Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 5
கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம் : தியாக சிகரம்

5. தாயைப் பிரிந்த கன்று

இளவரசர் புத்த பிக்ஷுவையும் தூக்கிக்கொண்டு முருகய்யன் கொண்டு வந்து நிறுத்திய படகிலே குதித்தார். அவர் குதித்த வேகத்தில் அந்தச் சிறிய படகு பேயாட்டம் ஆடியது. ஒரு கணம் கவிழ்ந்து விடும் போலவும் இருந்தது. முருகய்யன் மிகப் பிரயத்தனப்பட்டுப் படகு கவிழாமல் காப்பாற்றினான்.

"முருகையா! இனிமேல் படகைவிடு! ஆனைமங்கலம் அரண்மனைக்கு விடு!" என்று பொன்னியின் செல்வர் உரத்த குரலில் கூவினார். அச்சமயம் உச்சநிலையை அடைந்திருந்த புயற்காற்றும், புயலில் பொங்கி வந்த கடலும் போட்ட இரைச்சலினால் அவர் கூறியது முருகய்யன் காதில் விழவில்லை. ஆயினும் இளவரசரின் முகத்தோற்றத்திலிருந்து அவருடைய விருப்பத்தை அறிந்து கொண்ட முருகய்யன் படகைச் செலுத்தத் தொடங்கினான். சூடாமணி விஹாரத்தின் முழுகிக் கொண்டிருந்த மண்டபச் சிகரங்களின் மீதும் புத்தர் சிலைகளின் மீதும் மோதாமல் படகைச் செலுத்துவது மிகவும் கடினமாயிருந்தது. முருகையன் பெரும் புயலிலும் சுழிக் காற்றிலும் நடுக் கடலில் படகு செலுத்திப் பழக்கப்பட்டவனாதலால் வெகு லாவகமாகச் செலுத்திக் கொண்டு போனான். அதைப் பார்த்து இளவரசர் வியந்தார். அவனுக்குச் சற்று உதவி செய்யலாம் என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் புத்த பிக்ஷுவைப் பிடித்திருந்த பிடியை விட்டுவிடத் தயங்கினார். அதற்கு ஏற்றாற்போல், திடீரென்று பிக்ஷு இளவரசருடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளப் பிரயத்தனம் செய்தார். அச்சமயம் படகு புத்த பகவானின் சிலையின் அருகே போய்க் கொண்டிருந்தது. இப்போது கடல் வெள்ளம் அச்சிலையின் கண்கள் வரை ஏறியிருந்தது. இன்னும் சில நிமிடத்தில் சிலையே முழுகிவிடும் என்பதில் ஐயமில்லை.

இளவரசர் பிக்ஷுவை இறுகப் பிடித்துக் கொண்டார். பார்ப்பதற்கு மிக மென்மையான தேகம் உடையவராகக் காணப்பட்ட இளவரசரின் கரங்களில் எவ்வளவு வலிமை இருந்தது என்பதை அறிந்து பிக்ஷு வியந்தார் என்பதை அவருடைய முகத் தோற்றம் காட்டியது. நெஞ்சிலே உரம் இருந்தால், உடலிலும் வலிமை உண்டாகும் போலும்! இத்தனைக்கும் பல நாள் சுரத்தினால் மெலிந்திருந்த உடம்பு!

புத்தரின் சிலையைத் தாண்டிப் படகு போயிற்று. முழுகிக் கொண்டிருந்த அச்சிலையைப் பிக்ஷு பார்த்துக் கொண்டேயிருந்தார். சிலை விரைவில் மறைந்தது. பிக்ஷுவின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகியது.

"இளவரசே! என்ன காரியம் செய்தீர்?" என்றார் பிக்ஷு.

அவருடைய உதடுகளின் அசைவிலிருந்து என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொண்ட இளவரசர் பிக்ஷுவின் காதின் அருகில் குனிந்து, "சுவாமி! அந்தக் கேள்வியை நான் அல்லவா கேட்க வேண்டும்? என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்?" என்றார்.

