Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle

புலம்பெயர் இலக்கியம்- விவாதத்திற்கான புள்ளிகள்
ஆதவன் தீட்சண்யா

1.

புலம்பெயர் இலக்கியம் பற்றிப் பேசுவதற்கு முன்னிபந்தனையாக புலம் பெயர்ந்தவர்கள் குறித்துப் பேச வேண்டியுள்ளது. பொதுவாக ஒருவரது முன்னோர்/ சந்ததியினர் பிறந்து வளர்ந்த நிலப்பரப்பே அவருக்கு சொந்தமான புலம் எனப்படுகிறது. காலகாலமாய் ஒருவர் வாழ்ந்த மண்ணிலிருந்து சுயவிருப்பத்துடன் இன்னொரு இடத்திற்குப் பெயர்ந்து போகிறவரை நாம் புலம் பெயர்ந்தவராகக் கொள்ள முடியாது. இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்துப் பெற்ற பட்டங்களைக் காட்டி டாலரிலும் பவுண்ட்ஸிலும் பிச்சை எடுத்து கொழுப்பதற்காக/ செட்டில் ஆவதற்காக அயல்நாடுகளுக்கு ஏகியவர்களைப் பற்றி பேச இங்கொன்றுமில்லை. எனவே தமது வாழிடத்தில் தொடர்ந்து வாழமுடியாத அக,.புறவய நெருக்கடிக்காளாகி வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேறுகிறவரை/ வெளியேற்றப்படுகிறவரை புலம் பெயர்ந்தவராகக் கொள்ளலாம். இவர்களில், தத்தமது நாட்டுக்குள்ளேயே புலம் பெயர்ந்தவர்களை உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் என்றும், பிறநாடுகளுக்கு தப்பிப்போய் தஞ்சம் கோருகிறவர்களை அகதி/ஏதிலி என்றும் வகைப்படுத்தலாம். இப்படியாக புலம்பெயர்ந்து செல்வதை ‘மொழிபெயர் தேயம்’ எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் சுட்டுவதாக ஒரு குறிப்புண்டு.

நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு, கடும் வறட்சி, போதிய வளமின்மை போன்ற இயற்கைப் பேரழிவுகள், திரிபுகள் காரணமாக மக்கள் தமது வாழிடங்களை விட்டுப் பெயர்ந்து புதிய இடங்களை நோக்கி நகர்வது இன்றளவும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. கனிமச் சுரங்கங்கள், அணைக்கட்டுகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்பேட்டைகள், தங்க நாற்கரச் சாலை போன்ற வளர்ச்சித் திட்டங்களின்(?) பெயரால் மக்களை அவர்களது பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றி வேறு இடங்களில் குடியமர்த்துவதும் நின்றபாடில்லை. இதன்றி, குறிப்பிட்ட மதம், தேசியஇனம், மொழி, பிரதேசம், இயக்கம்/அரசியல் சார்ந்தவர் என்ற காரணத்திற்காக நிகழ்த்தப்படும் மனிதவுரிமை மீறல்கள், உயிர்வாழ்தல் மீதான அச்சுறுத்தல்கள்/ கலவரங்கள் காரணமாக மக்கள் கட்டாயமாக தமது வாழிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பல்வேறு காரணங்களுக்காக இடம் பெயர்ந்து தமது நாட்டுக்குள்ளேயே வேறு மாற்றிடங்களில் குடியமர்கிறவர்களை அல்லது அமர்த்தப்படுகிறவர்களை உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக வரையறுக்கிறது ஐ.நா.அவை. உலகின் பல்வேறு நாடுகளில் 20-25 மில்லியன் மக்கள் இவ்வாறு உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. போதிய இடவசதியற்ற - சுகாதாரக்கேடு மிகுந்த- தற்காலிகமான தகரக்கொட்டகைகளில் நிரந்தரமாக தங்கவைக்கப்படும் இம்மக்கள் அன்றாட உணவுக்காகவும், குடிநீருக்காகவும், மருத்துவத் தேவைகளுக்காகவும் அரசாங்கத்தின் கருணையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியவர்களாய் இருக்கின்றனர். உள்நாட்டு அரசாங்க நிவாரண முகாம்களில் தங்கியிருக்கின்ற இவர்கள் கல்வி பயில்வதிலிருந்தும் உற்பத்திசார் நடவடிக்கைகளிலிருந்தும் முற்றாக விலக்கிவைக்கப்பட்டுள்ளனர். சொந்த மண்ணிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்துநிற்கும் இவர்களது பாடுகள் குறித்துப் பேசும் இலக்கியப் படைப்புகள் எதுவுமிருக்கிறதா என்று தெரியவில்லை.

இவர்களன்றி, பஞ்சம் பிழைக்கவும் உயிர் வாழ்வதற்கான குறைந்தபட்ச வருவாயைத் தேடியும் பெருநகரங்களை நோக்கி அன்றாடம் இடம்பெயர்கிற கோடிக்கணக்கானவர்கள் எந்த வகைப்பாட்டுக்குள்ளும் வருவதில்லை. மும்பை, பெங்களூர், திருப்பூர் போன்ற நகரங்களை நோக்கிய இடப்பெயர்வை இவ்வகையில் சேர்க்கலாம். இவர்களில் பெரும்பாலானவர்கள் சமூக அரசியல் பொருளாதாரத் தளங்களில் வலுவற்றவர்கள். இவ்வாறான இடப்பெயர்ச்சிகள் ஒட்டுமொத்தமாக கூட்டுமுடிவின் அடிப்படையில் அமையாமல் தனிப்பட்ட குடும்பங்களின் தன்னிச்சையான முடிவாக- தலைவிதியாக கருதப்படுவதால் அவர்கள் தம் மண்ணைவிட்டு வெளியேறுவதற்கான நெருக்கடியை ஒரு அரசியல் நிகழ்வாக எப்போதும் மதிப்பிடுவதில்லை. நகர்ப்புறங்களின் உதிரிப்பாட்டாளிகளாக- குறைந்தகூலி உழைப்பாளிகளாக வந்து குவியும் இவர்களைப் பொருட்படுத்திய சமூக, பண்பாட்டு, அரசியல் இயக்கங்களை எதுவொன்றையும் சுட்டவியலாத நிலையே உள்ளது.

