Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 5
கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

69. "வாளுக்கு வாள்!"

பழுவேட்டரையர் சம்புவரையர் கோஷ்டி தஞ்சைக் கோட்டை வாசலை அணுகியபோது கடலும் கடலும் மோதிக் கொள்வது போலிருந்தது.

"சோழ நாட்டுத் தனாதிகாரி, இறை விதிக்கும் தேவர், முப்பத்தாறு போர்க்களங்களில் அறுபத்து நாலு விழுப்புண் பெற்ற வீராதி வீரர் பெரிய பழுவேட்டரையர் விஜயமாகிறார்!" என்பது போன்ற விருதுகளை ஒவ்வொரு சிற்றரசருக்காகவும் கட்டியங் கூறுவோர் கர்ஜித்து முழங்கினார்கள். அவ்விதமே கொடும்பாளூர் வேளார், திருக்கோவலூர் மலையமான் முதலியோருக்கும் விருதுகள் முழங்கப்பட்டன. இடையிடையே முரசங்களும் சங்கங்களும் முழங்கின. கோட்டைச் சுவர்கள் எதிரொலி செய்தன.

கோட்டை வாசலில் நின்ற சேனாதிபதி பெரிய வேளார், மலையமான், முதன்மந்திரி முதலியோர் கீழே நின்று கொண்டிருந்தபடியால், பழுவேட்டரையர்களும் தத்தம் வாகனங்களின் மீதிருந்து இறங்க வேண்டியதாயிற்று. தங்களை வாகனங்களிலிருந்து இறங்கச் செய்து கோட்டைக்குள் நடத்தி அழைத்துப் போவதற்காகவே அவ்வாறு சேனாதிபதி முதலியவர்கள் வரவேற்கும் பாவனையில் கோட்டை வாசலில் நின்றதாகச் சின்னப் பழுவேட்டரையர் எண்ணினார். அவ்வாறே மற்றவர்களிடமும் கூறினார். சேனாதிபதி கோஷ்டியாருடன் பேசும் பொறுப்பைத் தம்மிடமே விட்டு விடும்படி கேட்டுக் கொண்டார்.

பெரிய வேளாரும் மற்றவர்களும் வருகிறவர்களுடன் சிறிது நேரம் பேச வேண்டியிருக்கலாம் என்று எதிர் பார்த்தார்கள். ஆகையால் கோட்டை வாசலை மறித்து நில்லாமல், சற்று அப்பாலிருந்த கொடி மரத்து மைதானத்தில் நின்று கொண்டிருந்தார்கள். சிற்றரசர்கள் வாகனங்களிலிருந்து அவர்களை அணுகி வந்ததும் சேனாதிபதி பெரிய வேளார் "வருக! வருக! சோழ ராச்சியத்தைத் தாங்கி நிற்கும் அஷ்டதிக்குக் கஜங்களை ஒத்த சிற்றரசர்களே! வருக! உங்கள் வரவினால் சோழ ராச்சியத்துக்கும் சோழ குலத்துக்கும் நன்மை உண்டாகுக!" என்றார்.

உடனே சின்னப் பழுவேட்டரையர், "ஆம், ஐயா! எங்கள் வருகையினால் சோழ ராச்சியத்துக்கு நன்மை உண்டாகுக! அதுபோலவே தங்கள் போகையினாலும் நன்மை விளைக!" என்றதும், பெரிய வேளாரின் கண்கள் சிவந்தன.

"ஐயா! சோழ ராச்சியத்தின் செழிப்புக்காகவும், சோழ குலத்தின் புகழுக்காகவும் நானா திசைகளிலும் போவதுதான் கொடும்பாளூர் வேளார் குலத்தின் வழக்கம். என் அருமைச் சகோதரன் பராந்தகன் சிறிய வேளான் ஈழத்துப் போர்க்களத்தில் உயிர் நீத்ததை உலகமெல்லாம் அறியும். நானும் சில நாளைக்கு முன்பு வரை ஈழ நாட்டிலேதான் இருந்தேன். குண்டுச் சட்டியில் குதிரையோட்டும் கலையை எங்கள் குலத்தார் அறியார்கள். கோட்டைச் சுவர்களுக்குள்ளே பத்திரமாக இருந்துகொண்டு அரண்மனை அந்தப்புரங்களையும், பொக்கிஷ நிலவறைகளையும் காத்துக் கொண்டிருக்கும் வழக்கத்தையும் நாங்கள் அறியோம். உங்கள் வருகையினாலும் என்னுடைய போகையினாலும் சோழ குலம் நன்மையுறுவது உறுதியானால், பின்னர் ஒரு கணமும் இங்கு நிற்க மாட்டேன்!" என்று பெரிய வேளார் கர்ஜித்தார்.

