தேசியமும் தவிர்க்க முடியாத கூட்டாளிகள், ஏனெனில் இந்த இருவகை ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நலனும் ஒருங்கிணைந்தவைதாம். அயல் ஏகாதிபத்தியத்திய ஆட்சியில் இந்தியக் காலனிக்கு ஒரே எஜமானன். அண்டை ஏகாதிபத்திய ஆட்சியில் தமிழ்நாட்டுக் காலனிக்கு பல எஜமானர்கள். ஒரு எஜமானன் இந்திய அரசு, மற்ற எஜமானர்கள் அமெரிக்கா உள்ளிட்ட அயல் ஏகாதிபத்தியங்கள்.

ஏகாதிபத்தியக் காலனிகளுக்கு தான் தன்னுரிமை பொருந்தும் எனில், அண்டை ஏகாதிபத்தியக் காலனியாக அடிமைப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கும் அது பொருந்தும். ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் முன்வைக்க வேண்டியது தமிழ்த் தேசத் தன்னுரிமையே.

இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் இல்லை என்றும், ஏற்றத் தாழ்வான வளர்ச்சி தான் இருக்கிறதென்றும், அதனால் இந்திய அரசின் கொள்கையை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் சிலர் கூறுகிறார்களே?

இக்கருத்து இந்தியாவில் தேசிய இன ஒடுக்குமுறைகளே இல்லை என்று மறுக்கிறது. ஒரு சமூகத்தில் செயல்படும் அனைத்து முரண்பாடுகளையும் கவனிக்காமல், தாம் வரித்துக் கொண்ட சில முரண்பாடுகளை மட்டும் பார்க்கும் அரைகுறைப் பார்வை இது. இப்படிபட்ட அரைகுறைப் பார்வையை வர்க்கச் சுருக்கவாதம் (Class reductionism) என்று மார்க்சியம் சாடுகிறது. மேலும் இது போன்ற பார்வை வறட்டுப் பொருளாதார வாதம் என்றும் விமர்சிக்கிறது.

பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், அசாம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் இங்கெல்லாம் நடந்த, நடக்கின்ற போராட்டங்கள் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரானவையே. தமிழ்நாட்டில் தி.மு.க கோரிய தனிநாட்டுக்கு மிகப்பெரும் அளவில் தமிழர்கள் ஆதரவு கொடுத்ததும் தேசிய இன ஒடுக்குமுறைக்கான எதிர்வினையே!

இந்தி தேசிய இனம் இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனமாக உள்ளது. மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தங்கள் சுரண்டல் நலனுக்காக இந்தி தேசிய இனத்தோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இந்தியப் பெருமுதலாளிகளும், பார்ப்பனிய சக்திகளும் தங்களை இந்தி தேசிய இனத்தோடு இணக்கப்படுத்திக் கொண்டுள்ளன.

தமிழ்த் தேசியத்தில் தமிழர்கள் மட்டும் தான் வருவார்களா? மற்றவர்களும் வருவார்களா?

தமிழர்கள் மட்டுமின்றி, நெடுங்காலமாகத் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டுள்ள மக்கள் அனைவரும் தமிழ்த் தேசிய சக்திகளே. குறிப்பாக முந்நூறு நானூறு ஆண்டுகளுக்கு முன் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகம் வந்து இங்கேயே தங்கி, தமிழ்நாட்டைத் தாயகமாகவும், தமிழைத் தங்கள் தேசிய மொழியாகவும் ஏற்றுக் கொண்டு, வீட்டில் தெலுங்கு பேசும் மக்களும், அதே போல் தமிழகத்தைத் தாயகமாக ஏற்றுக் கொண்டுள்ள கன்னடம் பேசும் மக்களும் தமிழ்த் தேசிய சக்திகளே. தமிழ்த் தேசம் அவர்களுக்கும் உரியதே. இதே போல், உருது பேசும் மக்களும் தமிழ்த் தேசிய சக்திகளே.

