Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 2
கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

52. உடைந்த படகு


இடி விழுந்ததினால் பாய்மரத்தின் உச்சியில் தீப்பிடித்து எரிவதைப் பார்த்ததும் இனி அம்மரக்கலம் தப்பிக்க முடியாது என்று வந்தியத்தேவன் நிச்சயமடைந்தான். எனவே, தானும் உயிரோடு தப்பிக்க முடியாது. வந்தியத்தேவனுக்கு அப்போதும் சிறிதும் மனக்கிலேசம் உண்டாகவில்லை. உற்சாகந்தான் மிகுந்தது கலகலவென்று சிரித்தான். பாய்மரத்தோடு தன்னைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டான். நடுக்கடலில் தீயில் வெந்து சாகவேண்டியதில்லையல்லவா? அதைக் காட்டிலும் குளிர்ந்த நீரில் முழுகிக் கடலின் அடியில் சென்று அமைதியாக உயிர் விடுவது மேல் அல்லவா?

ஆயுளில் மிச்சமுள்ள சிறிது நேரத்தை வீணாக்க வந்தியத்தேவன் விரும்பவில்லை. தீப்பற்றி எரிந்த கப்பலின் வெளிச்சத்தில் சுற்றுமுற்றும் நன்றாகப் பார்த்துக் கொந்தளித்த கடலின் சௌந்தரியத்தை அநுபவிக்க விரும்பினான். தன் உடல் சமாதி அடையப்போகும் இடத்தை நன்றாகப் பார்த்துக் கொள்வது நல்லதல்லவா? இம்மாதிரி அகால மரணமடைந்தவர்கள், ஆவி உருவத்தில் இறந்த இடத்தைச்சுற்றி வந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்வார்களே? அம்மாதிரி தன் ஆவியும் இந்தக் கடலின் மேலேயே வட்டமிட்டுக் கொண்டிருக்குமோ! காற்றில் மிதக்குமோ? அலைகளின் மேலே உலாவுமோ? சுழற்காற்று அடிக்கும்போது தன் ஆவியும் சுற்றிச் சுற்றி வருமோ?

'ஆகா! எப்போதாவது ஒருநாள் இந்தக் கடலில் அரசிளங்குமரி, கப்பல் ஏறிப்போனாலும் போவாள். கப்பலை ஓட்டும் மாலுமிகள் "வந்தியத்தேவன் கப்பலோடு முழுகிய இடம் இதுதான்!" என்று காட்டுவார்கள். அவளுடைய வேல் விழிகளில் கண்ணீர் துளித்து அவளது முழுமதி முகத்தில் முத்து முத்தாகச் சிந்தும், ஆவி வடிவத்திலே அதை அருகிலிருந்து தான் பார்க்கும்படி நேர்ந்தால், அவளுடைய கண்ணீரைத் தன்னால் துடைக்க முடியுமா?...'

கப்பல் ஒரு பேரலையின் சிகரத்தின் மேலே ஏறியது. பாய்மரத் தீவர்த்தி போட்ட வெளிச்சத்தில் சுற்றிலும் வெகுதூரம் தெரிந்தது. கரும் பளிங்கு நிறம் பெற்றுத் திகழ்ந்த கடல் நீரில் பாய்மரத் தீயின் ஒளி விழுந்த இடம் மட்டும் பொன் வெள்ளமாகத் திகழ்ந்தது. இந்த அழகின் அற்புதத்தை வந்தியத்தேவன் பார்த்து மகிழ்ந்து முடிவதற்குள் அவனுடைய கண்ணையும் கவனத்தையும் வேறொன்று கவர்ந்தது.

சற்றுத்தூரத்தில் அவன் ஒரு மரக்கலத்தைப் பார்த்தான். அதில் புலிக்கொடி பறக்கக் கண்டான். 'கடவுளே! உன் விந்தைகளுக்கு எல்லையே இல்லை போலும்! - அந்த மரக்கலத்திலே வருகிறவர் இளவரசர் அருள்மொழிவர்மராகத் தான் இருக்கவேண்டும். தன்னைத் தேடிக் கொண்டுதான் அவர் வருகிறார்' - என்று அவனுடைய உள்ளுணர்ச்சி கூறியது!

