Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 3
கல்கியின் பொன்னியின் செல்வன்

மூன்றாம் பாகம் : கொலை வாள்

44. நந்தி வளர்ந்தது!

படகு அப்போது சென்று கொண்டிருந்த இடத்தில் கால்வாயின் கரைகள் இருபுறமும் ஓங்கி உயர்ந்திருந்தன. பூங்குழலி சுட்டிக் காட்டிய இடத்தில் கால்வாயின் ஓரமாகப் படித்துறை மண்டபம் ஒன்று காணப்பட்டது. படிகள் முடிந்து மண்டபம் தொடங்கும் இடத்தில் இரண்டு ஓரங்களிலும் இரண்டு நந்தி விக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிறந்த வேலைப்பாட்டுடனும் ஜீவகளையுடனும் விளங்கிய அந்த நந்திபகவானுடைய சிலைகளை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். இந்தச் சிலைகளின் முக்கியம் பற்றியே அம்மண்டபத்துக்கு 'நந்தி மண்டபம்' என்ற பெயர் ஏற்பட்டிருந்தது. வருஷத்துக்கு ஒரு முறை வஸந்த உற்சவத்தின் போது திருநாகைக்காரோணத்துக் காயாரோகண சுவாமியும் நீலாய தாட்சி அம்மனும் அந்த மண்டபத்திற்கு விஜயம் செய்து கொலு வீற்றிருப்பது வழக்கம். அப்போது மக்கள் திரள் திரளாக அங்கே வந்து சேர்வார்கள். உற்சவம் பார்த்துவிட்டு நிலா விருந்தும் அருந்தி விட்டுத் திரும்பிச் செல்வார்கள். நகரத்திலிருந்து சற்றுத் தூரத்திலிருந்தபடியால், மற்ற சாதாரண நாட்களில் இங்கே ஜனங்கள் அதிகமாக வருவதில்லை.

படகு, மண்டபத்தை நெருங்கியது. மண்டபத்தில் இருந்த இரு பெண்மணிகளையும் பார்த்த பிறகு இளவரசனுக்கு வேறு எதிலும் பார்வையும் செல்லவில்லை; கவனமும் செல்லவில்லை. படகு நெருங்கி வந்தபோது, இளையபிராட்டி குந்தவை படிகளில் இறங்கிக் கீழ்ப்படிக்கு வந்தாள். வானதியோ மண்டபத்திலேயே தூண் ஒன்றின் பின்னால் பாதி மறைந்தும் மறையாமலும் நின்று கொண்டிருந்தாள்.

படித்துறை அருகில் வந்து படகு நின்றது. இளவரசன் இறங்குவதற்குப் படகிலிருந்தபடி சேந்தன் அமுதனும், படியில் நின்றபடி இளைய பிராட்டியும் உதவி செய்தார்கள்.

சேந்தன் அமுதனும், பூங்குழலியும் படகைப் பின்னோக்கிச் செலுத்திக் கொண்டு போய்ச் சிறிது தூரத்தில் நிறுத்தினார்கள்.

"தம்பி! எப்படி மெலிந்து விட்டாய்!" என்று குந்தவை கூறியபோது, அவளுடைய கனிந்த குரலிலே கண்ணீர் கலந்து தொனித்தது.

பொன்னியின் செல்வன் "என் உடம்பு மெலிவு இருக்கட்டும், அக்கா! உன் முகம் ஏன் இப்படி வாடியிருக்கிறது? என்னைக் கண்டதும் உன் முகம் தாமரைபோல் மலருவது வழக்கமாயிற்றே? இன்றைக்கு ஏன் உன் முக சந்திரனை மேகம் மறைத்திருக்கிறது? உன் கண்கள் ஏன் கலங்கியிருக்கின்றன? ஆகா! உன் உள்ளத்தைப் புண்படுத்தி வேதனையளித்த எத்தனையோ காரியங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். இல்லாவிடில் எனக்கு அவ்வளவு அவசரமான ஓலை அனுப்பியிருக்கமாட்டாய்!" என்றான்.

"ஆம், தம்பி! எத்தனையோ அவசரமான விஷயங்கள் சொல்ல வேண்டும்; கேட்க வேண்டும். இலங்கையின் தங்கச் சிம்மாசனத்தை வேண்டாமென்று தள்ளிய வள்ளலே! இந்தக் கருங்கல் சிம்மாசனத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து கொள்!" என்றாள்.

