Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

என்ன சொல்லப் போகிறோம் யானைகளுக்கு?
ஜெயபாஸ்கரன்

தரைவாழ் உயிரினங்களில் மிகப் பெரியதும், பல்வேறு அல்லல்களுக்கு உள்ளாகி நாளுக்கு நாள் அழிந்து வருவதுமான யானைகளைப் பற்றிய செய்திகள் மனிதகுல வரலாறு நெடுகிலும் மண்டிக் கிடக்கின்றன. மன்னராட்சிக் காலங்களில் பல்லாயிரக்கணக்கில் போர்களுக்குப் பயன்படுத்தப்பட்டது முதல், இன்றைய கணிப்பொறி காலம் வரை யானைகள் மனித குலத்துக்குப் பல்வேறு வகையில் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்றன.

யானைகளைப் பாதுகாப்பதைக் காட்டிலும் அவற்றை எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டு பிழைக்கலாம் என்பதே மனிதர்களின் சிந்தனையாக இருக்கிறது. ஆசி வழங்கும் கோயில் யானைகள்; வித்தை காட்டும் சர்க்கஸ் யானைகள்; வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களைத் தூக்கிக் கொண்டு வந்து அதை லாரியில் ஏற்றிக் கொண்டிருக்கும் முகாம் யானைகள்; முகாம் யானைகளுக்குப் பயிற்சி கொடுக்கவும், அடங்காத யானைகளை அடக்கவும் பயன்படுத்தப்படுகிற ‘கும்கி’ யானைகள்; மனிதர்களின் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என்கிற கவலையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் காட்டு யானைகள் என்று யானைகளில் எத்தனையோ பிரிவுகள்!

மனிதர்களின் கைகளில் சிக்காத காட்டு யானைகள் எந்த அளவுக்கு நிம்மதியாக வாழ்கின்றன என்பது தெரியவில்லை. ஆனால் பல்வேறு விதங்களில் மனிதர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிற ஆயிரக்கணக்கான யானைகளில், எந்த யானையும் நிம்மதியாக இல்லை என்பது கண்கூடான உண்மை. முகாம்களில் உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு யானைக்கும், ஒரு நாள் உணவாக 100 கிராம் வெல்லம், 5 கிலோ கொள்ளு, 15 கிலோ ராகி ஆகியன உணவாக வழங்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதில் பெண் யானைகள், கருவுற்ற யானைகள், மற்றும் குட்டி யானைகளின் உணவு தொடர்பான அளவு விவரங்கள் மாறுபடுகின்றன. ஆனால் முகாம்களில் இல்லாமல் மனிதர்களுக்கிடையில் பல்வேறு தொழில் செய்து ஒடுங்கிக் கிடக்கும் எல்லா யானைகளுக்கும் இந்த அளவு உணவு வழங்கப்படுகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

அடர்ந்த காடுகளில் விருப்பம்போல் கூட்டம் கூட்டமாக நடமாடி, மரங்களின் பசுந்தழைகளைத் தின்று, பெரிய பெரிய காட்டாறுகளில் நீர் குடித்து அங்கேயே விளையாடி மகிழும் உடல் அமைப்பு கொண்ட யானைகள், அருகம்புல்லும் முளைக்க வாய்ப்பில்லாத நகரத்துச் சூழலில் எப்படி வாழ முடியும் என்பது சமூகத்தின் கவலைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கிறது.

காடுகளில் வறட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு காட்டைவிட்டு வெளியேறுகிற பல யானைகள் அருகில் உள்ள விளைநிலங்களைத் துவம்சம் செய்து பயிர்களைத் தின்று பசியாறிச் செல்கின்றன. காடுகள் அழிக்கப்படுவது; யானையின் வாழிடங்கள் காப்பி, தேயிலை போன்ற விளை நிலங்களாக மாற்றப்படுவது; தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது போன்ற பல்வேறு காரணங்களால் காட்டு யானைகளின் வாழ்வுரிமை தற்போது கேள்விக்குறியாகிவிட்டது. ஆசிய யானைகளில் 50 விழுக்காடு தென்னிந்தியாவில் வாழ்கின்றன. இத்தகைய இயற்கையின் கொடை நமக்கு வாய்த்திருந்தாலும் இது குறித்து நாம் மகிழ்ச்சியடைய முடியவில்லை.