வந்தியத்தேவன் ஏறியிருந்த கப்பல் சிக்கிக்கொண்டு தத்தளித்த அதே சுழிக் காற்றில் பார்த்திபேந்திரனுடைய கப்பலும் அகப்பட்டுக் கொண்டது. ஆனால் இந்தக் கப்பலில் அச்சுழிக் காற்றின் தன்மையை அறிந்தவர்களும் கப்பலோட்டும் கலையில் வல்லவர்களுமான மாலுமிகள் இருந்தார்கள். பாய்மரங்களில் விரித்திருந்த பாய்களை அவர்கள் இறக்கிச் சுற்றி வைத்தார்கள். காற்றின் வேகம் முழுவதையும் கப்பல் எதிர்த்து நிற்பது அவசியமில்லாத வண்ணமாகக் கப்பலின் சுக்கானைப் பிடித்து இயக்கி வந்தார்கள். ஒரு நிமிஷம் கப்பல் அடியோடு சாய்ந்து, 'இதோ கவிழ்ந்து விட்டது' என்று தோன்றும்; மறு நிமிஷம் சமாளித்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கும். மலை போன்ற அலைகள் அந்தக் கப்பலை எத்தனைதான் தாக்கியும் அதில் இணைக்கப்பட்டிருந்த மரங்களும் பலகைகளும் சிறிதேனும் பிளந்து கொடுக்க வேண்டுமே! கிடையவே கிடையாது! சமுத்திரராஜன் அந்தக் கப்பலைப் பந்து ஆடுவதுபோல் தூக்கி எறிந்து விளையாடினான். சுழிக்காற்று அக்கப்பலைப் பம்பரம் சுற்றுவதுபோலச் சுழற்றிச் சுழற்றி அலைத்தது. வானத்திலிருந்து வெள்ளம் பொழிந்து அந்தக் கப்பலைக் கடலில் அமுக்கி அழித்துவிடப் பார்த்தது. சோழநாட்டுத் தச்சுவேலை நிபுணர்கள் கட்டிய அக்கப்பலை, - தமிழகத்தின் புகழ்பெற்ற மாலுமிகள் செலுத்திய அக்கப்பலை - கடலும் மழையும் காற்றும் சேர்ந்து தாக்கியும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

"இதைக் காட்டிலும் கொடிய சுழிக்காற்றுகளையும் சண்டமாருதங்களையும் நான் பார்த்திருக்கிறேன்; சமாளித்திருக்கிறேன். ஆகையால் கவலைப்படத் தேவையில்லை!" என்று கலபதி கூறினான். ஆனால் அவன் பார்த்திபேந்திரனிடம் இளவரசரிடமும் வேறோர் அபாயத்தைப் பற்றித் தன் பயத்தை வெளியிட்டான்.

'கரிய மேகங்கள் திரண்டு வந்த வானை மூடி நாலாபுறமும் இருள் சூழச் செய்துவிட்டன. போதாதற்குச் சோனாமாரியாக மழையும் பெய்தது. கடலில் எழுந்த அலைகளோ வரிசை வரிசையான மலைத் தொடர்களைப்போல் கப்பலைச் சுற்றித் திரையிட்டு மறைத்தன. இந்த நிலையில் அவர்கள் எந்தக் கப்பலைத் தேடிச் சென்றார்களோ அது வெகு சமீபத்தில் வந்தாலும் பார்க்க முடியாது அந்தக் கப்பலும் இதைப் போலத்தான் சுற்றிச் சுழன்று தத்தளித்துக் கொண்டிருக்கும். கப்பல்கள் ஒன்றோடொன்று மோதினால் இரண்டும் சுக்கல் சுக்கலாகிப் போய்விடும். கப்பலில் உள்ளவர்களின் கதி அதோகதிதான்!"

"ஆகவே சுழிக்காற்றின் அபாயத்தைக் காட்டிலும் சுற்றிலும் ஒன்றும் பார்க்க முடியாமலிருப்பதுதான் அதிக அபாயம்" என்று அம்மரக்கலத் தலைவன் கூறினான்.

