Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தமிழுக்கு உதவாத ஊடகங்கள்
ஜெயபாஸ்கரன்

இது ஊடகங்களின் காலம். இதழ்கள், இணையங்கள், வானொலிகள், இணைய வானொலிகள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், பண்பலை வானொலிகள் என்பன போன்று ஊடக உலகின் எண்ணிக்கை ஊதிப் பெருத்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு வகையில் ஊடகங்கள் பெருகுவது மொழிகளுக்கு நல்லதுதான். ஏனெனில் எல்லா ஊடகங்களும் மொழிகளைச் சார்ந்தே இயங்கியாக வேண்டும். அவ்வகையில் தமிழ் மொழிக்கும் தற்கால ஊடகங்கள் அனைத்தும் களமாகியும், களமிறங்கியும் காரியமாற்றிக் கொண்டிருக்கின்றன. இது குறித்துத் தமிழர்கள் பெருமை கொள்ளலாம். ஆனால் எந்த அளவுக்குப் பெருமை கொள்வது என்பதுதான் கேள்விக்குறி.

தமிழைக் களமாகக் கொண்டு இயங்குகின்ற ஊடகங்கள் அனைத்தும் தமிழில் தமிழர்களுக்காகத்தான் இயங்குகின்றன. ஆனால் தமிழுக்காக இயங்குகின்றனவா? எத்தனை ஊடகங்களில் எந்தெந்த ஊடகங்களில் தமிழ் அதன் தரம் தாழாமல் அரங்கேற்றப்படுகிறது? தமிழ் ஊடகங்கள் தமிழின் வளர்ச்சிக்காக, அதன் பாதுகாப்பிற்காகத் தன் பங்கிற்கு என்னென்ன செய்கிறது? குறைந்தபட்சம் எத்தனை ஊடகங்கள் தான் கொண்ட தமிழை சிதைக்காமல் சமூகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது? லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான மக்களைச் சென்றடையும் ஊடகங்கள் வெளிப்படுத்தும் தமிழில் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் கலந்திருப்பது ஏன்? அது அப்படித்தான் இருக்க வேண்டுமா? மக்கள் அப்படி இருக்கிறார்கள் எனவே அவர்களின் போக்கிற்கு ஏற்ப ஊடகங்களும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றால் ஊடகங்களுக்கென்று சமூகப் பொறுப்பு ஏதுமில்லையா? என்பன போன்ற ஏராளமான வினாக்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து எழுகின்றன.

முன்னொரு காலத்தில் இலங்கை வானொலி அதன் இனிய தமிழுக்காகவே மாபெரும் வரவேற்பைப் பெற்று மக்களிடையே புகழடைந்தது. இன்றுங்கூட பிரிட்டனின் பி.பி.சி. வானொலி அதன் தமிழோசையால் உலகத் தமிழர்களிடையே நன்மதிப்பையும் வரவேற்பையும் பெற்று விளங்குகிறது. அவ்வளவு ஏன்? சீனர்கள் நடத்தும் தமிழ் வானொலியும் அவ்வானொலியின் அறிவிப்பாளர்கள் உச்சரிக்கும் தமிழும் கேட்போரின் மனம் கவர்கின்றன. அவ்வானொலியின் தமிழ்ப் பிரிவுக்கு நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிற ஒரு சீனப் பெண்மணி தன் அடையாளமான, தன் இயற்பெயரான சீனப்பெயரைத் தள்ளி வைத்துவிட்டு, ‘தமிழரசி’ என்று தனக்குத் தானே பெயர் சூட்டிக் கொண்டார். பெருமைக்குரிய, முன் தோன்றிய, ஈடு இணையற்ற ஒரு மொழிக்காக நான் பணியாற்றுவதிலும், அம்மொழியிலேயே என் பெயர் விளிக்கப்படுவதிலும் நான் பெருமிதமடைகிறேன் என்று தனது பெயர் மாற்றம் குறித்துக் கருத்துத் தெரிவத்தார் அவர்.

