Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

மதங்கள் பற்றி பாரதியின் பார்வை
வாலாசா வல்லவன்


பாரதி ஒரு மதவாதி என்பது அனைவரும் அறிந்த செய்தி. பொதுவாக அவர் எல்லா மதங்களையும் சமமாக மதித்தார் என்று பாரதியையை பற்றிய நூல் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் கூறியுள்ளனர். ஆனால், அது உண்மையா? இல்லையா? என்பதைப் பற்றி இங்கு காண்போம்.

பாரதியின் பார்வையில் இந்துமதம் ஒன்றுதான் உலகிலேயே உயர்ந்த மதம், மற்றவையெல்லாம் தாழ்வான மதங்களே. முதலில் பௌத்த மதம் குறித்துப் பாரதியின் கருத்துகளைப் பார்ப்போம்:

“யாகங்களே பெரும்பாலும் பசுவதைகளும், குதிரைக்கொலைகளும், ஆட்டுக் கொலைகளும் முக்கியமாகப் பாராட்டிய கொலைச் சடங்குகள். இவ்விதமான கொலைகளைச் செய்தல் மோஷத்துக்கு வழி என்ற போலி வைதிகரைப் பழிசூட்டி அந்தக் கொலைச் சடங்குகளால் மனிதன் நரகத்துக்குத்தான் போவான் என்பதை நிலைநாட்டிய புத்த பகவானும், அவருடைய மதத்தைத் தழுவிய அரசர்களும், இந்தியாவில் யாகத் தொழிலுக்கு மிகவும் இகழ்ச்சி ஏற்படுத்தி விட்டார்கள். அந்தத் தருணத்தில் புத்த மதத்தை வென்று ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட சங்கராச்சாரியார் அவதரித்தார். அவர் புத்தமதக் கருத்துகளைப் பெரும்பாலும் ருசி கண்டு சுவைத்துத் தம்முடைய வேதாந்தத்துக்கு ஆதாரங்களாகச் சேர்த்துக் கொண்டா... ... அவர் ஹிந்து தர்மத்துக்குச் செய்த பேருபகாரத்துக்காக ஹிந்துக்களிலே பெரும்பாலானோர் அவரைப் (ஆதிசங்கரனை) பரமசிவனுடைய அவதாரமாகக் கருதிப் போற்றினார்கள். (1)

பௌத்த மதமே துறவு நெறியை உலகில் புகுத்திற்று. அதற்கு முன் அங்கங்கே சில சில மனிதர் துறவிகளாகவும், சில சில இடங்களில் துறவிக் கூட்டத்தாராகவும், ஓரிரு இடங்களில் வல்லமை உடையவர்களாகவும் இருந்தனர். பௌத்த மதம் தான் எங்கு பார்த்தாலும் இந்தியாவை ஒரே சந்நியாசி வெள்ளமாக ஆக்கியது.

உலக வாழ்க்கையாகிய ஜகத்தின் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து அவர்களுக்குக் கீழே மற்ற உலகத்தை அடக்கி வைத்தது. உலகமெல்லாம் பொய்மயம் என்றும், துக்கமயம் என்றும் பிதற்றிக் கொண்டு வாழ்நாள் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி, மனித நாகரிகத்தை நாசஞ் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்தமதத்துக்கு உண்டு, அதை நல்லவேளையாக இந்தியா உதறித்தள்ளி விட்டது. பின்னிட்டு புத்த தருமத்தின் வாய்ப்பட்ட பர்மா முதலிய தேசங்களிலும் புத்தமதம் இங்ஙனமே மடத்தை வரம்பு மீறி உயர்த்தி மனித நாகரிகத்தை அழித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது.”

