Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

அலைவாய்க்கரையில் இளமையின் எழுச்சி
(சுனாமி நிவாரணப்பணிகளில் வாலிபர் சங்கம்)
ஒரு பதிவு

கண்ணன்
திருவேட்டை
ரமேஷ்பாபு
செந்தில்
ச. தமிழ்ச்செல்வன்


3. இயக்கம் களம் இறங்கியபோது. . .

வாலிபர் சங்கத்தின் மாநிலத்தலைவர்கள் எஸ்.கே. மகேந்திரன், கண்ணன், திருவேட்டை, ரமேஷ்பாபு, செந்தில்பாபு போன்ற தோழர்கள் சென்னை துவங்கி நாகை வரையிலான சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 26ஆம் தேதி மாலையே நேரில் சென்று நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு சிதறிக் கிடந்த கிராமங்களின் கதறல்களைக் கேட்டுக் கனத்த இதயங்களோடு திரும்பினர். உடனே நிவாரணப் பணிகளுக்குத் திட்டமிட்டனர். அப்போது தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் எய்ட்-இந்தியா தொண்டு நிறுவனமும் வாலிபர் சங்கத்தைத் தொடர்பு கொண்டு அனைவரும் சேர்ந்து பணியாற்றலாம் என்றனர். ஆகவே வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம், எய்ட்-இந்தியா ஆகிய அமைப்புகள் கரம் கோர்த்து ஒருங்கிணைந்து களத்தில் இறங்கத் தீர்மானிக்கப்பட்டது.

Tsunami affected area தமிழகம் முழுவதிலுமிருந்து வாலிபர் சங்கத் தோழர்களைத் திரட்டி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பமாறு. தொலைபேசித் தகவல்கள் பறந்தன. காத்திருந்த நமது பட்டாளம் புறப்பட்டது. மதுரை மாநகர், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 150 தோழர்கள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு விரைந்தனர். வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் தோழர் திருவேட்டை, தோழர் சாமுவேல்ராஜ் தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் லெனின், பட்டாபி, முத்துராஜ், முருகன், ஸ்டாலின், இரவீந்திரன், கன்னியாகுமரி கண்ணன், ராஜ்குமார் ஆகியோர் குமரி மாவட்டத்தில் முழுமையாகத் தங்கியிருந்து பணியாற்றினர். நிவாரணப் பணிகளை வழி நடத்தினர். குமரி மாவட்டத்தில் புத்தளத்திலும் குளச்சலிலுமாக இரண்டு முகாம்களை வாலிபர் சங்கம் அமைத்து குளச்சல், கொட்டில்பாடு, சைமன் காலனி, பெரிய நாயகி காலனி, வாணியக்குடி, கோடிமுனை, மேல மணக்குடி, கீழ மணக்குடி, வீரபாகுபதி, அழிக்கால் பிள்ளைத்தோப்பு, சொத்தைவிளை ஆகிய கிராமங்களில் தோழர்கள் பணியாற்றினர்.

