Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 2
கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

4. நள்ளிரவில்

இரவு போஜனம் ஆன பிறகு வந்தியத்தேவன், கலங்கரை விளக்கின் தலைவரைத் தனிப்படச் சந்தித்து இலங்கைக்குத் தான் அவசரமாகப் போக வேண்டும் என்பதைத் தெரிவித்தான். தியாகவிடங்கக் கரையர் என்னும் பெயருடைய அப்பெரியவர் தமது வருத்தத்தைத் தெரிவித்தார்.

"இந்தக் கரையோரத்தில் எத்தனையோ பெரிய படகுகளும், சிறிய படகுகளும் ஒரு காலத்தில் இருந்தன. அவையெல்லாம் இப்போது சேதுக்கரைக்குப் போய் விட்டன. இலங்கையில் உள்ள நமது சைன்யத்தின் உதவிக்காகத்தான் போயிருக்கின்றன. எனக்குச் சொந்தமாக இரண்டு படகுகள் உண்டு. அவற்றில் ஒன்றில் நேற்று வந்த இரண்டு மனிதர்களை ஏற்றிக் கொண்டு என் மகன் போயிருக்கிறான். அவன் எப்போது திரும்பி வருவான் என்று தெரியாது. என்ன செய்யட்டும்?" என்றார்.

"அந்த மனிதர்கள் யார்? அவர்கள் ஒரு மாதிரி ஆட்கள் என்று தங்கள் குமாரி கூறினாளே?"

"ஆமாம்; அவர்களைக் கண்டால் எனக்கும் பிடிக்கவில்லை தான். அவர்கள் யார் என்பதும் தெரியவில்லை; எதற்காகப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை. பழுவேட்டரையரின் பனை இலச்சினை அவர்களிடம் இருந்தது. அப்படியும் நான் என் மகனைப் போகச் சொல்லியிருக்கமாட்டேன். ஆனால் என் மருமகள் மிகப் பணத்தாசை பிடித்தவள். பை நிறையப் பணம் கொடுப்பதாக அவர்கள் சொன்னதைக் கேட்டுவிட்டுப் புருஷனைப் போக வேண்டும் என்று வற்புறுத்தினாள்..."

"இது என்ன ஐயா, வேடிக்கை? வீட்டில் உலக அநுபவம் இல்லாத ஒரு சிறு பெண் சொன்னால், அதைத்தான் உங்கள் மகன் கேட்க வேண்டுமா?" என்றான் வந்தியத்தேவன். பிறகு சிறிது தயக்கத்துடன், "மன்னித்துக் கொள்ளுங்கள், அது தங்கள் குடும்ப விஷயம்!" என்றான்.

"அப்பனே! நீ கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை. என் குடும்பத்திற்குச் சாபக்கேடு ஒன்று உண்டு. என் மகன்..." என்று தயங்கினார்.

வந்தியத்தேவன் அப்போது சேந்தன் அமுதன் இக்குடும்பத்தைப் பற்றிக் கூறியது நினைவுக்கு வந்தது.

"தங்கள் மகனால் பேச முடியாதா?" என்றான்.

"ஆம்; உனக்கு எப்படித் தெரிந்தது?" என்றார் பெரியவர்.

சேந்தன் அமுதனையும், அவன் தாயாரையும், அவர்கள் வீட்டில் தான் தங்கியிருந்ததையும் பற்றி வந்தியத்தேவன் அவரிடம் கூறினான்.

"ஆகா! அந்த ஆள் நீதானா? உன்னைப் பற்றிச் செய்தி இங்கே முன்னமே வந்துவிட்டது. உன்னை நாடெங்கும் தேடுகிறார்களாமே?"

"இருக்கலாம்; அதைப்பற்றி எனக்குத் தெரியாது".

"நீ ஏன் இலங்கைக்கு அவசரமாகப் போக விரும்புகிறாய் என்று இப்போது எனக்குத் தெரிகிறது."

"பெரியவரே! தாங்கள் நினைப்பது சரியல்ல. என் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டும் நான் இலங்கைக்குப் போகவில்லை. அங்கேயுள்ள ஒருவருக்கு மிக முக்கியமான ஓலை ஒன்று கொண்டு போகிறேன். தாங்கள் வேண்டுமானால் அதைப் பார்க்கலாம்."

"தேவையில்லை. இளைய பிராட்டி உன்னைப் பற்றி எழுதியிருப்பதே எனக்குப் போதும். ஆனால் இச்சமயம் நீ கேட்கும் உதவி என்னால் செய்ய முடியவில்லையே!"

"இன்னொரு படகு இருப்பதாகச் சொன்னீர்களே?"