பொன்னியின் செல்வன் உட்காரும் போது தமக்கையில் பாதங்களைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டான். குந்தவை அவனுடைய தலையைக் கரத்தினால் தொட்டு, உச்சி முகர்ந்தாள். அவளுடைய கண்ணில் மேலும் கண்ணீர் ததும்பியது.

இருவரும் உட்கார்ந்த பிறகு குந்தவை, "தம்பி! உன்னை இன்றைக்கு நான் இங்கு வருவித்திருக்கவே கூடாது. சூடாமணி விஹாரத்தின் தலைவர் உனக்கு உடம்பு நன்றாகக் குணமாகி விட்டது என்று செய்தி அனுப்பினார். அது சரியல்ல; சுரம் உன்னை வாட்டி எடுத்திருக்கிறது. ஆனால் உன்னைப் பார்க்காமலிருக்கவும் என்னால் முடியவில்லை. ஆனைமங்கலம் வந்த பிறகு ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகச் சென்று கொண்டிருந்தது!" என்றாள்.

"அக்கா! என்னை இங்கு வருவித்தது பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நீ மட்டும் படகு அனுப்பாமலிருந்தால் நான் இத்தனை நேரம் பழையாறைக்கே புறப்பட்டிருப்பேன். கடுமையான சுரத்திலேயுங்கூட உன்னுடைய ஓலைதான் என் மனதை வருத்திக் கொண்டிருந்தது. அந்த ஓலையை ஒருவரிடம் அனுப்பியிருந்தாயே? அந்த வாணர் குலத்து வந்தியத்தேவரைப் போன்ற தீரரை நான் பார்த்ததேயில்லை. எத்தனையோ விதமாக அவரைச் சோதித்தேன்; எல்லாவற்றிலும் தேறிவிட்டார். அவர் இப்போது எங்கே அக்கா?"

குந்தவையின் முக சந்திரனை மறைந்திருந்த மேகத்திரை சிறிது அகன்றது. பவள இதழ்கள் திறந்து முத்துப் பற்கள் தெரியும்படி புன்னகை பூத்து, "தம்பி! அவரைப் பற்றி இப்போது என்ன கவலை? வேறு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன!" என்றாள்.

"என்ன அப்படிப் பேசுகிறாய், அக்கா! உனக்கு அதிருப்தி அளிக்கும்படி நடந்து கொண்டாரா?"

"இல்லை, இல்லை! நான் ஏன் அதிருப்தி அடைய வேண்டும்? உன்னை அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பதாக வாக்களித்தார். அந்த வாக்கை அவர் நிறைவேற்றி விட்டார்....!"

"அதற்காக அவர் செய்த தந்திர மந்திரங்களையும், கைக்கொண்ட சூழ்ச்சி வித்தைகளையும் நினைக்க நினைக்க எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது, அவர் எங்கே, அக்கா! நீ இங்கு வந்திருக்கிறாய் என்று தெரிந்ததும், வந்தியத்தேவரும் உன்னுடன் வந்திருப்பார் என்று எண்ணினேன். எடுத்ததற்கெல்லாம் மூர்ச்சை போட்டு விழும் இந்த பெண்ணரசி அல்லவா வந்திருக்கிறாள்?"

"இவள் எவ்வளவு தைரியசாலி ஆகிவிட்டாள் என்பது உனக்குத் தெரியாது, தம்பி! நேற்று நமது முதன் மந்திரியின் யானை இவளைத் தன் துதிக்கையால் தூக்கி எறிந்தது. மேலே அம்பாரியில் இருந்த என் மடியிலேதான் எறிந்தது. ஆனால் அது அவளுக்குத் தெரியாது! அப்போது எவ்வளவு தைரியமாக இருந்தாள் என்பதை நீ பார்த்திருந்தால்...."

"போதும், உன்னுடைய தோழியின் புகழை நிறுத்திக் கொள்! என் நண்பரைப் பற்றிச் சொல்!"

"அவரைப் பற்றி என்ன சொல்வது? அவர் வந்த காரியம் ஆகிவிட்டது. திரும்பி அவருடைய எஜமானன் ஆதித்த கரிகாலனிடம் போய்விட்டார்."

