Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 5
கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம் : தியாக சிகரம்

3. கடல் பொங்கியது!

விஹாரத்துக்கு வெளியே ஆச்சாரிய பிக்ஷு கண்ட காட்சி அவருக்குக் கதி கலக்கம் உண்டாக்குவதாயிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தோற்றமும் அவர்கள் போட்ட கூச்சலும் அவர்கள் ஆவேசங் கொண்டவர்கள் என்பதைக் காட்டின. அந்த ஆவேசத்தைக் குரோத வெறியாகச் செய்வது மிக எளிதான காரியம். பலர் கைகளில் வாள், வேல், தடி முதலிய ஆயுதங்களை வைத்திருந்தார்கள்.

இன்னும் சிலரின் கையில் கடப்பாரைகள் இருந்தன. பிக்ஷுக்கள் வழிக்கு வராவிட்டால் விஹாரத்தையே இடித்துத் தரைமட்டமாக்கி விடுவது என்று அவர்கள் உத்தேசித்திருந்தனர் போலும். அதற்கு வேண்டிய காரணம் இல்லாமலும் போகவில்லை. பராந்தகச் சக்கரவர்த்தியின் காலம் முதல் அடிக்கடி சோழ நாட்டுக்கும், ஈழ நாட்டுக்கும் யுத்தம் நடந்து வந்தது. சோழநாட்டு வீரர் பலர் இலங்கைப் போரில் மடிந்திருந்தார்கள். ஏதாவது ஒன்றைப் பிடிக்கவில்லையென்றால், அதைச் சேர்ந்த மற்றவையும் பிடிக்காமல் போவது மக்களின் இயல்பு அல்லவா? இலங்கைப் போர்கள் காரணமாகச் சோழ மக்களுக்கு ஏற்பட்டிருந்த ஆத்திரம் அத்தீவில் வியாபகமாயிருந்த பௌத்த மதத்தின் மேலும் ஓரளவு திரும்பியிருந்தது. ஏதாவது ஒரு சிறிய காரணம் ஏற்பட்டால் போதும். தமிழகத்தில் மிஞ்சியிருந்த பௌத்த விஹாரங்கள் மீதும் அவற்றில் வாழ்ந்த பிக்ஷுக்கள் மீதும் பழி தீர்த்துக்கொள்ளப் பாமர மக்கள் சித்தமாயிருந்தார்கள்.

அத்தகைய சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டு விட்டதாக ஆச்சாரிய பிக்ஷு கருதினார். யாரோ தீயநோக்கம் கொண்டவர்கள் இவ்விதம் பாமர மக்களின் ஆத்திரத்தை தூண்டிவிட்டிருக்கிறார்கள். புத்த பகவானுடைய கருணையினாலேதான் இந்தப் பேராபத்திலிருந்து மீள வேண்டும்!... ஆச்சாரிய பிக்ஷுவைப் பார்த்ததும் அந்த ஜனக் கூட்டத்தின் ஆரவாரம் முன்னை விட அதிகமாயிற்று.

"பொன்னியின் செல்வரைக் கொடுத்து விடுங்கள். இல்லாவிடில் விஹாரத்தை இடித்துத் தரை மட்டமாக்கி விடுவோம்" என்பவை போன்ற மொழிகள் ஏக காலத்தில் ஆயிரக்கணக்கான குரோதம் நிறைந்த குரல்களிலிருந்து வெளியாகிச் சமுத்திர கோஷத்தைப் போல் கேட்டது. அதே சமயத்தில் கடலின் பேரோசையும் அதிகமாகிக் கொண்டிருப்பதை ஆச்சாரிய பிக்ஷு கவனித்துக் கொண்டார். இளம் பிக்ஷு கூறியது உண்மைதான். அளவிலாத வேகம் பொருந்திய கொடும்புயல். கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதி சீக்கிரத்தில் புயல் கரையைத் தாக்கப்போகிறது. இந்த மக்களால் ஏற்படும் அபாயத்துக்குப் பிழைத்தாலும், புயலின் கொடுமையிலிருந்து விஹாரம் தப்பிப் பிழைக்க வேண்டும் என்ற கவலை பிக்ஷுவுக்கு ஏற்பட்டது.

