Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 5
கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

61. நிச்சயதார்த்தம்

வெளியில் காலடிச் சத்தம் கேட்டதும் பூங்குழலி அச்சிறு குடிலின் வாசற் கதவை நோக்கிப் போனாள். அவள் தன்னை விட்டுவிட்டு அடியோடு போய்விடப் போகிறாள் என்று சேந்தன் அமுதன் எண்ணிப் பெருமூச்சு விட்டான். அவள் அவ்வாசற்படி வழியாக வெளியேறும்போது தன் உயிரும் தன் உடலைவிட்டு வெளியேறிவிடும் என்று கருதினான்.

பூங்குழலி கதவைச் சற்றுத் திறந்து வெளியே பார்த்துவிட்டு மறுபடியும் கதவை அடைத்துத் தாளிட்டதை சேந்தன் அமுதன் பார்த்தான். இது என்ன விந்தை? தாளிட்டது மட்டுமில்லாமல் திரும்பவும் தன்னை நோக்கி வருகிறாளே?

அவளுடைய உள்ளம் சிறிது இளகிவிட்டதோ? இளகினால்தான் என்ன? மறுபடியும் தன்னை வீரனாக வேண்டும் என்றும், ராஜ்யத்தைப் பிடிக்க வேண்டுமென்றும், சிங்காதனம் ஏறி அரசாள வேண்டும் என்றும் இவ்வாறு போதனை செய்து கொண்டுதானிருப்பாள். உலக ஆசைகள் என்னும் புயற் காற்றினால் அலை வீசிக் கொந்தளிக்கும் கடல் அவளுடைய உள்ளம். சிவபெருமானுடைய பக்தியில் திளைத்து அமைதியுற்றிருக்கும் இனிய புனல் வாவியை ஒத்தது தன் மனம். அதில் எழுந்த சிறிய கொந்தளிப்பு இவளால் நேர்ந்ததுதான். பூங்குழலிக்கும் தனக்கும் ஒரு நாளும் ஒத்துவரப் போவதில்லை. அதைப்பற்றி வீண் மனோராஜ்யம் செய்வதில் என்ன பயன்?

பூங்குழலி அவன் அருகில் வந்ததும் அவனைத் தன் குவளை மலர்க் கண்களால் உற்றுப் பார்த்தாள். சேந்தன் அமுதனின் நெஞ்சம் தத்தளித்தது.

"கதவை ஏன் சாத்தினாய்? யார் வந்தனர்? ஒருவேளை அம்மா தானோ, என்னமோ?" என்றான் அமுதன்.

"யாரா இருந்தாலும் சிறிது நேரம் காத்திருக்கட்டும். நம்முடைய பேச்சு முடியும் வரையில் வெளியில் இருக்கட்டும். ராஜாவும், ராணியும் அந்தரங்கமாகப் பேசி கொண்டிருக்கும் போது குறுக்கே வந்து யாரும் தடை செய்யக்கூடாது அல்லவா?" என்றாள்.

"ராஜா - ராணி! யார் ராஜா? யார் ராணி?" என்று தடுமாறினான் அமுதன்.

"நீ ராஜா; நான் ராணி! இத்தனை நேரம் சொன்னதெல்லாம் உன் மனதில் ஏறவே இல்லையா?"

"இல்லை பூங்குழலி! எனக்கு நீ போதனை செய்வதில் சிறிதும் பயனில்லை என்றுதான் சொன்னேனே? உன் உள்ளப் போக்கும், என் உள்ளப் போக்கும் முற்றும் மாறானவை; அவை ஒத்துவர மாட்டா!" என்றான் அமுதன்.

"ஒத்து வரும்படி நாம்தான் செய்ய வேண்டும்" என்றான் பூங்குழலி.

"அது முடியாத காரியம்!"

"உன்னால் முடியாவிட்டால், என்னால் முடியும். அமுதா! நான் தீர்மானம் செய்து விட்டேன். அரச குமாரனைக் கலியாணம் செய்து கொண்டு அரியாசனம் ஏறும் எண்ணத்தை விட்டு விட்டேன். அரண்மனை வாழ்வையும் அரச போகத்தையும் விட்டு விட்டேன். அரண்மனை வாழ்வையும் அரச போகத்தையும் காட்டிலும், உன்னுடைய அன்பு கோடி மடங்கு எனக்குப் பெரிது. நீ என் வழிக்கு வர மறுப்பதால், நான் உன்னுடைய வழிக்கு வருவேன். உன்னையே நான் மணந்து கொள்வேன்..."

