Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

மழை மனிதர்கள்
பவா செல்லத்துரை

மரங்களடர்ந்த கேரள போர்ட் கொச்சின் பகுதியில், வியாபித்திருக்கும் அந்த பழமையான ஆலமரத்திற்கு ஒவ்வொரு வருடமும் அங்குள்ள கலைஞர்களும், ஓவியர்களும் எடுக்கும் விழாவிற்கு நான் தொடர்ந்து இருமுறை பயணித்திருக்கிறேன். பரந்து விரிந்து பயமூட்டும் தன்மையோடு நிற்கும் நூறு வருடத்திற்கும் மேற்பட்ட அந்த அரசமரத்தை அவர்கள் ‘அம்மச்சி மரம்’ என்று வாஞ்சையோடு அழைக்கிறார்கள். தன் அம்மச்சியின் மடியில் அமர்ந்து அதன் பேரக்குழந்தைகள் எடுக்கும் விழா அலாதியானது. நினைவில் உதிரும் மனிதர்களுக்கிடையே சில அபூர்வமான மனிதர்களையும், கலைஞர்களையும் அவர்களிடையேயான உரையாடல்களையும் ஒரு புள்ளியாக்கி எனக்குள் எப்போதும் பாதுகாத்திருக்கிறேன்.

Valsan காஷி ஆர்ட் கபே என பெயரிடப்பட்ட அந்த சின்னஞ்சிறு அரங்கின் சிவப்பு டெரகோட்டா பதிக்கப்பட்ட தரையில் அங்கங்கே பல நாடுகளிலிருந்து வந்திருந்த வாசகர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் உட்கார்ந்திருக்கிறார்கள். புகைப்பதற்கும், குடிப்பதற்குமான முழு சுதந்திரம் அந்த அறை முழுவதும் பரவியிருந்தது. அப்போதுதான் பறிக்கப்பட்ட புத்தம் புதிய பூக்களால் நிரம்பிய செம்பு உருளிகள் அங்கங்கே நம் மனதை ஒருமைப்படுத்துகிறது. நிசப்தம் ஓர் அரூபமாக அங்கே தங்கியிருக்கிறது. கவனிக்கப்படாத தாடியும், அழுக்கடைந்த ஜிப்பாவுமாக ஐம்பது வயதைக் கடந்த ஒருவர் இச்சூழலின் மீது எவ்வித அக்கறையுமற்று கையில் பிடித்திருந்த ஒரு கிரையான் பென்சிலால் அந்த வெள்ளை சுவற்றில் கிறுக்கிக் கொண்டிருந்தார். அவர் தன் கை லாவகத்துக்கு எடுத்துக் கொண்ட அளவு அந்த சுவற்றின் நீள அகலம் முழுவதையும்.

உலக வர்த்தக மைய நொறுங்கலின் சத்தத்தை சில மைல்களுக்கு அப்பாலிருந்து கேட்ட, கட்டிட இடிபாட்டை பயந்து நடுங்கிய உடலசைவில் உணர்ந்த ஒரு அமெரிக்க பெண் கவிஞர் அதைப்பற்றிய தன் மன சித்தரிப்பை கவிதையாக்கி அந்த அரங்கில் அன்று வாசித்துக் கொண்டிருந்தார். மொழி விலகல் காரணமாக நான் அதில் கவனமின்றி இருந்தேன். அசுரத்தனமாக இயங்கிய அந்த ஓவியனின் கை வேகத்தை மீறி என் மனம் நகரவில்லை. ஒரு மணி நேரத்துக்குள் வரைந்து முடிக்கப்பட்ட அச் சுவரோவியம் ஒரு பாரம்பரிய வெங்கல உருளி. முற்றிலும் கிரையானில் நிரப்பப்பட்டிருந்த அதன் வசீகரம் அங்கிருந்த யாவரையும் ஒரு வெளிச்சம் போல் இழுத்தது. அங்கிருந்த வெளிநாட்டுக்காரர்கள் அந்த ஓவியனை அணைத்து முத்தம் தந்து தங்கள் அன்பைச் சொன்னார்கள். அதில் துளியும் ஆர்வமற்றவனாக அங்கிருந்து வெளியேறி ஒரு மர இருட்டில் நின்று தன் சிகரெட்டினுள் அடைக்கப்பட்ட புகையிலை துகளை வெளியே எடுத்து, அதுனுள், தான் மடித்து வைத்துள்ள காகித்தத்திலிருந்து எடுக்கப்பட்ட துகளை நிரப்பி நிதானமாக புகைக்கத் துவங்கிய நிமிடத்தில் நான் வல்சனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டேன்.