1998ஆம் ஆண்டு முதல் 2001 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் 28 யானைகள் ரயிலில் அடிப்பட்டுச் செத்துப் போயின. இவற்றில் 15-11-2001ஆம் நாள் அசாம் மாநிலம் தின்சூக்கியா மாவட்டத்தில் ஒரே ரயிலில் 7 யானைகள் அடிப்பட்டு மாண்டன; 1980 முதல் 1986 வரை ஆறு ஆண்டுகளில் 100 ஆண் யானைகள் தந்தங்களுக்காகக் கொல்லப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட யானைகள் விஷ உணவை உண்டு மாண்டுபோய் விட்டன என்று வனத்துறையின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இது தவிர காடுகளின் ஓரம் அமைக்கப்படுகிற மின்சார வேலியில் சிக்கிப் பல யானைகள் மாண்டு கொண்டிருக்கின்றன. யானை வாழிடங்கள் பல்வேறு வகையில் ஆக்கிரமிக்கப்படுவதை வசதியாக மறந்துவிட்டு, யானைகளின் அட்டகாசம் பற்றியே மனிதர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1977ஆம் ஆண்டு மேலும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, யானைகளை வேட்டையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் யானைகள் பல்வேறு வகையில் அழிக்கப்பட்டு வருவதைக் கருத்திற் கொண்டு 1992ஆம் ஆண்டு யானைகள் பாதுகாப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அத்திட்டத்தை உரிய வகையில் செயற்படுத்துமாறு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. இப்பத்தாண்டுத் திட்டம் (1992 - 2002) நிறைவு பெற்றுள்ள நிலையில் தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தியபோது யானைகளின் எண்ணிக்கை கூடியுள்ளதாக வனத்துறை பட்டியலிட்டிருக்கிறது. அதன்படி 1991இல் 3260ஆக இருந்த தமிழக யானைகளின் எண்ணிக்கை 2001இல் 3635 ஆக உயர்ந்துள்ளது. முகாம் யானைகளும், சர்க்கஸ் மற்றும் கோயில் யானைகளும் காட்டு யானைகளின் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

யானைகள் பாதுகாப்பில் 1977ஆம் ஆண்டு சட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்். ஆனால் எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் யதார்த்தம் அவ்வளவு நிறைவாக இல்லை. யானையை வைத்து மனிதர்கள் பல்வேறு விதங்களில் பிழைக்கும் நிலைக்கு முதலில் தடைவிதிக்கப்பட வேண்டும். யானைகள் பாதுகாப்புத் திட்டம் என்பது, மனிதர்களுக்காக உழைக்கும் யானைகளையும் உள்ளடக்கியதாக இருந்தால்தான் முழுமை பெறும். மனிதர்களால் கைது செய்யப்பட்டவை போல வாழ்ந்து கொண்டிருக்கும் யானைகளை விடுதலை செய்து மீண்டும் அவற்றை இயற்கையின் வனச் சூழலிலேயே வாழ வைப்பதுதான் உண்மையிலேயே யானை நலச் சட்டங்களை மதிப்பதாக அமையும்.

யானைகள் வாழ்வதற்கேற்ற வெப்ப மண்டலக்காடுகளை நாம் பெற்றுள்ளதால் அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பையும் இயற்கை நமக்கு அளித்திருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

யானை என்பது நமது இயற்கை வளத்தின் அடையாளமாகும். இயற்கையான வனவெளிகளில் யானைகளைப் பல்லாயிரக் கணக்கில் வளர்ப்பது எனத் திட்டமிட்டுச் செயலாற்றினால், அதன் விளைவாகக் காடுகள் செழிக்கும். வளமான காடுகள்தான் மழை உள்ளிட்ட இயற்கையின் பல்வேறு கொடைகளை நமக்கு வழங்கும்.

- ஜெயபாஸ்கரன் ( [email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com