இதற்குள் வாலிப பிக்ஷு கையமர்த்திச் சமிக்ஞை செய்து ஆத்திரம் கொண்ட மக்களின் கூட்டத்தில் சிறிது இரைச்சல் அடங்கும்படி செய்திருந்தார்.

"மகா ஜனங்களே! எங்கள் தலைவரை அழைத்து வந்திருக்கிறேன், சற்று நிம்மதியாயிருங்கள். நீங்கள் இத்தனை பேரும் இந்த விஹாரத்துக்குள் ஒரே சமயத்தில் புக முடியாது அல்லவா? உங்களில் யாராவது ஒருவரையோ, இரண்டு பேரையோ குறிப்பிடுங்கள்! அவர்கள் விஹாரத்துக்குள் வந்து தேடிப் பார்க்கட்டும்! திரும்பி வந்து அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்! இது உங்களுக்குச் சம்மதந்தானே? உங்களில் யார் என்னுடன் விஹாரத்துக்குள் வருகிறீர்கள்?" என்று வினவினார்.

"கூட்டத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் "நான் வருகிறேன்" "நான் வருகிறேன்" என்று கூச்சலிட்டார்கள்.

இளம் பிக்ஷு மறுபடியும் கையமர்த்தி, "எல்லோரும் சேர்ந்து கூச்சலிடுவதினால் என்ன பயன்? யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். நான் யோசனை சொல்லுகிறேன். சமீப காலத்தில், சென்ற ஒரு மாத காலத்துக்குள் பொன்னியின் செல்வரைப் பார்த்தவர் உங்களில் யாராவது இருந்தால் சொல்லுங்கள். அப்படிப்பட்டவரை நான் அழைத்துப் போகிறேன். இளவரசரை அடையாளம் கண்டு கொள்ளவும் சௌகரியமாயிருக்கும்!" என்றார்.

கூட்டத்தின் முன்னணியில் நின்று கொண்டு ஒவ்வொரு தடவையும் பெரும் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த ராக்கம்மாள், "இதோ நாங்கள் பார்த்திருக்கிறோம்" என்று கூவினாள்.

படகோட்டியைப் பார்த்து இளம் பிக்ஷு, "அப்பனே! இவள் கூறுவது சரியா?" என்று கேட்டார்.

முருகய்யன் "சுவாமி! இவள் கூறுவது முழுவதும் சரியல்ல. இவள் இளவரசரைச் சமீபத்தில் பார்க்கவில்லை. நான் சென்ற ஒரு மாதத்துக்குள்ளே ஈழநாட்டில் பொன்னியின் செல்வரைப் பார்த்தது உண்மை. நான் அறியாமல் அவருக்குச் செய்த அபகாரத்துக்காகக் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன். அச்சமயம் அவர் கருணையுடன் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தது, நேற்று நடந்தது போல் என் மனத்தில் பதிந்திருக்கிறது. அவரை நான் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்" என்று சொன்னான்.

"அப்படியானால் நீதான் இந்த வேலைக்குத் தகுதியானவன். உன் மனையாள் சொல்வதிலும் அவ்வளவு தவறு கிடையாது. நீ பார்த்தது இவள் பார்த்தது போலத்தான் என்று எண்ணிச் சொல்லியிருக்கிறாள். இப்போதும் நீ விஹாரத்துக்குள் தேடிப் பார்த்து விட்டு வந்து சொன்னால் இவள் ஒப்புக்கொள்வாள். பிக்ஷுக்கள் தவம் செய்யும் புத்த விஹாரத்துக்குள் பெண் பிள்ளைகளை விடுகிறதில்லையென்பது உன் மனையாளுக்குத் தெரிந்து தானிருக்கும். ஆகையால், நீ வா இங்கே!" என்று இளம் பிக்ஷு கூறினார்.