2.

இடப்பெயர்வு அல்லது புலப்பெயர்வு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே தமிழ்ச்சமூகத்திற்குள் நிகழ்ந்துவரக் கூடியது தான். ஆளுகைப்பரப்பை விரிவுபடுத்தும் நோக்கோடு மன்னர்கள் சென்றவிடமெல்லாம் சேர்த்திழுத்துச் செல்லப்பட்ட வீரர்கள், கலைஞர்கள் மட்டுமல்லாது அந்தபுர மகளிரும் வெற்றிக்கும் தோல்விக்கும் விலையாக விடப்பட்ட அவலமெல்லாம் வரலாறாய் இருக்கிறது நம்முன்னே. இன்னும் ராச பெருவழிப் பாதைகளில் உலகம் முழுதும் வாணிபம் செய்யக் கிளம்பி திரும்பி வராதவர் பலருண்டு. திரைகடலோடி திரவியம் தேடப்போய் வியட்நாம், இந்தோனேஷியா, பர்மா, மணிப்பூர் என்று ஆங்காங்கே குடியேறியவர்களுமுண்டு. அடிமை வியாபாரம் செழித்து வளர்ந்திருந்த இந்தியச் சமூகத்தில் இடம்பெயர்க்கப்பட்ட அடிமைகள் இப்போது எங்கு என்னவாக இருக்கிறார்கள் அல்லது இருப்பார்கள் என்பதும்கூட இங்கு தேவையற்ற விவாதமாயிருக்கிறது. இந்திய ஆளுகைக்குட்பட்ட அந்தமான் தீவுகளுக்கு தமிழர்கள் எங்ஙனம் போய்ச் சேர்ந்தனர் என்பதும்கூட இங்கு பேசப்படுவதில்லை.

பிரிட்டிஷ், பிரான்ஸ் ஆட்சியாளர்கள் இந்தியாவை அடிமைப்படுத்திய பிறகு, தமது ராணுவ, நிர்வாகத் தேவைகளுக்காகவும் தொழில் உருவாக்கத்திற்காகவும் எண்ணிறந்த இந்தியரை உள்நாட்டிலேயே இடம்பெயர வைத்தனர். ரயில்பாதைகள் அமைக்கவும் சுரங்கங்கள் அகழ்ந்திடவும் நீர்த்தேக்கங்கள் கட்டவும் பஞ்சாலைகளுக்காகவும் உள்ளூரில் மட்டுமன்றி அவர்கள் நாட்டின் பலபாகங்களிலிருந்தும் மக்களை இழுத்துவந்தனர். மலைப்பகுதிகளில் பெருந்தோட்டங்களை அமைக்கவும் விரிவாக்கம் செய்யவும் சமதளங்களிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டவர்களின் வாழ்நிலை எவ்வளவு துயரகரமானது என்பதை எரியும் பனிக்காடு நாவல் உயிர்பதறச் சொல்கிறது. மலைப்பாதையெங்கும் செத்து அழுகிக் கொண்டிருந்த இந்தியப் பிணங்களை எருவாக்கிக் கொண்டே இந்தியாவில் தேயிலை காப்பித் தோட்டங்கள் செழித்து வளர்ந்தன என்பதற்கு அந்த நாவல் ஒரு சாட்சி.

மலைகளையும் காடுகளையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பிரிட்டிஷார் அதன்பொருட்டு விரட்டியடித்த பழங்குடியினரின் எண்ணிக்கை எவ்வளவு என்பது யாருக்குத் தெரியும்? ஆனால் அத்தகைய விரட்டியடிப்புக்கு எதிராக நாடு முழுவதும் பழங்குடி மக்கள் நடத்திய வீரஞ்செறிந்தப் போராட்டங்களின் பதிவாக காட்டின் உரிமை, மனிதர்கள் விழிப்படையும்போது ஆகிய நாவல்கள் வெளிவந்துள்ளன.

காலனியாட்சியாளர்கள் இந்திய மக்களை தமது உள்நாட்டுத் தேவைகளுக்காக இடம் பெயர்த்து இழுத்துச் சென்றதோடு நில்லாது தமது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மலேயா, சிங்கப்பூர், பர்மா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் தீவுகளுக்கும் இழுத்துப் போயினர். இந்திய/தமிழ்ச்சமூகத்தின் சாதிய ஒடுக்குமுறைக்கும் அதன்வழியான பொருளாதாரச் சுரண்டலுக்கும் ஆளாகித் திணறிக் கொண்டிருந்த தலித்துகளே இவர்களில் பெரும்பாலானவர்கள். இக்கொடுமைகளிலிருந்து தப்பித்துவிடும் நப்பாசையில் தலித்துகளில் ஒருபகுதியினர் கப்பலேறியதாகவும் பெரும்பாலோர் பலவந்தமாகவே இழுத்துச் செல்லப்பட்டதாகவும் எண்ணற்றத் தரவுகள் தெரிவிக்கின்றன. கப்பல் போக்குவரத்திற்கு உகந்த தென்தமிழ்நாட்டில் சாதிக் கொடுமையாலும், கடும் பஞ்சங்களாலும் அலைக்கழிக்கப்பட்டு கேட்பாரற்றுக் கிடந்த இந்த அடித்தட்டு தமிழர்கள் பிடித்துச் செல்லப்பட்டு 1820ல் மலேயாவின் பினாங்கிலும், 1824ல் இலங்கையிலும், 1840களில் டிரினிடாட், கயானா, மொரிஷியஸ்சிலும், 1860களில் தென்னாப்பிரிக்காவின் நேடாலிலும் 1870களில் டச்சுக்காலனியான சுரிநாமிலும் 1879ல் பிஜியிலும் இறக்கிவிடப்பட்டனர்.