ஒரு புன்னகையால் அதை அங்கீகரித்த வல்சன், நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருப்பதில் பெரும் உவகை கொண்டு சந்ரு மாஸ்டர் தெரியுமா? ட்ராஸ்கி மருது அறிமுகமா? என விசாரிக்கும் போதே அவர் கை அழுத்தத்தின் நெகிழ்வை உணரமுடிந்தது.

‘வல்சன்’ என்று கேரளக் கலைஞர்களால் அன்புடன் அழைக்கப்டும் ‘வல்சன் கூர்ம கொல்லேரி’ தன் நுண்கலை படிப்பை சென்னை ஓவியக் கல்லூரிலும், தன் முதுகலை படிப்பை பரோடா நுண்கலைக் கல்லூரியிலும் தொடர்ந்திருக்கிறார்.

ஒரு முறை வல்சனை திருவண்ணாமலைக்கு அழைக்க வேண்டுமென்ற என் ஆர்வம் ஒரு தொலைபேசி உரையாடலிலேயே நிறைந்தது. நான் அழைத்த அன்றே அவர் கொச்சியிலிருந்து புறப்பட்டார். எப்போதும் போல் ஒரு இலக்கிய நிகழ்விற்கான தயாரிப்பு வேலைகளில் நாங்கள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த மழை நாட்கள் அது. ஒரு யாத்ரீகன் மாதிரி என் வீட்டுக்குள் நுழைந்து, தான் தங்குவதற்கான ஒரு இடத்தை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டார். தன் கையோடு கொண்டு வந்திருந்த சில புகைப்படங்களை எங்களுக்கு காட்சிப்படுத்தினார். எங்கள் வியத்தலை இதுவெல்லாம் ஒன்றுமில்லையென கூச்சப்பட்டார்.

ஒரு கவிதா நிகழ்வு மேடைக்கு முன் வீணை போன்ற வடிவத்தில் வைக்கப்பட்டிருந்த சுடுமண் சிற்ப பானையில் வண்ணப் பூக்கள் நிரம்பி ததும்பும் அழகில் நான் நீண்ட நேரம் மூழ்கியிருந்ததை கவனித்த வல்சன், ‘இது ஒன்றுமில்லை பவா, ரெண்டு பெரிய பானைகள் வாங்கி வா’ என சொல்ல அடுத்த பத்தாவது நிமிடத்தில் அது சாத்தியப்பட்டது. பானையின் வாய்ப்பகுதியில் குறுக்காக ஒரு ஆக்சே பிளேடால் அறுக்க ஆரம்பித்தார். சுமார் இரண்டு மணி நேரம் அறுதெடுத்தப்பிறகு பானை இரண்டாக பிளந்தது. சிதைவில்லாமல் கிடைத்த ஒரு படைத்தலில் மகிழ்வுற்று, ஒரு கறுப்பு காப்பியும், தன் பிரத்யேக சிகெரட்டையும் உள்ளிழுத்து, பிளக்கப்பட்ட பானைகளை எதிர் எதிரே ஒன்று சேர்த்து தேங்காய் நார்க் கயிற்றால் பிணைத்தார். ஒரு படுத்திருக்கும் வீணை. அதன் குழி பாகத்தில் தண்ணீர் நிரப்பி பூக்கள் நிரப்பி முற்றத்தில் வைத்து அழகுப்பார்த்தோம்.

இதை ஆரம்பம் முதல் அருகிலிருந்து கவனித்த என் நண்பர் ஒருவர், மிகுந்த மரியாதையோடும், லேசான பயந்தோடும் வல்சனிடம் ‘‘சார் இந்த பானையை அறுப்பதற்கு உங்களுக்கு இரண்டு மணி நேரமாகிறது - என்னால் மூன்று நிமிடத்தில் பழுதில்லாமல் அறுக்க முடியும்” என்று சொல்லிக் கொண்டே தன் கையோடு கொண்டுவந்திருந்த மின்சார அறுப்பானைக் கொண்டு ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இரண்டு பானைகளை அறுத்துக் காட்டினார்.

‘‘இது எனக்கு தோணாம போச்சோ’’ வென்று வல்சன் தன் தலையில் கைவைத்து சிரித்துக் கொண்டார். என் குழந்தைகளுக்கு வல்சன் அன்பான நண்பனாகி அவர் கூடவே ஒட்டிக்கிடந்தார்கள். நாங்கள் அப்போது நடத்திய இலக்கிய நிகழ்வில் இருபதுக்கும் மேற்பட்ட பிளக்கப்பட்ட பானைகளில் உருவான உருளிகளில் பூக்கள் நிறைந்தது. அந்த நிகழ்ச்சி நடந்த மைதானத்தை கட்டுகட்டாய் வாங்கிய மூங்கிலிலிருந்து பிரமாண்ட குடில் செய்து அழகுபடுத்தினார். இலக்கிய நிகழ்ச்சிக்கு வந்த குழந்தைகள் அதற்குள் விளையாடிக் கொண்டிருந்த அழகை விட அக் கூட்டம் பெரிதாய் எதையும் தந்துவிடவில்லை.

நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரத்திற்கும் மேல் எங்களுடனே தங்கியிருந்த நாட்கள் மீண்டும் கோரமுடியாதவைகள். பக்கத்திலிருந்த ஒரு குயவர் வீட்டிற்குப் போய், வல்சனே உருவாக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட மண்குவளைகள் இன்றும் அவரின் அடையாளங்களாக எங்களால் பயன்படுத்தப்படுகிறது.

வீட்டு பால்கனியில் மூங்கில்களைக் கொண்டு ஒரு உருவத்தை வடிவமைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அவர் கேட்டது 5 கட்டு மூங்கிலும், தான் சொல்கிறபடி அதை பல்கோண வடிவங்களில் பிளந்து கொடுப்பதற்கு ஒரு ஆளும், மூங்கில் கட்டுகளோடு எனக்கு தெரிந்த மூங்கில் கூடை முடையும் ஒரு குறப் பெண்ணையும் கூட்டி வந்தேன். மிகுந்த உற்சாகமடைந்த இருவரும் தங்கள் புதிய படைப்பை அன்று காலையிலேயே துவங்கினார்கள். முற்றுப் பெறாத தன் பணியினூடே அன்று மாலை என்னை அழைத்த வல்சன், ‘இந்த வேலை சலிப்பூட்டுகிறது பவா. இந்த பெண்தான் என் படைப்பின் இரகசியங்களை கண்டடைய விரும்புபவளாக இருக்கிறாள். எனக்கு ஒரு சைக்கிள் வேண்டும். இவளை பின்னால் உட்கார வைத்து ஊர் சுற்ற வேண்டும், மலை சுற்ற வேண்டும்....’ என ஒரு குழந்தையைப் போல குதூகலித்தார். ஒரு நாள் அறிமுகத்திலேயே அவரோடு பயணிப்பதற்கு அப் பெண்ணுக்கும் பேராவல் இருந்தது. அதன் பிறகான மூன்று நாட்களை அவரின்றி அல்லது அவர்களின்றி நாங்கள் நகர்த்தியிருந்தோம். அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை அறியும் ஆவல் எங்களுக்குள் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

மூன்றாவது நாள் மாலை வல்சன் மட்டும் அதே சைக்கிளில் உற்சாகம் குறைந்தவராக வந்து தன் பொருட்களை, துணிகளை எடுத்து வைத்து தான் புறப்படுவதாக சொன்னபோது என் பையன் அவரை தன்னோடு இன்னொரு நாள் இருக்க வேண்டுமென பிடிவாதம் பிடித்து கேட்டுக் கொண்டான். தோளில் மாட்டிய தன் உடமைகளை கீழறிக்கி வைத்து விட்டு தன் பயணத்தை ஒத்திப் போட்டு எங்களோடு பேசிக் கொண்டிருந்தார்.

மலை சுற்றும் வழியில் உள்ள ஒரு குளத்தைப் பார்த்தேன். சிங்கத்தின் வாய் பிளந்திருப்பது மாதிரி இருப்பதுதான் அதன் நுழைவாயில். (சிங்க முக தீர்த்த குளம்) புராதன அழகோடு கூடிய அதன் மீது யார் சுண்ணாம்பு அடித்து கெடுத்தது? என்ற கேள்விக்கு நான் மௌனமாக இருந்தேன். அடுத்த முறை என் திருவண்ணாமலைப் பயணம், அதன் மீதேறியிருக்கும் சுண்ணாம்பை அகற்றி அதன் பழமையை, அதன் புராதன அழகை மீட்டெடுப்பதுதான் என்று சொல்லி கேரள பாரம்பரிய புட்டு செய்து கொட்டாங்குச்சியில் கொடுத்தார். அரிசி புட்டில் பழமும், நெய்யும் கலந்து பிசைந்து உண்ணும் ருசி எனக்கு வல்சன் ஏற்படுத்தியதுதான்.

எங்கிருக்கிறீர்கள் வல்சன்? மீண்டும் எப்போது வருவீர்கள்?

சிங்க முக தீர்த்த குளம் இம் மழையில் நிறைவதற்குமுன், அந்த கூடைமுடியும் குறப்பெண் என்னைப் பார்க்கும் போதெல்லாம் ‘‘அந்த சார் எப்ப வருவார்ண்னே?’’ என்ற கேள்வி மங்கும் முன்.

- பவா செல்லத்துரை ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com