இச்சமயம் முதன்மந்திரி அநிருத்தர் தலையிட்டு, "மன்னர் குலத்தோன்றல்களே! உங்கள் எல்லோருடைய வரவும் சோழ நாட்டிற்கு நன்மையே தரும் என்பதில் ஐயம் என்ன? நீங்கள் ஒவ்வொருவருமே சோழ ராச்சியத்தின் மேன்மை கருதித் தலைமுறை தலைமுறையாகப் பாடுபட்டவர்கள். சோழ குலத்துக்கு உயிரைக் கொடுத்தவர்கள் உங்கள் ஒவ்வொருவருடைய பரம்பரையிலும் உண்டு... இப்போதும், இனி எப்போதும், சோழ நாட்டுக்கு உங்கள் கூட்டுறவும், சேவையும் தேவையாயிருக்கும். இதனாலேயே பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்தி உங்களுக்குள் நேர்ந்துள்ள வேற்றுமையைக் குறித்து வருந்துகிறார். தமது அருமைப் புதல்வர் வீரபாண்டியன் தலைகொண்ட வீராதி வீரர், ஆதித்த கரிகாலர் அகால மரணமடைந்த பெருந்துயரத்தையும் மறந்து உங்களையெல்லாம் ஒருமிக்க அழைத்திருக்கிறார். பட்டத்து உரிமை பற்றியும் மற்ற எல்லாப் பிரச்னைகளைப் பற்றியும் சக்கரவர்த்தியின் முன்னிலையில் சமாதானமாகப் பேசி முடிவு செய்து கொள்ளலாம். மன்னர் பெருமக்களே! உங்களையெல்லாம் பெரிதும் வேண்டிக் கொள்கிறேன். மூத்த புதல்வரைப் பறிக்கொடுத்துத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் சக்கரவர்த்தியின் உள்ளத்தை உங்கள் பூசல்களினால் புண்படுத்தாதீர்கள்!" என்று கேட்டுக் கொண்டார்.

இந்த வார்த்தைகள் அங்கே கூடியிருந்த எல்லோருடைய மனத்திலும் தைத்தன. தங்களுடைய சொந்தக் கோபதாபங்களையெல்லாம் வெளிப்படுத்திக் கொள்வதற்கு இது தக்க சமயமல்ல என்பதை உணர்ந்தார்கள்.

உடனே, சின்னப் பழுவேட்டரையர், "முதன்மந்திரி! சக்கரவர்த்தியின் விருப்பத்தின்படி நாங்கள் நடந்து கொள்ளச் சித்தமாயிருக்கிறோம். சக்கரவர்த்தியின் தரிசனம் எங்களுக்கு எப்போது கிடைக்கும்? இன்று இரவே பார்க்க முடியுமா? சக்கரவர்த்தியின் விருப்பத்தை அவருடைய வாய்மொழியாக நேரில் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்!" என்றார்.

"தளபதி! தங்கள் விருப்பம் நியாயமான விருப்பம்தான்! அது நிறைவேறும் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் சக்கரவர்த்தியின் உடல் நிலையும், மன நிலையும், நீங்கள் எல்லாரும் அறிந்தவை. இரவு வந்தால் சக்கரவர்த்தியின் உடல் வேதனையும், மன வேதனையும் அதிகமாகின்றன. மேலும் சிற்றரசர்களுடன் பட்டத்து உரிமையைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், சக்கரவர்த்தி செம்பியன் மாதேவியுடன் முடிவாகப் பேச விரும்புகிறார். அவருடைய மனத்தை மாற்ற ஒரு கடைசி முயற்சி செய்ய விரும்புகிறார். எதன் பொருட்டு என்பது உங்களுக்குத் தெரியும். ஆகையால், நாளைப் பகல் முடிவதற்குள்ளே சக்கரவர்த்தி உங்களையெல்லாம் அழைப்பார். இன்றிரவு நீங்கள் எல்லாரும் கோட்டைக்குள் வந்து அவரவர்களுடைய அரண்மனையில் நிம்மதியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். கோட்டைக்குள் அரண்மனை இல்லாதவர்களுக்கு வேண்டிய ஜாகை வசதிகள் செய்து கொடுக்கும்படி பெரிய வேளாருக்குக் கட்டளையிட்டிருக்கிறார்...."

மறுபடியும் சின்னப் பழுவேட்டரையர் குறுக்கிட்டு, "முதன்மந்திரி! எங்களுக்கு ஜாகை வசதிகள் தேவை இல்லை. போர்க்களங்களில் திறந்த வெளியில் இருக்கப் பயின்றவர்கள். சக்கரவர்த்தி எங்களை நாளைக்குத்தான் பார்க்கப் போகிறார் என்றால், இன்றிரவு கோட்டைக்குள் நாங்கள் வரவேண்டிய அவசியம் என்ன?" என்றார்.