1874ல் தனது காலனியாக மாறிய பிஜித்தீவுக்கு 1879 முதல் 1916 வரை 87 கப்பல்களில் 65ஆயிரம் பேர் இவ்வாறு கொண்டு செல்லப்பட்டனர். ஐந்து ஆண்களுக்கு ஒரு பெண் என்ற வீதத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இவர்களிலிருந்து உருவாகித்தான் பிஜித்தீவு தமிழ்ச்சமுதாயம் இன்றளவும் உள்ளது. 840 தீவுகளின் தொகுப்பான பிஜியின் மொத்த மக்கள்தொகையில் 44 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். பிஜித்தீவின் கரும்புத்தோட்டங்களில் அவதியுறும் தமிழர்களை (எந்த சாதித் தமிழன்?) பாரதி பாடியதற்கு மேலாக அவர்களைப் பற்றிய இலக்கியப் பதிவு எதுவும் இருக்கிறதா தமிழில் என்று இனிதான் ஆராய வேண்டும்.

இன்றைய மலேய மக்கள் தொகையில் 10 சதம்பேர் (சுமார் 17 லட்சம்) தமிழர்களாக இருந்தபோதிலும் அவர்கள் அம்மண்ணில் இறங்கி 188 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அந்நாட்டின் மொத்த சொத்துமதிப்பில் 1.5 சதம் மட்டுமே அவர்களுக்குரியதாய் இருக்கிறது. புலம் பெயர் தமிழர் என்றதும் வரலாற்றுரீதியாய் உழைப்புச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளான இந்த மலேசியத் தமிழர்கள் நம்மில் ஒருவரது நினைவுக்கும் எட்டுவதில்லை என்பதே உண்மை. குறைந்த அல்லது நடுத்தர வருமானத்துடன் மலேயாவின் தோட்டப்புறங்களிலும் புறநகர்ப்பகுதிகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கிற இவர்களைப் பற்றிய இலக்கியப் பதிவுகள் தமிழ்மண்ணை எட்டியுள்ளனவா என்பதை இவ்விடம் நின்று கேட்டுக்கொள்வோம்.

‘தென்னிந்தியாவிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக வந்தவர்களில் தேர்ந்த புலவர்களோ செஞ்சொற் பாவலர்களோ இருந்ததில்லையென்றாலும் கல்லாமல் கவிபாடும் திறன்கொண்டிருந்த தோட்டத் தமிழர்களின் நாட்டுப்புறப் பாடல்களே மலேசியத் தமிழ் இலக்கியத்தின் மூத்த கலைச்செல்வங்களாக விளங்குகின்றன என்று சொல்வது மிகையாகாது...’ என்று முரசு நெடுமாறனால் விதந்து கூறப்படும் பாடல்கள் தொடங்கி ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி என்ற சமகாலப் படைப்பு வரை நாம் அறிந்தது சொற்பமே என்று ஒப்புக்கொள்வதே நேர்மையாகும்.

உலகமே வியக்கும் இன்றைய சிங்கப்பூரை உருவாக்கியவர்கள் நாங்களே என்று தமது கவிதைகள் மற்றும் நாடகங்களின் வழியே அறிவிக்கிறார் இளங்கோவன். சிங்கப்பூரிலியே பிறந்து வளர்ந்த தமிழரான இவரது படைப்புகள், அம்மண்ணில் தமது மூதாதையரின் உழைப்புக்கான பங்கினைக் கேட்பதாய் அமைந்துள்ளன. எனவே அவரது நாடக ஆக்கங்கள் அங்கே அரங்கேற அனுமதிக்கப்படுவதில்லை. புலம்பெயர் இலக்கியம் என்றதும் இவரும்கூட நமக்கு நினைவுக்கு வருவதில்லை. பணியின் நிமித்தம் தன்விருப்பத்தோடு அங்கு குடியேறியுள்ள ஜெயந்தி சங்கர் போன்றவர்களின் எழுத்துக்கள் இன்றைய சூழலுக்குள் பொருந்தி நிற்கிற தன்மை கொண்டவை. அவற்றை புலம்பெயர் இலக்கியமாய் கொள்ள முடியாது.

மோகன்சந்த் கரம்சந்த் காந்தியை ஒரு தேசத்தின் தந்தையாக வடிவெடுக்க வைத்தவர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்த தமிழர்கள் என்ற பெருமையைப் பேசினாலும், அவர்கள் எதற்காக அங்கு கொண்டு செல்லப்பட்டார்கள், அவர்களுக்கும் தமிழ்நாடு உரியதுதானே என்று நாம் நினைத்ததுமில்லை. காந்திக்கு தமிழ் கற்றுத் தந்த போராளி ரெட்டைமலை சீனிவாசன் அங்கேதான் இருந்தார் என்பதை கவனத்தில் நிறுத்துக.

3.

தனது இன்னொரு காலனி நாடான இலங்கையின் மலைப்பகுதிகளில் காப்பி, தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களை நிறுவுவதற்காக ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். 1824ல் முதலில் வந்திறங்கிய 16 குடும்பங்களோடு இந்த புலப்பெயர்வு தொடங்கியதாக கூறுகிறார் அந்தனி ஜீவா. 1930 வரையிலும் இந்த பெயர்வு முடிவற்றதாக இருந்தள்ளது. இவர்களில் பெரும்பாலானவர் இந்திய/ தமிழ்ச்சமூகத்தின் சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள் என்பதை சாரல்நாடன், கலாநிதி.க.அருணாசலம் ஆகியோர் தத்தமது நூல்களில் தெரிவிக்கின்றனர்.

