Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 3
கல்கியின் பொன்னியின் செல்வன்

மூன்றாம் பாகம் : கொலை வாள்

19. சமயசஞ்சீவி


நம்பியாண்டார் நம்பிக்கு நடந்த உபசாரத்தின் போது பினாகபாணி அந்தச் சபா மண்டபத்துக்குள் பிரவேசிக்க முடியவில்லை. வாசற்படிக்கு அப்பால் நின்ற கூட்டத்தில் நின்று உள்ளே பார்த்துக் கொண்டிருந்தான். வந்தியத்தேவனுடைய கவனம் வேறு இடத்தில் இருந்தது என்பதை முன்னமே பார்த்தோம். பினாகபாணியோ வந்தியத்தேவன் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். இவ்வளவையும் பார்த்தும், பார்க்காததுபோல் கவனித்துக் கொண்டிருந்தான் இன்னொருவன். அவன் தான் நம் பழைய தோழனாகிய ஆழ்வார்க்கடியான்.

இளவரசர் மதுராந்தகருக்கு நிமித்தம் பார்த்துச் சொல்லி அவர் மனத்தைக் கலக்கிவிட்டு வந்தியத்தேவன் அரண்மனைக்கு வெளியில் வந்தான். அங்கே சற்றுத் தூரத்தில் நின்று காத்துக் கொண்டிருந்த வைத்தியர் மகன் அவனை நெருங்கி வந்து, "அப்பனே! நீ யார்?" என்று கேட்டான்.

வந்தியத்தேவன் பினாகபாணியைப் பார்த்துத் திடுக்கிட்டான். அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "என்ன கேட்டாய்?"

"நீ யார் என்று கேட்டேன்" என்றான்.

"நான் யார் என்றா கேட்கிறாய்? எந்த நானைக் கேட்கிறாய்? மண், நீர், தேயு, வாயு, ஆகாசம் என்கிற பஞ்ச பூதங்களினாலான இந்த உடம்பைக் கேட்கிறாயா? உயிருக்கு ஆதாரமான ஆத்மாவைக் கேட்கிறாயா? ஆத்மாவுக்கும் அடிப்படையான பரமாத்மாவைக் கேட்கிறாயா? அப்பனே! இது என்ன கேள்வி? நீயும் இல்லை, நானும் இல்லை. எல்லாம் இறைவன் மயம்! உலகம் என்பது மாயை; பசு, பதி, பாசத்தின் உண்மையை திருநாறையூர் நம்பியைப் போன்ற பெரியோர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்!" என்று கூறிவிட்டு வந்தியத்தேவன் அரண்மனை வாசலில் நின்ற தன் குதிரை மேல் தாவி ஏறினான். குதிரையைச் சிறிது நேரம் வேகமாகச் செலுத்திய பிறகு வைத்தியர் மகன் தன்னைப் பின் தொடரவில்லை என்று தெரிந்துகொண்டு மெள்ள மெள்ள விட்டுக்கொண்டு போனான்.

ஆனால் வைத்தியர் மகன் அவ்வளவு எளிதில் ஏமாந்து போகிறவனா? அவனது சந்தேகம் இப்போது நிச்சயமாகி விட்டது. நகர்க் காவல் அதிகாரியிடம் சென்று செய்தியைத் தெரிவித்தான். அதிகாரி அனுப்பிய இரண்டு காவல் வீரர்களை அழைத்துக் கொண்டு அவனும் ஊரைச் சுற்றி வந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே வந்தியத்தேவனை ஒரு நாற்சந்தியில் சந்தித்தான்.

"இவன்தான் ஒற்றன்! இவனைச் சிறைப்பிடியுங்கள்!" என்று கூவினான்.

"என்னடா, அப்பா! உனக்குப் பைத்தியமா?" என்றான் வல்லவரையன்.

"யாரைப் பைத்தியமா, என்று கேட்கிறாய்? இந்த உடம்பையா, இதற்குள் இருக்கும் உயிரையா, ஆத்மாவையா! பரமாத்மாவையா! அல்லது பசு, பதி, பாசத்தையா?" என்று கூறினான் வைத்தியர் மகன் பினாகபாணி.

"நீ இப்பொழுது உளறுவதிலிருந்தே நீ பைத்தியம் என்று தெரிகிறதே!"