"இளவரசே! இந்த விஹாரம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து இங்கே இருந்து வருகிறது. மகானாகிய தர்மபாத முனிவரின் காலத்திலே கூட இருந்தது. வீர சைவர்களான பல்லவ சக்கரவர்த்திகள் இதை அழிக்காமல் விட்டு வைத்தார்கள். அப்படிப்பட்ட புராதன விஹாரம் என் காலத்தில், என் கண் முன்னால் முழுகிவிட்டது. செங்கல் திருப்பணியினாலான இந்த விஹாரம் இந்தக் கடல் வெள்ளத்துக்குத் தப்ப முடியாது! வெள்ளம் வடிந்த பிறகு சில குட்டிச் சுவர்களே மிச்சமிருக்கும்! விஹாரம் போன பிறகு நான் மட்டும் எதற்காக உயிரோடு இருக்க வேண்டும்?" என்றார் பிக்ஷு.

"விஹாரம் இடிந்து அழிந்தால், மறுபடியும் திருப்பணி செய்து கட்டிக்கொள்ளலாம். புத்த பகவானுடைய சித்தமிருந்தால் நானே திரும்பவும் கட்டிக் கொடுப்பேன். தாங்கள் போய்விட்டால் என்னால் தங்களைத் திருப்பிக் கொண்டு வர முடியாதே?" என்றார் இளவரசர் அருள்மொழிவர்மர்.

கடலும் புயலும் சேர்ந்து போட்ட இரைச்சலினால் அவர்களால் மேலும் தொடர்ந்து விவாதம் செய்ய முடியவில்லை. மற்றும், சுற்றுபுறங்களில் நாலபுறத்திலும் அவர்கள் கண்ட கோரக் காட்சிகள் அவர்களைப் பேச முடியாதபடி செய்துவிட்டன.

முறிந்த பாய்மரங்களுடனே பெரிய பெரிய நாவாய்களும், சின்னஞ் சிறு மீன் பிடிக்கும் படகுகளும் கடற் பக்கத்திலிருந்து கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. அவற்றில் பல கரை தட்டியும், கட்டிடங்களின் மேல் மோதியும், பேயாட்டம் ஆடிய மரங்களின் மீது இடித்துக் கொண்டும், சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தன. பெருங்காற்றில் வீடுகளின் கூரைகள் அப்படியே பிய்த்துக் கொண்டு பறந்து சென்று வெள்ளத்தில் விழுந்தன. வேறு சில கூரைகள் மிதந்து கொண்டிருந்தன. அவற்றில் சிலவற்றில் மனிதர்கள் மிகுந்த சிரமத்துடன் தொத்திக் கொண்டிருந்தார்கள். ஓவென்று அவர்கள் ஓலமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

பெரிய பெரிய மரங்கள் காற்றில் முறிந்து விழுந்தன. முறிந்த மரங்களில் சில மிதந்து மிதந்து சென்றன. மிதந்த மரங்களைப் பிடித்துக் கொண்டு சில மனிதர்கள் உயிர் தப்ப முயன்றார்கள். ஆடு மாடுகள் வெள்ளத்தில் அலறிக்கொண்டு மிதந்து சென்றன. இத்தகைய கோரமான காட்சிகளைப் பார்த்துப் பார்த்து இளவரசரும் பிக்ஷுவும் மனங் கசிந்தார்கள். அந்த நிலைமையில் தங்களால் ஒன்றும் உதவி செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் அவர்களுடைய வேதனையை அதிகப்படுத்தியது.

முருகய்யன் அப்பால் இப்பால் பார்க்காமல் படகை சர்வ ஜாக்கிரதையாகச் செலுத்திக்கொண்டு சென்றான். சூடாமணி விஹாரம் நாகைப்பட்டினத்தில் கடற்கரையோரமாக இருந்தது. அங்கிருந்து கால்வாய் சிறிது தூரம் வரையில் தெற்குத் திசையை நோக்கிச் சென்றது. பிறகு தென்மேற்காக அரைக்காதம் வரையில் சென்று, அங்கிருந்து மீண்டும் திரும்பித் தென் திசையில் நேராகச் சென்றது. இந்த இரண்டாவது திருப்பத்தின் முனையிலேதான் ஆனை மங்கலம் அரண்மனை இருந்தது.