சொந்த மண்ணிலிருந்து பெயர்த்தெடுத்து வரப்பட்ட இம்மக்கள் புதிய வாழிடமான- புகலிடத்திற்குள் பொருந்தமுடியாத தமது துயரங்களை பாடல்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். ‘அவர்கள் கண்டிச்சீமைக்கு கனவுகளுடன் வந்தனர். புலம் பெயர்த்தலுடன் அவர்கள் வாழ்க்கை ஆரம்பமாயிற்று. இன்றுவரை அவர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கி வந்துள்ளனர். இவையனைத்தையும் உயிர்த்துடிப்புடன் புலப்படுத்தும் உருக்கமான சொல்லோவியங்களாய் இப்பாடல்கள் அமைந்துள்ளன’ என்று பேராசிரியர் கைலாசபதி குறிப்பிடுகிறார். எஸ்.ஆர்.எஸ்.பெரியாம்பிள்ளை, பி.ஆர்.பெரியசாமி, மா.செ.ஜம்புலிங்கம், எஸ்.எஸ்.நாதன், ஜாபர், கந்தசாமி கணக்கப்பிள்ளை, எம்டன் ஏ.விஜயரட்ணம் போன்ற தொடக்ககால பாடகர்களை அடியொற்றி 1960களுக்குப் பின்னரும் வி.எஸ்.கோவிந்சாமித் தேவர், கா.சி.ரெங்கநாதன், நாவல்நகர் பீர்முகம்மது இப்ராகீம் போன்றவர்கள் மக்களிடையே விழிப்புணர்வு பாடல்களை பாடிவந்ததாக சாரல்நாடன் குறிப்பிடுகிறார். இவர்களில் சிலரது பாடல்கள் மலையக இலக்கியம்- தோற்றமும் வளர்ச்சியும் போன்ற நூல்களில் காணக்கிடைக்கின்றன. எஸ்.எம்.கிருஷ்ணம்மா (சீர்திருத்தக் கீதம்), எஸ்.பெரியக்கா (தொழிலாளியின் துயரம்) ஆகிய பெண் பாடலாசிரியர்களும் காத்திரமாக இயங்கியுள்ளனர்.

உயிருக்கு உத்திரவாதமற்றதாய் கடற்பயணம் இருந்ததை ‘பாய்க்கப்பல் ஏறியே வந்தோம்/ அந்நாள் பலபேர்கள் உயிரினை யிடைவழி தந்தோம்...’ என்னும் மீனாட்சியம்மையின் பாடல்வரிகளிலிருந்து அறியமுடிகிறது.

‘‘ஊரான ஊரிழந்தேன்/ ஒத்தப்பனை தோப்பிழந்தேன்/ பேரான கண்டியிலே/ பெத்தத் தாயை நான் மறந்தேன்... ’’

‘‘கோணகோண மலையேறி/ கோப்பிப்பழம் பறிக்கையிலே/ ஒத்தப்பழம் தப்பிச்சின்னு/ ஒதைச்சானையா சின்னத்துரை...’’

றப்பர் மரமானேன்/ நாலுபக்கம் வாதானேன்/ எரிக்க விறகுமானேன்/ இங்கிலீஷ்காரனுக்கு/ ஏறிக்போக காருமானேன்....

பஞ்சம் பொழைப்பதற்கு/ பாற்கடலைத் தாண்டிவந்தோம்/பஞ்சம் பொழைச்சு நம்ம/ பட்டனம் போய்ச் சேரலியே/ கப்பல் கடந்து/ கடல்தாண்டி இங்க வந்தோம்/ காலம் செழிச்சு நம்ம/ காணி போய்ச் சேரலியே....ஆகிய வரிகளிலிருந்து தமிழர்கள் பட்டத் துயரங்களும் ஊர்த்திரும்பும் ஏக்கத்தையும் உணர முடிகிறது.

இப்படி இலங்கைக்கப் போய் இன்னலுறுகிற ஒரு குடும்பத்தின் கதையாக புதுமைப்பித்தன் எழுதிய துன்பக்கேணியைத் தவிர தமிழகப் படைப்பாளிகள் எவரின் மனதும் இம்மக்களுக்காக கசியாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இலங்கையின் பெருந்தோட்டத் தொழில்களை கொழிக்கவைத்த மலையகத் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகள் சுதந்திரத்திற்குப் பின்னும் நீடித்தது. அவர்களது குடியுரிமை மறுக்கப்பட்டது. சிரிமாவோ/ சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் லட்சக்கணக்கானவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர். வாழிடங்களிலும் பணியிடங்களிலும் சிங்களர்களால் புறக்கணிக்கப்பட்டனர். வடக்கிலும் கிழக்கிலும் இருந்த இலங்கைத் தமிழர்கள், இவர்களோடு ஒட்டுறவு கொள்ளாமல் புறக்கணித்தனர். சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்துப் போராடிய இலங்கைத் தமிழரின் விடுதலை இயக்கங்களும்கூட இவர்களை பொருட்படுத்தவில்லை. புஸ்பராஜா போன்ற ஒருசிலரைத் தவிர மற்ற இயக்கவாதிகள் அங்கு களப்பணிகளுக்கு செல்லவில்லை.

அம்மலையக மக்களின் பாலும் அக்கறை கொண்ட காரணத்துக்காகவே ணிறிஸிலிதி என்ற அமைப்பின் சுருக்கத்திலுள்ள றிமீஷீஜீறீமீ என்பதைச் சுட்டும் றி, றிணீக்ஷீணீவீஹ்ணீக்ஷீ/ றிணீறீறீணீக்ஷீ என்று இழிவுபடுத்தப்பட்டதாகவும் செய்தியுண்டு. வாழ்வின் இத்தனைத் துயரங்களையும் அந்தந்த காலத்தின் பதிவாக வெளிப்படுத்தும் இலக்கியப் படைப்புகளும், நிகழ்கலைகளும் மலையக இலக்கியம் என்ற தனி வகைமையாக வளர்ச்சி கண்டுள்ளது. வாய்மொழிப் பாடல்கள் தொடங்கி கதை கவிதை கட்டுரை நாவல் நாடகம் என செழித்து நிற்கும் மலையக இலக்கியம் புலம்பெயர் இலக்கியமாக நமக்கு தோன்றாதிருக்கக் காரணம் என்ன? அவர்களில் பெரும்பாலோர் அடித்தட்டு சாதியினர் என்பதால் தன்னியல்பாக உருவாகியுள்ள புறக்கணிப்பு மனப்பான்மைதான் காரணம் என்று சொன்னால் அதை குறுகிய சாதியப் பார்வை என்று ஒதுக்கிவிடத் துணிபவர்கள் வேறு நியாயமான காரணங்களை முன்வைக்க வேண்டும்.