"அப்படியானால், அவர் வாக்குத் தவறிவிட்டார். தாம் காஞ்சிக்குப் போகப் போவதில்லையென்றும், சோழ நாட்டிலேயே இருந்துவிடப் போவதாகவும் கூறினாரே?"

"அது எப்படிச் சாத்தியம்? சோழ நாட்டில் இருந்து அவர் என்ன செய்வது? இங்கே உள்ளவர்களின் கதியே நாளைக்கு என்ன ஆகும் என்று தெரியாமலிருக்கிறது. அவர் பேரில் உனக்கு அவ்வளவு பிரியமாயிருந்தால், சக்கரவர்த்தியிடம் தெரிவித்து அவருடைய முன்னோர்கள் ஆண்ட சிற்றரசை அவருக்குத் திருப்பிக் கொடுக்கும்படி செய்துவிட்டால் போகிறது!"

"சிற்றரசை வைத்துக்கொண்டு அந்த மகாவீரர் என்ன செய்வார், அக்கா?"

"எல்லாச் சிற்றரசர்களும் என்ன செய்கிறார்களோ, அதை அவரும் செய்கிறார்! நீதான் இலங்கா ராஜ்யம் வேண்டாம் என்று மறுத்தாய்; அதுபோல் அவரும் வேண்டாம் எனச் சொல்லுவார் என நினைக்கிறாயா?"

இளவரசன் இளநகை புரிந்த வண்ணம், "அக்கா! இலங்கை இராஜ்யம் வேண்டாம் என்று நான் சாட்சிகள் வைத்துக் கொண்டு மறுத்திருக்கிறேன். அப்படியிருந்தும் என்மீது குற்றம் சாட்டிச் சிறைப்படுத்திக் கொண்டு வரத் தந்தை கட்டளையிட்டிருக்கிறார்...."

"தம்பி! நீ இராஜ்யத்தை ஒப்புக்கொண்டிருந்தால் உன்னைச் சிறைப்படுத்திக் கொண்டு வரக் கட்டளை பிறந்திருக்காது! நீ சுதந்திர மன்னன் ஆகியிருப்பாய்! அப்போது உன்னை யார் சிறைப்படுத்த முடியும்?"

"தந்தையின் விருப்பத்துக்கு விரோதமாக அவ்விதம் நான் நடந்து கொண்டிருக்க வேண்டுமா?"

"பொன்னியின் செல்வா! நீ இலங்கை இராஜ்யத்தை ஒப்புக்கொண்டிருந்தால் தந்தை மகிழ்ச்சி அடைந்திருப்பார்! மிச்சமுள்ள சோழ சாம்ராஜ்யத்தை உன் தமையனுக்கும், மதுராந்தகனுக்கும் பிரித்துக் கொடுத்து மன நிம்மதி அடைந்திருப்பார். இப்போதும் அதற்குத்தான் முயற்சி நடக்கிறது. தம்பி! கொள்ளிடத்துக்கு வடக்கே ஒரு ராஜ்யமாகவும், தெற்கே ஒரு இராஜ்யமாகவும் பிரித்து விடப் பிரயத்தனம் நடக்கிறது. நீ வந்தால் இது விஷயத்தில் தந்தைக்கு உதவியாயிருப்பாய் என்று அவருக்கு நம்பிக்கை. முன்னால் உனக்குச் சொல்லி அனுப்பி நீ வராதபடியால் இப்போது சிறைப்படுத்திக் கொண்டுவரச் சொன்னார். இலங்கை இராஜ்யத்தை நீ மறுத்துவிட்டாய் என்பது சக்கரவர்த்திக்கு நன்றாய்த் தெரியும்."

"இராஜ்யத்தைப் பிரிப்பதற்கு நான் ஒருநாளும் உதவியாயிருக்கமாட்டேன். அதைப்போல் பெரிய குற்றம் வேறொன்றுமில்லை. அதைவிடச் சித்தப்பா மதுராந்தகருக்கே முழுராஜ்யத்தையும் கொடுத்து விடலாம்."

"அப்படியானால் முதன் மந்திரியும் நீயும் ஒரே மாதிரி அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள்!"