உலகின் பல மூலைகளிலிருந்து எதன் பொருட்டேனும் தமிழ் மண்ணுக்கு வந்த பலர் தமிழால் ஈர்க்கப்பட்டு தன் வாழ்நாள் முழுவதும் தமிழின் காதலர்களாக வாழ்ந்து அதற்குச் சேவையாற்றிய வரலாறு அனைவரும் அறிந்த ஒன்றுதான். அப்படித்தான் நூற்றுக்கணக்கான வடமொழிப் பெயர்கள் இங்கே தூய தமிழ்ப் பெயர்களாக மாறின. தமது வாழ்நாள் முழுவதும் தமிழ் பரப்பும் பணியையே தமது தலையாய பணியாகச் செய்த ஆயிரக்கணக்கானத் தனிமனிதர்கள் வாழ்ந்த இந்த மண்ணில், லட்சக்கணக்கான மக்களைத் தினந்தோறும் சென்றடையும் ஊடகங்களின் பொறுப்பாளர்கள் தமக்கு இருக்க வேண்டிய நியாயமான பொறுப்பைத் தட்டிக் கழிக்கலாமா? அல்லது தான்தோன்றித்தனமாகவும், தமிழுக்குப் பகையாகவும் நடந்து கொள்ளலாமா என்பதே இவ்வேளையில் நாம் முன் வைக்கும் முக்கியமான கேள்வி.

தமிழ்நாட்டில் கடை விரித்திருக்கிற வெகுஜன ஊடகங்கள் தமிழின் வளர்ச்சிக்காக அவ்வபோது நிகழ்ச்சிகளை வழங்குவது போலவும், படைப்புகளை அரங்கேற்றுவது போலவும் அவ்வபோது தோற்றம் காட்டவே செய்கின்றன. ஆனால் அத்தகைய முயற்சிகளால் தமிழுக்கும் அதைக் கேட்கும் அல்லது படிக்கும் தமிழர்க்கும் எந்தப் பயனும் கிட்டவில்லை என்பதே யதார்த்தமான உண்மையாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ‘தமிழ் கற்போம்’ என்றொரு நிகழ்ச்சியை ஒளிபரப்புவதாக வைத்துக் கொண்டால் அது நமக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அந்த ஒரு நிகழ்ச்சியைத் தவிர மற்றெல்லா நிகழ்ச்சியும் தமிழுக்கு எதிராக, ஆங்கிலமும் வடமொழியும் கலந்த பொறுப்பற்றதொரு போக்கிரித்தனத்தோடு கூடிய அவலமாக அரங்கேறினால் நாம் மகிச்சியடைய முடியுமா? ஒரு தொலைகாட்சியின் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளில் ஒன்றாக தமிழ் வளர்க்கும் நிகழ்ச்சியொன்றும் ஒளிபரப்பப்பட்டால் தமிழ் வளர்ந்து விடுமா? அனைத்து நிகழ்ச்சிகளிலும் அடிநாதமாக தமிழை நிலை நிறுத்துவதில் என்ன தடை? அனைத்து நிகழ்ச்சிகளிலும் வெளிப்பட்டுப் பேசுகிறவர்கள் இயன்றவரை இனிய தமிழில் பேச முடியாமற் போவது ஏன்? என்பன போன்ற வினாக்களுக்கு இங்கே யாரும் விடையளிக்கத் தயாராக இல்லை.

தமிழ்நாட்டின் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும், திரைப்படங்களிலும் வெளிப்படும் ‘கடவுள்கள் மற்றும் அசுரர்கள்’ மட்டுமே இப்போது முழுமையாகவும் முறையாகவும் தெளிவாகவும் பேசுகின்றனர். தமிழ் என்பது தேவ, அசுரர்களின் மொழியா? தமிழர்களின் மொழியில்லையா? ஏன் இவ்வாறு நிகழ்கின்றது? முருகக் கடவுள் ஆங்கிலத்தில் பேசுவது நகைப்புக்குரியது என்றால் அந்த முருகப் பெருமானின் பக்தர்கள் ஆங்கிலத்தில் அல்லது ஆங்கிலம் கலந்து பேசுவது நகைப்புக்கு அப்பாற்பட்டதா?