"உங்களுடைய அரண்மனையில் நீங்கள் வந்து தங்காமல் வெளியில் தங்கவேண்டிய அவசியம் என்ன?" என்று கேட்டார் முதன்மந்திரி.

"தளபதி! காலாந்தக கண்டர் தஞ்சைக் கோட்டைக்குள் வந்து தங்கப் பயப்படுகிறார் போலும்!" என்றார் சேனாதிபதி.

"பயமா? அது எப்படியிருக்கும்? கறுப்பா? சிவப்பா? அதற்குக் கொம்பு உண்டா? சிறகு உண்டா? ஈழத்துப் போர்க்களத்திலிருந்து அவசரமாக ஓடிவந்திருக்கும் பெரிய வேளாருக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம்" என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

'ஏது ஏது? இவர்கள் இருவரும் முட்டி மோதிக் கொள்ளாமல் தடுக்க முடியாது போலிருக்கிறதே' பெரிய பழுவேட்டரையர், வானவெளியெல்லாம் நிறையும்படி 'ஹும்' என்று சத்தமிட்டுக் கொண்டு, முன்னால் வந்தார். அவரை எல்லாரும் மிகுந்த மரியாதையுடன் கவனித்தார்கள்.

"தம்பி! கொடும்பாளூர் வேளார், பாரி வள்ளலின் வம்சத்தில் வந்தார். வேளிர் குலத்தினர் வாக்குத் தவறி நடந்ததில்லை. பெரிய வேளார் நமக்குப் பாதுகாப்பு அளிப்பதாகச் சொல்லும்போது, நாம் கோட்டைக்குள் போவதற்கு என்ன தடை?" என்று கேட்டார் பெரிய பழுவேட்டரையர்.

"அண்ணா! நமக்கு இன்னொருவரின் பாதுகாப்பு தேவையில்லை. வாக்குறுதியும் தேவையில்லை. நம்முடைய உடைவாள்களும் முப்பதினாயிரம் வீரர்களின் வேல்களும் இருக்கின்றன. இந்தத் தஞ்சைக் கோட்டையின் தளபதி நான். கோட்டை மறுபடியும் என் வசம் வந்தாலன்றி நான் கோட்டைக்குள் போகச் சம்மதியேன்!" என்றார் காலாந்தககண்டர்.

சேனாதிபதி வேளார் பெரிய பழுவேட்டரையரைப் பார்த்து, "ஐயா! சக்கரவர்த்தி கட்டளை பிறப்பித்தால் அவ்வாறே செய்யச் சித்தமாயுள்ளேன்!" என்றார்.

"சக்கரவர்த்தியின் கட்டளையின் பேரிலா கோட்டையை இவர் கைப்பற்றினார்!" என்று கேட்டார் சின்னப் பழுவேட்டரையர்.

"இல்லை; வாளின் பலத்தைக் கொண்டு இந்தக் கோட்டையைக் கைப்பற்றினேன்!" என்றார் பெரிய வேளார்.

"வாளின் பலங்கொண்டு திரும்பக் கைப்பற்றுவேன்! இப்போதே சோதித்துப் பார்க்கலாம்!" என்று சின்னப் பழுவேட்டரையர் சொல்லிக் கொண்டே கத்தியின் பிடியில் கையை வைத்தார்.

பெரிய பழுவேட்டரையர் தம் தம்பியைக் கையினால் மறித்து, "தம்பி! வாள் எடுக்கும் சமயம் இதுவன்று! சக்கரவர்த்தியின் விருப்பத்தின்படி நாம் இங்கே வந்திருக்கிறோம்!" என்றார்.

"அண்ணா! கோட்டைக்குள் புகுந்ததும் இவர் நம்மைச் சிறையிடமாட்டார் என்பது என்ன நிச்சயம்? சக்கரவர்த்தியின் கட்டளையை எதிர்பாராமல் திடீரென்று கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றியவரை எப்படி நம்பச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டார் சின்னப் பழுவேட்டரையர்.

"இவரை நம்பித்தானே நம்முடைய பெண்டு பிள்ளைகளை, இந்தக் கோட்டையில் விட்டு விட்டு நீ வெளியேறினாய்? இளவரசர் மதுராந்தகரையும் விட்டுவிட்டுக் கிளம்பினாய்!" என்றார் பெரியவர்.

"அது தவறோ என்று இப்போது சந்தேகப்படுகிறேன். மதுராந்தகருக்கு மட்டும் ஒரு சிறு தீங்கு நேர்ந்திருக்கட்டும், கொடும்பாளூர்க் குலத்தை அடிவேரோடு அழித்துவிட்டு மறுகாரியம் பார்ப்பேன்!" என்று இரைந்தார் சின்னப் பழுவேட்டரையர்.