இது இளவரசருக்குத் தெரிந்த விஷயந்தான். ஆகவே அவர் அத்தனைக் காற்றிலும் மழையிலும் கப்பலின் ஓரமாக நின்று கொண்டு தன் கூரிய கண்களின் பார்வையை நாலாபுறமும் செலுத்திக் கொண்டிருந்தார். மின்னல் மின்னிய போதெல்லாம் அவருடைய கண்கள் அதிவேகமாகச் சுழன்று சுற்றுப்புறமெங்கும் உற்றுப் பார்த்தன. அவருடைய உள்ளம் எப்படித் தத்தளித்துக் கொண்டிருந்தது என்பதைச் சொல்லி முடியாது. தன் அருமைத் தமக்கை அனுப்பிய தூதன் முரட்டு அராபியர்களிடமும், கொலைகார மந்திரவாதிகளிடமும் அகப்பட்டுக் கொண்டிருக்கிறான். அது போதாது என்று இந்தச் சுழிக்காற்று வேறு வந்து சேர்ந்தது. ஒருவேளை அவ்வீர வாலிபன் ஏறியுள்ள கப்பலைக் கண்டுபிடிக்க முடியாமலே போய்விடுமோ? கண்டுபிடித்தாலும், அவனை உயிரோடு காண்பது சாத்தியமா? கலபதி அஞ்சுவதுபோல் அவன் ஏறியிருக்கும் கப்பல் மேல் நம் கப்பல் மோதி இரண்டும் கடலில் மூழ்கினால் வேடிக்கையாகத்தானிருக்கும்! ஆனால் தந்தையிடம் சொல்லவேண்டிய செய்தியைச் சொல்லுவது யார்? பார்த்திபேந்திரனிடம் அந்தக் குடும்ப இரகசியத்தைக் கூறுவது இயலாத காரியம். கூறினால் அந்தப் பல்லவனுக்கு அது கேலியாயிருக்கும்; அதன் முக்கியத்துவத்தை அவன் உணரமாட்டான். இதுகாறும் இளவரசர் செய்ய எண்ணிய காரியம் எதிலும் தோல்வியடைந்ததில்லை. இப்போது தோல்வி ஏற்பட்டுவிடுமோ? - இல்லை, ஒருநாளும் இல்லை. பொன்னியின் செல்வனுக்குத் தீங்கு நேருவதையோ, தோல்வி ஏற்படுவதையோ சமுத்திர ராஜன் பார்த்துக் கொண்டிருக்கமாட்டான்!

இருளையும் மழையையும் கிழித்துக்கொண்டு எல்லாத் திசைகளையும் பார்த்துக் கொண்டிருந்த இளவரசரும் அந்தப் பேரிடி முழக்கத்தைக் கேட்டார். அப்போது மின்னிய மின்னலுக்கு அவரும் கண்களைச் சிறிது மூடிக்கொள்ள வேண்டியதாயிற்று. கண்ணைத் திறந்து பார்த்தபோது மின்னல் வெளிச்சமில்லாத வேறொரு வெளிச்சத்தைக் கண்டார். சற்றுத் தூரத்தில் ஒரு கப்பல் விரித்த பாய்மரங்களுடன் பேயாடுவது போல் ஆடிக்கொண்டிருந்தது! அதன் பாய்மரத்தின் உச்சியில் தீப்பற்றி எரிந்தது! அந்தத் தீயின் வெளிச்சத்தில் இளவரசர் அதில் ஒரு மனிதன் பாய்மரத்தோடு சேர்த்து நிற்பதைக் கண்டார்! கடவுளே! இத்தகைய அற்புதமும் நடக்கக் கூடுமா? அவன் அந்த வீர இளைஞனாகிய வந்தியத்தேவன்தான்! அவன் மட்டும் ஏன் தனியாக நிற்கிறான்? மற்றவர்கள் என்ன ஆனார்கள்? அதைப் பற்றியெல்லாம் யோசிப்பதற்கு இப்போது நேரமில்லை. செய்யவேண்டியது இன்னதென்பதை ஒரு நொடிப் பொழுதில் இளவரசர் தீர்மானித்துக் கொண்டார்.

