Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 2
கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

41. "அதோ பாருங்கள்!"


சேநாபதி பூதி விக்கரமகேசரி கூறிய செய்தியைக் கேட்டதும் இளவரசரின் முகத்தில் புன்னகை அரும்பியது.

"கடைசியாக என் உள்ளத்தின் போராட்டத்துக்கு ஒரு முடிவு வந்துவிட்டது போல் காண்கிறது" என்று மெல்லிய குரலில் தமக்குத்தாமே பேசிக்கொள்கிறவர் போலச் சொல்லிக் கொண்டார்.

பார்த்திபேந்திரன் கொதித்தெழுந்தான். "சேநாதிபதி! என்ன சொன்னீர்? இது உண்மைதானா? என்னிடம் ஏன் இது வரையில் சொல்லவில்லை? இந்தப் பித்துக்குளிப் பெண்ணை நீர் நம்முடன் கட்டி இழுத்து வந்ததற்குக் காரணம் இப்போதல்லவா தெரிகிறது? மறுபடியும் கேட்கிறேன்; பழுவேட்டரையர்கள் இளவரசரைச் சிறைப்படுத்தி வரக் கப்பல்களை அனுப்பியிருப்பது உண்மையா?" என்று கேட்டான்.

"ஆம், ஐயா! இந்தப் பெண் கண்ணால் பார்த்ததாகவும், காதால் கேட்டதாகவும் கூறுவதை நம்புவதாயிருந்தால் அது உண்மைதான்!"

"ஆகா! அந்தக் கிழவர், திருக்கோவலூர் மிலாடுடையார், கூறியது உண்மையாயிற்று. பழுவேட்டரையர்களை உள்ளபடி உணர்ந்தவர் அவர்தான்! சேநாதிபதி! இத்தகைய செய்தியை அறிந்த பிறகும் ஏன் சும்மா இருக்கிறீர்? பராந்தக சக்கரவர்த்தியின் குலத்தோன்றலை, சுந்தர சோழரின் செல்வப் புதல்வரை, நாடு நகரமெல்லாம் போற்றும் இளவரசரை, தமிழகத்து மக்களெல்லாம் தங்கள் கண்ணினுள் மணியாகக் கருதும் செல்வரை, ஆதித்த கரிகாலருடன் பிறந்த அருள்மொழிவர்மரை, - இந்த அற்பர்களாகிய பழுவேட்டரையர்கள் சிறைப்படுத்தி வர ஆட்களை அனுப்பும்படி ஆகிவிட்டதா? இனியும் என்ன யோசனை? உடனே படைகளுடன் புறப்பட்டுச் சென்று இளவரசரைச் சிறைப்படுத்த வந்தவர்களை அழித்து இந்த இலங்கைத் தீவிலேயே அவர்களுக்குச் சமாதியை எழுப்புவோம்!... பிறகு நாம் போட்ட திட்டத்தின்படி காரியத்தை நடத்துவோம்! கிளம்புங்கள்! இன்னும் ஏன் தயக்கம்?" என்று பார்த்திபேந்திரன் பொரி பொரித்துக் கொட்டினான்.

சேநாதிபதி பூதி விக்கிரமகேசரி அவனைப் பார்த்து "பார்த்திபேந்திரா! நீ இப்படித் துடிப்பாய் என்று எண்ணித்தான் நான் முன்னமே இந்தப் பெண் கொண்டு வந்த சேதியை உன்னிடம் சொல்லவில்லை. நன்றாக யோசித்துச் செய்ய வேண்டிய காரியம். அவசரப்படுவதில் பயனில்லை!" என்றார்.

"யோசனை செய்ய வேண்டுமா? என்ன யோசனை? எதற்காக யோசனை? இளவரசே! நீங்கள் சொல்லுங்கள். இனி யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? இதற்கு முன் ஏதேனும் தங்களுக்குத் தயக்கமிருந்திருந்தாலும், இனி தயங்குவதற்கு இடமில்லையே? பழுவேட்டரையர்களைப் பூண்டோ டு அழித்து விடவேண்டியது தானே?"

அப்போது இளவரசர், "சேநாதிபதியின் மனத்தில் உள்ளதையும் தெரிந்து கொள்ளலாமே? ஐயா! தாங்கள் எதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்கிறீர்கள்?" என்று எவ்விதப் படபடப்புமின்றி நிதானமாகக் கேட்டார்.