பாரதியார் பௌத்த மதத்தின் மீது எவ்வளவு வெறுப்புக் கொண்டிருந்தார் என்பதை இதன் மூலம் அறியலாம். 1912 ல் பகவத்கீதைக்கு முன்னுரை எழுதும்போது இக்கருத்தை அவர் எழுதியுள்ளார். பௌத்த மதத்துறவிகளை கொலைகள் செய்தே அழித்து ஒழித்த ஆதிசங்கரனைப் பாரதியார், சிவபெருமானின் அவதாரமாகவே காண்கிறார். சோவியத்தில் புரட்சி என்றால் கொலைகள், கொள்ளைகள் அதை ஏற்க முடியாது என்பவர், ஆதிசங்கரனின் கொலைகளை மட்டும் ஆதரிக்கக் காரணம் என்ன? பௌத்தத்தால் ஆட்டங்கண்ட நால்வருணத்தையும் பார்ப்பனர்களின் உயர்வையும், மீண்டும் புத்துயிர் பெறச் செய்தவன் ஆதிசங்கரன் என்பதால்தானோ?

அடுத்து இஸ்லாமிய மதத்தைப் பற்றி பாரதியின் கருத்துக்களைப் பார்ப்போம். இசுலாமியர்கள் பல மனைவியரை மணந்து கொள்வதையும், இசுலாமியப் பெண்கள் தலையின் மேல் முக்காடு துணி (கோஷா) போட்டுக் கொள்வதையும் ‘ரெயில்வே ஸ்தானம்’ என்ற கதையில் பாரதி நையாண்டி செய்கிறார். அவை வருமாறு “ஒருநாள் தென்காசி ரயில்வே ஸ்டேஷன் வெளிப்புறத்தில் பலர் உட்கார்ந்து கொண்டு இருந்ததாகவும், பாரதியார் அங்கு சென்றதாகவும், இரயில் வண்டி 1 மணி நேரம் தாமதமாக வருவதாகக் கூறினார்களாம். பாரதியார் தண்டவாளத்தின் ஒரமாச் சிறிது தூரம் சென்றாராம். அங்கு ஒரு மரத்தடியில் ஒரு முகமதிய கனவான் உட்கார்ந்திருக்கக் கண்டாராம். அவன் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வந்து கொண்டிருந்ததாம். தம்பி ஏன் அழுகிறார்? என்று பாரதியார் உருது மொழியில் அவனிடம் கேட்டதாகவும், அதற்கு அந்த முகமதிய வாலிபன் சொல்லியதாகப் பாரதி எழுதுகிறார்: எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் மக்களை விவாகம் செய்து கொள்ளலாமென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்... என் தந்தை லாட்டரி சீட்டு வாங்கினார். அதில் ஒரு கோடி ரூபாய் விழுந்தது. அதை வைத்து வியாபாரம் செய்து ஏழு கோடி பணம் சேர்த்தார்.

என் தந்தைக்கு நான் ஒரே மகன். எனக்கு 15 வயது ஆகும்போது என் தந்தை இறந்து விட்டார். அந்தச் சொத்து முழுவதும் எனக்கு வந்தது. என் வீட்டை மேற்பார்வை செய்ய என் சிறிய தகப்பனார் நியமிக்கப்பட்டிருந்தார். என் தந்தை இறக்கும் தருவாய்யில் என்னைப் பராமரித்து வரும் கடமையையும் அவருக்கே சார்த்தி விட்டுப் போனார். எனது சிறிய தகப்பனார் முதலாவது வேலையாக, தம்முடைய மூன்று குமாரத்திகளை எனக்கே மணம் புரிவித்தார். என் பிதா இறந்த இரண்டு வருஷங்களுக்குள்ளே மேற்படி விவாகம் நடைபெற்றது.

என் சிறிய தகப்பனாருக்கு ஆண் குழந்தை கிடையாது. மூன்று பெண் பிரஜைதான் அவருக்குண்டு. ஆகவே என்னுடைய சொத்து வெளிக்குடும்பங்களுக்கு போய்விடக் கூடாதென்று உத்தேசித்து அவர் இங்ஙனம் செய்தார். இந்த விவாகம் என் தாயாருக்குச் சம்மதமில்லை. என் தாயாருக்கு எனக்கு ஒரே பெண்ணைத்தான் மணம் புரிவிக்க வேண்டும் என்று எண்ணம். அதனால் சிறிய தகப்பனார் என்னை வேறு ஊருக்கு அழைத்துப் போய் என் தாயாருக்குத் தெரியாமல் அவருடைய மூன்று பெண்களையும் எனக்கு மணமுடித்து வைத்து விட்டார்.