அவர் பார்த்த காட்சியைக் கப்பலில் இருந்த மற்றவர்கள் பலரும் பார்த்தார்கள். "அதோ!" என்று அவர்கள் ஏககாலத்தில் எழுப்பிய பெரிய கூச்சல் காற்றின் பயங்கரச் சப்தத்தையும் மீறிக்கொண்டு எழுந்தது. கப்பலோடு சேர்த்துக் கட்டியிருந்த படகண்டை போய் இளவரசர் நின்று கொண்டு, அருகில் நின்ற மாலுமிகளைப் பார்த்து, "உங்களில் யார் என்னுடன் வருவீர்கள்?" என்று உரத்த குரலில் கேட்டார். அவர் செய்ய உத்தேசித்த காரியம் இன்னதென்று ஊகித்தறிந்து மாலுமிகள் திகைத்தார்கள். ஆயினும் பலர் போட்டியிட்டு முன்வந்தார்கள்.

பார்த்திபேந்திரனும், கலபதியும் வந்து தடுக்கப் பார்த்தார்கள்.

"இளவரசே! இது என்ன காரியம்! இந்தக் கொந்தளிக்கும் கடலில் படகு எப்படிச் செலுத்த முடியும்? எரிகின்ற கப்பலில் உள்ளவனை எப்படிக் காப்பாற்ற முடியும்? ஆனாலும் முயற்சி செய்து பார்க்கலாம் தாங்கள் போகவேண்டாம். போவதற்கு எங்களில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்" என்றான் பார்த்திபேந்திரன்.

"ஜாக்கிரதை! இச்சமயம் என்னைத் தடுக்கப் பார்க்கிறவர்களை நான் ஒரு நாளும் மன்னிக்க முடியாது" என்று இராஜகம்பீரமான அதிகார தோரணையில் கூறினார் இளவரசர். அதே சமயத்தில் படகை அவிழ்த்து விட்டார். "உங்களில் இரண்டு பேர் போதும்; வாருங்கள்!" என்றார்.

படகு கடலில் இறங்கியது. இளவரசர், அவர் குறிப்பிட்ட இருவரும் அதில் குதித்தார்கள். மறு கணமே படகு கப்பலை விட்டு அகன்று சென்றது. அலைகளின் மேல் ஆவேசக்கூத்து ஆடியது. இளவரசரும் மற்ற இருவரும் துடுப்புகளைப் பலங்கொண்ட மட்டும் வலித்தார்கள். சிறிது சிறிதாகப் படகு எரிகின்ற கப்பலை அணுகியது. இதற்குள் தீ உச்சியிலிருந்து பாதி பாய்மரம் வரையில் இறங்கிவிட்டிருந்தது. ஆனால் வந்தியத்தேவனோ அங்கே நின்று கொண்டிருந்தான். அவன் தீயின் வெளிச்சத்தில் கப்பலைப் பார்த்தான்; கப்பலிலிருந்து இறக்கப்பட்டு வந்த படகையும் பார்த்தான். அந்த அதிசயத்தில் தன்னை மறந்திருந்தான். தான் ஏதேனும் செய்ய வேண்டும் என்றே அவனுக்குத் தோன்றவில்லை.

"குதி கடலில் குதி!" என்று கத்தினார் இளவரசர். அவன் காதில் அது விழவில்லை. செயலற்ற பதுமையைப்போல் நின்று கொண்டிருந்தான். ஆயிற்று; இன்னும் சிறிது நேரம் தாமதித்தால் கப்பல் அடித்தளத்திற்கு நெருப்பு வந்துவிடும்; கப்பல் முழுகிவிடும். அப்புறம் அவனைக் காப்பாற்றுவது இயலாத காரியமாகி விடும்.

என்ன செய்யவேண்டும் என்பதை மறுபடியும் இளவரசர் ஒரு நொடியில் முடிவு செய்தார். இத்தகைய சந்தர்ப்பங்களுக்கென்று அந்த அபாயப் படகில் சேர்த்துக் கட்டியிருந்த நீளக்கயிற்றின் இன்னொரு நுனியைத் தமது இடுப்பில் சுற்றி இறுக்கிக் கட்டிக் கொண்டார். மாலுமிகள் இருவருக்கும் எச்சரிக்கை செய்துவிட்டுக் கடலில் குதித்தார். இத்தனை நேரம் படகுடன் விளையாடிய அலைகள் இப்போது இளவரசருடன் விளையாடின. ஒரு கணம் அவரை வானத்துக்கு உயர்த்தின; மறுகணம் பாதாளத்தில் தள்ளின. எனினும் இளவரசர் திசையும் குறியும் தவறாமல் எரிகின்ற கப்பலை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தார்.