"தங்களைச் சிறைப்படுத்துவதற்கு... இந்த வார்த்தைகளைச் சொல்லவும் என் வாய் கூசுகிறது... ஆனாலும் சொல்ல வேண்டியிருக்கிறது. தங்களைச் சிறைப்படுத்த வந்திருப்பவர்களின் சக்கரவர்த்தியின் கட்டளையோடு வந்திருந்தால் நாம் என்ன செய்வது? அப்போதும் அவர்களை எதிர்த்துப் போரிடுவதா?"

இதைக் கேட்ட பார்த்திபேந்திரன் கடகடவென்று சிரித்து விட்டு, "அழகாயிருக்கிறது, தங்கள் வார்த்தை! சக்கரவர்த்தி சொந்தமாகக் கட்டளை போடும் நிலையில் இருக்கிறாரா? அவரையேதான் பழுவேட்டரையர்கள் சிறையில் வைத்திருக்கிறார்களே!" என்றான்.

இச்சமயத்தில் வந்தியத்தேவன், குறுக்கிட்டு, "பல்லவ தளபதி கூறுவது முற்றும் உண்மை. நானே என் கண்களால் பார்த்தேன். சக்கரவர்த்தியைச் சிறையில் வைத்திருப்பது போலத்தான் பழுவேட்டரையர்கள் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய விருப்பமின்றி யாரும் சக்கரவர்த்தியைப் பார்க்க முடியாது; பேச முடியாது. நான் ஒரு வார்த்தை சொல்லத் துணிந்ததற்காக என்னை அவர்கள் படுத்திய பாட்டை நினைத்தால்... அப்பா! சின்னப் பழுவேட்டரையரின் இரும்புக்கை பற்றிய இடத்தில் இன்னும் எனக்கு வலிக்கிறது!" என்று கூறித் தன் மணிக்கட்டைத் தடவிக் கொண்டான்.

"அப்படிச் சொல், வல்லவரையா! உன்னை என்னமோவென்று நினைத்தேன். இளவரசருக்கும், சேநாதிபதிக்கும் இன்னொரு முறை நன்றாக எடுத்துச் சொல்!" என்றான் பார்த்திபேந்திரன்.

இளவரசர், "வேண்டாம்; அவர் சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டார்!" என்று கூறி, வந்தியத்தேவனைப் பார்த்து, "ஐயா! நீர் அந்தப் பெண்ணைப் போய் அழைத்து வருவதாகச் சொன்னீரே! ஏன் இங்கேயே நின்று கொண்டிருக்கிறீர்? அவள் கொண்டு வந்த செய்தியை அவள் வாய்மொழியாகவே விவரமாகக் கேட்கலாம்! கொஞ்சம் கிறுக்குப் பிடித்த பெண்போலத் தோன்றுகிறது. எப்படியாவது நல்ல வார்த்தை சொல்லி அவளை இங்கே அழைத்து வாருங்கள்!" என்றார்.

"போகிறேன், இளவரசே! போய் அழைத்து வருகிறேன். பழுவேட்டரையர்களிடம் தாங்கள் சிறைப்படுவது என்பதை மட்டும் என்னால் சகிக்க முடியாது. என் உடம்பில் உயிர் இருக்கும் வரையில் அது நடவாத காரியம்!" என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் சென்றான்.

"சேநாதிபதி தங்களுடைய கருத்து என்னவென்று சொல்லவில்லையே?" என்று அருள்மொழிவர்மர் கேட்டார்.

"என்னுடைய கருத்து இதுதான். பழுவேட்டரையர்கள் அனுப்பியிருக்கும் ஆட்களைத் தாங்கள் சந்திக்கக் கூடாது. பார்த்திபேந்திரன் கொண்டு வந்திருக்கும் கப்பலில் ஏறித் தாங்கள் உடனே காஞ்சிக்குப் போய் விடுங்கள். நான் தஞ்சாவூருக்குப் போகிறேன். அங்கே சக்கரவர்த்தியை நேரில் பார்த்து உண்மை நிலையைத் தெரிந்து கொள்கிறேன்..."

"தஞ்சாவூருக்குத் தாங்கள் போவது சிங்கத்தின் வாயில் தலையைக் கொடுப்பது போலத்தான். போனால் திரும்பி வரமாட்டீர்கள். அப்படியே அங்குள்ள பாதாளச் சிறையில் போய்விடுவீர்கள். சக்கரவர்த்தியைப் பார்க்கவும் தங்களால் முடியாது..."