சிறிது காலத்துக்கெல்லாம் என் தாயார் என் செய்கையால் ஏற்பட்ட துக்கத்தைப் பொறுக்க மாட்டாமலேயே உயிர் துறந்து விட்டாள். சிறிய தகப்பனார் இட்டதே என் வீட்டில் சட்டமாய் விட்டது...

இதனிடையே என்னுடைய மூன்று மனைவிகளால் நான் படும்பாடு சொல்லுந்தரமன்று. அதோ பார்த்தீர்களா? ஸ்டேஷனுக்குப் பக்கத்தின் முகம்மதிய ஸ்தீரிகள் உட்கார்ந்திருக்கும் கூட்டம் தெரிகிறதன்றோ? நடுவேயிருக்கும் மூன்று பேரும் என்னுடைய பத்தினிமார். சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக்கொருத்தியாக முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மன ஒற்றுமை இல்லை என்பது பிரத்யஷமாக விளங்கவில்லையா? இவர்களில் மூத்தவள் பெயர் ரோஷன். அவளுக்கு வயது இருபத்திரண்டு. அடுத்தவள் பெயர் குலாப் பீவி. அவளுக்கு வயது பத்தொன்பது. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷாபீவி. வயது பதினாறு. ரோஷனிடத்தில் நான் பேசினால் குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறார். குலாப்பிடம் வார்த்தைப் பேசுவது ஆயிஷாவுக்கு சம்மதமில்லை” (2)

பாரதியார் சுதேசமித்திரனில் மேற்கண்ட கற்பனைச் சித்திரத்தை 22.5.1920 இல் எழுதினார். இதை ஓர் உண்மைச் சம்பவம் போலவே பாரதி எழுதியிருக்கவே ஓர் இசுலாமியர் அதைப் படித்து விட்டு, பாரதியிடம் வந்து , ‘ரெயில்வே ஸ்தானம்’ என்றொரு கதை எழுதியிருந்தீர்களே, அது மெய்யாக நடந்த விஷயமா? வெறும் கற்பனைக் கதைதானா?” என்றார். “வெறும் கற்பனை” என்று நான் சொன்னேன். “என்ன கருத்துடன் எழுதினீர்” என்று கேட்டார் வந்தவர். இந்த ‘இரயிவே ஸ்தானம்’ கதையிலும் ஒரு தர்மக் கொள்கை இருக்கத்தான் செய்கிறது. ஒருவன் பல மாதரை மணம் புரிந்து கொண்டால் அதனின்றும் அவனுக்குக் கஷ்டம் தான் விளையும் என்பதும், விவாகத்தில் ஒருவன் இன்பம் காண வேண்டினால் அவன் ஒருத்தியை மணம் செய்து கொண்டு அவளிடம் மாறாத தீராத உண்மைக் காதல் செலுத்துவதே உபாயமாகுமென்பதும் மேற்படிக் கதையினால் குறிப்பிடப்படும் உண்மைகளாகும் என்றேன்.

அப்போது அந்த முஸ்லீம் நண்பர் “அந்தக் கதையில் பிழை இருக்கிறது” என்றார். “என்ன பிழை?” என்று கேட்டேன். “அக்கதையில் ஒரு முகமதியப் பிரபு மூன்று சகோதரிகளை மணம் செய்வதாக எழுதியிருந்தீர்கள். அப்படி சகோதரமான மூன்று பெண்(பாதகம்) ஆகக் கருதப்படுகிறது. தன் மனைவி உயிருடன் இருக்கும்போதே அவருடன் பிறந்த மற்ற ஸ்தீரியை ஒரு முஸ்லீம் மணம் புரிந்து கொள்ளக்கூடாதென்பதே எங்களுடைய சாத்திரங்களின் கொள்கை” என்று அந்த முகமதிய நண்பர் சொன்னார்.