ஒரு பெரிய, மிகப் பெரிய அலை வந்தது! இளவரசர் மேலே அது விழுந்திருந்தால் அவரை அமுக்கிக் கடலின் அடியில் கொண்டு போயிருக்கக் கூடும்! ஆனால் அது நல்ல அலை; இளவரசருக்கு ஏவல் செய்ய வந்தது. அவரைத் தன் உச்சியில் வைத்துக் தூக்கிக்கொண்டு போய் எரிகின்ற கப்பலின் மேல் தளத்தில் எறிந்தது.

ஏற்கெனவே கட்டு அவிழ்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவன் இளவரசரைப் பார்த்ததும், 'ஆ' என்று அலறி அவரை எடுப்பதற்காகத் தாவிக் குனிந்தான். இளவரசர் அவனுடைய கழுத்தை அப்படியே இறுக்கிக் கட்டிக் கொண்டார். அவன் காதுக்குள் "என்னைப் பிடித்துக்கொண்டு வா! விட்டு விடாதே!" என்றார். சொல்லி முடிந்த தட்சணமே இருவரும் மறுபடியும் கடலில் மிதந்து அலைகளினால் மொத்துண்டார்கள்.

மாலுமிகள் துடுப்புத் தள்ளுவதை நிறுத்திக் கயிற்றைப் பிடித்து இழுக்கலானார்கள். இளவரசரும் அவரை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனும் படகை அணுகினார்கள். படகைப்பிடித்து அதில் ஏறுவது எளிய காரியமில்லை. அலைகளுடன் போராடிக்கொண்டு வந்தியத்தேவனையும் தாங்கிக் கொண்டு படகில் ஏறுவதற்கு முயன்ற ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாக இருந்தது.

இதோ படகு கைக்கு அகப்படுவது போலிருக்கும்; அடுத்த கணம் எட்டாத தூரத்தில் போய்விடும். கடைசியாக, அதற்கும் ஒரு பெரிய அலை உதவி செய்தது. படகின் அருகில் உயரமாக எழுந்த அந்தப் பேரலையோடு அவர்களும் எழுந்தார்கள். மாலுமிகளின் உதவியுடன் படகில் குதித்தார்கள்.

"துடுப்பை வலியுங்கள்! வேகமாய் வலியுங்கள்!" என்றார் இளவரசர்.

ஏனெனில், எரிகின்ற கப்பல் கடலில் முழுகும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்படி முழுகும்போது ஏற்படும் கொந்தளிப்பில் படகு கவிழ்ந்தாலும் கவிழ்ந்துவிடும். அது மட்டுமன்று; கப்பல் முழுகித் தீ அணைந்து விட்டால் பிறகு மற்றொரு கப்பலை அவர்கள் பிடிப்பது அசாத்தியமாகி விடலாம்.

ஆகா! அதோ கப்பல் முழுகத் தொடங்கிவிட்டது. கொழுந்துவிட்டு எரிந்த பாய்மரங்களுடனே அது கடலில் முழுகிய காட்சிதான் என்ன பயங்கர சௌந்தர்யமாயிருந்தது! அதை அவர்களால் அதிகநேரம் அநுபவிக்க முடியவில்லை. இளவரசர் எதிர்பார்த்தது போலவே கடலில் ஒரு பெரிய கொந்தளிப்பு. வானளாவி மேலெழுந்த அலைகள்.

படகு என்னமோ அலைகளைச் சமாளித்துக் கொண்டது. ஆனால் எரிந்த கப்பல் மூழ்கியதும் சுற்றிலும் சூழ்ந்த இருளில் மற்றொரு கப்பல் இருந்த இடமே தெரியாமல் போயிற்று. திக்குத்திசை ஒன்றுமே தெரியவில்லை. படகும், கப்பலும் ஒன்றையொன்று நெருங்கிக்கொண்டிருக்கின்றனவோ, அகன்று போய் கொண்டிருக்கின்றனவோ, - அதைத் தெரிந்து கொள்ளவும் வழியில்லை. இரண்டிலும் அபாயம் உண்டு.