4.

தமிழின் புலம்பெயர் இலக்கியம் என்றதும் நமக்கு உடனடியாய் நினைவுக்கு வருவது இலங்கைத் தமிழர்களின் எழுத்துக்கள்தான். அதிலும் உக்கிரமான அந்த கவிதைகள்தான் உடனே நினைவுக்கு வருகின்றன. சிங்களப் பேரினவாதத்திற்குள் மூழ்கிப்போன அரச பயங்கரவாதம் தமிழ்மக்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்துள்ளது. ஜனநாயகவழிப்பட்ட கோரிக்கைகளுக்கான தமிழ்மக்களின் போராட்டம் தனிநாட்டிற்கான ஆயுதப் போராட்டமாக மாறிவிட்ட நிலையில் அங்கு தொடர்ந்து உயிர்வாழ முடியாமல் இலங்கைத் தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கும் குடிபெயர்ந்துள்ளனர். குடும்பங்களின் சிதைவு, உயிரிழப்பு, வாழ்வாதரங்களை இழந்த வெறுமை ஆகியவற்றினூடே 1983ல் தொடங்கிய இந்த புலப்பெயர்வில் தப்பிப்போவதற்கான வசதியும் வாய்ப்பும் பெற்றிருந்த மேட்டுக்குடியினரும் உயர் மத்தியதர வர்க்கத்தினரும் ஐரோப்பியநாடுகளுக்கும் கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் ஏதிலிகளாய் பெயர்ந்தனர். விமானம் ஏற வழியும் வசதியுமற்றவர்கள் தங்களது வாழ்நாள் சம்பாத்தியங்களை பணயம்வைத்து உயிர் பிழைத்தால் போதுமென்று ராமேஸ்வரம் கரையோரம் இன்றளவும் வந்து இறங்கிக் கொண்டுதானுள்ளனர்.

பிறந்த மண்ணின் நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்டும் புகலிடத்திற்குள் பொருந்த முடியாமலும் தத்தளிக்கிற முதல்தலைமுறையினரின் இலக்கிய வெளிப்பாடுகள் தன்னிரக்கம் கொண்டவையாய் வெளிப்பட்டாலும் அதன் துயரம் யாவருக்குமானது.

கோரப் பனிக்குளிரில்/ உதடுகள் வெடித்து உதிரம் கொட்ட/ உறக்கமிழந்த அந்த இரவில்/ இஸ்ரேலிய பவுண்களை எண்ணுகிறபோது/ உனது நினைவுகள் என்னை ஒலமிட்டு அழவைக்கும்/ எனக்கு இன்னும் ஞாபகமிருக்கு/ அப்போ எனக்கு 12 வயதிருக்கும்/ நம்வீட்டு முன்றிலிலே நான் தடுக்கி விழுந்து/ என்உதட்டின் மெல்லியதான கீறலுக்கே/ நீ ஓவென்று அழுதாயே/ இங்கே எனக்காய் அழுவதற்கு யாரிருக்கிறார்/ இந்த ஐரோப்பிய நாட்டில்/ அகதியாய் அநாதையாய்/ வெந்துபோகிறது மனது/ எப்போது என் நாட்டில்/ எப்போது என் வீட்டில்/ எப்போது உன் மடியில்?

முடிவுறாத போர்ச்சூழலில் ஒவ்வொரு கணத்தையும் ஆயதங்கள் மரணங்களினூடே கடக்க வேண்டிய நிலைக்கு தமிழ்ச்சமூகம் தள்ளப்பட்டுள்ளதையும், உயிர்பிழைத்தலின் பொருட்டு ஆளுக்கொரு திக்காய் தப்பியோடியதில் குடும்பமும் சிதைந்துவிட்ட அவலத்தையெண்ணி மருகும் இதயத்தை, தன்னிலையிலிருந்து விலகி ஒரு இனத்தின் துயரமாக மாறுவதை வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதையில் காணலாம்.

யாழ்நகரில் என் பையன்/ கொழும்பில் என் பொண்டாட்டி/ வன்னியில் என் தந்தை/ தள்ளாத வயதினிலே / தமிழ்நாட்டில் என் அம்மா/ சுற்றம் பிராங்பேட்டில்/ ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்/ நானோ வழிதவறி அலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகம்போல/ ஓஸ்லோவில்/ என்ன நம் குடும்பங்கள்/ காற்றில் / வழிக்குரங்கு கிழித்தெறியும்/ பஞ்சுத்தலையணையா?

