Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

எல்லாவற்றையும் கேள்வி கேள்!
களப்பிரன்

நான் மட்டும் அல்ல; இந்த சமூகத்தில் புளுத்து இறுகிப்போன சுவற்றின் செங்கல்லாக நினைத்து வளர்ந்து கொண்டிருந்த எத்தனையோ, என்னைப் போன்றவர்களையும், உங்களைப் போன்றவர்களையும் ஒரே ஒரு பெரிய வெங்காயத்தால் ஓங்கி அடித்து ஒற்றை கேள்வி கேட்டான், அந்த கருப்புச்சட்டைக்காரன். “பசி, தூக்கம், தாகம், காதல் இவைகளைப் போல் உடலால் தூண்டப்படுவதா உனது நம்பிக்கைகள்? அது நீ பிறந்த சமூகம் உனக்குத் தரும் மேல்சட்டை அல்லவா?” என்ற கேள்வி களோடு “இது உன்னிடம் நான் கேட்டும் கேள்வி அல்ல, உன்னிடம் நீயே கேட்க வேண்டிய கேள்வி” என்று கூறிவிட்டு “எதற்கும் விடைதெரிய எல்லாவற்றையும் கேள்வி கேள்! கேள்வி கேள்!” என்று உரக்கச் சொன்னான். அவன் சொல்வதை எந்த மனிதன்தான் மீறமுடியும்! அதன்படி நாமும் கேள்விகளைத் தொடங்கினோம். சொன்னவனின் தாடியைப் பிடித்து பிடித்தே, இழுத்து இழுத்தே, கேள்வி கேட்டு, கேள்வி கேட்டே, ஒரு கட்டத்தில் அறிஞரின் பேச்சிலே அலையாடி, நாவலர் உரையிலே நீராடி, பேராசிரியரிடம் பாடம் கற்று மொழிக்காவலரின் மூச்சின் மூச்சாகவே மாறி வளர்ந்தோம்.

Periyar அந்த வளர்ச்சியின் பரிணாமத்தில் காவலர் உரைக்காகவே காத்துக்கிடந்தன நமது செவிகள். மாலை 5 மணியோ காலை 5 மணியோ அவரைத் தேடித்தேடியே விழிகள் கிடந்தன கூட்டத்திடலில்களில். இப்படியாக கேள்வி கேட்கச்சொல்லி நாவில் தொடங்கிய நமது தாடிப்பயணத்தின் ஒரு கட்டத்தில் ஊமை நாவோடு கேள்விகளை மறந்து வெறும் கேட்பதற்கான காதுகளோடு தொங்கிக் கொண்டு இருந்தோம். கேள்விகள் ஏதுமற்று சவம்போல் தொங்கிய நம்மை பொறுத்துப் பொறுத்து பார்த்த அந்தப் பழுத்தக் கிழவன் ஒரு கட்டத்தில் ஒரே எத்தில் உதைத்துத் தள்ளினான். வெளுத்த தனது தாடியை சுருட்டி எடுத்து சாட்டையென சுழற்றி வெளுத்துக் கட்டவே, வெகுநாளாய் மூடிய நமது வாய்க்குள்ளிருந்து வலியின் சப்தம் சரட்டென வெளியேறியது. செவிவழியாக சென்று நம் வாய்நிறைய அடைத்துக் கொண்ட அடசல்களை நீக்கி, அங்கு அசைவற்று மறுத்துப்போயிருந்த நமது நாக்குகள் அதிரத் தொடங்கின.

உடன்பிறவா சகோதரர்களாகிய அவைகள் (நமது நாக்குகள்) என்றோ ஒரு நாள் புழக்கத்தில் இருந்து இன்று அருங்காட்சியக சொல்லாக மாறிப்போய் இருந்த “எல்லாவற்றையும் கேள்வி கேள்!” என்பதை ஒன்றாக சேர்ந்து அசைத்துச் சொல்லியதோடு, “அன்று தனிக்கட்சி உருவாக உண்மையில் திருமணம்தான் காரணமா?” என்ற கேள்விகளோடு தொடங்கி, “எல்லா அமைச்சர்களையும் முடிவெடுத்தது செயற்குழுவா?” என்பது வரை பலநூறு கேள்விகளை அவைகள் அடுக்கின. இருப்பினும் எல்லா கேள்விகளுக்கும் இடம் போதாது என்பதனால் தற்கால சூழலுக்கான சில கேள்விகளை மட்டும், என்னைப் போன்றவர்களின், உங்களைப் போன்றவர்களின் முன்னால் எடுத்து வைக்கிறோம்.