இருட்டில் கப்பல் இருக்குமிடம் தெரியாமல் அதை நெருங்கிச் சென்று முட்டிக்கொண்டால், படகு துகள் துகளாகும். விலகிப் போய்விட்டால், கேட்பானேன்? நடுக்கடலில், காரிருளில் அந்தச் சின்னஞ்சிறு படகினால் என்ன செய்ய முடியும்? சமுத்திர ராஜனே! உன் காதலி பொன்னி நதி தந்த அருமைச் செல்வனை நீதான் காப்பாற்றவேண்டும்!

வாயு பகவானுடைய லீலைகள் வெகுவெகு அதிசயமானவை. அந்தப் பெரும் சுழிக்காற்று எவ்வளவு அவசரமாக வந்ததோ அவ்வளவு அவசரமாகவே போய்விட்டது. போகும் வழியிலெல்லாம் கடலைப் படாதபாடு படுத்திவிட்டுப் போய் விட்டது.

சுழிக்காற்று போய்விட்டது சரிதான்; ஆனால் அதனால் கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு இலேசில் அடங்கிவிடாது. ஒரு இரவும், ஒரு பகலும் நீடித்திருந்தாலும் இருக்கும். அந்தக் கொந்தளிப்பின் வேகம் நெடுந்தூரம் பிரயாணம் செய்யும் கோடிக்கரையில் விஸ்தாரமான மணற் பிரதேசத்தையெல்லாம் கடல் ஏறிமூடிவிடும். நாகப்பட்டினத்தின் கடற்கரைமீது பேரலைகள் மோதி இடித்துக் தகர்க்கப் பார்க்கும். இன்னும் அக்கொந்தளிப்பு காங்கேசன்துறை - திரிகோண மலை வரையில் பரவும். மாதோட்டத்தையும், இராமேசுரத்தையும் கூட ஒரு கை பார்த்துவிடும்.

இளவரசர் முதலியோர் ஏறியிருந்த படகு அலைகளால் மொத்துண்டு மிதந்து கொண்டேயிருந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் துடுப்பு வலிப்பதையும் நிறுத்தி விட்டார்கள். திக்கும் திசையும் தெரியாதபோது, கப்பல் எங்கே இருக்கிறதென்றும் தெரியாத போது, துடுப்பு வலித்து ஆவது என்ன? காற்று ஓய்ந்துவிட்டது; மழை ஓய்ந்துவிட்டது; இடியும் மின்னலும் நின்று விட்டன. ஆனால் அலைகளின் ஆங்காரம் மட்டும் சிறிதளவும் குன்றவில்லை.

படகு அந்த அலைகளில் தத்தளித்துக் கொண்டேயிருந்தது. சற்றும் எதிர்பாராத ஓர் அபாயம் அதை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. இதோ வந்துவிட்டது! எரிந்த கப்பல் முழுகிற்றல்லவா! அப்போது முழுதும் எரியாத ஒரு பாய்மரம் அதிலிருந்து பிரிந்தது. கடலில் அது மிதந்து மிதந்து படகுக்கு அருகில் வந்தது. இருட்டின் காரணமாக வெகு சமீபத்தில் வரும்வரையில் அதை ஒருவரும் பார்க்கவில்லை.

பார்த்தவுடனே, "துடுப்பு வலியுங்கள்! துடுப்பு வலியுங்கள்!" என்று இளவரசர் கூவினார்.

அவர் கூவி வாய் மூடுவதற்குள் அந்தப் பாய்மரம் படகின் அடிப்பகுதியில் இடித்தது. இடித்த வேகத்தில் படகு 'படார்' என்று பிளந்தது. முதலில் இரண்டு பகுதிகளாகப் பிரிந்தது. பிறகு சிறிய சிறிய பலகைத் துண்டுகளாகப் பிளந்து சிதறியது.

"நண்பா! பயப்படாதே! இந்தப் படகைக் காட்டிலும் அந்தப் பாய்மரம் பத்திரமானது. தாவி அதைப் பற்றிக்கொள்!" என்றார் இளவரசர்.


முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com