பிறகு விஹாரத்தின் முன் வாசற் படிகளில் இறங்கிச் சென்று முருகய்யனுடைய ஒரு கரத்தைப் பற்றி அழைத்துக் கொண்டு மறுபடியும் படிகளில் ஏறினார். மக்களைப் பார்த்து, "இதோ இந்தப் படகோட்டி முருகய்யன் சமீபத்தில் இளவரசரைப் பார்த்திருக்கிறானாம். இவனை உள்ளே அழைத்துப் போகிறேன். விஹாரம் முழுதும் தேடிப் பார்த்து விட்டுத் திரும்பி வந்து சொல்வான். உங்கள் எல்லோருக்கும் இது சம்மதந்தானே!" என்றார்.

மக்களின் கூட்டத்திலிருந்து சம்மதக் குரல் அவ்வளவு வேகத்துடன் வரவில்லை. சிலர் "சம்மதம் என்று முணுமுணுத்தார்கள். மற்றவர்கள் ஒருவரோடொருவர் "இதில் ஏதாவது மோசம் இருக்குமோ?" என்று இரகசியமாக பேசிக் கொண்டார்கள். அவர்கள் இரகசியம் பேசிய குரல்கள் சேர்ந்து கடலின் இரைச்சலுடன் போட்டியிட்டன.

இளம் பிக்ஷு அதைக் கவனித்து விட்டு, பெரிய குரலில் "மகா ஜனங்களே! இதோ எங்கள் ஆச்சாரியரும் வந்திருக்கிறார். உங்களுக்கு ஏதேனும் கேட்க வேண்டியது இருந்தால் அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதற்குள் இந்த மனிதனை நான் அழைத்துப் போய் விஹாரத்தைச் சுற்றிக் காண்பித்து விட்டு வருகிறேன்" என்று சொல்லிப் படகோட்டி முருகய்யனை அழைத்துக் கொண்டு சென்றார்.

கம்பீரமான தோற்றத்துடனும் சாந்தம் குடி கொண்ட முகத்துடனும் பொலிந்த ஆச்சாரிய பிக்ஷுவைப் பார்த்ததும் மக்களின் மனத்தில் சிறிது பயபக்தி உண்டாயிற்று. அவரிடம் அதிகப் பிரசங்கமான கேள்வி எதுவும் கேட்பதற்கு யாரும் துணிவு கொள்ளவில்லை.

ஆச்சாரிய பிக்ஷு சற்று நேரம் அந்த ஜனக்கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், அவர்களுக்குப் பின்னால் சற்றுத் தூரத்தில் தெரிந்த கடலையும் நோக்கினார்.