தமிழின் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் தோன்றி அதன் நேயர்களோடு பேசுகின்ற தொகுப்பாளர்களும், தொகுப்பாளினிகளும் இப்போது தமிழின் கொலையாளிகளாக வடிவெடுத்திருக்கிறார்கள். தமிழ் வார்த்தைகள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு பேசும் தமிங்கிலம் தலைசுற்ற வைக்கிறது. “இந்த சாங்கை நீங்க யாருக்கு டெடிகேட் பண்றீங்க.. உங்க ஹஸ்பண்ட் எங்கே வொர்க் பண்றார்” என்கிற ரீதியில் நீள்கிறது அவர்களின் தமிழ். இவர்கள் யாரும் சங்கத் தமிழில் பேச வேண்டாம். சமகாலத் தமிழில் பேசலாமல்லவா? உங்களுக்கு எந்த பாடல் பிடிக்கும். உங்கள் கணவர் எங்கே பணியாற்றுகிறார்? என்று கேட்குமளவிற்குக் கூடவா இவர்களிடம் தமிழ் இல்லை? கேட்கிற கேள்வியே உருப்படியில்லாத கேள்வி. அதை உருப்படாத மொழியில் கேட்பதையாவது தவிர்க்கலாமல்லவா? “நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது _____யின் தமிழ் மாலை” என்கிறார்கள். அது தமிழ் மாலையாகத்தான் இருக்கிறதா என்பதை அவர்களின் மனசாட்சிக்கே விட்டுவிடுவோம்.

ஓரு தொலைக்காட்சியின் ‘லோகோ’ என்று சொல்லப்படுகிற சின்னம், நிரந்தரமாக அந்தந்த அலைவரிசைகளில் அதாவாது ஒவ்வொரு தொலைக்காட்சிப் பெட்டியின் மூலையிலும் அடையாளப் படுத்தப்படுகிறது. நல்லதுதான். ஆனால் அதோடு சேர்த்து அதை TV என்று ஆங்கிலத்தில் நிரந்தரப்படுத்துகிறார்களே அது ஏன்? அப்படிப் போடாவிட்டால் அதை TV என்றும், நாம் பார்ப்பது டி.வி நிகழ்ச்சியென்றும், அதன் நேயர்கள் விளங்கிக் கொள்ளமாட்டார்களா? பிறகு ஏன் நமது தமிழ்நாட்டின் தொலைக்காட்சிகளில் மட்டும் சன் டிவி, ராஜ் டிவி, ஜெயா டிவி, மறக்காமல் டிவி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்?

டிஸ்கவரி, பிபிசி, நேஷனல் ஜியாகிராபிக், ஸ்டார் என்று மட்டும் படித்து அதை உலக மக்கள் டிவி என்று விளங்கிக் கொள்ளாமல் விட்டுவிட்டார்களா? மிதிவண்டிகளில் ‘சைக்கிள்’ என்றும், கார்களில் ‘கார்’ என்றும் எழுதிவைத்திருக்கிறார்களா என்ன? ‘மிளகு’ என்று அதைக் கட்டி வைத்திருக்கிற பொட்டலத்தின் மீது எழுதலாம். மிளகின் மீதே எழுதலாமா? வினாக்கள் எழுகின்றன. உரிய விடைசொல்லத்தான் இங்கே யாரும் தயாராக இல்லை. இதைத் தாண்டித் தமிழ் திரைப்படங்களின் பக்கம் போனால் அங்கே நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது.

தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர்தான் சூட்ட வேண்டும் என்பதில் தமிழ்த் திரையுலகப் படைப்பாளிகள் மிக உறுதியாகவும் லட்சிய வெறியோடும் இருக்கிறார்கள். அவர்களின் மனம் கரைவதற்கு இங்கே மாபெரும் விழிப்புணர்வுப் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது. தப்பித் தவறி ஒரு படத்துக்குத் தமிழ்ப் பெயர் வைத்துவிடுகிறவர்கள் கூட திரையில் அப்பெயரைத் திரையிடும்போது அதை ஆங்கிலத்திலும் அப்படியே திரையிட்டால்தான் அவர்களுக்கு மனசு ஆறுகிறது. ஒவ்வொரு தமிழ்த் திரைப்படத்திற்கும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிற நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் இவர்கள் ஐவரும் தமது பெயர்களை மட்டும் ஆங்கிலத்திலும் திரையிட்டுக் கொள்கிற வேதனை அனேகமாக இங்கு மட்டுமே அரங்கேறுவதாகத் தெரிகிறது.