இதைக் கேட்டவுடன் நான், “சரிதான் எனக்கு அந்த விஷயம் தெரியாது. மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் ஹிந்துக்களுக்குள்ளே உண்டாதலால் அது போல் முஹம்மதியர்களுக்குள்ளேயும் இருக்கலாமென்று நினைத்து அங்ஙனம் தவறாக எழுதி விட்டேன். எனவே அந்தக் கதாநாயகனாகிய முகம்மதியப் பிரபுவுக்கு அவனுடைய சிற்றப்பன் தான் தன் மூன்று குமாரத்திகளையும் மணம் புரிவித்தாரென்பதை மாற்றித் தன்னினத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மணம் புரிவித்தாரென்று திருத்தி வாசிக்கும்படி ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் எழுதி விடுகிறேன் என்றேன்” என்று பாரதி எழுதியுள்ளார். தன்னிடம் வந்தவரிடம் பாரதி, “உங்களுக்குள்ளே ஸ்தீரிகளை அந்தப்புரத்தில் மறைத்து வைப்பதாகிய கோஷா வழக்கம் எக்காலத்தில் ஏற்பட்டது?” என்று கேட்டார்.

அந்த முகம்மதிய நண்பர் “முகம்மது (ஸல்லல்லாஹிஅலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்திற்கு நெடுங்காலம் முன்னே இந்த வழக்கம் அரேபியாவில் இருந்து இடையே மாறிப்போய் விட்டது. பிறகு முகம்மது நபி அதை மீளவும் விதியாக்கினார்” என்றார்.

“அதிலே திருத்தங்கள் செய்யக்கூடாதா?” என்று பாரதி கேட்க, அந்த முஸ்லீம் நண்பர், “கூடாது. ஏனென்றால் முகமதுதான் கடைசி நபி. அவருடைய உத்தரவுகள் கடைசியான உத்திரவுகள். அவற்றை மாற்றுவதற்கு இடமில்லை” என்றார்.

பாரதியார் “தென் ஜில்லாக்களிலே தமிழ் பேசும் முஸ்லீம் (ராவுத்தர்)களுக்குளே கோஷா வழக்கம் காணப்படவில்லையே!” என்று கேட்டார்.... இப்படி பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே சென்றது. பாரதி கடைசியாகத் துருக்கி தேசத்தில் ஸ்தீர்களுக்குள்ளே பிரம்மாண்டமான விடுதலைக் கிளர்ச்சி நடந்து வருவதைப் பற்றியும், ‘கோஷா’ வழக்கத்தை ஒழித்து விட்டு கல்வி கேள்விகளில் தேர்ச்சியடைவதையும் கூறினார். வந்த முஸ்லீம் எனக்குத் தெரியாது என்று கூறிச் சென்றுவிட்டார், (3)

பாரதியார் அல்லாவைப் பற்றிப் பாடல் பாடியுள்ளாரே, அவரை எப்படி நீங்கள் குறை சொல்ல முடியும் எனச் சிலர் கேட்கலாம். 20.6.1920 இல் பாரதி கடயத்தில் இருந்தபோது சில இசுலாமியர்கள் பாரதியை அழைத்து பொட்டல்புதூரில் இசுலாம் மார்க்கம் குறித்து ஒரு சொற்பொழிவு நிகழ்த்தக் கூறினார்கள். அப்போதுதான் பாரதியார் அல்லா, அல்லா என்ற பாடலைப் பாடினார். நபிகள் நாயகத்தின் வரலாற்றை மிக விரிவாகவும் சிறப்பாகவும் பேசி முடிக்கும் தருவாயில், நபிகள் ஏன் ஏசுநாதரை ஒரு மகானாக, கடவுளின் அவதாரமாக ஏற்றுக் கொள்ளவில்லை? என்ற கேள்வியைக் கேட்டு விட்டுத்தான் வந்தார்.

இசுலாமியர்கள் தேசப்பற்று அற்றவர்கள் என்பது பாரதியின் கருத்து. இதை ‘இந்தியா’ ஏட்டில் ஒரு கருத்துப்படம் வெளியிட்டு பாரதி விளக்கியுள்ளார். மே 1, 1909 இல் இப்படம் வெளியிடப்பட்டது. (4)

கிறித்தவ மதத்தையும் பாரதி கடுமையாக விமர்சனம் செய்கிறார். இந்துமதத்தைப் புகழும் பாதிரிகளை மிக நல்லவர்கள் என்கிறார். இந்து மதத்தைக் குறை கூறும் பாதிரிகளை மூடப்பாதிரிகள் என்கிறார்.