"ஆம்; முதன் மந்திரியும் அப்படித்தான் கருதுகிறார். இலங்கைக்கு அவர் வந்ததே இதைப்பற்றி என்னுடன் கலந்து பேசுவதற்காகத்தான். அக்கா! இலங்கை இராஜ்யத்தை நான் வேண்டாம் என்று மறுத்ததின் உண்மைக் காரணத்தைச் சொல்லட்டுமா?"

"என்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வாய் தம்பி!"

"ஆம்; என் அந்தரங்கத்தைச் சொல்வதற்கு வேறு யாரும் இல்லைதான். இலங்கைக்குப் போவதற்கு முன்னால் அந்நாட்டைப் பற்றிப் பிரமாதமாக எண்ணியிருந்தேன். போன பிறகுதான் அது எவ்வளவு சிறியநாடு என்று தெரிந்தது. குதிரையில் அல்லது யானையில் ஏறிப் புறப்பட்டால் ஒரே நாளில் அந்நாட்டின் மேற்குக் கடற்கரையிலிருந்து, கிழக்கு கடற்கரைக்குப் போய்விடலாம்."

"சோழநாடு மட்டும் அதைவிடப் பெரிதா, தம்பி? இந்த நாட்டையும் அப்படி ஒரேநாளில் குதிரை ஏறிக் கடந்துவிட முடியாதா?"

"சோழநாடும் சிறியதுதான், ஆகையினால் சோழாநாட்டுக் கிரீடத்தை எனக்கு யாரேனும் அளித்தாலும், வேண்டாம் என்றுதான் சொல்வேன். இந்தத் தெய்வத் தமிழகத்தைச் சோழநாடு, பாண்டிய நாடு, சேரநாடு என்று பிரித்தார்களே! அவர்கள் பெரிய குற்றம் செய்தார்கள். அதனாலேதான் தமிழகத்தில் வீராதி வீரர்கள் பிறந்தும், இந்த நாடு சோபிப்பதில்லை. வட நாட்டிலே சந்திரகுப்தர் என்ன, அசோகர் என்ன, சமுத்திர குப்தர் என்ன, விக்கிரமாதித்தியர் என்ன, ஹர்ஷவர்த்தனர் என்ன! இப்படி மகா சக்கரவர்த்திகள் தோன்றி, மகா சாம்ராஜ்யங்களை ஆண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அவ்விதம் யாரேனும் பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து ஆண்டது உண்டா? காஞ்சி பல்லவர் குலத்தில் மகேந்திர சக்கரவர்த்தியும், மாமல்லரும் இருந்தார்கள். பிறகு அந்தக் குலமும் க்ஷீணித்துவிட்டது. அக்கா, நான் இராஜ்யம் ஆளுவதாயிருந்தால், இந்த மாதிரி சின்னஞ் சிறு இராஜ்யத்தை ஆளமாட்டேன். இலங்கை முதல் கங்கை வரையில் பரவி நிலைபெற்ற இராஜ்யத்தை ஆளுவேன். மாலத் தீவிலிருந்து சாவகத் தீவு வரையில் தூர தூர தேசங்களில் புலிக்கொடி பறக்கும் மகா சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் வீற்றிருப்பேன்!... என்னைப் பைத்தியக்காரன் என்றுதானே எண்ணுகிறாய்!"