பிற மாவட்டங்களிலிருந்து வாலிபர்களும் மாணவர்களும் மாதர்களும் நாகை, கடலூர் பகுதிகளுக்கு விரைந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் கிள்ளையை மையமாகக்கொண்டு முழுக்குத்துறை, எம்.ஜி.ஆர். திட்டு, முடசல் ஓடை, நடுமுடசல் ஓடை, கண்ணகி நகர், பில்லுமேடு, பில்லுமேடு மேற்கு, சின்னவளையம், கூழையாறு, கலைஞர் நகர் ஆகிய கிராமங்களிலும் பஞ்சங்குப்பத்தை மையமாகக் கொண்டு புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னூர், சின்னூர் மேற்கு, இந்திரா நகர், வேளிங்கராயன்பட்டினம் ஆகிய கிராமங்களிலும் ரெட்டியார் பேட்டையை மையமாகக் கொண்டு சித்திரப்பேட்டை, பேட்டோபேட்டை, நாயகன் பேட்டை, தம்மனம் பேட்டை, ரெட்டியார்பெட்டை, அன்னப்பம் பேட்டை, அஞ்சலிங்கம்பேட்டை, குமாரம்பேட்டை, மடவாபள்ளம், ஐய்யம்பேட்டை ஆகிய கிராமங்களிலும் வாலிபசேனை களத்திலிறங்கியது. கடலூர் மாவட்டப் பணிகளுக்கு வாலிபர் சங்க மாநிலத்தலைவர் எஸ்.கண்ணன் பொறுப்பேற்றார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகையை மையமாகக் கொண்டு நம்பியார்நகர், காடம்பாடி, பேட்டை, சாமந்தான்பேட்டை, பால்பண்ணைச்சேரி ஆகிய பகுதிகளிலும், வடக்கு பொய்கை நல்லூரை மையமாகக்கொண்டு கல்லார், வடக்கு பொய்கை நல்லூர், தெற்கு பொய்கை நல்லூர், வீரன்குடிகாடு, மாத்தங்காடு, காரைகுளம் ஆகிய கிராமங்களிலும் காமேஸ்வரத்தை மையமாகக் கொண்டு செருதூர், பி.ஆர்.புரம், வைரவன்காடு, காமேஸ்வரம் மீனவர்காலனி, விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரன் இருப்பு ஆகிய கிராமங்களிலும் வேதாரண்யத்தை மையமாகக் கொண்டு புஷ்பவனம், மணியந்தீவு, ஆற்காட்டுத்துறை, பனையன்காடு, வெள்ளப்பள்ளம், வானவன்மாதேவி ஆகிய கிராமங்களிலும் திருக்கடையூரை மையமாகக் கொண்டு சின்னங்குடி, சின்னமேடு, குமாரகுடி, தாழம்பேட்டை, வேப்பஞ்சேரி, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை ஆகிய கிராமங்களிலும் பொறையாரை மையமாகக் கொண்டு வெள்ளக்கோயில், குட்டியாண்டியூர், கேசவன்பாளையம், சந்திரப்பாடி ஆகிய கிராமங்களிலும் வாலிபர் சங்கத்தோழர்கள் களம் இறங்கினர். நாகை மாவட்டப் பணிகளுக்கு தோழர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற தோழர்கள் மாதக்கணக்கில் அங்கு தங்கியிருந்து பணியாற்றியது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தியாகும். களத்தில் நிற்கும் தலைமையாக வாலிபர் சங்கத் தோழர்கள் இருந்தனர்.

குமரி,கடலூர்,நாகை மாவட்டங்களில் மட்டும் சுனாமி அலை வீசிய முதல் 15 நாட்களில் மட்டும் வாலிபர் சங்கத்தோழர்கள் 1200 பேர் களத்தில் நின்று தங்கியிருந்து அரும்பணியாற்றியுள்ளனர். வாலிபர் சங்க வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயம்.

Tsunami tragedy இதுபோக வடசென்னைத்தோழர்கள் பாதிக்கப்பட்ட ராயபுரம் பகுதியிலும் விழுப்புரம் மாவட்டத் தோழர்கள் கூனிமேடு பகுதியிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தோழர்கள் கல்பாக்கத்தில் உள்ள உய்யாளிக்குப்பம், புதுப்பட்டினம்குப்பம் ஆகிய பகுதிகளிலும் நேரடியாகக் களத்தில் நின்று பணியாற்றினர். பாண்டிச்சேரித் தோழர்கள் இரண்டு கிராமங்களை முழுமையாக தத்து எடுத்துக் கொண்டு பணியாற்றினர்.

தமிழகம் முழுவதுமே பணமாகவும் பொருட்களாகவும் வாலிபர் சங்கத் தோழர்கள் ஏராளமாக மக்களிடம் வசூல் செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் சங்கம் எங்கேயுமே பழைய துணிகளை வாங்கி அனுப்பவில்லை. குஜராத் பூகம்பத்தின் போது பணியாற்றிய அனுபவம் வாலிபர் சங்கத்துக்கு இருந்ததால் பழைய துணிகளை ஆரம்பத்திலிருந்தே தவிர்த்தது. பிறர் அனுப்பிய பழைய துணிகள் தொடுவாரின்றி ரோட்டோரங்களில் பல மாதங்களுக்கு மலையாகக் குவிந்து கிடந்தது.

மக்களுக்குத் தொண்டாற்றும் தனிப்பட்ட தோழர்களின் ஆழ்மன உந்துதலும் செயல் வேகமும் அமைப்பினால் முறைப்படுத்தப்பட்டுக் களத்தில் இறக்கப்பட்டபோது மனித உழைப்பு சிந்தாமல் சிதறாமல் முழுமையாகப் பயன்பட்டதோடு எங்கே எது தேவையோ அங்கே அது உடனே சென்றது. தவறுகள் உடனே களையப்பட்டன. சோர்வு அவ்வப்போது நீக்கப்பட்டது. அன்றாடம் வேலைப் பரிசீலனை நடைபெற்றது. நாளுக்கு நாள் வேலை முறைகளில் தெளிவும் நிதானமும் கூடியது. அதுதானே நிறுவனத்தின் பலம்.

முந்தைய அத்தியாயம்அடுத்த அத்தியாயம்

- ச. தமிழ்ச்செல்வன்([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com