"நான் பைத்தியம் இல்லை; உன்னோடு கோடிக்கரை வரையில் வந்த வைத்தியன்! காவலர்களே! தஞ்சாவூர்க் கோட்டையிலிருந்து தப்பி, இலங்கைக்கு ஓடிய ஒற்றன் இவன்தான்! உடனே இவனைச் சிறைப் பிடியுங்கள்!"

காவலர்கள் வல்லவரையனை நோக்கி நெருங்கினார்கள். "ஜாக்கிரதை! இவன் சொல்வதைக் கேட்டுத் தவறு செய்யாதீர்கள்! நான் இளவரசர் மதுராந்தகத் தேவரோடு வந்த நிமித்தக்காரன்!" என்று கூறினான் வந்தியத்தேவன்.

"இல்லை இல்லை! இவன் பெரும் பொய்யன். இவனை உடனே சிறைப்படுத்துங்கள்!" என்று வைத்தியர் மகன் வாய்விட்டுக் கூவினான்.

இதற்குள் அவர்களைச் சுற்றிலும் ஒரு பெருங்கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தில் சிலர் வந்தியதேவனுடைய கட்சி பேசினார்கள்; சில வைத்தியர் மகனின் கட்சி பேசினார்கள்.

"இவனைப் பார்த்தால் நிமித்தக்காரனாகத் தோன்றவில்லை" என்றான் ஒருவன்.

"ஒற்றனாகவும் தோன்றவில்லையே" என்றான் இன்னொருவன்.

"நிமித்தக்காரன் இவ்வளவு சிறு பிராயத்தனாயிருக்க முடியுமா?"

"ஏன் முடியாது? ஒற்றன் குதிரை மேலேறி வீதியில் பகிரங்கமாகப் போவானா?"

"நிமித்தக்காரன் எதற்காக உடைவாள் தரித்திருக்கிறான்?"

"ஒற்றன் என்றால் யாருடைய ஒற்றன் பழையாறையில் என்ன வேவு பார்ப்பதற்காக வருகிறான்?"

இதற்கிடையில் பினாகபாணி, "அவனைச் சிறைப்பிடியுங்கள்! உடனே சிறைப்பிடியுங்கள்! பழுவேட்டரையருடைய கட்டளை!" என்று கத்தினான்.

பழுவேட்டரையர் என்ற பெயரைக் கேட்டது, அங்கே கூடியிருந்தவர்கள் பலருக்கு வந்தியத்தேவன் மேல் அனுதாபம் உண்டாகிவிட்டது. அவனை எப்படியாவது தப்புவிக்க வழி உண்டா என்று பார்த்தார்கள்.

இதற்கிடையில் ஆழ்வார்க்கடியான் அந்தக் கூட்டத்தின் ஓரத்தில் வந்து சேர்ந்தான். "இளவரசோடு வந்த நிமித்தக்காரன் இங்கே இருக்கிறானா?" என்று கூவினான்.

"இல்லை; இவன் ஒற்றன்" என்று பினாகபாணி கூச்சலிட்டான்.

"இதென்ன வம்பு? நீ மதுராந்தகத் தேவருடன் வந்த நிமித்தக்காரனாயிருந்தால் என்னுடன் வா! உன்னை இளவரசி அழைத்து வரச் சொன்னார்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

வந்தியத்தேவனின் உள்ளம் துள்ளிக் குதித்தது. "அந்த நிமித்தக்காரன் நான்தான்! இதோ வருகிறேன்" என்றான்.

"வீடாதீர்கள்! ஒற்றனை விட்டு விடாதீர்கள்!" என்று வைத்தியர் மகன் பினாகபாணி கத்தினான்."

ஆழ்வார்க்கடியான், "நீ நிமித்தக்காரன்தானா என்பதை நிரூபித்து விடு! அப்படியானால்தான் என்னுடன் வரலாம்!" என்று கூறிக்கொண்டே கண்ணால் சமிக்ஞை செய்தான்.

"என்னவிதமாக நிரூபிக்கச் சொல்கிறாய்?" என்று வந்தியத்தேவன் அவசரத்துடன் கேட்டான்.