"இல்லை, அருள்வர்மா! என்னைப்போல் ஆகாசக் கோட்டைகள் கட்டுவதற்கும் கற்பனைக் கனவுகள் காண்பதற்கும் நீயும் ஒருவன் இருக்கிறாயே என்று எண்ணி மகிழ்கிறேன். நீ பைத்தியக்காரனாயிருந்தால், நான் உன்னைவிடப் பெரிய பைத்தியக்காரி. நம்முடைய தந்தையின் பாட்டனார் பராந்தக சக்கரவர்த்தி அப்படியெல்லாம் மனோராஜ்யம் செய்திருந்தார் என்பதை நான் அறிவேன். அவர் காலத்தில் அது பூரணமாய் நிறைவேறவில்லை. ஆனால் என்னுடைய ஆயுட்காலத்தில் நான் அதைப் பார்க்கப் போகிறேன். சோழ சாம்ராஜ்யம் இலங்கை முதல் கங்கை வரையிலும் மாலத்தீவு முதல் சாவகம் வரையிலும் பரந்து விஸ்தரிப்பதைப் பார்த்து விட்டுத்தான் நான் சாகப் போகிறேன். இந்த என் எண்ணம் நம் தமையன் ஆதித்த கரிகாலனால் நிறைவேறும் என்று ஒரு காலத்தில் நம்பினேன். அந்த நம்பிக்கை எனக்கு இப்போது போய் விட்டது. ஆதித்த கரிகாலன் மகாவீரன்; ஆனால் மனத்தைக் கட்டுபடுத்தும் ஆற்றல் அவனிடம் இல்லை. அதனால் அவன் பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது. என் மனோரதம் உன்னால் நிறைவேறும் என்ற ஆசை எனக்கு இன்னும் இருக்கிறது. ஒருவேளை அதுவும் கைகூடாமல் போகலாம். அதனாலும் நான் நிராசை அடைய மாட்டேன். உன்னால் கை கூடாவிட்டால் உனக்குப் பிறக்கும் பிள்ளையினால் கைகூடும் என்று உறுதி கொண்டிருக்கிறேன். உனக்குப் பிறக்கும் புதல்வனை, பிறந்த நாளிலிருந்து நானே எடுத்து வளர்ப்பேன். அவனை இந்த உலகம் கண்டறியாத மகாவீரன் ஆக்குவேன். அற்ப ஆசைகளில் அவன் மனத்தைச் செலுத்தவிடாமல் அற்புதங்களைச் சாதிக்கக்கூடிய புருஷ சிங்கமாக்குவேன்."

"அக்கா! நீ என்னைவிடப் பெரிய பைத்தியம் என்பது நிச்சயம். எனக்குக் கலியாணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை. எனக்குப் பிறக்கப் போகும் புதல்வனைப் பற்றி நீ பேச ஆரம்பித்து விட்டாய். நீ செல்லம் கொடுத்து வளர்க்கும் தோழிகளில் யாருக்காவது அத்தகைய எண்ணமிருந்தால், என்னை மணந்து கொண்டு மணிமகுடம் சூடிச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கலாம் என்ற ஆசை இருந்தால், அது ஒருநாளும் நிறைவேறப் போவதில்லை. இதை நிச்சயமாய் அவர்களுக்குச் சொல்லி விடு!" என்று பொன்னியின் செல்வன் கூறியபோது அவனுடைய பார்வை ஒரு கணம், மண்டபத்தின் தூணுக்குப் பின்னால் நின்றிருந்த வானதியின் பால் சென்றது. மறுகணம் அவன் திரும்பியபோது, அவனுக்கெதிரே இருந்த படித்துறை நந்தி விக்கிரகத்தைப் பார்த்தான்.