குடும்பங்களையும் உள்ஆழ் விவகாரங்களையும் சுற்றி உழப்பியடித்துக் கொண்டிருந்த தமிழிலக்கியத்தின் உள்ளடக்கம், இலங்கைத் தமிழர்களின் படைப்புகளின் வரவால் திடுமென்ற அதிர்ச்சிக்குள்ளாகியது. முகத்துக்கு நேரே சீறிவரும் ஒரு குண்டை இயல்பாக பார்த்துக் கொண்டிருக்க முடியாததைப் போலவே இலங்கை தமிழ்ப் படைப்புகளை எளிதாக கடந்துவிட முடியாத நெருக்கடி உருவானது. உலகெங்கும் சிதறிக் கிடக்கும் இலங்கைத் தமிழர்கள் இப்படைப்புகள் வழியே தம்மையே கண்டனர். இலங்கையிலும் இந்தியாவிலும் உலகெங்கிலும் இலங்கைத் தமிழரின் படைப்புகளுக்கு ஒரு வாசகத்தளமும் அரசியல்தேவையும் சந்தை மதிப்பும் உருவானதையடுத்து (விதிவிலக்கான ஒருசிலவற்றைத் தவிர) ஊடகங்களும் பதிப்பகங்களும் புலம்பெயர் இலக்கியம் என்ற புதுவகைமையை முன்னிறுத்தத் தொடங்கின. நாடற்று அலைகிறவர்களின் துயரங்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல கிராக்கி ஏற்பட்டிருப்பதையடுத்து இந்த வியாபாரம் இப்போதைக்கு தொய்வின்றி நடந்துகொண்டிருக்கிறது.

போர்ச்சூழலிலிருந்து வெளியேறி கால்நூற்றாண்டு காலம் கழிந்துவிட்ட நிலையில் இன்னும் பதுங்குக்குழியிலிருந்து மேலெழுந்து வரமுடியாத மனநிலை கொண்ட ஒரு தலைமுறை புலம் பெயர்ந்தவர்களில் எஞ்சியிருக்கிறது. கண்டம்விட்டு கண்டம் தாவி வந்துவிட்டாலும் தன்நாட்டு நடப்புகளை உன்னிப்பாய் கவனித்துவருவதும் அங்கு சமாதானம் திரும்பவேண்டும் என்ற விழைவை வெளிப்படுத்துவதுமான வழிகளில் தமது பூர்விகத் தொடர்பை நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகின்றனர். ஒருவேளை, இலங்கையில் போர் ஓய்ந்து சமாதானம் திரும்புமானால், புகலிடத்திலிருந்து மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு எல்லோரும் தாயகம் திரும்பி வந்துவிடுவார்கள் என்பதல்ல இதன் பொருள்.

தாய்நாட்டுக்குத் திரும்பி எல்லாவற்றையும் சூனியத்திலிருந்து தொடங்குவதற்கு பதிலாக புகலிடத்தில் கிடைத்திருக்கும் வாழ்க்கையைத் தொடர்வதுதான் நடைமுறைச் சாத்தியம் கொண்டது என்பதில் தெளிவாயிருக்கின்றனர். தவிரவும் ஒரு ஐரோப்பிய நாட்டில் ‘செட்டில்’ ஆவதென்பது மூன்றாம் உலக நாடுகளிலுள்ள நடுத்தர வர்க்கத்தின் வாழ்நாள் லட்சியமாக இருக்கும்போது, ஐரோப்பாவில் இருக்கும் ஒரு இலங்கைத் தமிழர் கண்ணிவெடிகளால் நிறைந்துகிடக்கும் தன் தாயகம் திரும்புவதை எதன்பொருட்டு விரும்புவார்?

இனி இலங்கையின் நல்லதும் கெட்டதும் இலங்கையில் எஞ்சியிருப்பவர்களுக்கு மட்டுமே என்றாகிவிட்டது. தப்பிப்போக வழியும் வசதியுமற்ற அடித்தட்டு மக்களும், தனிஈழத்தை அடைந்தே தீர்வதென்ற அரசியல் நிலைப்பாட்டிலிருந்து போராடுகிறவர்களுமே இன்று இலங்கையில் எஞ்சியுள்ளனர். முன்பிலும் தீவிரமடைந்துவிட்ட போர்ச்சூழலை எதிர்கொண்டு வாழும் அச்சமூகமும் புலம் பெயர்ந்துவிட்ட இலங்கைத் தமிழர்களும் ஒரே அலைவரிசையில் இப்போதில்லை. இனம் மொழி நாடு போன்ற ஒப்புமை அடையாளங்களை மீறி இருதரப்புக்கும் முன்னுரிமைப் பட்டியலும் நிகழ்ச்சிநிரலும் வெவ்வெறாகிவிட்டன. எனவே, கால்நூற்றாண்டு காலத்திற்கு முன்பு நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் இன்னமும் தங்களது பூர்வீகம் பற்றி எழுதிக் கொண்டிருப்பதில் எரிச்சலடைந்த ஒருவர், ‘இன்னமும் எவ்வளவு காலத்திற்குத்தான் கேள்வி ஞானங்களையும், தம் முன்னைய அனுபவங்களையும் வைத்து எம்மவரின் தாங்கொணாதத் துயரங்களை புனைவுகளாகவும் கவிதைகளாகவும் வடித்து தமிழ்நாட்டின் ‘அப்லாசைப்’ பெறப்போகிறீர்கள்?’ என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

தன் நாட்டைப் பற்றிய ஞாபங்கங்களை ஒருவர் பகிர்ந்துகொள்வதும்கூட கேள்விக்குள்ளாகும் இன்றைய நாளில் புலம் பெயர் இலக்கியம் என்று எவற்றைக் குறிப்பிடுவது? புகலிடத்தின் தேவைகளுக்கு ஈடுகொடுத்து தன்னை தகவமைத்துக் கொள்கிற போராட்டத்தினூடே ஊர் பற்றிய ஞாபகங்களால் அலைக்கழிக்கப்படும் மனதின் வெளிப்பாடுகள் அனைத்தும் புலம் பெயர் இலக்கியமாக காலத்தின் முன்னே வைக்கப்பட்டாகிவிட்டதா? புகலிடத்தில் பொருந்துவதற்கும் பொருந்த முடியாமைக்குமிடையே அலைவுற்று வாதைகொள்ளும் மனதின் வெளிப்பாடுகளாக இப்போது புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கங்கள் மாற்றம் பெற்று புகலிட இலக்கியம் என்ற புதிய பரிமாணத்தை எட்டிவிட்டதா என்ற கேள்விகள் ஆய்வுக்குரியன.