சேந்தன் அமுதன் பரவச நிலையை அடைந்தான். "பூங்குழலி! பூங்குழலி! எனக்கு இப்போது சுரம் அடிக்கவில்லையே? நான் கனவு காணவில்லையே? இப்போது நீ சொன்ன வார்த்தைகள் என் காதில் தவறாக விழவில்லையே? நான் தவறாகப் பொருள் கொள்ளவில்லையே?" என்றான்.

"இன்னொரு தடவை சொல்கிறேன், கேள்! நீ என் வழிக்கு வர மறுப்பதால், நான் உன்னுடைய வழிக்கு வரத் தீர்மானித்து விட்டேன். உன்னையே நான் மணந்து கொள்வேன். என் பெரிய அத்தையின் வாழ்க்கையைப் பற்றி நான் அறிந்து கொண்டிருந்த விவரங்கள் என் உள்ளத்தில் வீண் ஆசைகளை உண்டாக்கியிருந்தன. நியாயமாக அவள் சிங்காதனத்தில் வீற்றிருக்க வேண்டியவள் என்று அடிக்கடி எண்ணியதால் நானும் ஏன் சிங்காதனம் ஏறக்கூடாது என்ற ஆத்திரம் எனக்கும் உண்டாகி விட்டது. என் அத்தை கொலைகாரனுடைய வேலினால் மரணமடைந்த போது, என்னுடைய ஆசையும் மடிந்து விட்டது. அரண்மனையில் வாழ்கிறவர்கள் படும் அவதிகளையும், வேதனைகளையும் அறிந்து கொண்டேன். அலைகடலில் படகு ஓட்டிக் கொண்டு ஆனந்தமாகக் கழிக்கும் வாழ்க்கைக்கு அரண்மனை வாழ்வு ஒருநாளும் இணையாகாது என்று அறிந்தேன். அமுதா! உனக்கு உடம்பு சரியானதும் இருவரும் கோடிக்கரை செல்வோம். அங்கே காட்டுக்கு நடுவில் உள்ள கோயிலில் குழகர் தன்னந்தனியாகத் துணை எவருமின்றி இருக்கிறார். நாம் இருவரும் கோடிக்கரைக் குழகருக்குப் புஷ்பத் திருப்பணி செய்வோம். சில சமயம் படகில் ஏறிக் கடலில் செல்வோம். ஈழ நாட்டின் ஓரத்தில் இனிய தீவுகள் எத்தனையோ இருக்கின்றன. அந்தத் தீவுகளில் ஒன்றில் சில சமயம் இறங்குவோம். அங்கே நீ ராஜாவாகவும் நான் ராணியாகவும் இருப்போம். அந்த ராஜ்யத்துக்கு யாரும் போட்டிக்கு வரமாட்டார்கள். அமுதா! இதற்கெல்லாம் உனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லையே?"

"ஒரே ஆட்சேபந்தான், பூங்குழலி! இவ்வளவு பெரிய பாக்கியத்துக்கு நான் அருகதை உள்ளவனா என்னும் ஆட்சேபந்தான். இதையெல்லாம் நீ உண்மையாகத்தானே சொல்லுகிறாயா? பிறகு பெரிய ஏமாற்றத்துக்கு என்னை உள்ளாக்குவதற்காகச் சொல்லவில்லையே? இல்லை, இல்லை! நீ உண்மையாத்தான் சொல்கிறாய். எப்போது கோடிக்கரைக்குப் புறப்படலாம்?"

"உனக்கு உடம்பு நேரான உடனே புறப்படலாம்."

"எனக்கு உடம்பு நேராகிவிட்டது, பூங்குழலி! நான் வேணுமானால் இப்போது எழுந்து நடக்கிறேன் பார்க்கிறாயா?" என்று கூறிவிட்டுச் சேந்தன் அமுதன் எழுந்திருக்க முயன்றான்.

பூங்குழலி அவன் கையைப் பிடித்து எழுந்திருக்காமல் தடுத்து, "வேண்டாம். இன்று ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கொள்!" என்றாள்.

வாசற் கதவை யாரோ இலேசாகத் தட்டும் சத்தம் கேட்டது. "அம்மா கதவைத் தட்டுகிறாள் திறந்து விடு! அம்மாவிடம் இந்தச் சந்தோஷ சமாசாரத்தைச் சொல்வோம்" என்றான் அமுதன்.

பூங்குழலி போய்க் கதவைத் திறந்தாள், வாசலில் கண்ட காட்சி அவளைச் சிறிது வியப்புறச் செய்தது.