"படகு இருக்கிறது. தள்ளுவதற்கு ஆள் இல்லை. நீயும் உன்னுடைய சிநேகிதனும் தள்ளிக்கொண்டு போவதாயிருந்தால் தருகிறேன்..."

"எங்கள் இருவருக்கும் படகு ஓட்டத் தெரியாது. எனக்குத் தண்ணீர் என்றாலே கொஞ்சம் பயம். அதிலும் கடல் என்றால்..."

"படகு ஓட்டத் தெரிந்தாலும் அநுபவம் இல்லாதவர்கள் கடலில் படகு ஓட்ட முடியாது. கடலில் கொஞ்ச தூரம் போய்விட்டால் கரை மறைந்து விடும். அப்புறம் திசை தெரியாமல் திண்டாட வேண்டி வரும்."

"என்னுடன் வந்தவனை நான் அழைத்துப் போவதற்கும் இல்லை. அவனை மூலிகை சேகரிப்பதற்காக இங்கே விட்டுப் போகவேண்டும். ஏதாவது ஒரு வழி சொல்லி நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்."

"ஒரு வழி இருக்கிறது. அது எளிதில் நடக்கக் கூடியதன்று. நீயும் முயற்சி செய்து பார்! அதிர்ஷ்டம் உன் பக்கம் இருந்தால்..."

"நான் என்ன செய்ய வேண்டும்? பெரியவரே, சொன்னால் கட்டாயம் செய்கிறேன்" என்றான் வந்தியத்தேவன்.

"இந்தப் பகுதியிலேயே பூங்குழலியைப் போல் சாமர்த்தியமாகப் படகு தள்ளத் தெரிந்தவர்கள் வேறு யாரும் இல்லை. இலங்கைக்கு எத்தனையோ தடவை போய் வந்திருக்கிறாள். அவளிடம் நான் சொல்லுகிறேன்; நீயும் கேட்டுப்பார்!"

"இப்போதே கூப்பிடுங்களேன்; கேட்டுப் பார்க்கலாம்"

"வேண்டாம்; மிக்க பிடிவாதக்காரி. இப்போது உடனே கேட்டு 'முடியாது' என்று சொல்லிவிட்டால், அப்புறம் அவளுடைய மனத்தை மாற்ற முடியாது. நாளைக்கு நல்ல சமயம் நோக்கி அவளிடம் நான் சொல்லுகிறேன். நீயும் தனியே பார்த்துக் கேள்!"

இவ்விதம் தியாகவிடங்கக் கரையர் கூறிவிட்டுக் கலங்கரை விளக்கை நோக்கிச் சென்றார்.

அவருடைய வீட்டுத் திண்ணையில் வந்தியத்தேவன் படுத்தான். அவனுடன் வந்த வைத்தியர் மகன் முன்னமே தூங்கிப் போய்விட்டான். வந்தியத்தேவனுக்கு நீண்ட பிரயாணம் செய்த களைப்பினால் தூக்கம் கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்தது; விரைவில் தூங்கிப் போனான்.

திடீரென்று தூக்கம் கலைந்தது. கதவு திறக்கும் ஓசை கேட்டது. களைத்து மூடியிருந்த கண்ணிமைகளைக் கஷ்டப்பட்டு வந்தியத்தேவன் திறந்து பார்த்தான். ஓர் உருவம் வீட்டிற்குள்ளேயிருந்து வெளியேறிச் சென்றது தெரிந்தது. மேலும் கவனமாகப் பார்த்தான். அது ஒரு பெண்ணின் உருவம் என்று கண்டான். கலங்கரை விளக்கின் வெளிச்சம் அந்த உருவத்தின் மேல் விழுந்தது. ஆ! அவள் பூங்குழலிதான்! சந்தேகமில்லை. அவள் என்னமோ நம்மிடம் சொன்னாளே? "நடுநிசியில் என்னைத் தொடர்ந்து வா! என் காதலர்களைக் காட்டுகிறேன்!" என்றாள். அது ஏதோ விளையாட்டுப் பேச்சு என்றல்லவா அப்போது நினைத்தோம்? இப்போது இவள் உண்மையிலேயே நள்ளிரவில் எழுந்து போகிறாளே? எங்கே போகிறாள்? காதலனையோ, காதலர்களையோ பார்க்கப் போவதாயிருந்தால் அப்படி நம்மிடம் சொல்லுவாளா? 'பின் தொடர்நது வந்தால், காட்டுகிறேன்' என்பாளா? இதில் ஏதோ மர்மமான பொருள் இருக்க வேண்டும்! அல்லது ஒரு வேளை...எப்படியிருந்தாலும், பின் தொடர்ந்து போய் ஏன் பார்க்கக் கூடாது? நாளைக்கு இவளிடம் நயமாக பேசி இலங்கைக்குப் படகு தள்ளிக் கொண்டு வரச் சம்மதிக்கப் பண்ண வேண்டும். அதற்கு இப்போது இவளைத் தொடர்ந்து போவது உதவியாயிருக்கலாம். ஏதாவது இவளுக்கு அபாயம் வரக்கூடும்! அதிலிருந்து இவளைக் காப்பாற்றினால் நாளைக்கு நாம் கேட்பதற்கு இணங்கக் கூடும் அல்லவா?