தமிழகத்தின் வடக்கெல்லையில் தெலுங்கைத் தாய் மொழியாகவும், தெற்கெல்லையில் மலையாளத்தைத் தாய் மொழியாகவும், வடமேற்கில் கன்னடத்தைத் தாய் மொழியாகவும் கொண்டுள்ள மக்கள் சிறுபான்மைத் தேசிய இனங்களாகும். தமிழ்த் தேசக் குடியரசில் இவர்களுக்கு சமஉரிமையும் சிறப்புப் பாதுகாப்பும் இருக்கும்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள பார்ப்பனர்கள் தமிழர்களே. ஆனால் அவர்களில் மிகப்பெரும்பான்மையோர் தமிழைவிட சமஸ்கிருதமே உயர்வானதென்றும், தாங்கள் ஆரியப் 'பெருமைகளுக்குச்’ சொந்தக்காரர்கள் என்றும் கருதிக் கொள்கின்றனர். கோயில் வழிபாடு, சடங்குகள் ஆகியவற்றில் தமிழைப் புறக்கணித்து, சமஸ்கிருதத்தையே முன்னிறுத்துகின்றனர். இந்த வகையில் தமிழர்கள் என்று இவர்கள் தங்களைக் கருதிக்கொள்வதில் உளவியல் ஊனம் உள்ளது. பார்ப்பனர்களும் பார்ப்பனிய சக்திகளும் இந்திய அரசுக் கட்டமைப்பில் ஆளும் சக்திகளாக இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கையும் தமிழ்த் தேசியத்திற்குத் தேவை.

கொள்கை, நடைமுறை இரண்டிலும் பார்ப்பனியத்தை மறுத்து, தமிழ் உணர்வோடு செயல்பட முன்வரும் பார்ப்பனர்களைத் தமிழ்த் தேசியம் அரவணைக்கிறது. இவ்வாறு தமிழ்த் தேசிய இயக்கத்திற்கு இன்று தனி நபர்கள் சிலரே வரக்கூடும்.

பிறப்பிலேயே மனிதர்களின் குணங்களும் தகுதிகளும் நிரந்தரமாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டன என்பது வர்ணாசிரம தர்மம். தமிழ்த் தேசியம் அதை மறுக்கிறது. ஆதலால், தமிழ்த் தேசியம் பிறப்பை அடிப்படையாக வைத்து பார்ப்பனர்களைப் புறக்கணிக்காது. அதே வேளையில் அவர்களிடம் உள்ள,(மேலே சுட்டிக் காட்டப்பட்ட) உளவியல் ஊனத்தையும், அவர்கள் ஆளும் சக்தியாக உள்ளார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது தமிழ்த் தேசியம்.

ஒரு தேசிய இயக்கம், அத்தேசக் குடிமக்கள் அனைவர்க்கும் உரியதாகவும் இருக்க வேண்டும். தனக்கான சமூகவியல், பொருளியல் கொள்கைகளை விட்டுவிடாமல் அனைவரையும் தழுவியதாக அது செயல்பட வேண்டும். தென்னாப்பிரிக்கா, அசாம், ஈழம் போன்றவற்றின் தேசிய இயக்கங்கள் இந்த அணுகுமுறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

தென்னாப்பிரிக்காவில் வெள்ளை இன வெறியை எதிர்த்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், வெள்ளை இனத்தவரின் குடியுரிமையை மறுக்காமல் அவர்களில் உள்ள சனநாயக சக்திகளையும் இயக்கத்தில் ஏற்றுக் கொண்டது. அசாமில் உல்ஃபா, பல்வேறுபட்ட பழங்குடிகளையும், பார்ப்பனர் உள்ளிட்ட பல்வேறு வகுப்பாரையும் இணைத்துச் செயல்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழப்பகுதிகளில் வாழும் சிறுபான்மை சிங்களர் உரிமைக்கும் உறுதியளித்து அவர்களையும் விடுதலை இயக்கத்திற்கு அழைக்கிறது. சிங்களர்கள் வருவார்களா மாட்டார்களா என்பது வேறு செய்தி. ஒரு தேசிய இயக்கம் இவ்வாறான பார்வை கொண்டிருக்க வேண்டும்.

தமிழ்த் தேசியம் இட்லரின் பாசிச இனவாதக் கொள்கை கொண்டதல்ல. அதே வேளை தமிழர்களின் தாயகத்தையே தம் வசப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு அயல் இனத்தார் மிகை எண்ணிக்கையில் தமிழகத்திற்குள் புகுந்து தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளைக் கைப்பற்றுவதை எதிர்க்கிறது.

'வெளியாரை வெளியேற்றுவோம்’ எனத் த.தே.பொ.க முழங்குவது இனவாதப்பாசிசம் இல்லையா? பிறமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு இது ஆபத்தை உண்டாக்காதா?

