Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 3
கல்கியின் பொன்னியின் செல்வன்

மூன்றாம் பாகம் : கொலை வாள்

9. ஓடத்தில் மூவர்


பொழுது புலர்ந்தது, கருநிற அழகியான இரவெனும் தேவி உலக நாயகனை விட்டுப் பிரிய மனமின்றிப் பிரிந்து செல்ல நேர்ந்தது. நாயகனைத் தழுவியிருந்த அவளுடைய கரங்கள் இலேசாகக் கழன்று விழுந்தன. வாழ்க்கையிலே கடைசி முத்தம் கொடுப்பவளைப் போல் கொடுத்து விட்டு இரவெனும் தேவி இன்னும் தயங்கி நின்றாள். "மாலையில் மறுபடியும் சந்திப்போம். நாலு ஜாம நேரந்தானே இந்தப் பிரிவு? சந்தோஷமாகப் போய்வா!" என்றது உலகம். இரவு தயங்கித் தயங்கி உலகத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு சென்றது.

உள்ளத்திலே அன்பில்லாத கள்ளக் காதலனைப் போல் இரவு பிரிந்து சென்றதும் உலகம் மகிழ்ச்சியினால் சிலிர்த்தது. "ஆகா; விடுதலை!" என்று ஆயிரமாயிரம் பறவை இனங்கள் பாடிக் களித்தன. மரங்களிலும், செடிகளிலும் மொட்டுக்கள் வெடித்து மலர்ந்தன. எங்கிருந்தோ வண்டுகள் மந்தை மந்தையாக வந்து இதழ் விரிந்த மலர்களைச் சூழ்ந்து கொண்டு இன்னிசை பாடிக் களித்தன. விதவிதமான வர்ணச் சிறகுகள் உள்ள தட்டாரப் பூச்சிகள் நாலா பக்கங்களிலும் ஆனந்தக் கூத்தாடின.

கீழ்வானத்தில் பொன்னிறம் கண்டது. வானச் சுடர்கள் ஒவ்வொன்றாக ஒளி மங்கி மறைந்தன. இதுவரையில் வானவீதியில் பவனி வந்து கொண்டிருந்த பிறைச் சந்திரன் "நிற்கட்டுமா? போகட்டுமா?" என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

ஓடையில் படகு மெள்ள மெள்ளச் சென்று கொண்டிருந்தது. பட்சிகளின் கோஷ்டி கானத்தோடு துடுப்பு தண்ணீரைத் தள்ளும் சலசல சப்தமும் பூங்குழலியின் செவிகளில் விழுந்தது. திடுக்கிட்டுக் கண் விழித்தாள். ஒரு கிளையில் வெடித்த இரண்டு அழகிய நீலநிற மொட்டுக்கள் ஒருங்கே மலர்ந்தது போல் அவளுடைய கண்ணிமைகள் திறந்தன. எதிரே இளவரசரின் பொன்முகம் தோன்றியது. இன்னும் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். தூக்கந்தானா? அல்லது சுரவேகத்தில் இன்னமும் உணர்ச்சியற்றிருக்கிறாரா? தெரியவில்லை. எனினும் அவருடைய திருமுகம் எவ்வளவு பிரகாசமாயிருக்கிறது!

அப்பால் சேந்தன் அமுதன் துடுப்புத் தள்ளிக் கொண்டிருந்தான்.

"பூங்குழலி! ஏன் அதற்குள் விழித்துக் கொண்டாய்? இன்னும் சற்று நேரம் தூங்குவதுதானே?" என்றான்.

பூங்குழலி புன்னகை பூத்தாள். முகத்திலிருந்த இதழ்களிலே மட்டும் அவள் புன்னகை செய்யவில்லை. அவளுடைய திருமேனி முழுதும் குறுநகை பூத்தது.

காட்டிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்தவள் பூங்குழலி. ஆயினும் பட்சிகளின் கானமும், வண்டுகளின் கீதமும் இவ்வளவு இனிமையாக அவளுடைய செவிகளில் என்றைக்கும் தொனித்ததில்லை.

"அத்தான்! உதய ராகத்தில் ஒரு பாட்டுப்பாடு!" என்றாள் பூங்குழலி.

"நீ இருக்குமிடத்தில் நான் வாயைத் திறப்பேனா? நீ தான் பாடு!" என்றான் சேந்தன் அமுதன்.

"இராத்திரி இருளடர்ந்த காட்டில் பாடினாயே?"

"காரிய நிமித்தமாகப் பாடினேன். இப்போது நீ பாடு!"

"எனக்கும் பாட வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது. ஆனால் இளவரசருக்குத் தொந்தரவாயிருக்குமல்லவா?"

"எனக்குத் தொந்தரவு ஒன்றுமில்லை. இரண்டு பேரும் சேர்ந்து பாடுங்கள்!" என்றார் அருள்மொழிவர்மர்.

பூங்குழலி வெட்கத்தினால் தலை குனிந்து கொண்டாள்.

"படகு எங்கே போகிறது?" என்று இளவரசர் கேட்டார்.

"நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்திற்கு" என்றாள் பூங்குழலி.

"அப்படியானால் இராத்திரி நான் கண்டது கேட்டதெல்லாம் கனவல்லவா? உண்மைதானா?"

"ஆம், ஐயா! இதோ இவர்தான் தங்கள் தமக்கையாரிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்."

"இளையபிராட்டி கூறியதையெல்லாம் விவரமாகச் சொல்லு, அமுதா! என்னைப் புத்த சங்கத்தில் சேர்ந்து விடும்படிதானே என் தமக்கை சொல்லி அனுப்பினார்?"

இதற்கு என்ன விடை சொல்வதென்று அமுதன் தயங்கிய போது, குதிரையின் காலடிச் சத்தம் கேட்டது. பூங்குழலியும் சேந்தன் அமுதனும் திடுக்கிட்டார்கள்.

இளவரசரின் முகத்தில் ஒரு மாறுதலும் இல்லை.

"என் நண்பன் எங்கே? வாணர் குலத்து வீரன்?" என்று இளவரசர் கேட்டார். கேட்டுவிட்டுக் கண்கள் மூடிக் கொண்டார்.

சிறிது நேரத்துக்குள் குதிரைமீது வந்தியத்தேவன் தோன்றினான். படகு நின்றது, வந்தியத்தேவன் குதிரைமீதிருந்து இறங்கி வந்தான்.

"ஒன்றும் விசேஷமில்லை. நீங்கள் பத்திரமாயிருக்கிறீர்களா என்று பார்த்துவிட்டுப் போக வந்தேன். இனி அபாயம் ஒன்றுமில்லை" என்றான் வந்தியத்தேவன்.

"மந்திரவாதி?" என்று பூங்குழலி கேட்டாள்.

"இந்தப் படகில் இளவரசர் இருக்கிறார் என்ற சந்தேகமே அவனுக்கில்லை. நான் கூறியதை அவன் அப்படியே நம்பி விட்டான்!"

"அவனைப் பார்த்தாயா?"

"பார்த்தேன், ஆனால் அவனுடைய பிசாசைப் பார்த்ததாகப் பயந்து பாசாங்கு செய்தேன்."

"உன்னைப் போல பொய் சொல்லக் கூடியவனை நான் பார்த்ததேயில்லை."

"பொய் என்று சொல்லாதே! கற்பனா சக்தி என்று சொல்லு. இளவரசர் எப்படியிருக்கிறார்?"

"நடுநடுவே விழித்துக்கொண்டு இரண்டு வார்த்தை சொல்கிறார்; அப்புறம் நினைவு இழந்து விடுகிறார்."

"இந்தச் சுரமே அப்படித்தான்."

"எத்தனை நாளைக்கு இருக்கும்?"

"சில சமயம் ஒரு மாதம்கூட இருக்கும். சூடாமணி விஹாரத்தில் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்த்து விடுங்கள். பிக்ஷுக்கள் வைத்தியம் செய்தால், இரண்டு வாரத்தில் குணப்படுத்தி விடுவார்கள். ஜாக்கிரதை, பூங்குழலி! உன்னை நம்பித்தான் இளவரசரை ஒப்படைத்து விட்டுப் போகிறேன். உன் அத்தான் எங்கேயாவது கோவில் கோபுரத்தைக் கண்டால், தேவாரம் பாடிக்கொண்டு சுவாமி தரிசனத்துக்குப் போய் விடுவான்!"

சேந்தன்அமுதன், "உன்னோடு பழகிய பிறகு அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். சிவ கைங்கரியம் செய்யும் ஆசைகூட எனக்குக் குறைந்துவிட்டது!" என்றான்.

"என்னால் குறைந்துவிட்டதா? அல்லது இந்தப் பெண்ணினாலா? உண்மையைச் சொல்!"

சேந்தன் அமுதன் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் "குதிரையை நான் சொன்ன இடத்தில் கண்டுபிடித்தாயா?" என்று கேட்டான்.

"குதிரை என்னைக் கண்டுபிடித்தது. இது நான் உன்னிடம் தஞ்சையில் விட்டு வந்த குதிரை அல்லவா?"

"ஆமாம்."

"இருட்டில் இது அடர்ந்த காட்டுக்குள்ளே என்னைப் பார்த்துவிட்டுக் கனைத்தது. அராபியர்களிடம் நான் அகப்பட்டுக் கொண்டதில் ஒரு விஷயம் தெரிந்து கொண்டேன், அமுதா! குதிரைகளை வெறுங்காலோடு ஓடச்செய்வது பாவம். குளம்புக்கு அடியில் இரும்புக் கவசம் அடித்து ஓட்டவேண்டும். முதன் முதலில் நான் பார்க்கும் கொல்லுப்பட்டறையில் இதன் குளம்புக்குக் கவசம் அடிக்கச் சொல்லப்போகிறேன். சரி, சரி! அதையெல்லாம் பற்றிப் பேச நேரமில்லை. மறுபடியும் உங்களையும் இளவரசரையும் பார்ப்பேனோ என்னமோ, தெரியாது. இளவரசர் மறுபடி விழித்தால் நான் பழையாறைக்குப் போகிறேன் என்று சொல்லுங்கள். அங்கிருந்து விரைவில் செய்தி அனுப்புவதாகவும் சொல்லுங்கள். அப்போதுதான் நிம்மதியாக இருப்பார்."