வந்தியத்தேவன் சத்தம் செய்யாமல் எழுந்தான். பூங்குழலி போகும் வழியைப் பிடித்துக் கொண்டே போனான். சாயங்காலம் சேற்றுப் பள்ளத்தில் விழுந்த போது அடைந்த அனுபவம் அவனுக்கு நன்றாய் ஞாபகம் இருந்தது. அம்மாதிரி மறுபடியும் நேர்வதை அவன் விரும்பவில்லை. ஆகையால் பூங்குழலியை அவன் பார்வையிலிருந்து தவற விட்டுவிடக் கூடாது.

கலங்கரை விளக்கிலிருந்து கொஞ்ச தூரம் வரை வெட்ட வெளியாக இருந்தது. ஆகையால் பூங்குழலியின் உருவமும் தெரிந்துகொண்டிருந்தது. அவள் போன வழியே போவதில் கஷ்டம் ஒன்றும் இல்லை. அவள் அருகில் போய் பிடித்துவிட வேண்டும் என்று எண்ணி விரைவாக நடந்தான். ஆனால் அது சாத்தியப்படவில்லை. இவன் வேகமாய் நடக்க நடக்க அவளுடைய நடை வேகமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இவன் பின் தொடர்ந்து வருவதை அவள் கவனித்ததாகவே தெரியவில்லை.

திறந்த வெளியைக் கடந்ததும் காடு அடர்ந்த மேட்டுப் பாங்கான பூமி வந்தது. நேரே அதன் பேரில் ஏறாமல் பூங்குழலி அந்த மேட்டைச் சுற்றிக்கொண்டே போனாள். மேடும் காடும் முடிந்த முனை வந்தது. அந்த முனையை வளைத்து கொண்டு சென்றாள். வந்தியத்தேவனும் விரைந்து சென்று அந்த முனை திரும்பியதும் சற்றுத் தூரத்தில் அவள் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தான். "நல்லவேளை!" என்று தைரியம் கொண்டான். ஆனால் அடுத்த கணத்தில் திடீரென்று அவளைக் காணவில்லை.

எப்படித் திடீரென்று மறைந்திருப்பாள்? இது என்ன மாயமா, மந்திரமா? அங்கே ஏதாவது பள்ளம் இருந்திருக்குமோ? ஓட்டமும் நடையுமாகப் போய்ச் சுமாராகப் பூங்குழலி எங்கே நின்று மறைந்தாள் என்று தோன்றியதோ, அந்த இடத்துக்கு வந்தான் அங்கே நின்று நாலா பக்கமும் பார்த்தான். மூன்று பக்கங்களில் அவள் போயிருக்க முடியாது. போயிருந்தால் தன் கண்ணிலிருந்து மறைந்திருக்க முடியாது. அவ்விடத்தில் காலை ஜாக்கிரதையாக ஊன்றி வைத்துப் பார்த்துச் சேறு கிடையாது என்பதையும் நிச்சயப்படுத்திக் கொண்டான். ஆகையால், மேட்டின்மேல் ஏறிக் காட்டுக்குள்தான் போயிருக்கவேண்டும்.

இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்ததில், குத்துச் செடிகள் அடர்ந்த அந்த மேட்டில் ஏறுவதற்கு, ஒற்றையடிப்பாதை ஒன்று இருப்பது தெரிய வந்தது. வந்தியத்தேவன் அதில் ஏறினான். ஏறும்போது திக் திக் என்று அடித்துக் கொண்டது. அங்கே கலங்கரை விளக்கின் மங்கிய வெளிச்சமும் வரவில்லை. மாலைப் பிறை முன்னமேயே கடலில் மூழ்கி மறைந்துவிட்டது. மினு மினுத்த நட்சத்திரங்களின் வெளிச்சத்திலே வழியையும் கொஞ்ச தூரத்துக்கு அப்பால் காணவில்லை. குத்துச்செடிகளும் குட்டை மரங்களும் பயங்கர வடிவங்களைப் பெற்றன. அவற்றின் நிழல்கள் கரிய பேய்களாக மாறின. செடிகளின் இலைகள் ஆடியபோது நிழல்களும் அசைந்தன. ஒவ்வோர் அசைவும் வந்தியத்தேவனுடைய நெஞ்சை அசைத்தது. அந்தக் கரிய இருளிலும் நிழலிலும் எங்கே, என்ன அபாயம் காத்திருக்கிறதென்று யார் கண்டது? விஷ ஜந்துக்கள், கொடிய விலங்குகள் பதுங்கியிருந்து பாயலாம். அபாயம் மேலிருந்து வரலாம்; பக்கங்களிலிருந்தும் வரலாம்; பின்னாலிருந்தும் வரலாம். அடடா! இது என்ன, இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டோ ம்? கையில் வேலைக்கூட எடுத்து வரவில்லையே?