"மகா ஜனங்களே! நீங்கள் எல்லோரும் இங்கே வந்து கூடியிருப்பதின் நோக்கத்தை அறிந்து கொண்டேன். சக்கரவர்த்தியின் திருக்குமாரரும் பொன்னியின் செல்வருமான இளவரசர் அருள்மொழிவர்மரிடம் உங்களுக்கெல்லாம் எவ்வளவு அன்பு உண்டு என்பது இன்றைக்கு எனக்கு நன்றாய்த் தெரிந்தது. உங்களைப் போலவே அடியேனும் பொன்னியின் செல்வரிடம் அன்புடையவன் தான். அருள்மொழிவர்மர் கடலில் மூழ்கி விட்டார் என்ற செய்தி வந்து அன்று காலையில் நான் இதே இடத்தில் நின்று கண்ணீர் அருவி பெருக்கினேன். புத்த தர்மத்தில் பற்றுக் கொண்டவர் எவரும் அருள்மொழிவர்மரிடம் அன்பு கொள்ளாமல் இருக்கமுடியாது. புத்த தர்மத்துக்கும், புத்த பிக்ஷுக்களுக்கும் அவர் அத்தகைய மகத்தான உபகாரங்களைச் செய்திருக்கிறார். புத்தர்களின் புண்ணிய க்ஷேத்திரமாகிய அனுராதபுரத்தில் புத்த மன்னர்களின் காலத்தில் இடிந்து தகர்ந்து பாழான விஹாரங்களையும் ஸ்தூபங்களையும் திருப்பணி செய்து செப்பனிடுவதற்கு ஏற்பாடு செய்தவர். அப்படிப்பட்ட உத்தமரான இளவரசருக்கு எந்த வகையிலும் தீங்கு நேர நாங்கள் உடந்தையாக இருக்க முடியுமா? இளவரசருக்கு ஒன்றும் நேராமல் இருக்க வேண்டும். அவரைக் கடல் கொண்ட செய்தி பொய்யாயிருக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தோம். உங்களையெல்லாம் விடப் பொன்னியின் செல்வரிடம் நாங்கள் அன்புடையவர்களாயிருப்பதற்குக் காரணங்கள் உண்டு..."

இச்சமயத்தில் கூட்டத்தில் ஒருவன் குறுக்கிட்டு, "அதனாலே தான் எங்களுக்கு அச்சமாயிருக்கிறது. உங்களுடைய அன்பு அபரிமிதமாகப் போய் எங்கள் இளவரசரின் தலையை மொட்டையடித்துக் காவித் துணி கொடுத்துப் பிக்ஷுவாக்கி விடுவீர்களோ என்று பயப்படுகிறோம்!" என்றான். அவனைச் சுற்றி நின்றவர்கள் பலர் இதைக் கேட்டதும் கலீர் என்ற கேலிச் சிரிப்பு சிரித்தார்கள்.

ஆச்சாரிய பிக்ஷுவுக்கு எப்படியோ அச்சமயம் ஒருவித ஆவேசம் ஏற்பட்டு விட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களின் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பதற்கு ஒரே ஒரு நிச்சயமான வழி மட்டும் உண்டு என்பதை அவர் உள்ளம் உணர்த்தியது. உடனே முன் பின் யோசியாமல் தம் உள்ளத்தில் தோன்றியதைப் பின்வரும் மொழிகளில் சபதமாக வௌதயிட்டார்.

"சக்கரவர்த்தியின் திருக்குமாரரும் பொன்னியின் செல்வருமான இளவரசர் அருள்மொழிவர்மரைப் புத்த சமயத்தை மேற்கொள்ளும்படி தான் கோரமாட்டேன். அவரே முன்வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உலகை ஆளப்பிறந்தவரும், உங்கள் அன்பைக் கவர்ந்தவருமான கோமகனைத் தலையை மொட்டையடித்துக் காவித் துணி அளிக்கும் கைங்கரியத்தை நான் ஒரு நாளும் செய்யமாட்டேன். அதற்கு உடந்தையாகவும் இருக்க மாட்டேன். இவ்வாறு புத்த பகவானுடைய பத்ம சரணங்களின் மீது ஆணையாகச் சபதம் செய்கிறேன்! புத்தம் கச்சாமி! தர்மம் கச்சாமி! சங்கம் கச்சாமி!"

இடிமுழக்கம் போன்ற கம்பீரத்துடன் உணர்ச்சி ததும்பக் கூறிய இந்த மொழிகளைக் கேட்டதும் அங்கே கூடியிருந்த அத்தனை மக்களின் உள்ளங்களும் ஒரு பெரிய மாறுதலை அடைந்தன. பலர் கண்களில் கண்ணீர் ததும்பியது. சிறிது நேரம் நிசப்தம் நிலவியது.