அவள் எதிர்பார்த்தபடி கதவைத் தட்டியவள் வாணி அம்மை அல்ல. அரண்மனைச் சேவகன் ஒருவன் கதவைத் தட்டியிருக்க வேண்டுமென்று தோன்றியது. கதவு திறந்ததும், சேவகன் ஒதுங்கி நின்றான்.

அப்பால், செம்பியன் மாதேவியும், இளவரசர் மதுராந்தகரும் நின்றார்கள். இன்னும் சிறிது தூரத்துக்கு அப்பால், பல்லக்குகள் இரண்டு இறக்கி வைக்கப்பட்டிருந்தன. சிவிகை தூக்கிகளும், காவலர்களும் மரத்தடியில் நின்றார்கள். அவர்களில் ஒருவன் பிடித்துக் கொண்டிருந்த தீவர்த்தி வெளிச்சத்தில் இவ்வளவு காட்சியையும் கண்ட பூங்குழலி செம்பியன் மாதேவியின் முன்னால் தலை வணங்கிக் கும்பிட்டு, "தாயே வரவேண்டும்!" என்றாள்.

"உன் அத்தை மகனுக்கு உடம்பு எப்படியிருக்கிறது. பூங்குழலி! வாணி அம்மை எங்கே?" என்று கேட்டுக் கொண்டே மழவரையன் மாமகளாகிய முதிய எம்பெருமாட்டி அந்தக் குடிசைக்குள்ளே பிரவேசித்தாள்.

மதுராந்தகன் வெளியிலேயே நின்றான். ஆனால் அவனுடைய குரோதம் ததும்பிய கண்கள் ஆர்வத்துடன் குடிசைக்கு உள்ளே நோக்கின. வருகிறவர் சிவபக்த சிரோமணியும், தங்களுக்கு மானியம் அளித்துக் காப்பாற்றி வருகிறவருமான செம்பியன் மாதேவி என்று அறிந்ததும் சேந்தன் அமுதனும் எழுந்தான்.

"தாயே! நல்ல சமயத்தில் வந்தீர்கள். முதன் முதல் சந்தோஷமான செய்தியைத் தங்களிடம் தெரிவித்து ஆசிபெறும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டியிருக்கின்றது. சிவபெருமானுடைய திருவருளாலேயே இது நடந்திருக்க வேண்டும். இன்னும் என் அன்னையிடம் கூடச் சொல்லவில்லை. அன்னையே! இத்தனை காலம் கழித்துப் பூங்குழலி மனமிரங்கி என்னை மணம் புரிந்து கொள்ள இசைந்திருக்கிறாள் . தாங்கள்தான் கூட இருந்து எங்கள் திருமணத்தை நடத்தி வைக்கவேண்டும். நாங்கள் திருமணம் செய்துகொண்ட பிறகு கோடிக்கரைக் குழகர் கோயிலுக்குப் போய் அங்கே பூமாலைக் கைங்கரியம் செய்ய எண்ணியிருக்கிறோம்!" என்றான்.

செம்பியன் மாதேவியின் முகத்தோற்றம் இச்செய்தியினால் அந்த மாதரசி மகிழ்ச்சி அடைந்தாரா, கலக்கமடைந்தாரா என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. அவருடைய இதழ்களில் மகிழ்ச்சிப் புன்னகை தோன்றியது. ஆனால் கண்களிலோ கண்ணீர் ததும்பி நின்றது.

அமுதனும் பூங்குழலியும் அவர் முன்னால் வணங்கிய போது, மாதரசி தழுதழுத்த குரலில், "குழந்தைகளே! இறைவன் அருளால் உங்கள் இல்வாழ்க்கை இன்பமயமாக இருக்கட்டும்!" என்று ஆசி கூறினார்.

அந்தச் சமயம் வாணி அம்மை அங்கே வந்து சேர்ந்தாள். அவளிடம் செம்பியன் மாதேவி சமிக்ஞையினால் அமுதனுடைய உடம்பைப் பற்றி தெரிந்து கொள்ள வந்ததாகக் கூறினார். வந்த இடத்தில் அவர்களுக்குத் திருமணம் நடக்கப் போகிற செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார். அச்சமயம் வாணி அம்மையின் முகபாவமும் கலக்கத்தையும், களிப்பையும் ஒருங்கே காட்டுவதாயிருந்தது.

மேலும் சிறிது நேரம் சேந்தன் அமுதனுடனும், பூங்குழலியுடனும் பேசிக்கொண்டிருந்த பிறகு செம்பியன் மாதேவி வெளிக் கிளம்பினார்.