வழி நடுவில் இருந்த நந்தி மண்டபத்தின் அருகில் படகு வந்த போது, நந்தி முழுதும் முழுகியிருந்தது மட்டுமல்லாமல் மேல் மண்டபத்தின் விளிம்பைத் தொட்டுக்கொண்டு வெள்ளம் சென்றது. மண்டபத்துக்கு அப்பால் நாலாபுறமும் பரவி இருந்த தென்னந் தோப்புகளில் முக்கால்வாசி மரங்கள் காற்றினால் முறிந்து விழுந்து விட்டன. மிஞ்சியிருந்த மரங்களின் உச்சியில் மட்டைகள் ஆடியது தலைவிரி கோலமாகப் பேய்கள் ஆடுவது போலவே இருந்தது. அவற்றில் சில மட்டைகள் காற்றினால் பிய்க்கப்பட்டு வெகு தூரத்துக்கு அப்பால் சென்று விழுந்தன.

நந்தி மண்டபத்தின் உச்சியில் தாயைப் பிரிந்த கன்றுக்குட்டி ஒன்று எப்படியோ வந்து தொத்திக்கொண்டிருந்தது. அது நாலாபுறமும் பார்த்துப் பார்த்து மிரண்டு விழித்தது. உடம்பை அடிக்கடி சிலிர்த்துக் கொண்டது. அதன் கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்தக் கன்று 'அம்மா' என்று எழுப்பிய தீனக்குரல் படகில் சென்று கொண்டிருந்தவர்களின் காதில் இலேசாக விழுந்தது.

"ஐயோ! பாவம்! தாயைப் பிரிந்த இந்தக் கன்றின் கதி என்ன ஆகுமோ!" என்று இளவரசர் எண்ணிய அதே சமயத்தில், ஒரு பெரிய தென்னை மரம் திடீரென்று முறிந்து மண்டபத்தின் பின்புறத்தில் விழுந்தது. சிறிது முன் பக்கமாக விழுந்திருந்தால், கன்றுக் குட்டியின் மேலேயே அது விழுந்திருக்கும்.

மரம் விழுந்த வேகத்தினால் தண்ணீரில் ஒரு பெரிய அலை கிளம்பி மண்டபத்தில் மேலே தாவி வந்தது. முன்னமே நடுங்கிக் கொண்டிருந்த கன்றுகுட்டி அந்த அலையைச் சமாளிக்க முடியாமல் தடுமாறி விழுந்தது. மண்டபத்தின் உச்சியிலிருந்து அலையினால் அது வெள்ளத்தில் உந்தித் தள்ளப்பட்டுத் தத்தளித்தது.

இளவரசர் இதுவரையில் புத்த பிக்ஷுவைத் தம் கரங்களினால் பிடித்துக் கொண்டிருந்தார். கன்றுக்குட்டி மண்டபத்தின் உச்சியிலிருந்து உந்தித் தள்ளப்பட்டதைப் பார்த்ததும், "ஆகா" என்று சத்தமிட்டுப் பிக்ஷுவைப் பிடித்துக் கொண்டிருந்த பிடியை விட்டார். பிக்ஷு அக்கணமே வெள்ளத்தில் குதித்தார்.