இதுவரையில் அலட்சியமாகப் பேசிவந்த சேனாதிபதி பூதிவிக்கிரம கேசரிக்கு இப்போது கடுங்கோபம் வந்துவிட்டது! அந்த இடத்தில் ஒரு பெரிய விபரீதமான மோதல் அடுத்த கணமே ஏற்பட்டிருக்கக்கூடும்.

நல்லவேளையாக, அந்தச் சமயத்தில் கோட்டை வாசலில் ஏதோ கலகலப்பு ஏற்பட்டது. எல்லாருடைய கவனமும் அங்கே சென்றது.

சற்று முன்னால் முதன்மந்திரி அநிருத்தர் தம்மைச் சமிக்ஞையினால் அழைத்த ஆழ்வார்க்கடியானிடம் சென்றிருந்தார். அவன் ஏதோ அவரிடம் இரகசியச் செய்தி கூறினான். அதைக் கேட்டுவிட்டு அவர் பழுவேட்டரையர்களும் பெரிய வேளாரும் நின்ற இடத்தை அணுகி வந்தார். வரும்போது, சின்னப் பழுவேட்டரையர் மதுராந்தகத் தேவரைப்பற்றிக் கூறிய வார்த்தைகள் அவர் காதில் விழுந்தன.

"தளபதி! இளவரசர் மதுராந்தகனைப் பற்றி என்ன கவலை? அவருக்கு யாராலும் எவ்விதத் தீங்கும் நேரிடாது. சற்று முன்னால் கூட மதுராந்தகத் தேவரும் அவருடைய அன்னை செம்பியன் மாதேவியும் கோட்டைக்கு வெளியே சென்றார்கள். திருக்கோயிலுக்குப் புஷ்பகைங்கரியம் செய்யும் சேந்தன் அமுதனைப் பார்க்கப் போயிருந்தார்கள்.." என்று முதன்மந்திரி கூறுவதற்குள் காலாந்தககண்டர் குறுக்கிட்டார்.

"ஆமாம்; தாயும், மகனும் கோட்டைக்கு வெளியே வந்தார்கள். ஆனால் தாய் மட்டுந்தான் கோட்டைக்குள் திரும்பிச் சென்றார்!" என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

"ஆகா! அது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்றார் முதன்மந்திரி.

"முதன்மந்திரி! உங்களிடம் மட்டுந்தான் கெட்டிக்கார ஒற்றர்கள் உண்டு என்று நினைத்தார்களா? வெளியே வந்த மதுராந்தகத்தேவர் திரும்பக் கோட்டைக்குள்ளே போகவில்லை. அதன் காரணத்தை நான் அறிய வேண்டும்!" என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

முதன்மந்திரியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அதே சமயத்தில் கோட்டை வாசலில், "இளவரசர் மதுராந்தகத்தேவர் வாழ்க! வாழ்க!" என்ற கோஷங்கள் எழுந்தன. எல்லாரும் கோஷங்கள் வந்த அந்தத் திசையை ஆவலோடு நோக்கினார்கள். கோட்டை வாசலுக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்த யானையின் மீது இளவரசுக் கிரீடமும் பிற ஆபரணங்களும் அணிந்த 'மதுராந்தகர்' வீற்றிருந்தார். யானைக்குப் பக்கத்தில் மூடுபல்லக்கு ஒன்று ஊர்ந்து சென்றது.

"தளபதி! மதுராந்தகத்தேவர் கோட்டைக்குள் திரும்பிப் போவதற்குச் சிறிது காலதாமதம் நேர்ந்தது. வாணி அம்மையின் மகன் சேந்தன் அமுதன் குதிரையிலிருந்து கீழே விழுந்து படுகாயமுற்றிருக்கிறான். அவனைப் பல்லக்கில் ஏற்றிக் கோட்டைக்குள் அழைத்து வரும்படியாகச் செம்பியன்மாதேவி சொல்லிவிட்டு முன்னால் சென்றுவிட்டார். அன்னையின் விருப்பத்தை மகன் நிறைவேறி வைக்கிறார். அமுதனைப் பல்லக்கில் ஏற்றிக் கொண்டு தாம் யானை மீது செல்கிறார். விரைவிலே மகுடாபிஷேகம் நடக்கும்போது பட்டத்து யானை மீது ஊர்வலம் வரவேண்டியிருக்குமல்லவா? அதற்கு இப்போதே ஒத்திகை செய்து கொள்கிறார்!" என்றார் முதன்மந்திரி அநிருத்தர்.


முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com