அவரும், மதுராந்தகனும் பல்லக்குகள் இரண்டும் இறக்கி வைத்திருந்த இடம் நோக்கிச் சென்றார்கள்.

வழியில் ஒரு மரத்தடியில் முதிய பிராட்டியார் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தார். அருகில் ஒருவரும் இல்லை என்பதைக் கண்ட பிறகு, மதுராந்தகனை நோக்கி, "பார்த்தாயா, மதுராந்தகா! என் வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த மகன் அதோ அக்குடிசையில் வாழும் சேந்தன் அமுதன். அவனுக்கு ஐந்து வயதானபோதே எனக்கு இச்செய்தி தெரிந்துவிட்டது. அவன் எட்டு நாள் குழந்தையாயிருந்தபோது மூச்சுப் பேச்சற்றுக் கிடந்ததைப் பார்த்து இறந்து விட்டதாக எண்ணினேன். பிள்ளைப் பாசத்தினால் உன்னை என் குழந்தையாக ஏற்றுக் கொண்டு இவனைக் கொண்டுபோய்ப் புதைத்து விடச் சொன்னேன். இவனை எடுத்துப் போன வாணி வெகுகாலம் திரும்பி வரவே இல்லை. ஐந்து ஆண்டு கழிந்த பிறகு இவளையும், இப்பிள்ளையையும் பார்த்ததும் உண்மை தெரிந்து கொண்டேன். ஆயினும், உன்னை நான் கைவிடவில்லை. அவன் என் வயிற்றில் பிறந்த மகன் என்பதற்காக அவனை அரண்மனைக்கு வரவழைத்துக் கொள்ளவுமில்லை. எல்லாம் இறைவன் திருவிளையாடல் என்று எண்ணி உன்னை என் வயிற்றில் பிறந்த மகனைக் காட்டிலும் பதின் மடங்கு அருமையாக வளர்த்து வந்தேன். அதற்காகவெல்லாம் எனக்கு இப்போது இந்த வரத்தை நீ கொடு! சோழ சிங்காதனம் வேண்டாம் என்று சொல்லிவிடு! நீ சிங்காதனம் ஏறுவதற்குக்கூட நான் ஆட்சேபிக்க மாட்டேன். ஆனால் உன் வம்சத்தில் பிறக்கும் பிள்ளைகள் ஊமையாக இருந்துவிட்டால் என்ன செய்கிறது என்றுதான் அஞ்சுகிறேன்!" என்றார்.

இவ்விதம் செம்பியன் மாதேவி கூறி வந்தபோது மதுராந்தகனுடைய முகம் பேயடித்த முகமாகக் காணப்பட்டது. அவன் மணம் செய்துகொண்டிருந்த சின்னப் பழுவேட்டரையரின் மகளுக்கு ஒரு பெண் மகவு பிறந்திருந்தது. அதற்கு இரண்டு பிராயம் ஆகியும் இன்னும் பேசத் தொடங்கவில்லை என்பது அவனுடைய நினைவுக்கு வந்தது.

பிரமை பிடித்து மரத்தோடு மரமாக நின்ற மதுராந்தகனைப் பார்த்து, அவனை வளர்த்த அன்னையாகிய மாதரசி, "குழந்தாய்! ஏன் இப்படியே நின்று விட்டாய்? வா போகலாம்! அரண்மனைக்குப் போய் நன்றாக யோசித்து நாளைக்குப் பதில் சொல்லு!" என்றாள்.

மதுராந்தகன் தட்டுத்தடுமாறி, "தாயே! யோசிப்பதற்கு இனி என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை. தாங்கள் போங்கள்! என்னுடைய இடத்தில் அரண்மனையில் வளர்ந்திருக்க வேண்டிய தங்கள் குமாரனிடம் சிறிது பேசிவிட்டுப் பிறகு வருகிறேன்!" என்றான்.

"அப்படியே செய்! வரும்போது பல்லக்கின் திரைகளை நன்றாக மூடிக்கொண்டு வா! கொடும்பாளூர் வீரர்கள் உன்னைப் பார்த்து விட்டால் ஏதேனும் கூச்சல் போட்டாலும் போடுவார்கள்!" என்று சொல்லிவிட்டு அம்மாதரசி மேலே பல்லக்கை நோக்கி நடந்தார்.

மதுராந்தகனுடைய முகம் முன்னைவிடக் குரோதமும், மாற்சரியமும் நிறைந்த பயங்கர மாறுதலை அடைந்ததை அப்பெருமாட்டி கவனியாமலே அங்கிருந்து சென்று விட்டார்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com