படகோட்டி முருகய்யன் துடுப்பைப் படகில் போட்டு விட்டு இளவரசரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். அவனை இளவரசர் கடுங்கோபத்துடன் பார்த்துவிட்டு "விடு!" என்று கையை உதறினார். அதற்குள் பிக்ஷு இரண்டு எட்டில் நீந்திச் சென்று கன்றுக்குட்டியின் முன்னங்கால்கள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். கன்றுக் குட்டியும் உயிர் மீதுள்ள இயற்கையான ஆசையினால் தலையை மட்டும் தண்ணீருக்கு மேலே வைத்துக் கொண்டிருக்க பிரயத்தனப்பட்டது. பிக்ஷு கன்றுக் குட்டியைப் பிடித்து இழுத்துக்கொண்டு படகை நோக்கி வந்தார். இளவரசர் அவருக்குக் கை கொடுத்து உதவினார். இருவருமாகச் சேர்த்து முதலில் கன்றுகுட்டியைப் படகில் ஏற்றினார்கள். பின்னர் இளவரசரின் உதவியினால் ஆச்சாரிய பிக்ஷு படகில் ஏறிக் கொண்டார்.

இத்தனை நேரம் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்த கன்றுக் குட்டி ஒரு ஆட்டம் ஆடியதும், கால் தடுமாறித் தொப்பென்று விழுந்தது. நல்ல வேளையாக, படகின் உட்புறத்திலே தான் விழுந்தது. பிக்ஷு அதன் அருகில் உட்கார்ந்தார். கன்றின் தலையைத் தம் மடிமீது எடுத்து வைத்துக்கொண்டு அதைத் தடவிக் கொடுக்கத் தொடங்கினார்.

"குருதேவரே! சற்று முன்னால் சூடாமணி விஹாரத்தில் புத்த பகவானின் சரணங்களைப் பிடித்துக் கொண்டு பிராணத் தியாகம் செய்யப் பார்த்தீர்களே? அப்படித் தாங்கள் செய்திருந்தால், இந்த வாயில்லா ஜீவனை இப்போது காப்பாற்றியிருக்க முடியுமா?" என்று இளவரசர் கேட்டார்.

"ஐயா நான் செய்ய இருந்த குற்றத்தைச் செய்யாமல் தடுத்தீர்கள் அதற்காக நன்றியுடையேன். ஆம், இந்தக் கன்றின் உயிரைக் காப்பாற்றியது என் மனதுக்கு நிம்மதியளிக்கிறது. சூடாமணி விஹாரம் இடிந்து தகர்ந்து போய்விட்டால் கூட இனி அவ்வளவு கவலைப்பட மாட்டேன்" என்றார் பிக்ஷு.

"ஆச்சாரியரே! ஒரு கன்றின் உயிரைக் காப்பாற்றியதனாலே எப்படி மன நிம்மதி பெறுகிறீர்கள்? இன்று இந்தப் புயலினால் எவ்வளவு ஜீவன்கள் கஷ்டப்படுகின்றன? எவ்வளவு ஆயிரக்கணக்கான மக்கள் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள், கஷ்டப்படுகிறார்கள்? எத்தனை வாயில்லா ஜீவன்கள் ஆடு மாடுகள், குதிரைகள், பறவைகள், உயிரை இழக்க நேரிடும்? இந்தத் துன்பங்களுக்கெல்லாம் பரிகாரம் என்ன?" என்று கேட்டார் இளவரசர்.

"ஐயா! நம்மால் இயன்றதைத்தான் நாம் செய்யலாம். அதற்கு மேல் நாம் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. இயற்கை உற்பாதங்களைத் தடுக்கும் சக்தி நமக்கு இல்லை. புயற்காற்றை நாம் கட்டுப்படுத்த முடியுமா? பெருமழையைத் தடுக்க முடியுமா? அல்லது மழை பெய்யும்படி செய்யத்தான் முடியுமா? கடல் பொங்கி வரும்போது அதை நாம் தடுத்து நிறுத்திவிடமுடியுமா? ஆகா! கடல்களுக்கு அப்பால் உள்ள கீழைத் தேசங்களில் எரிமலை நெருப்பைக் கக்குவதையும், பூகம்பம் நேர்ந்து பூமி பிளப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். அவற்றுக்கெல்லாம் நாம் என்ன செய்யலாம்? நம் கண் முன்னால் கஷ்டப்பட்டுத் தவிக்கும் ஜீவனுக்கு உதவி செய்யத்தான் நம்மால் முடியும்!"