'வெளியாரை வெளியேற்றுவோம்’ என்ற நமது முழக்கமும் அதற்கான போராட்டமும் பாசிசம் ஆகாது. மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட 1956-க்குப் பின், தமிழ்நாட்டில் மிகை எண்ணிக்கையில் குடியேறி தமிழ்மக்களின் தாயக உரிமை, தொழில், வேலைவாய்ப்பு போன்றவற்றைப் பறித்து ஆக்கிரமிக்கும் வேற்று இனத்தாரைத் தான் வெளியேற்றக் கோருகிறோம். மற்றபடி தமிழகத்தில் நூற்றுக்குநூறு தமிழர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறவில்லை.

குறிப்பாக மார்வாடி-குசராத்தி சேட்டுகள், மலையாளிகள், ஆந்திரர்கள் ஆகியோர்தாம் அன்றாடம் மிகை எண்ணிக்கையில் தமிழகத்தில் குடியேறி மண்ணின் மக்களின் எண்ணிக்கையை சிறுபான்மை ஆக்குமளவிற்கு ஆக்கிரமிக்கிறார்கள். இவ்வாறான அயலாரின் மிகை வருகையை (Abnormal migration) தாராளமாக அனுமதித்தால் தமிழர் தாயகம் பறிபோய் விடும். தமிழ்த் தேசிய இனம் சிறுபான்மை ஆகிவிடும்.

தமிழ்நாட்டை ஒரு தேசம் என்று பார்க்காமல், இந்தியாவின் ஒரு மாநிலம் என்ற அளவில் மட்டும் பார்ப்பவர்கள் தாம் வெளியாரை வெளியேற்றும் போராட்டத்தை எதிர்க்கிறார்கள். அசாமில் நடந்த வெளியாரை வெளியேற்றும் போராட்டத்தில் இந்திய அரசு ஒர் உடன்பாடு கண்டு ஒப்பந்தம் போட்டதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

வெளி மாநிலங்களில் உள்ள தமிழர்கள், அங்கெல்லாம் உடலுழைப்புத் தொழிலாளிகளாகவே பெரிதும் இருக்கிறார்கள். அவர்கள் அம்மாநிலங்களுக்குத் தேவைப்படுகிறார்கள். கேரளத்தில் ஏர் உழுதல், நடவுநடுதல், தேங்காய் பறித்தல், கட்டட வேலைகள் செய்தல் போன்ற கடின உடலுழைப்பு வேலைக்குப் பெரிதும் தமிழர்களையே அமர்த்துகிறார்கள். அவ்வேலைகளைச் செய்ய விரும்பாத அளவிற்கு மலையாளிகளின் பொருளியல் அங்கு உயர்ந்துள்ளது. இதற்கு அவர்கள் வெளிநாடுகளில் ஈட்டும் பணமும் ஒரு காரணம்.

தமிழ்நாட்டில் தமிழ் இன உணர்ச்சியும் தமிழர் பாதுகாப்பு அமைப்பும் உறுதியாக இருந்தால் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு அது மதிப்பையும் பாதுகாப்பையும் வழங்கும். தமிழகம் பதிலடி கொடுக்கும் என்ற எச்சரிக்கை உணர்வும் அயல் இனத்தார்க்கு உண்டாகும்.

இன்றைய உலகச் சூழ்நிலையில் வல்லரசுகளின் இராணுவத் தலையீடு பெருகிவருகிறது. சிறிய தமிழ்த் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமா? வல்லரசிய எதிர்ப்பிற்கு பெரிய இந்திய நாடு வாய்ப்பானதில்லையா?

பெரிய இந்தியா வல்லரசுகளின் கூட்டாளியாகி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாசல் கதவையும் பிடுங்கி எறிந்துவிட்டு வரவேற்புக் கொடுக்கிறது. ஒரே இடத்தில்-தில்லியில்- மட்டும் அனுமதி வாங்கிக் கொண்டு இந்தியா முழுவதையும் சூறையாடும் பொன்னான வாய்ப்பு இப்பொழுது அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்களுக்கு உள்ளது.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு, கொள்கை வழிப்பட்ட தமிழ்த் தேசியமே சிறந்த வடிவம். சின்னஞ்சிறு கியூபா, வடகொரியா, வியட்நாம் போன்ற நாடுகள் அமெரிக்காவை முறியடித்து கம்பீரமாக உலக அரங்கில் நிற்கின்றன. அவற்றை விட பெரியது தமிழ்த் தேசம்.