புலம் பெயர்ந்து வந்ததின் சுவடுகள் தெரியாத புதியதலைமுறையினர் இலங்கைத்தமிழர் மத்தியில் உருவாகிவிட்டனர். புகலிடத்தைத் தாயகமாகக் கொண்ட அவர்களுக்கு இலங்கையுடனான தொடர்பு பெற்றோர் வழியானதேயன்றி உணர்வுப்பூர்வமானதல்ல. இலங்கைச் சூழலிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சமூகச்சூழல்களில் பிறந்து வளரும் இவர்களது கனவில் இலங்கை இருக்குமா? புலம் பெயர் இலக்கியம் என்பது, இன்னமும் இலங்கையிலிருக்கும் தமிழர்கள் எழுதுவதா அல்லது இலங்கையிலிருந்து 25 ஆண்டுகளுக்கு முன் வெளியேறியவர்கள் எழுதுவதா? புலம் பெயர் இலக்கியம் என்பதற்கு இடம் என்கிற நிலவியல்தன்மை மட்டுமே அடிப்படையா? இதில் மனநிலை ஏதும் பாத்திரம் வகிக்கிறதா? என்பதான கேள்விகளை எழுப்பவேண்டிய தருணம் இதுவே.

4.

Migrant's Writing சிங்களப் பேரினவாதத்தாலும் அரச பயங்கரவாதத்தாலும் இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த கொடுமைகளை உள்ளடக்கமாய் கொண்ட இலக்கியப் படைப்புகள் என்னவிதமான விளைவுகளை உருவாக்கியதோ அதற்கு சற்றும் குறையாதவையாக, போராளிக்குழுக்களில் இருந்து வெளியேறியவர்களின் படைப்புகளும் கவனம் பெற்றன. ஈழவிடுதலைப் பற்றி இலங்கைத் தமிழர்களைவிட இங்குள்ள சில அமைப்புகளும் அதன் தலைவர்களும் அதீத உணர்ச்சிவயப்பட்டுக் கிடந்த நிலையில் இந்த மாற்றுக் குரல்கள், போராளிக் குழுக்களைப் பற்றிய மறுசிந்தனையைக் கோரின. தமிழீழ விடுதலைக்கு தடையாக இருப்பதாகவும், துரோகிகள் என்று முத்திரைக் குத்தியும் இவ்வியக்கங்கள் பரஸ்பர அவநம்பிக்கையில் நடத்தியப் படுகொலைகள் எண்ணற்றவை என்பதும், சிங்கள ராணுவத்தால் எவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டார்களோ அவ்வளவு தமிழர்களை விடுதலைக்குழுக்களும் கொன்றிருக்கின்றன என்பதும் வெளிப்பட்டன. பிற இயக்கங்களை அழித்தொழிப்பது, தன் இயக்கத்தில் தனக்கெதிரானவர் என்று கருதக்கூடியவர்களை ஒழிப்பது, இந்த தன்னிச்சையான ஜனநாயகவிரோதப் போக்குகளை ஆதரிக்கிறவர்களை மட்டும் உடன்வைத்துக் கொள்வது என்ற நிலை அங்கு இன்றுவரை நீடிக்கிறது.

போராளியாக இருப்பவரின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது மனநிலை, ஆளுமைச்சிதைவு, போர்க்களத்துக்கு அப்பால் நெடுந்தூரத்திலும் தெரியாத சமாதானத்தின் மீதான பெருவிருப்பம், துய்த்து வாழ முடியாத நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய பயம் என்று இந்த மாற்றுக்குரல்கள் முன்வைக்கும் கேள்விகள் எந்த இயக்கத்தாலும் எதிர்கொள்ளப்படாதவை. புஸ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’, ஷோபா சக்தியின் நாவல்கள், இணையத்தில் படிக்கக் கிடைக்கும் பல்வேறு ஆய்வறிக்கைகள் வழியாக நமக்கு போராளிக்குழுக்களின் இருண்ட பகுதிகள் தெரியவருகின்றன.

போராளிக்குழுக்கள் இலங்கையிலுள்ள எல்லாத் தமிழர்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா? அவை முன்வைக்கும் தனிஈழத்தில் யாருக்கெல்லாம் இடமுண்டு? என்று பரிசீலித்தால், மலையகத் தமிழரை புறக்கணித்தது போலவே தமிழ் முஸ்லிம்களுக்கும் அங்கு இடமில்லை என்பது தெளிவாகும். விக்டர் எழுதிய ‘முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்’ என்ற நூலும் (அடையாளம் பதிப்பகம்- 2001), புஸ்பராஜாவின் நூலும் இப்புரிதலை நமக்குத் தருகின்றன. மசூதிகளை இடித்து ஓம், சூலம் போன்ற இந்துமதச் சின்னங்களை வரைந்தது, தொழுகைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தி முஸ்லிம்களைக் கொன்றது, 48 மணி நேர கெடு வைத்து வடபகுதியிலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வெளியேற்றி இனசுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது- என விடுதலைப்புலிகளின் முஸ்லிம் எதிர்ப்பு மனநிலை இந்தியாவிலுள்ள இந்துத்துவ வெறியர்களுக்கு இணையானதேயாகும். மும்பையின் குடிசைப்பகுதிகளில் இருக்கிற தமிழர்களை துரத்தியடிக்கவேண்டும் என்கிற பால்தாக்கரே இலங்கைத்தமிழர்களின் விடுதலைப்புலிகளை ஆதரித்து அறிக்கைவிட்டதன் பின்னேயுள்ள ரகசியம் இதுதான். புலிகளின் இனசுத்திகரிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் குரலாக எழுகிறது அறஃபத்தின் கவிதை-

துடித்த குரலுயர்த்திப் பேசிலேன்/ பிறர் அஞ்சுதற்குரிய கொடூரனுமல்ல நான்/ எனினும்/ நடுநிசியில் வஞ்சித்தென் கழுத்தை ஏனறுத்தீர்/

பொங்கலுக்கா பலியெடுத்தீர்/ ஈழத்தர்ச்சனைக்கா எனையெடுத்தீர்/ கத்தியைச் சொருகியென்/ பிடரியை அறுக்கையில்/ கதறிய என் ஓலத்தை/ தமிழீழ கீதமாக்கவா திட்டமிட்டீர்?