"குருதேவரே! இயற்கை உற்பாதங்கள் ஏன் உண்டாகின்றன? புயற்காற்றும் பூகம்பமும் ஏன் நிகழ்கின்றன? கொள்ளை நோய்கள் ஏன் வருகின்றன? அவற்றினால் மக்களும், மற்றப் பிராணிகளும் அடையும் துன்பங்களுக்குப் பொறுப்பாளி யார்? நம்மால் இயற்கையின் உற்பாதங்களைத் தடுக்க முடியாது. ஆனால் கடவுளால் கூட முடியாதா? கடவுள் ஏன் இத்தகைய உற்பாதங்களைத் தடுக்காமல் ஜீவராசிகள் இவற்றினால் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்?" என்று இளவரசர் கேட்டார்.

"பொன்னியின் செல்வா! தாங்கள் இப்போது கேட்ட கேள்விக்கு ஆதி காலம் முதல் மகான்களும், முனிவர்களும் விடை சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால் அவை எல்லோருக்கும் திருப்தி அளிப்பதாக இல்லை. ஆகையினாலேயே புத்த பகவான் கடவுளைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. கடவுளைப் பற்றிய ஆராய்ச்சியிலேயே இறங்கவில்லை. 'பிறருக்கு உதவி செய்யுங்கள். பிறருடைய கஷ்டங்களைப் போக்க முயலுங்கள், அந்த முயற்சியிலே தான் உண்மையான ஆனந்தம் அடைவீர்கள். அதிலிருந்து சுக துக்கங்களைக் கடந்த நிர்வாண நிலையை அடைவீர்கள்!' என்று புத்த பகவான் போதித்தார்" என்று பிக்ஷு கூறினார்.

படகு நந்தி மண்டபத்திலிருந்து மேற்குத் திசையில் திரும்பி, ஆனை மங்கலத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. பொன்னியின் செல்வரின் உள்ளம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. சற்று முன் பிக்ஷு வெளியிட்ட புத்த சமயக் கொள்கையோடு தமது முன்னோர்களின் சமயக் கொள்கையை அவர் மனத்துள்ளேயே ஒப்பிட்டுப் பார்த்தார். பிறருக்கு உதவி செய்யும் கடமையைச் சைவ, வைஷ்ணவ சமயங்களும் வற்புறுத்துகின்றன. 'பரோபகாரம் இதம் சரீரம்' என்ற மகா வாக்கியமும் இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் கடவுளிடம் நம்பிக்கை வைத்துப் பக்தி செய்யும் கடமையையும் நம் முன்னோர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள். கடவுளைச் சம்ஹார மூர்த்தியான ருத்திரனாகவும், கருணாமூர்த்தியான மகா விஷ்ணுவாகவும் உருவங் கொடுத்துப் போற்றியிருக்கிறார்கள். கடவுளுக்கு ஜகன்மாதா உருவம் கொடுத்து ஒரே சமயத்தில் அன்பே வடிவான உமாதேவியாகவும், கோர பயங்கர ரணபத்திரகாளியாக இருக்க முடியுமா? ஏன் இருக்க முடியாது? பெற்ற குழந்தையை ஒரு சமயம் தாயார் அன்புடன் கட்டித் தழுவிக் கொஞ்சுகிறாள். இன்னொரு சமயம் கோபித்துக் கொண்டு அடிக்கவும் செய்கிறாள். ஏன் அடிக்கிறாள் என்பது சில சமயம் குழந்தைக்குப் புரிவதில்லை. ஆனால் அடிக்கும் தாயாருக்குத் தான் பெற்ற குழந்தையிடம் அன்பு இல்லை என்று சொல்ல முடியுமா?...

இருட்டுகிற சமயத்தில் படகு ஆனைமங்கலத்திலிருந்த சோழ மாளிகையை அணுகியது. பொங்கி வந்த கடல் அந்த மாளிகையை எட்டவில்லையென்பதை படகில் வந்தவர்கள் கண்டார்கள். அரண்மனைக்கருகில் அமைந்திருந்த அலங்காரப் படித்துறையில் கொண்டுபோய் முருகய்யன் படகை நிறுத்தினான். அதுவரைக்கும் இயற்கையும் படகில் சென்றவர்களிடம் ஓரளவு கருணை செய்தது. பெரும் புயல் அடித்துக் கடல் பொங்கி வந்தாலும், பெருமழை மட்டும் பெய்யத் தொடங்கவில்லை. சிறு தூற்றலோடு நின்றிருந்தது.