1. காங்கிரசோடு கூட்டு சேரத்தயாராக இருந்து, தனது தனித்த போட்டி எனும் தனிப்பெரும் கொள்கைக்கு முழுக்குப் போட முடிவே எடுத்துவிட்ட நம்மூர் கேப்டன், மீண்டும் தனித்தே நிற்க காரணம் என்ன? அவரை தனியாக நிற்கச்சொன்னது யார்?

2. சிவகங்கையின் சீனாதானா சுருண்டே விட்டார் என்று அவரின் அகில உலக அஜால் குஜால் ஊடகங்கள்கூட ஊத்தி ஊதிய பின்பும் கொஞ்ச நேரத்திலேயே எப்படி அவர் உயிர்த்தெழுந்தார்?

3. விருதுநகர் தொகுதியில் பதிவான வாக்குகளை விட எண்ணிய வாக்குகளை 22 ஆயிரம் கூடுதலாக்கிய கொடை வள்ளல் யாரோ? அதே தொகுதியின் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர், தான் படிக்கும் காலங்களில் எந்த அரசியல் கட்சியின் மாணவரணியில் இருந்தார்?

4. கோடீஸ்வரர்களாக இல்லாத எத்தனை கொள்கை கொளுந்துகளுக்கு நமது “பரம்பரை ஆண்ட கட்சிகள்” சீட்டு கொடுத்தன?

5. பல கோடி பணத்தோடு டெல்லியிலிருந்து இங்கு வந்து ஒரு தொகுதிக்கே தொடர்பில்லாமல் வெற்றி பெற்றுச்செல்லும் இந்த பணநாயக தேர்தல்முறைக்கு எதிரான நமது போராட்டத்திட்டம்தான் என்ன?

6.நிலையான ஆட்சிக்குத்தான் மக்கள் வாக்களித்ததாக உளறும் ஊடகங்களிடம் எத்தனை சாமானிய மக்களுக்கு நிலையான ஆட்சி என்றால் என்ன என்றோ, தான் தோன்றித்தனமான நிலையான ஆட்சியினை விரும்பும் மக்கள் எத்தனை பேர் என்றோ வெளிப்படையான அறிக்கைகள் உள்ளதா?

7. உண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்றால் அவர் தேர்தலுக்குப் பின் இறந்தாரா? அல்லது தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பே இறந்து விட்டாரா?

8. ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் டி.ஆர். பாலுவுக்கும், ஆ. இராசாவுக்கும் மந்திரி பதவி கிடையாது என்று சொன்ன காங்கிரஸ், இன்றைக்கு டி.ஆர். பாலுவைவிட அதிகம் ஊழல் செய்த ஆ. இராசவிற்கு மட்டும் மீண்டும் அமைச்சர் பதவியை அதுவும் அதே துறையில் வழங்க யார் நிர்ப்பந்தித்தார்கள்?

9. தேர்தலுக்கு ஒருவாரம் முன்பு அமைச்சருக்குத் தெரியாமல் பேருந்துகட்டணம் குறைந்ததுபோல், அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்த மாநில அரசு, தேர்தலுக்குப் பின் அந்தக்கட்டணக் குறைவை மீண்டும் நடைமுறைப்படுத்துமா?

10. தேர்தல் காலங்களில் இல்லாமலே போன மின்வெட்டு, இனிவரும் காலங்களிலும் தொடருமா?

இப்படியாக நீளும் கேள்விகளுக்கு இடையில், “போதும்! போதும்! இப்போதைக்கு இதற்கு பதில் கிடைத்தாலே போதும்” என்று மீண்டும் தாடியை பிடித்து தொங்கியே தூங்கிவிட்டோம் என்றால் மீண்டும் ஒருமுறை “எல்லாவற்றையும் கேள்வி கேள்!” என்று முன்பை விட உறுதியாக நம்மை நோக்கி ஓங்கி உதைக்க தயாராக இருக்கின்றது “தாடிக்கார கால்கள்”. அதனால் விடாமல் எல்லாவற்றையும் கேள்வி கேட்போம்!

- களப்பிரன் [email protected]


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com