"அக்கா! ஒரு செய்தி! இலங்கை சிறிய இராஜ்யமாயிருந்தாலும் அந்த இராஜ்யத்தை முற்காலத்தில் ஆண்ட மன்னர்கள் மகாபுருஷர்கள்; பெரிய உள்ளங்களைப் படைத்தவர்கள். அவர்கள் பெரிய பெரிய திட்டங்களைப் போட்டுப் பெரிய பெரிய காரியங்களைச் சாதித்தார்கள். செங்கல்களைக் கொண்டு மலை போன்ற மேக மண்டலத்தை அளாவிய புத்த ஸ்தூபங்களை நிர்மாணித்தார்கள். ஆயிரம் இரண்டாயிரம் அறைகள் உள்ள புத்த விஹாரங்களைக் கட்டினார்கள். பதினாயிரம் தூண்கள் உள்ள மண்டபங்களை எழுப்பினார்கள். புத்த பகவான் எவ்வளவு பெரியவர் என்பதைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் படியாக, அதோ அந்தத் தென்னை மர உயரமுள்ள புத்தர் சிலைகளை அமைத்தார்கள். அக்கா! இதோ நமக்கு முன்னாலிருக்கும் நந்தி விக்கிரகத்தைப் பார்! எவ்வளவு சின்னஞ்சிறியதாயிருக்கிறது! அடியும் முடியும் காண முடியாத மகாதேவரின் வாகனமாகிய நந்தி இவ்வளவு சிறியதாகவா இருக்கும்? கைலாசத்தில் பரமசிவனுடைய பரிவாரங்களோ பூதகணங்கள். அந்தப் பூதகணங்கள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யாமல் கைலாசத்தின் வாசலில் நின்று காவல் புரிகிறவர் நந்திதேவர். அவர் இவ்வளவு சிறிய உருவத்துடன் இருந்தால் பூத கணங்களை எப்படித் தடுத்து நிறுத்த முடியும்? அதோ பார் அக்கா! என் கண் முன்னால் இதோ இந்த நந்தி வளர்கிறது. வளர்ந்து, வளர்ந்து, வளர்ந்து பெரிதாகிறது. பிரம்மாண்ட வடிவம் பெற்று இம்மண்டபத்தின் மேற்கூரையை முட்டுகிறது. மேற்கூரை இப்போது போய்விட்டது. நந்தி பகவான் வானமளாவி நிற்கிறார்; பூத கணகங்கள் வருகிறார்கள்! நந்தி பகவானைப் பார்த்துப் பயபக்தியுடன் நின்று சிவனைத் தரிசிக்க அனுமதி கேட்கிறார்கள்; நந்தி பகவான் அவ்வளவு பெரியவராயிருந்தால் சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலயம் எப்படியிருக்க வேண்டும்? தக்ஷிண மேரு என்று சொல்லும்படி வானை அளாவிய கோபுரம் அமைக்க வேண்டாமா? அதற்குத் தக்கபடி பிராகாரங்கள் இருக்க வேண்டாமா? இப்போது சோழ நாட்டில் உள்ள கோயில்கள் அகஸ்திய முனிவர் கோயில் கொள்வதற்குத் தான் ஏற்றவை. சிவபெருமானுக்கு உகந்தவை அல்ல. எனக்கு இராஜ்யமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். சோழ சிம்மாசனத்தில் யார் அமர்ந்தாலும் ஆலயத் திருப்பணி அதிகாரியாக என்னை நியமிக்கும்படி கேட்டுக் கொள்வேன்..."

"தம்பி! நம் இரண்டு பேரில் பைத்தியம் யாருக்கு அதிகம் என்று போட்டி போட வேண்டியதுதான். தற்சமயம் இந்தச் சோழ நாட்டைப் பேரபாயம் சூழ்ந்திருக்கிறது. உட்பகைவர்களாலும் வெளிப்பகைவர்களாலும், சிநேகிதர்கள் போல் நடிக்கும் பகைவர்களாலும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சில காலமாக நான் அடிக்கடி ஒரு பயங்கரமான கனவு காண்கிறேன். மின்னலென ஒளிவீசும் கூரிய கொலைவாள் ஒன்று என் அகக்கண் முன்னால் தோன்றுகிறது. அது யார் மேலேயோ விழப்போகிறது. அது யார் என்பது எனக்குத் தெரியவில்லை. சோழ குலத்தைச் சேர்ந்த யாராவது அந்தக் கொலை வாளுக்கு இரையாகப் போகிறார்களா அல்லது இந்தச் சோழ இராஜ்யத்தை இரண்டாகத் துண்டு செய்து நாசமாக்கப் போகும் கொலைவாளா அது என்று தெரியவில்லை. நீயும் நானும் யோசித்து முயற்சி செய்துதான் அத்தகைய அபாயம் இந்நாட்டுக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும்!" என்றாள் இளைய பிராட்டி.

"ஆம், அக்கா! வல்லவரையர் கூறிய விவரங்களிலிருந்து எனக்கும் அவ்வாறுதான் தோன்றுகிறது. முக்கியமான அபாயம், சோழ குலத்துக்கு யாரிடமிருந்து வரப் போகிறது என்பதை அறிவாய் அல்லவா?" என்றான் இளவரசன்.

"பழுவூர் இளையராணி நந்தினியைத்தானே குறிப்பிடுகிறாய், தம்பி?"

"ஆம், அக்கா! அவள் யார் என்பதையும் அறிவாய் அல்லவா?"

"வந்தியத்தேவர் கூறிய விவரங்களிலிருந்து அதையும் அறிந்து கொண்டேன். ஆகையினாலேயே இவ்வளவு அவசரமாக உன்னைப் பார்க்க வந்தேன்!" என்றாள் குந்தவை.


முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com