வந்தியத்தேவன் குதிரையைத் திருப்பிவிட்டுக் கொண்டு போனான். விரைவில் இவர்களுடைய பார்வையிலிருந்து அவன் மறைந்தான்.

இருபுறமும் தாழம் புதர்கள் அடர்ந்திருந்த ஓடைக் காலின் வழியாகப் படகு போய்க் கொண்டிருந்தது. பொன்னிறத் தாழம்பூக்களும், தந்த வர்ண வெண் தாழம்பூக்களும் இருபக்கமும் செறிந்து கிடந்தன. அவற்றின் நறுமணம் போதையை உண்டாக்கிற்று. சில இடங்களில் ஓடைக் கரையில் புன்னை மரங்கள் வளர்ந்திருந்தன. சில இடங்களில் கடம்ப மரங்களும் இருந்தன. முத்துநிறப் புன்னை மலர்களும், குங்கும வர்ணக் கடம்ப மலர்களும் ஓடைக் கரைகளில் சொரிந்து கிடந்தன.

பூலோகத்திலிருந்து புண்ணியசாலிகள் சொர்க்கத்திற்குப் போகும் பாதை ஒன்று இருந்தால், அது இப்படித்தான் இருக்கும் என்று பூங்குழலிக்குத் தோன்றியது.

இடையிடையே கிராமம் தென்பட்ட இடத்தில் சேந்தன் அமுதன் சென்று இளவரசருக்குப் பாலும், பூங்குழலிக்கு உணவும் வாங்கிக் கொண்டு வந்தான்.

இளவரசர் கண்விழித்த போதெல்லாம் பூங்குழலி சற்று விலகி நின்றாள். நேருக்கு நேர் அவரைப் பார்க்க முடியாமல் அங்குமிங்கும் பார்த்தாள். அவர் உணர்விழந்திருந்த நேரங்களில் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சேந்தனுடன் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டுமிருந்தாள். சில சமயம் இரண்டு பேரும் சேர்ந்து பாடிக் களித்தார்கள்.

சேந்தன் அமுதன் உணவு தேடிக் கிராமங்களுக்குச் சென்ற சமயங்களில் பூங்குழலி இளவரசரின் நெற்றியைத் தடவிக் கொடுத்தும், தலையைக் கோதிவிட்டும் பணிவிடை செய்தாள். அப்போதெல்லாம் அவள் உள்ளம் பொங்கி, உடல் சிலிர்த்து, பரவச நிலையிலிருந்தாள். இம்மாதிரி அவள் எத்தனை எத்தனையோ பூர்வ ஜன்மங்களில் அவருக்குப் பணிவிடை செய்தது போன்ற உணர்வு தோன்றியது. உருவமில்லாத ஆயிரமாயிரம் நினைவுகள் இறகுகளைச் சடசடவென்று அடித்துக் கொண்டு அவளுடைய உள்ளத்தில் கும்பல் கும்பலாகப் புகுந்து வெளியேறிக் கொண்டிருந்தன.

ஒரு பகலும் ஓர் இரவும் அவர்கள் அந்த ஓடைக்கால் வழியாகப் படகில் சென்றார்கள். பூங்குழலியும், சேந்தனும் முறை போட்டுக்கொண்டு அவ்வப்போது சிறிது நேரம் கண்ணயர்ந்தார்கள். கண்ணயர்ந்த நேரத்தில் உருவந் தெரியாத இன்பக் கனவுகள் பலவற்றைப் பூங்குழலி கண்டாள்.

மறுநாள் சூரியோதய நேரத்தில் உலகமே பொன்னிறமாக ஜொலித்த வேளையில், படகு நாகைப்பட்டினத்தை அடைந்தது. நாகைப்பட்டினத்தின் அருகில் அந்த ஓடையிலிருந்து ஒரு கிளை பிரிந்து சூடாமணி விஹாரத்திற்கே நேராகச் சென்றது. அந்தக் கிளை வழியில் படகைக் கொண்டு போனார்கள். புத்த விஹாரத்தின் பின்புறத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள்.

அச்சமயம் அந்தப் புகழ்பெற்ற சூடாமணி விஹாரத்தில் ஏதோ குழப்பம் நேர்ந்து கொண்டிருந்ததாகத் தோன்றியது. விஹாரத்தின் வாசலில் ஜனக்கூட்டத்தின் இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. பிக்ஷுக்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

படகிலிருந்து மூவரும் கரையில் இறங்கினார்கள். சேந்தன் அமுதன் தான் விஹாரத்துக்குச் சென்று, குழப்பத்தின் காரணம் என்னவென்று தெரிந்து வருவதாகச் சொல்லிவிட்டுப் போனான்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com