ஒரு தமிழ்ப் படத்தை அமெரிக்காவில் திரையிடும்போது இப்படிச் செய்வது தேவையாக இருக்கலாம். நமது ஆண்டிப்பட்டிக்கும், அருப்புக்கோட்டைக்கும் இது தேவைதானா? ஸ்பீல்பெர்க் தன் பெயரைத் தமிழிலும் திரையிட்டுக்கொள்கிறாரா? வினாக்கள் முடிவின்றித் தொடர்கின்றன. விடையளிக்கத் தான் இங்கே யாருமில்லை. படத்தின் பெயர் ஆங்கிலம், படத்தில் பங்கு பெறுவோரின் பெயர்களில் ஆங்கிலம், உரையாடல்களில் ஆங்கிலம், பாடல்களில் ஆங்கிலம். மொழிக்கும், பண்பாட்டிற்கும் எவ்வகையிலும் உதவி செய்யாத கதை மற்றும் காட்சிகள், இதுதான் இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் நிலை.

இதைத் தாண்டி தமிழ் இதழ்களின் பக்கம் போனால் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. தமிழைச் சிதைக்காமல் பாதுகாத்து வளர்க்க வேண்டிய பொறுப்பும் அக்கறையும் தென்மொழி, தென் செய்தி, முகம், யாதும் ஊரே, போனற சிற்றிதழ்களுக்கு மட்டுமே இருக்கவேண்டும் என்று இங்கேயுள்ள வெகு ஜன இதழ்கள் முடிவுகட்டி விட்டுச் செயல்பட்டுச் செய்திகளை வெளியிடுகின்றன. தமிழ்ப் பெயர் தாங்கிய இதழினுள் இடம்பெறும் செய்திகளின் தலைப்புகள் மட்டுமே ஆங்கிலத்தில் இருந்த நிலை மாறி இப்போது இதழ்களின் பெயர்களே ஆங்கிலத்திற்கு இடம் மாறிவிட்டன. ஒரு திரைப்படத்திற்கு ஆங்கிலப் பெயர் வைக்கப் பட்டுவிட்டால் அப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் ஒருவேளை தமது அடுத்தப் படத்திற்குத் தமிழ் பெயரைச் சூட்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தமிழ் இதழ் உலகிற்கு அந்த வாய்ப்பில்லை. ஆங்கிலப் பெயரில் ஒரு இதழைப் பதிவு செய்து, வாரமிருமுறை, வார, மாதமிருமுறை, மாத, அல்லது நாளிதழாக வெளியிட்டால் அந்த ஆங்கில்ப் பெயர் அந்த இதழ் நின்று போகும் நாள் வரை தனக்குரிய நாளில் தொடர்ந்து வெளி வந்து கொண்டேயிருக்கும். அதாவது ஆங்கிலத்தைப் பறை சாற்றிக் கொண்டே இருக்கும். தேவையில்லாமல் ஒரு மண்ணில் இன்னொரு மொழியை நிலை நிறுத்தி நிரந்தரப் படுத்துகிற வேலை இது. தழிழருக்காக தமிழில் செய்திகளை வெளியிடும் ஒரு இதழ் தன் பெயரை மட்டும் ஆங்கிலத்தில் சூட்டிக்கொள்வது எந்த வகையில் தமிழுக்கு பயன் அளிக்கும்? தொலைக்காட்சி, திரைப்படம், வானொலி போன்றவை பார்க்கப்படுகிற, கேட்கப்படுகிற ஊடகங்கள். அவற்றை நெறிமுறைப் படுத்தும் விதமாக குறைகளை சுட்டிக் காட்டும் பொருப்பில் இருக்கும் இதழ்கள், அதாவது ‘படிக்கப்படுகிற’ இதழ்கள் பாதை மாறி போவது தான் மொழிச் சிதைவின் உச்சக்கட்டம்.

அனைத்து விதமான ஊடகங்களும் நமது தாய்மொழியை போற்றிப் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கேலிக்கும், கேள்விக்குமுரிய ஒன்றாகிவிட்டது. இப்போது நம் எதிர்பார்ப்பு சுருங்கிக் கிடக்கிறது. தமிழகத்தின் ஊடகங்கள், தமிழுக்கென்று எதையும் செய்ய வேண்டாம், அதை கொன்று கூறு போடாமல் இருந்தால், அதுவே போதுமானது.

- ஜெயபாஸ்கரன் ( [email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com