"என்ன வார்த்தை சொல்கிறாய்? என்னைச் சிறையில் அடைக்கக் கூடிய வல்லமையுள்ளவன் சோழ நாட்டில் எவன் இருக்கிறான். சக்கரவர்த்தியை நான் சந்திக்கக் கூடாது என்று தடுக்கக் கூடிய ஆண்மை உள்ளவன் எவன் இருக்கிறான்? மேலும், அங்கே முதன் மந்திரி அநிருத்த பிரமராயர் இருக்கிறார்..."

"பிரமராயர் இருக்கிறார். இருந்து என்ன பயன்? அவருக்கே சக்கரவர்த்தியைப் பார்க்க முடியவில்லை. இதோ அவருடைய சிஷ்யன் நிற்கிறானே, அவன் என்ன சொல்கிறான் என்று கேட்டுப் பார்க்கலாமே?"

சேநாதிபதி ஆழ்வார்க்கடியான் பக்கம் திரும்பி, "ஆம்; இந்த வைஷ்ணவன் இங்கு நிற்பதையே மறந்துவிட்டேன். திருமலை! ஏன் இப்படி மௌனமாக நிற்கிறாய்? சற்று முன் இளவரசர் சொன்னதுபோல் நீயும் ஊமையாகி விட்டாயா?" என்றார்.

"சேநாதிபதி! கடவுள் நமக்கு இரண்டு காதுகளைக் கொடுத்திருக்கிறார்; வாய் ஒன்றைத்தான் கொடுத்திருக்கிறார். ஆகையால் 'செவிகளை நன்றாக உபயோகப்படுத்து; பேசுவதைக் கொஞ்சமாக வைத்துக்கொள்' என்று என் குருநாதர் எனக்குச் சொல்லியிருக்கிறார். முக்கியமாக, பெரிய ராஜாங்க விஷயங்களைப் பற்றிப் பேச்சுக்கள் நடக்கும் இடத்தில் அந்த விரதத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வரச் சொல்லியிருக்கிறார்."

"குருவின் வாக்கை நன்றாக நிறைவேற்றுகிறாய். நாங்களே இப்போது கேட்பதனால் சொல். உன்னுடைய யோசனை என்ன?"

"எதைப் பற்றி என் யோசனையைக் கேட்கிறீர்கள், சேநாதிபதி?"

"இத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்த விஷயமாகத்தான். இளவரசர் இப்போது என்ன செய்வது உசிதம்? இலங்கையிலேயே இருக்கலாமா? அல்லது காஞ்சிக்குப் போகலாமா?"

"என்னுடைய உண்மையான கருத்தைச் சொல்லட்டுமா? இளவரசர் அநுமதித்தால் சொல்கிறேன்."

ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த அருள்மொழிவர்மர் ஆழ்வார்க்கடியானை ஏறிட்டுப் பார்த்து, "சொல் திருமலை, தாராளமாய் மனத்தை விட்டுச்சொல்!" என்று தைரியப்படுத்தினார்.

"இந்த இலங்கைத் தீவிலேயே மிகக் கடுமையான கட்டுக் காவல் உள்ள சிறைச்சாலை எது உண்டோ , அதைக் கண்டுபிடித்து அதற்குள்ளே இளவரசரை அடைத்துப் போடவேண்டும்! வெளியில் பலமான காவலும் போடவேண்டும்!"

"இது என்ன உளறல்?" என்றார் சேநாதிபதி.

"விளையாட இதுதானா சமயம்?" என்றான் பார்த்திபேந்திரன்.

"நான் உளறவும் இல்லை; விளையாடவும் இல்லை. மனத்தில் உள்ளதைச் சொன்னேன். நேற்று இரவு இளவரசர் அநுராதபுரத்து வீதிகளின் வழியாக வந்து கொண்டிருந்தார். அவர் தலைமீது ஒரு வீட்டின் முன் முகப்பு இடிந்து விழுந்தது. பிறகு ஒரு வீட்டில் நாங்கள் படுத்திருந்தோம். நல்ல வேளையாக ஒரு காரியத்தின் பொருட்டு எழுந்து போய் விட்டோ ம். சற்று நேரத்துக்கெல்லாம் அந்த வீடு தீப்பற்றி எரிந்தது. இவையெல்லாம் உண்மையா, இல்லையா என்று இளவரசரையே கேளுங்கள்!"