அது என்ன சலசலப்புச் சத்தம்? அந்த மரத்தின்மேல் தெரியும் அந்தக் கரிய உருவம் என்ன? அந்தப் புதரின் இருளில் இரண்டு சிறிய ஒளிப் பொட்டுக்கள் மின்னுகின்றனவே, அவை என்னவாயிருக்கும்?

வந்தியத்தேவனுடைய கால்கள் அவனை அறியாமல் நடுங்கின. சரி! சரி! இங்கே என்ன நமக்கு வேலை? எதற்காக இங்கு வந்தோம்? - என்ன அறிவீனம்? உடனே இறங்கிப் போய்விட வேண்டியதுதான்!

இறங்கலாம் என்று எண்ணித் திரும்ப யத்தனித்த தருணத்தில் ஒரு குரல் கேட்டது. நெஞ்சைப் பிளக்கும் குரல்; பெண்ணின் குரல். ஒரு விம்மல் சத்தம். பிறகு இந்தப் பாடல்:-

"அலை கடலும் ஓய்ந்திருக்க
அகக்கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில்
நெஞ்சகந்தான் விம்முவதேன்?..."

வந்தியத்தேவன் அம்மேட்டிலிருந்து கீழே இறங்கிச் செல்லும் யோசனையை விட்டுவிட்டான். குரல் வந்த இடம் நோக்கி மேலே ஏறினான். விரைவில் மேட்டின் உச்சி தெரிந்தது. அங்கே அவள் நின்று கொண்டிருந்தாள். பூங்குழலிதான். பாடியது, அவள் தான். வானத்தில் சுடர்விட்ட நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டு பாடினாள். அந்த விண்மீன்களையே அவளுடைய பாட்டைக் கேட்கும் ரஸிக மகாசபையாக நினைத்துக் கொண்டு பாடினாள் போலும்!

நட்சத்திரங்களில் ஒன்று தூமகேது. அதிலிருந்து கிளம்பிய கதிரின் கத்தை நீண்டதூரம் விசிறி போல் விரிந்து படர்ந்திருந்தது. மேட்டின் உச்சியில் அப்பெண்ணின் நிழல் வடிவமும், அவளுடைய குரலும் கீதமும், வானத்தில் தூமகேதுவும் சேர்ந்து வந்தியத்தேவனைத் தன்வயமிழக்கச் செய்தன. அவனுடைய கால்கள் அவனை உச்சிமேட்டில் கொண்டு போய்ச் சேர்த்தன.

பூங்குழலிக்கு எதிரில் நேருக்கு நேராக அவன் நின்றான். அவளுக்குப் பின்னால், வெகு தொலைவு என்று காணப்பட்ட இடத்தில், கலங்கரை விளக்கின் சிவந்த ஒளி தோன்றியது. அதையொட்டி விரிந்த கடல் பரந்து கிடந்தது. கடலுக்கு எல்லையிட்டு வரையறுத்தது போல் வெள்ளிய அலைக்கோடு நீண்டு வளைந்து சென்றது.

"வந்து விட்டாயா? திண்ணையில் கும்பகர்ணனைப்போல் தூங்கினாயே என்று பார்த்தேன்..."

"வீட்டுக்கதவு திறந்த சத்தம் கேட்டு விழித்துக் கொண்டேன். நீ விடுவிடு என்று நடந்து வந்துவிட்டாய்! திரும்பியே பார்க்கவில்லை. அம்மம்மா! உன்னைத் தொடர்ந்து ஓடி வருவது எவ்வளவு கஷ்டமாய்ப் போய் விட்டது?"

"எதற்காகத் தொடர்ந்து வந்தாய்?"

"நல்ல கேள்வி! நீதானே வரச் சொன்னாய்? மறந்து விட்டாயா?"

"எதற்காக வரச் சொன்னேன்? உனக்கு நினைவு இருக்கிறதா?"

"நினைவு இல்லாமல் என்ன? உன் காதலர்களைக் காட்டுவதாகச் சொன்னாய்! எங்கே உன் காதலர்கள்? காட்டு, பார்க்கலாம்!"

"அதோ உனக்குப் பின்னால் திரும்பிப் பார்!" என்றாள் பூங்குழலி.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com