இவற்றுக்கெல்லாம் முன்பாகவே, இலங்கையில் நிலவும் சாதியடுக்குமுறைகளை எதிர்த்து சமூகத்தளத்தில் நிகழ்ந்த பல்வேறு போராட்டங்களைப் போலவே கலைஇலக்கியத் துறையிலும் பெரும்போராட்டம் நடந்திருக்கிறது. தமிழில் தலித் இலக்கியம் என்ற வகைமையின் முன்னோடியாக மதிக்கப்படுகிற கே.டானியலின் வழிநின்று எழுதப்பட்டு வருகிற இலங்கை தலித் இலக்கியம் இன்றளவும் தமிழக ஊடகங்களாலும் பதிப்பகங்களாலும் கண்டுகொள்ளப் படுவதில்லை. டானியல்- அ.மார்க்ஸ் இடையே நடைபெற்ற கடிதப்போக்குவரத்தை உன்னிப்பாக படிக்கிற ஒருவருக்கு, ஈழம் என்பதன் அக புறவய அடையாளத்திற்குள் தலித்துகளின் இடம் எது என்ற கேள்வியை எழும்.

6.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு வட்டத்தலைநகரிலும் அல்லது மாவட்டத்திற்கு ஒன்றாவது இலங்கைத் தமிழர் நிவாரண முகாம் இருப்பதை அறியாதவர்கள் ஒருவருமில்லை. அந்த முகாம்களில் பெரும்பாலானவை வசிக்கத் தகுதியற்றதாய் பாழடைந்து கிடக்கின்றன என்று மனிதவுரிமை அமைப்புகள் தெரிவிக்கும் புகார்களை செவிமடுப்பார் யாருமில்லை. அகதிகளுக்கான சர்வதேச சட்டங்களும் ஒப்பந்தங்களும் இங்கு முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. காவல்துறையின் கண்களில் இவர்கள் அனைவருமே குற்றவாளிகளாகவே தென்படுகின்றனர். ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு கரையிறங்கும் ஒவ்வொரு இலங்கைத் தமிழரையும் சந்தேகக்கண்ணோடு பார்ப்பது இங்கு பொதுப்புத்தியாக மாறியிருக்கிறது.

இலங்கையில் நம் தமிழ்ச் சகோதரர்கள் இப்படி வதைக்கப்படுகிறார்களே என்று அரற்றுகிறவர்களும்கூட தமிழ்நாட்டின் முகாம்களில் வதிந்துகிடக்கும் இவர்களைப் பொருட்படுத்தவதில்லை. மிகவும் உணர்வுபூர்வமான இவ்விசயம் முழுவதுமே, வறண்ட- தட்டையான- எல்லாவற்றையும் கோப்புகளாய்க் கருதுகிற அரசு அதிகாரிகளின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. மக்கள் இயக்கங்கள் பங்கெடுக்கத் தவறுகின்றன. ஏதிலிகளின் குழந்தைகள் இங்கு கல்வி கற்பதிலும் பணி பெறுவதிலும் உள்ள நிர்வாக மற்றும் மனத்தடைகள் களையப்பட வேண்டும். தமிழ்ச்சமூகத்தில் இவர்கள் இயல்பாக கலந்துவாழும் நிலையை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட அணுகுமுறை தேவைப்படுகிறது.

தமிழ்மொழி, இனம், தேசிய அடையாளம் என்பதில் கவனங் கொண்டிருக்கக்கூடிய கலை இலக்கியவாதிகள் இந்த நிலைமையில் குறுக்கீடு செய்து அவர்களுக்கு கண்ணியமானதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டுமென்று கோரமுடியும். எண்ணெய் மசகில்லாமல் கதவு கிறீச்சிடும் போதெல்லாம் மனத்தொந்தரவுக்கு ஆளாகிவிடுகிற நமது தமிழ்ப்படைப்பாளிகள், தம்மினத்தின் ஒரு பகுதி இப்படி ஏதுமற்றவர்களாய் உழன்றலைவது குறித்து அமைதி காப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே இலங்கையில் நடந்துவரும் போர்க்குற்றங்களையும் மனிதவுரிமை மீறல்களையும் சர்வதேச சமூகத்தின் முன்னே வைக்கும் பொருட்டு, முகாம்களில் தங்கியுள்ளவர்களின் வாழ்வனுபவங்களை வாய்மொழியாகவோ எழுத்துப்பூர்வமாகவோ பதிவு செய்வதிலும் வெளியிடுவதிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியும்.

புலம் பெயர் இலக்கியம் என்ற வகைமையை ஆழமும் விரிவும் கொண்டதாக மாற்றியமைக்கும் பொறுப்பு தமிழக படைப்புலகத்தின் முன்னே இருக்கிறது. இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் படைப்புகள் மட்டுமேயல்லாது, மலையகத் தமிழர், தமிழ் முஸ்லிம்கள், தலித்துகளிடமிருந்து வெளியாகும் மாற்றுக்குரல்களையும் இதற்குள் இணைக்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் காலனியாட்சியாளர்களால் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு 40க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அயலகத் தமிழர், இந்திய வம்சாவளியினர் என்ற அலங்கார வார்த்தைகளைப் பூசி இவர்கள் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்ட வரலாறு மறைக்கப்பட்டு வருகிறது. இவர்களது கலை இலக்கிய வெளிப்பாடுகளையும் வாழ்வனுபவங்களையும் உள்ளடக்கும் போதுதான் இந்த புலம்பெயர் இலக்கியம் என்பது முழுமை பெறும்.

- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com