ஆச்சாரிய பிக்ஷு தொடர்ந்து கூறினார்:- "சோழ நாட்டு மக்களின் கண்ணுக்குக் கண்ணான இளவரசரைக் குறித்து நீங்கள் எல்லோரும் இவ்வளவு சிரத்தை கொண்டிருப்பது இயல்புதான். பொன்னியின் செல்வரைக் குறித்த கவலை இப்போது உங்களுக்குத் தீர்ந்து போயிருக்கலாம். இனிமேல் உங்கள் குடும்பம், வீடு, வாசலைப் பற்றிச் சிறிது கவலை கொள்ளுங்கள். மகா ஜனங்களே! இது வரையில் நாம் இந்தப் பக்கத்திலேயே கண்டும் கேட்டுமிராத கொடும் புயல் நம்மை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அதோ, உங்கள் பின் பக்கமாகத் திரும்பிப் பாருங்கள்!"

ஜனங்கள் திரும்பிப் பார்த்தார்கள். பிக்ஷு கூறியபடியே அவர்களுடைய வாழ்க்கையில் என்றுமே காணாத அதிசயமான காட்சியைக் கண்டார்கள். அதிசயமான காட்சி மட்டுமன்று, பயங்கரமான காட்சியுந்தான். கடலானது பொங்கி மேலுயர்ந்து வானத்தில் மேலே மேலே வந்து கொண்டிருந்த கரிய கொண்டல்களைத் தொட்டுக் கொண்டிருந்தது. அந்தக் கரிய நிறத் தண்ணீர் மலையானது நின்ற இடத்தில் நிற்கவில்லை. மேலே மேலே நகர்ந்து வந்து கொண்டிருந்தது. ஜனங்கள் நின்ற இடத்திலிருந்து பார்க்கும் போது அந்த மலையானது அவர்கள் இருக்குமிடம் வரையில் வந்தால், அவர்கள் மட்டுமல்ல. சூடாமணி விஹாரமே மூழ்கிப் போவது திண்ணம் என்று தோன்றுகிறது.

இந்தக் காட்சியைப் பார்த்து மக்கள் பிரமித்து நின்றது, ஆச்சாரிய பிக்ஷு மறுபடியும், "அதோ, நீங்கள் எல்லாரும் வசிக்கும் நாகைப்பட்டினத்தைப் பாருங்கள்!" என்று சொன்னார்.

நாகைப்பட்டினம் நகரம் சூடாமணி விஹாரத்துக்குச் சிறிது வடதிசையில் அமைந்திருந்தது. வெகு தூரத்துக்கு வெகு தூரம் பரவியிருந்தது. கடற்கரையை அடுத்துப் பண்டக சாலைகள், சுங்கம் வாங்கும் கட்டிடங்கள் முதலியவை இருந்தன. அவற்றுக்கு அப்பால் ஜனங்கள் வசிக்கும் வீடுகள் ஆரம்பமாகிக் கிழக்கு மேற்கிலும், தெற்கு வடக்கிலும் சுமார் அரைக் காத தூரத்துக்கு மேலே பரவியிருந்தன.

கடல் பொங்கிப் பண்டக சாலைகளும், சுங்கச் சாவடிகளும் இருந்த இடத்தையெல்லாம் தாண்டிக் கொண்டு வந்து பட்டினத்தின் தெருக்களிலும் புகுவதற்கு அச்சமயம் ஆரம்பித்திருந்தது. கடலில் இருந்த படகுகளும், நாவாய்களும் எங்கேயோ ஆகாசத்தில் அந்தரமாகத் தொங்குவதுபோல் தண்ணீர் மலைகளின் உச்சியில் காட்சி அளித்து, இப்படியும் அப்படியும் ஆடிக் கொண்டிருந்தன. படகுகளின் பாய் மரங்கள் பேயாட்டம் ஆடிச் சுக்கு நூறாகப் போய்க் கொண்டிருந்தன.

