Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
அனுபவக் கட்டுரை

கொடைக்கானல்!?
ஜெயபாஸ்கரன்

இயற்கை, மக்களின் விமர்சனங்களுக்குக் கட்டுப்படுவதில்லை; அவைகளைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. எரிக்கும் வெப்பம், உறைய வைக்கும் குளிர், நடுங்க வைக்கும் பூகம்பம், புரட்டிப் போடும் புயல், வெளுத்து வாங்கும் மழை என்று பல்வேறு நிகழ்வுகளாக அது தன்பாட்டுக்குத் தனது லீலைகளை நடத்திக் கொண்டே இருக்கிறது. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நான் இப்படித்தான் இருக்கேன். என்கிட்ட இருந்து நீங்க தான் உங்களைக் காப்பாத்திக்கணும் என்கிற ரீதியில்தான் இயற்கை மனிதர்களிடம் நடந்து கொண்டிருக்கிறது.

இயற்கைக்கு எதிராக என்னென்ன செயல்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் மனிதர்களும் கவலைப்படுவதில்லை. ஆனால், இயற்கையிடம் அவர்களின் எதிர்பார்ப்புகள் மட்டும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும். மிதமான வெப்பம், இதமான தென்றல், போதுமான மழை இவைகளுக்காக மட்டுமே ஒவ்வொருவரும் ஏங்குகிறார்கள்.

kodai மனிதர்களிடையே இயற்கை பாரபட்சத்தோடு நடந்து கொள்வதில்லைதான். ஆனால், மனிதர்களில் பணவசதி கொண்டவர்கள் இயற்கையின் நேரடிச் சீற்றங்களில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்கிறார்கள். சில நேரங்களில் சமாளிக்க முடியாதபோது பிறரால் காப்பாற்றப்படுகிறார்கள். காப்பாற்ற முடியாமலும் போகிறபோது மரணமடைகிறார்கள். அதிலும் இந்தியா போன்ற வெப்ப நாடுகளை, எப்போதாவது பொழியும் மழையும் அதிகமாகப் பாதிக்கிறது. எப்போதுமே காயும் வெயிலும் அதிகமாகப் பாதிக்கிறது. அதிகமான வெயிலால், அணைகள் நிரம்பி உடைவதோ, பயிர்கள் மூழ்குவதோ, வீடுகள் அடித்துச் செல்லப்படுவதோ, இல்லையென்றாலும் கூட மழையோடு ஒப்பிட்டு அதன் பாதிப்புகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. அப்படி மதிப்பிடவும் கூடாது.

வெள்ள நிவாரண நடவடிக்கைகளைப் போலவே வெயில் நிவாரண நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டிய நிலையில்தான் நாம் இருக்கிறோம். கோடைக் காலங்களில் குடியிருப்புகளுக்கு மின்வெட்டு நேராமல் பார்த்துக் கொள்வது, மக்கள் நடமாடும் அனைத்து வீதிகளிலும் நிழல் தரும் மரங்களை நடுவது, மனிதாபிமானத்தோடு, விளம்பர நோக்கமின்றி ஒரு பத்துப் பேர்களாவது நிற்கிற மாதிரி பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைப்பது போன்ற எத்தனையோ விதமான வெயில் நிவாரண நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் கிடக்கின்றன. கோடையில் வெந்து, குளிரில் தணிந்து கொள்வதுதான் நிவாரணம் என்றாகிவிட்டது.

தற்போது இந்த ஆண்டிற்கான கோடையின் பிடிக்குள் மக்கள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். வெயில் கொடுமை (?) சம்பந்தமான வசனங்கள், அறிமுகமில்லாதவர்களிடம் கூட பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான மக்கள், புழுக்கத்தில் நெளிந்தபடி ஊட்டி, கொடைக்கானலை நினைத்துப் பார்த்து நீண்ட பெருமூச்சு விடுகிறார்கள்.