இருவரும் இளவரசரை நோக்கினார்கள். அவருடைய முகபாவம் ஆழ்வார்க்கடியானுடைய கூற்றை உறுதிப்படுத்தியது.

"இந்த அபாயங்கள் எல்லாம் யாருக்காக நேர்ந்தவையென்று கேளுங்கள். என்னையோ அல்லது வந்தியத்தேவனையோ கொல்லுவதற்காக யாராவது வீட்டைக் கொளுத்துவார்களா?"

பார்த்திபேந்திரன் உடனே துள்ளிக் குதித்து "இளவரசரைக் கொல்லுவதற்குத்தான் யாரோ முயற்சி செய்தார்கள். இதனால் இளவரசர் என்னுடன் காஞ்சிக்கு வரவேண்டிய அவசியம் உறுதிப்படுகிறது!" என்றான்.

"கூடவே கூடாது! தங்களுடன் இளவரசரை அனுப்புவதைக் காட்டிலும் பழுவேட்டரையர்களிடமே பிடித்துக் கொடுத்துவிடலாம்" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"வைஷ்ணவனே! என்ன சொன்னாய்!" என்று பார்த்திபேந்திரன் கத்தியை உருவினான்.

சேநாதிபதி அவனைக் கையமர்த்தி, "திருமலை! ஏன் அவ்விதம் சொல்லுகிறாய்? பார்த்திபேந்திர பல்லவர் சோழ குலத்தின் அருந்துணைவர் என்று உனக்குத் தெரியாதா?" என்று கேட்டார்.

"தெரியும், சேநாதிபதி, தெரியும்! சிநேகம் இருந்து விட்டால் மட்டும் போதுமா?"

"பார்த்திபேந்திரர் சிநேகத்துக்காகவே உயிரையும் கொடுக்கக் கூடியவர் என்பதை அறிவேன், திருமலை!"

"அதுவும் இருக்கலாம். ஆனால் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு மறுமொழி கூறச் சொல்லுங்கள். நாங்கள் முந்தா நாள் மாலை தம்பள்ளைக்கு அருகில் போய்க் கொண்டிருந்தபோது இவருடன் இரண்டு பேர் வருவதைப் பார்த்தோம்! அந்த மனிதர்கள் யார், இப்பொழுது அவர்கள் எங்கே என்று இவரைக் கேட்டுச் சொல்லுங்கள்."

பார்த்திபேந்திர பல்லவன் சிறிது திடுக்கிட்டுப் போனான். கொஞ்சம் தயக்கத்துடனே கூறினான்: "திரிகோண மலையில் அவர்களை நான் சந்தித்தேன். இளவரசர் இருக்குமிடத்தை எனக்குக் காட்டுவதாக அவர்கள் அழைத்து வந்தார்கள். அநுராதபுரத்தில் திடீரென்று மறைந்து விட்டார்கள். எதற்காகக் கேட்கிறாய், வைஷ்ணவனே! அவர்களைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?"

"தெரியும்! சோழ குலத்தை அடியோடு ஒழித்துவிடச் சபதம் செய்திருப்பவர்களில் அவர்கள் இருவர் என்று எனக்குத் தெரியும். நேற்று அநுராதபுரத்தில் அவர்கள்தான் இளவரசரை கொல்லப் பார்த்தார்கள் என்று ஊகிக்கிறேன்... ஆகா! அதோ பாருங்கள்" என்று ஆழ்வார்க்கடியான் சுட்டிக் காட்டினான்.

அவன் சுட்டிக் காட்டிய இடம் அம்மண்டபத்திலிருந்து சற்றுத் தூரத்திலிருந்தது. நெருங்கிப் படர்ந்திருந்த மரங்களுக்கு இடையில் ஒரு அழகிய யுவதியும், யௌவன வாலிபனும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்தியத்தேவனும் பூங்குழலியுந்தான் என்பது ஊகிக்கக் கூடியதாயிருந்தது. பேசிக் கொண்டேயிருந்த வந்தியத்தேவன் சட்டென்று ஒரு சிறிய கத்தியை சுழற்றி வீசி எறிந்தான். கத்தி ஒரு புதரில் போய் விழுந்தது. 'வீல்' என்று ஒரு குரல் கேட்டது.


முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com