"மகா ஜனங்களே! ஒரு காலத்தில் காவிரிப்பட்டினத்தைக் கடல் கொண்டது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அம்மாதிரியான விபத்து நமது நாகைப்பட்டினத்துக்கு வராமல் புத்த பகவான் காப்பாற்றுவாராக! ஆனாலும் நீங்கள் உடனே திரும்பிச் சென்று உங்கள் குழந்தை குட்டிகளையும், உடைமைகளையும் கூடுமானவரை காப்பாற்றிக் கொள்ள முயலுங்கள்!" என்று ஆச்சாரிய பிக்ஷு தழதழத்த குரலில் கூவினார்.

இதைக் கேட்டதும் அந்த ஜனக் கூட்டமானது கடல் அலை போலவே விரைந்து, நகரத்தை நோக்கி நகரலாயிற்று. முன்னணியில் நின்றவர்கள் ஓடத் தொடங்கினார்கள். பின்னால் நின்றவர்கள் அவர்களைத் தொடர்ந்து ஓடினார்கள். முதலில் கூட்டமாக நகர்ந்தார்கள். பிறகு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சில நிமிட நேரத்திற்குள் சற்று முன்னால் பெரும் ஜனத்திரள் நின்று கொண்டிருந்த இடம் வெறுமையாகக் காட்சி அளித்தது.

படகோட்டி முருகய்யனின் மனையாள் ராக்கம்மாள் மட்டும் நின்ற இடத்திலேயே நின்று "என் புருஷன்!" "என் புருஷன்!" என்று கத்தினாள்.

"தாயே! உன் புருஷனுக்கு, ஒன்றும் ஆபத்து நேராது. பத்திரமாகத் திரும்பி வந்து சேருவான். நீ உன்னைக் காப்பாற்றிக்கொள்!" என்றார் பிக்ஷு.

"இல்லை, இல்லை! என் புருஷனை விட்டு விட்டு, நான் எப்படிப் போவேன்? நான் கோவிலுக்குள் வருகிறேன்" என்றாள் ராக்கம்மாள்.

"கூடாது அம்மா! கூடாது! புத்த சந்நியாசிகள் வசிக்கும் விஹாரத்துக்குள் பெண்பிள்ளைகள் வரக்கூடாது! உனக்குத் தெரியாதா?" என்றார் பிக்ஷு.

இச்சமயத்தில் அந்த மாபெரும் ஜனக் கூட்டத்திலே ஓடாமல், பின் தங்கி நின்று கொண்டிருந்த மனிதன் ஒருவன் ராக்கம்மாளை அணுகி வந்தான். அவள் காதோடு ஏதோ சொன்னான். அவளுடைய கரத்தைப் பிடித்துக் கரகரவென்று இழுத்தான். அவள் அவனுடன் வேண்டா வெறுப்புடன் போகத் தொடங்கினாள்.

"ஆகா, இந்த மனிதன் யார்? இவனுக்கும் இந்தப் பெண்ணுக்கும் என்ன உறவு?" என்று எண்ணிய வண்ணம் ஆச்சாரிய பிக்ஷு விஹாரத்துக்குள் சென்றார். பொன்னியின் செல்வர் இருந்த இடத்தை அணுகினார்.

முருகய்யன் இதற்குள் அதிசயமெல்லாம் நீங்கப் பெற்றவனாய் இளவரசர் கூறுவதைப் பக்தியுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

"முருகா! இன்றிரவு நீ திரும்பி வந்து என்னைப் படகில் ஏற்றி ஆனைமங்கலத்துக்கு அழைத்துப்போக வேண்டும்" என்று இளவரசர் கூறினார்.

ஆச்சார்ய பிக்ஷு, "இளவரசே! இரவு வரையில் காத்திருக்க வேண்டியதில்லை. ஜனக்கூட்டம் கலைந்துவிட்டது. தாங்கள் இப்போதே புறப்பட்டுப் போகலாம்" என்று சொன்னார்.