"அதோ இரண்டு குதிரைகள் வேகமாக வருகின்றனவல்லவா? அவற்றின் மீது வருகிறவர்கள் ஏதோ அவசரச் செய்தி கொண்டு வருவதாகத் தோன்றுகிறது. அது உண்மையாயிருந்தால், அவர்கள் என்ன செய்தி கொண்டு வருகிறார்கள், சொல்!"

குதிரைகளின் பேரில் வந்தவர்களை வந்தியத்தேவன் உற்றுப் பார்த்துவிட்டு, "ஓ சொல்கிறேன், இராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஜலகண்ட விபத்து நேர்ந்திருக்கிறது! அந்த துக்கச் செய்தியைத்தான் அவர்கள் கொண்டு வருகிறார்கள்!" என்றான் வந்தியத்தேவன்.

இப்படிச் சொல்லி வாய் மூடுவதற்குள் குதிரைகள் ஜனக்கூட்டத்தை நெருங்கிவிட்டன. ஜனங்கள் மேலே போக வழிவிடாதபடியால் குதிரைகள் நின்றன.

"நீங்கள் தூதர்கள் போலிருக்கிறது, என்ன செய்தி கொண்டு வருகிறீர்கள்?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.

"ஆம் நாங்கள் தூதர்கள்தான்! துக்கச் செய்தி கொண்டு வருகிறோம். இளவரசர் அருள்மொழிவர்மர் ஏறி வந்த கப்பல் சுழற்காற்றில் அகப்பட்டுக் கொண்டதாம். இளவரசர் யாரையோ காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்து மூழ்கிப் போய்விட்டாராம்!"

குதிரை மீது வந்தவர்களில் ஒருவன் இவ்வாறு கூறியதும் அந்த ஜனக்கூட்டத்தில் "ஐயோ! ஐயகோ!" என்ற பரிதாபக் குரல்கள் நெஞ்சைப் பிளக்கும்படியான சோகத் தொனியில் எழுந்தன. எங்கிருந்துதான் அவ்வளவு ஜனங்களும் வந்தார்களோ, தெரியாது. அவ்வளவு சீக்கிரத்தில் அவர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள் என்றும் சொல்ல முடியாது. ஆண்களும், பெண்களும், வயோதிகளும், சிறுவர் சிறுமிகளும் அந்தத் தூதர்களைப் பெருங் கூட்டமாகச் சூழ்ந்து கொண்டார்கள். பலர், அவர்களைப் பல கேள்விகள் கேட்டார்கள்; பலர் அழுது புலம்பினார்கள்.

பழுவேட்டரையர்கள் அருள்மொழிவர்மரை விரும்பவில்லையென்பது அந்நகர மக்களில் பலருக்கு ஏற்கனவே தெரியும். இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டு வருவதற்காகப் பழுவேட்டரையர்கள் ஈழத்துக்குள் ஆள் அனுப்பியிருக்கிறார்கள் என்ற பிரஸ்தாபமும் அவர்கள் காதுக்கு எட்டியிருந்தது எனவே, கூட்டத்தில் பலர் பழுவேட்டரையர்களைப் பற்றி முதலில் முணுமுணுக்கத் தொடங்கினார்கள். பிறகு உரத்த குரலில் சபிக்கவும் தொடங்கினார்கள். "பழுவேட்டரையர்கள் வேண்டுமென்றே இளவரசரைக் கடலில் மூழ்கடித்துக் கொன்றிருக்க வேண்டும்!" என்றும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். அந்த ஜனக் கூட்டத்தார் பேசிக்கொண்ட சத்தமும், அவர்கள் புலம்பிய சத்தமும், பழுவேட்டரையர்களைச் சபித்த சத்தமும் சேர்த்துச் சமுத்திரத்தின் பேரிரைச்சலைப் போல் எழுந்தது.

இந்தக் கூட்டத்துக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்ட தஞ்சாவூர்த் தூதர்கள், மேலே அரண்மனைக்குப் போக முடியாமல் தவித்தார்கள். ஜனங்களை விலக்கிக் கொண்டு போக அவர்கள் முயன்றும் பலிக்கவில்லை. "எப்படி?" "எங்கே?" "என்றைக்கு?" "நிச்சயமாகவா?" என்றெல்லாம் ஜனங்கள் அத்தூதர்களைக் கேட்ட வண்ணம் மேலே போக முடியாதபடி தடை செய்தார்கள்.