வெயிலின் பின்னணியில் தமிழக மக்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஊட்டி, கொடைக்கானல் என்றெல்லாம் ஊர்கள் இருப்பதே தெரியாதவர்கள் ஒருவகை (நிம்மதி), அந்த ஊர்களைப் பற்றித் தெரிந்தும், அவற்றின் சிறப்பை அறிந்தும் அங்கு போய்வர இயலாதவர்கள் இரண்டாவது வகை. கோடை தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே அங்கு தங்களுக்கான இருப்பிடங்களைத் தயார் செய்யும்படி உத்தரவிட்டு அதன்படி அங்கு போய் இளைப்பாறி, அனுபவித்துவிட்டு வருபவர்கள் மூன்றாவது வகை. இதில் இடையில் சிக்கிய நடுத்தர வர்க்கம்தான் பரிதாபத்திற்குரிய வகையாகக் காட்சியளிக்கிறது. கோடைக்காலங்களில் மலைப் பிரதேசங்களுக்குச் சென்று இளைப்பாறி விட்டு வரமுடியாத சோகத்தை நடுத்தர மக்கள் நிரந்தரமாகவே தக்க வைத்துக் கொண்டவர்களாகக் காட்சியளிக்கிறார்கள். கொடைக்கானலைப் பற்றி அறிந்த தமது குழந்தைகளின் வற்புறுத்தலை, அவர்கள் மெரீனா கடற்கரையைக் காட்டிச் சமாளிக்கிறார்கள்.

ஏனெனில் அங்கெல்லாம் சென்று வர ஆகும் பயணச் செலவு நடுத்தட்டு மக்களின் சக்திக்கு மீறியதாக இருக்கிறது. அப்படியே பயணச் செலவுக்குப் பணம் புரட்டி விட்டால் கூட, அங்கு தங்குவதற்கு ஆகும் செலவுதான், திட்டத்தைக் கைவிடுவதற்குக் காரணமாக இருக்கிறது. தமிழக மலைத் தலங்களின் விடுதி அறைகள் எப்போதுமே சினிமாக்காரர்களாலும், பணக்காரர்களாலும் நிறைந்திருப்பதும்தான் அதன் வாடகை உயர்வுக்குக் காரணமாக இருக்கின்றது. அதோடு, சுற்றுலா, இளைப்பாறுதல் என்கிற பெயரில் மக்கள் ஒரே முனையில் ஓரிரு இடங்கள் மட்டுமே பார்த்து ரசிப்பதற்குரியவை என்று நினைத்துச் செயல்படுவதும்தான் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. இதன் விளைவாக ஏழைகளின் ஊட்டி என்று வர்ணிக்கப்பட்டு வரும் ஏற்காடு கூட இன்றைக்கு ஏழைகளின் கையை மீறிப் போய்விட்டது.

தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காட்டைப் போலவே, கல்வராயன் மலை, கொல்லி மலை, சித்தேரிமலை, திருமூர்த்தி மலை, போன்ற இன்னும் பல பிரதேசங்களும் இயற்கை அழகுடன்தான் விளங்குகின்றன. ஆனால் அதையெல்லாம் யாரும் அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை. சினிமா படப்பிடிப்பு நடக்கிற இடமே சுற்றிப் பார்க்கச் செல்கிற இடம் என்கிற மக்களின் மனோபாவமே இதற்குக் காரணமாகும்.

இன்றைய நிலையில், நடுத்தட்டு மக்களும் குறைந்த செலவில் இரண்டு நாள் தங்கி இளைப்பாற வேண்டும் என்றால் இதற்கு ஒரே வழி, மேற்குறிப்பிட்ட மலைப் பகுதிகளிலும் நிறைய விடுதிகள் அமைப்பதுதான். பொருத்தமான இடங்களில் இளைப்பாறும் விடுதிகள் பரவலாக்கப்பட்டால்தான் இடம் மாற்றி இளைப்பாறுகிற வாய்ப்பும் உண்டாகும் அதன் விளைவாக ஊட்டியும் கொடைக்கானலும் காப்பாற்றப்படும்.

- ஜெயபாஸ்கரன் ( [email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com