பின்னர், வெளியில் நடந்தவற்றைச் சில வார்த்தைகளில் கூறினார். "சுவாமி! ஜனங்கள்தான் கலைந்து போய் விட்டார்களே! நான் எதற்காகப் போகவேண்டும்?" என்றார் இளவரசர்.

"அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? மேலும், பிக்ஷுக்களாகிய எங்கள் வாக்கை மெய்யாக்குவதாகச் சற்று முன் சொன்னீர்கள் அல்லவா? அதை நிறைவேற்றி அருள வேண்டும்!" என்றார் பிக்ஷு.

உண்மை என்னவென்றால் பொங்கி வரும் கடல் அந்த சூடாமணி விஹாரத்தை சிறிது நேரத்துக்கெல்லாம் முழுக அடித்து விடும் என்று பிக்ஷுவின் உள்ளத்தில் ஒரு பீதி உண்டாகியிருந்தது. ஆகையால் இளவரசரை அவசரமாக வெளியேற்ற விரும்பினார். ஆனைமங்கலம் கடற்கரையிலிருந்து கிழக்கே சற்றுத் தூரத்தில் இருந்தது. ஆகையினால் பொங்கி வரும் கடல் அவ்வளவு தூரம் போய் எட்ட முடியாது. எட்டினாலும் அங்குள்ள மிகப் பெரிய சோழ மாளிகை மூழ்கிவிடாது.

இளவரசர் பிக்ஷுவின் கருத்தை ஏற்றுக் கொண்டார். உடனே படகு கொண்டு வருமாறு கட்டளை பிறந்தது. இதற்கிடையில் அங்கே கூடியிருந்த புத்த பிக்ஷுக்களைப் பார்த்து ஆச்சாரிய பிக்ஷு, "நாம் கருணையே வடிவமான புத்த பகவானைச் சேர்ந்தவர்கள். இப்போது நாகைப்பட்டினத்து மக்களுக்குப் பெரும் சோதனை நேரிட்டிருக்கிறது. கடல் பொங்கி நகரத்துக்குள் வேகமாக புகுவதைக் கண்டேன். புயலின் வேகத்தினால் வீடுகளின் கூரைகள் சிதறிப் பறக்கின்றன. மரங்கள் தடதடவென்று முறிந்து விழுகின்றன. நாகைப்பட்டினத்திலும், அக்கம் பக்கத்திலும் வசிக்கும் மக்களில் வயோதிகர்களும் குழந்தைகளும் எத்தனையோ பேர் தப்பிக்கும் வகை அறியாது தவித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் அனைவரும் நாலாபுறமும் சென்று உங்கள் கண் முன்னால் கஷ்டப்படுகிறவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். குழந்தைகளையும் வயோதிகர்களையும் முதலில் கவனியுங்கள். சமுத்திர ராஜனின் கோபத்திலிருந்து எத்தனை பேரைக் காப்பாற்றலாமோ காப்பாற்றுங்கள்! நான் வயதானவன். இங்கேயே இருந்து மாலை நேரத்துப் பூஜையைக் கவனித்துக் கொள்கிறேன்" என்றார்.

இதைக் கேட்டதும் பிக்ஷுக்கள் அங்கிருந்து அகன்று சென்றார்கள். கால்வாயில் படகு வந்து சேர்ந்தது. இளவரசர் ஆச்சாரிய பிக்ஷுவுக்கு வணக்கம் செலுத்தி விடைபெற்று அதில் ஏறிக் கொண்டார். முருகய்யனும் ஏறிப் படகு தள்ளத் தொடங்கினான். படகு கண்ணுக்கு மறையும் வரையில் பிக்ஷு அதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். அவருடைய முகத்தைச் சுற்றி அபூர்வமான ஜோதி ஒன்று பிரகாசப்படுத்திக் கொண்டிருந்தது.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com