வைத்தியர் மகனுடன் வந்திருந்த காவலர்களைப் பார்த்து ஆழ்வார்க்கடியான், "நீங்கள் ஏன் சும்மா நிற்கிறீர்கள்? கூட்டத்தை விலக்கித் தூதர்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள்!" என்றான். காவலர்களும் மேற்படி செய்தி கேட்டுக் கதி கலங்கிப் போயிருந்தார்கள். அவர்கள் இப்போது முன்வந்து தூதர்களுக்கு வழி விலக்கிக் கொடுக்க முயன்றார்கள். தூதர்கள் சிறிது சிறிதாக அரண்மனையை நோக்கி முன்னேறினார்கள். ஜனக் கூட்டமும் அவர்களை விடாமல் தொடர்ந்து சென்றது. மேலும் மேலும் ஜனங்களின் கூட்டம் பெருகிக் கொண்டும் வந்தது.

அவ்வளவு பெரிய ஜனக்கூட்டத்தில், ஒரே மனதாக இளவரசர் அருள்மொழிவர்மரின் கதியை நினைத்துக் கலங்கிப் புலம்பிக் கொண்டிருந்த அக்கூட்டத்தில், ஒரே ஒரு பிராணி மட்டும், "ஐயோ! இது ஏதோ சூழ்ச்சி! ஒற்றனைத் தப்பித்துவிடச் சூழ்ச்சி!" என்று அலறிக் கொண்டிருந்தது. அவ்வாறு அலறிய வைத்தியர் மகனை யாரும் பொருட்படுத்தவில்லை. அவனுடைய கூக்குரல் யாருடைய செவியிலும் ஏறவில்லை. மாநதியின் பெருவெள்ளம் அதில் விழுந்து விட்ட சிறு துரும்பை அடித்துக் கொண்டு போவதுபோல் அந்தப் பெரும் ஜனக் கூட்டம் வைத்தியர் மகனையும் தள்ளிக்கொண்டு முன்னே சென்றது.

ஜனக்கூட்டம் சேரத் தொடங்கியபோதே வந்தியத்தேவன் குதிரை மேலிருந்து இறங்கிவிட்டான். கூட்டம் நகரத் தொடங்கியபோது, ஆழ்வார்க்கடியான் அவன் அருகில் வந்து அவன் கையைப் பற்றிக்கொண்டான். "குதிரையை விட்டுவிடு! பிறகு அதைத் தேடிப்பிடித்துக் கொள்ளலாம். உடனே என்னுடன் வா!" என்று அவன் காதோடு சொன்னான்.

"அப்பனே! சமய சஞ்சீவியாக வந்து சேர்ந்தாய்! இல்லாவிடில் என் நிலைமை என்ன ஆகியிருக்குமோ, தெரியாது!" என்றான் வல்லவரையன்.

"இதுதான் உன் தொழில் ஆயிற்றே? நீ சங்கடத்தில் அகப்பட்டுக் கொள்ள வேண்டியது; யாராவது வந்து உன்னை அந்த நெருக்கடியிலிருந்து விடுவிக்க வேண்டியது!" என்று எகத்தாளம் செய்தான் ஆழ்வார்க்கடியான்.

இருவரும் ஜனக்கூட்டம் அவர்களைத் தள்ளிக் கொண்டு போகாத வண்ணம் வீதி ஓரமாக ஒதுங்கி நின்றார்கள். கூட்டம் போனபிறகு வந்தியத்தேவனுடைய கையை ஆழ்வார்க்கடியான் பற்றிக்கொண்டு வேறு திசையாக அவனை அழைத்துச் சென்றான். அரண்மனைகள் இருந்த வீதியில் முன்னொரு தடவை நாம் பார்த்திருக்கும் பூட்டிக் கிடந்த கோடி வீட்டில் அவர்கள் புகுந்தார்கள். கொல்லைப்புறத்தில் இருந்த நந்தவனத்தில் பிரவேசித்துக் கொடி வழிகளில் நடந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் நீல நிற ஓடை தெரிந்தது? அதில் ஒரு ஓடம் மிதந்தது. ஓடத்தில் ஒரு மாதரசி இருந்தாள். அவளைக் கண்டதும் வந்தியத்தேவனுடைய உள்ளம் துள்ளிக் குதித்தது.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com