படகு அரண்மனை ஓரத்தில் வந்து நின்ற பிறகுதான் பெருமழை பிடித்துக் கொண்டு பெய்ய ஆரம்பித்தது.

ஆனைமங்கலத்து அரண்மனைக் காவலன் அரண்மனையின் முன் வாசலில் கையில் ஒரு தீவர்த்தியைப் பிடித்துக் கொண்டு நின்றான். சுற்றுப்புறங்களிலிருந்து அன்றிரவு அடைக்கலம் புகுவதற்காக ஓடி வந்திருந்த ஜனங்களோடு அவன் பேசிக் கொண்டிருந்தான். படகு ஒன்று வந்து படித்துறையில் நின்றதைக் கண்டதும் காவலன் தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தான். பொன்னியின் செல்வரின் திருமுகம் அவன் கண்ணில் பட்டது. உடனே மற்றதையெல்லாம் மறந்து விட்டுப் படித்துறையை நோக்கி ஓட்டமாக ஓடினான்.

இதற்குள் படகிலிருந்து இளவரசரும், ஆச்சாரிய பிக்ஷுவும் படிக்கட்டில் இறங்கினார்கள். கன்றை மெள்ளப் பிடித்துக் கரையில் இறக்கி விட்டார்கள். காவலன் இளவரசரின் காலில் விழப்போனான். அவர் அவனைப் பிடித்துத் தடுத்தார். காவலன் கையிலிருந்த தீவர்த்தி கால்வாயில் விழுந்து ஒரு கணம் சுடர் விட்டு எரிந்து விட்டு மறைந்தது.

"இளவரசே! சூடாமணி விஹாரத்தைப் பற்றி நானே கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்! தாங்கள் இங்கே வந்து விட்டது மிகவும் நல்லதாய்ப் போயிற்று" என்றான் காவலன்.

"நான் சூடாமணி விஹாரத்தில் இருப்பது உனக்குத் தெரியுமா?"

"தெரியும், ஐயா! இளைய பிராட்டியும், கொடும்பாளூர் இளவரசியும் வந்திருந்தபோது தெரிந்துகொண்டேன். யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று இளைய பிராட்டி பணித்துவிட்டுச் சென்றார்..."

"அதை இன்னமும் நீ நிறைவேற்றத்தான் வேண்டும். மாளிகை வாசலில் கூடியிருப்பவர்கள் யார்?"

"கடற்கரையோரத்துக் கிராமங்களில் கடல் புகுந்து விட்டதால் ஓடி வந்தவர்கள். இரவு தங்குவதற்கு இடங் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அச்சமயம் தாங்கள் வந்தீர்கள், அவர்களை விரட்டி விடுகிறேன்..."

"வேண்டாம்! வேண்டாம்! அவர்கள் எல்லோருக்கும் இருக்கவும் படுக்கவும் இடங்கொடு உணவுப் பொருள்கள் இருக்கும் வரையில் சமையல் செய்து சாப்பிடவும் கொடு. ஆனால் என்னைப் பற்றி அவர்களிடம் சொல்ல வேண்டாம். உன் தீவர்த்தி கால்வாயில் விழுந்து அணைந்ததும் நல்லதாய்ப் போயிற்று. எங்களை வேறு வழியாக அரண்மனை மேன்மாடத்துக்கு அழைத்துக்கொண்டு போ!" என்றார் இளவரசர்.

அவர்கள் அரண்மனைக்குள் பிரவேசித்ததும் புயல் காற்றோடு பெருமழையும் சேர்ந்து 'சோ' என்று கொட்டத் தொடங்கியதும் சரியாயிருந்தன.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com