“சென்னை கிருத்து கலாசாலையில் மில்லர் என்று ஒரு பாதிரி இருந்தார். அவர் நல்ல புத்திசாலி என்று பெயரெடுத்தவர். அவர் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுளின் அந்தர்யாமித் தன்மையை மற்ற எல்லா மதங்களைக் காட்டிலும் ஹிந்து மதத்திலேதான் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். சாதாரணப் பாதிரி கொஞ்சம் புத்திசாலியாகையால் இதைத் தெரிந்து கொண்டார்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில கிறிஸ்துவப் பாதிரிகள் தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்து போய் மஹத்தான அநாகரிக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மதத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்தைச் செய்வதாகச் சொல்லுகிறார்கள். ஹிந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்தீர்களை (முக்கியமாக அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல் நடத்துகிறார்கள். நம்முடைய ஜாதிப்பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களை எல்லாம் பூதக்கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.” (5)

இன்னும் ஒரு படி மேலே போய் பாரதியார், “கிறிஸ்தவ விவிலிய நூலில் வரும் தேவகுமாரன் என்பது வேறு யாருமல்ல; நம்முடைய சுப்ரமணியன் தான்” என்கிறார். ‘வேணு முதலி சரித்திரம்’ என்ற தலைப்பில் இதுகுறித்து அவர் எழுதுகிறார். “வேணு முதலி நேற்று மாலை இருபது, முப்பது கிறிஸ்துவப் புத்தகங்கள், துண்டுப் பத்திரிகைகள், குட்டிப் புஸ்தகங்கள் இவற்றையெல்லாம் ஒரு பெரிய மூட்டையாகக் கட்டிக் கொண்டு வந்து என் மேஜையின் மேலே எள்ளு போட இடமில்லாதபடி விரித்தான்... இதை இவன் ஏன் வாங்கினானென்று எனக்குத் தெரியவில்லை...

‘இவற்றை ஏன் வாங்கினாய்’ என்றேன்.

‘அத்தனையும் சேர்த்து ஒன்றரை ரூபாய்க்கு மேலே போகவில்லை’ என்றான்...

‘பாவமன்னிப்பு தொடர்பான புத்தகங்கள் இனாமாக வாங்கினேன் அறியவும்’ என்றான். நான் புன்னைகை செய்தேன். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற குறளை எடுத்துச் சொன்னேன்.

வேணுமுதலி சொல்கிறான் : ‘காளிதாஸரே, நான் இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே வாங்கினேன்... இந்த யுத்தம் (முதல் உலகப்போர்) முடிந்தவுடன் நான் ஐரோப்பாவுக்குப் போவேன். அங்கே ஹிந்து தர்மத்தை நிலை நிறுத்தப் போகிறேன். ஆதனால் எனக்கு ஐரோப்பாவில் ஏற்கனவே வழங்கிவரும் மதத்தைப் பற்றி ஸம்பூர்ண ஞானம் இருக்க வேண்டுமென்று கருதி இவற்றை வாங்கினேன்’ என்றான். (6)

வேணுமுதலி, மார்க் எழுதின சுவிசேஷத்தில் பதிமூன்றாம் அதிகாரத்தைத் திருப்பி பின்வருமாறு வாசிக்கலானான். “யேசு சொல்லுகிறார்... அந்த நாட்களில் அந்த உபத்திரவத்திற்குப் பிறகு சூரியன் அந்தகாரப்படும். சந்திரன் ஒளி கொடாது. வானத்தின் நஷத்திரங்கள் விழும். வானங்களிலுள்ள சக்திகள் அசைக்கப்படும். அப்போது மனுஷ குமாரன் மிகுந்த வல்லமையோடும் மஹிமையோடும் மேகங்களின் மேல் வருவதை உலகத்தார் காண்பார்கள்’ என்று வாசித்து முடித்தான். பிறகு என்னை நோக்கி ‘காளிதாசரே இந்தக் கதையின் குறிப்பென்ன? மனுஷ குமாரன் யார்?’ என்று கேட்டான். ‘எனக்கொன்னும் சரியாக விளங்கவில்லை’ என்றேன்.