தமிழ்த் தேசிய சனநாயகப் பொருளியல் கொள்கை வல்லரசிய எதிர்ப்புக் கொண்டது. தமிழ்த் தேசம் எந்த ஏகாதிபத்தியத்தையும் முறியடிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. இறுதியாக வெல்வது இலட்சிய வழிப்பட்ட மக்கள் சக்தியே! ஆயுதங்கள் அல்ல.

இந்திய தேசியத்தை ஆதரிப்பது என்பது தெரிந்தோ தெரியாமலோ ஏகாதிபத்தியங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதாகும்.

தமிழ்த் தேசியத்தின் தொழில், வேளாண் கொள்கைகள் என்ன? சமூகவியல் கொள்கைகள் என்ன?

தொழில்துறையில் அரசுத்துறை மேலோங்கியிருக்கும். சிறிய, நடுத்தர, ஏகபோகமற்ற தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுவர். வரம்புக்குட்பட்டு தனியார் தொழில்துறைக்கு நல்வாய்ப்புகள் வழங்கப்படும். இவர்களுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படும்.

ஏகாதிபத்திய-பன்னாட்டு-தொழில் நிறுவனங்களுக்கான தாராளமயம், உலகமயம் கைவிடப்படும். வெளியேற்ற வேண்டிய வெளியார் நிறுவனங்கள் வெளியேற்றப்படும். கட்டுதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படக்கூடிய நமக்கு இன்றியமையாத் தேவையாய் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.

வேளாண்துறையில், தற்சார்பு வேளாண்மை கொள்கைக் கடைபிடிக்கப்படும். மான்சாண்டோ போன்ற வெளிநாட்டு வேளாண் நிறுவனங்கள் வெளியேற்றப்படும். நிலச் சீர்திருத்தம் முழுமை அடையும். சிறிய, நடுத்தர, பெரிய விவசாயிகளின் நிலவுடைமை உரிமை பாதுகாக்கப்படும். அவர்களுக்கு அரசு மானியங்கள் அதிகரிக்கப்படும். வெளிநாட்டுச் சந்தையில் போட்டியிடக் கூடியவகையில் வேளாண்மைக்கு மானியம் வழங்கப்படும்.

மொத்தத்தில் தமிழ்த் தேசிய சனநாயகப் பொருளியல் கொள்கை கடைபிடிக்கப்படும். தமிழகச் சூழலுக்கேற்ற ஒரு நிகரமை(சோஷலிசம்) இலக்கு அதற்கு இருக்கும்.

வர்ண-சாதி ஒழிப்பு, தீண்டாமை முறியடிப்பு, பெண்ணுரிமை, சூழலியல் பாதுகாப்பு, அனைவர்க்கும் வேலை, வேலையில்லாக்கால வாழ்வூதியம், மெய்யான மதச்சார்பின்மை, வழிபாட்டுரிமை, தமிழே ஆட்சிமொழி-தமிழே பயிற்று மொழி-தமிழே தொடர்பு மொழி என்ற ஒரு மொழிக் கொள்கை, விருப்பத்திற்கேற்ப ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளைக் கற்க முழுவாய்ப்பு, அறிவியல் வளர்ச்சிக்கு முன்னுரிமை, பழந்தமிழர்களின் அறச்சிந்தனை-பெரியாரிய-அம்பேத்கரியக் கருத்தியல்கள் ஆகியவை ஒருங்கிணைந்த மண்ணுக்கேற்ற மார்க்சியத் தத்துவம் போன்றவை சமூகவியலில் இருக்கும்.

தமிழ்த் தேசியப் புரட்சி எவ்வாறு நடக்கும்?

மாபெரும் மக்கள் எழுச்சியாகவே தமிழ்த் தேசியப் புரட்சி நடக்கும். போர்க்குணம் மிக்க அமைப்பு அப்புரட்சிக்குத் தலைமை தாங்கும். கொரில்லாக் குழு வடிவமாகவோ அல்லது நாடாளுமன்ற சட்டமன்றப் பாதையாகவோ தமிழ்த் தேசியப் புரட்சிப்பாதை இருக்காது.

முடிவாக, தமிழ்த் தேசியம் எது?

எமது தேசம் தமிழ்த்தேசம்
எமது தேசிய இனம் தமிழர்
எமது தேசிய மொழி தமிழ்
எமது இலக்கு தமிழ்த்தேசக் குடியரசு அமைத்தல்
என்பதே தமிழ்த் தேசியம்.

- [email protected]




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com