வேணுமுதலி சொல்கிறான்: “ஐரோப்பாவிலுள்ளவர்கள் வெளிப்படையாக அர்த்தம் சொல்லுகிறார்கள். யுக முடிவில் யேசுநாதர் வரப்போவதாகவும், அப்போது மேற்கண்ட உற்பாதங்களெல்லாம் நடக்குமென்றும் நினைக்கிறார்கள். நான் இதற்கெல்லாம் அத்யாத்மப் பொருள் சொல்லுகிறேன். கிறிஸ்து மதம் ஆசியாக் கண்டத்தில் உண்டானது. மதங்களே ஆசியாவில்தான் பிறந்தன. ஐரோப்பாவிற்கு ஞான சாஸ்திரம் ஏற்படுத்தத் தெரியாது. ஆசியாவிலிருந்து கொண்டு போன ஞான சாஸ்திரங்களை அவர்கள் நேரே அர்த்தந் தெரிந்து கொள்ளவில்லை. மேற்படி மார்க் எழுதின வசனங்களில் சொல்லியபடி மனுஷனுக்குள்ளேயே ஆத்மஞானத்தால் பிறப்போனாகிய குமாரதேவன் அதாவது ஸுப்ரமண்ய மூர்த்தியாகிய அக்னிதேவன் மனுஷ்யனுக்குள்ளேயே ஏழு லோகங்களும் இருக்கின்றன.

தேவர், அஸூரர், இராவுசர், சித்தர், நாகர், சாத்தியர், கின்னர், கிம்புருஷர், பூதப்ரேத, பிசாசூர், மனுஷ்ய மிருகபஷி முதலிய சகலமும் நம்முடைய அந்தக் காரணத்திலேயே உள்ளவையாகும். மேற்சொல்லிய யுத்தர்கள் பூமியதிர்ச்சிகள் முதலியன எல்லாம் அந்தக் காரணத்தினால் ஞான குருவாகிய ஸுப்ரமண்ய மூர்த்தி தோன்றி ஜீவன் முக்தியாகிய அமிர்த நிலையைக் கூட்டுவதற்கு முன்பு தனக்குள்ளே தோன்றும் பல உத்பாதங்களாகக் கருதப்படும். இதற்கெல்லாம் ஐரோப்பிய கிறிஸ்தவர் உட்பொருள் கொள்ளாமல் புறப்பொருள் கொள்வது அவர்களுடைய ஞான சாஸ்திர பரிச்சயக் குறைவைக் காட்டுகிறது.”

இதைக்கேட்டவுடன் பாரதி, “தனக்குச் சந்தோஷம் உண்டாயிற்று. தலைவலி எல்லாம் பறந்தோடி விட்டது” (7) என்கிறார். பாரதியின் ஆர்.எஸ்.எஸ். மூளை பைபிளை எப்படியெல்லாம் ஆய்கிறது பார்த்தீர்களா? மேற்கண்ட சான்றுகள் மூலம் பாரதிக்குப் புத்தமதம், கிருத்துவ மதம், இசுலாமிய மதம் முதலியவற்றின் வெறுப்பும், இந்து மதத்தின் மேல் அதிக விருப்பமும் இருந்தது என்பதை அறியலாம்.

அடிக்குறிப்பு

1. மகாகவி பாரதியின் பகவத் கீதை (உரைவிளக்கம்) நர்மதா பதிப்பகம், சென்னை 1995, ப.38,39
2. பாரதியார் கட்டுரைகள், ப.295-307
3. மேற்படி நூல், ப.74
4. பாரதியின் கருத்துப்படங்கள் (தொ.ஆ) இரா.வெங்கடாசலபதி, நர்மதா வெளியீடு, சென்னை, 1994, ப.119
5. பாரதியார் கட்டுரைகள், ப.82
6. மேற்படி நூல், ப.411
7. பாரதி புதையல் பெருந்திரட்டு (தொ.ஆ) ரா.அ.பத்மநாபன், வானதி பதிப்பகம், சென்னை 1982, ப.107, 100

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com