Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 2
கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

36. தகுதிக்கு மதிப்பு உண்டா?

இளவரசரும் 'நந்தினி'யும் நின்ற இடத்தை நோக்கி வந்தியத்தேவன் விரைவாகவே நடந்தான். அவன் அவ்விடத்தை அடைவதற்குள் கொஞ்சம் சந்தேகம் தோன்றிவிட்டது. இவள் நந்தினிதானா? பழுவூர் ராணிக்குரிய ஆடை ஆபரணங்கள் ஒன்றுமில்லையே! சந்நியாசினியைப் போல் அல்லவா எளிய உடை தரித்திருக்கிறாள்? முகம் நந்தினி முகம் மாதிரி தோன்றுகிறது. ஆனால் ஏதோ ஒரு வித்தியாசமும் இருக்கிறது. அது என்ன?

அவர்கள் நின்ற இடத்துக்கு வந்தியத்தேவன் சென்றதும் அந்த ஸ்திரீ நகர்ந்து வீதி ஓரத்து வீடுகளின் நிழலில் மறைந்தாள். வந்தியத்தேவன் பரபரப்புடன் அவளைத் தொடர்ந்து செல்லப் பார்த்தான். இளவரசர் அவனுடைய கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினார்.

"ஐயா! அந்த ஸ்திரீ யார்? பார்த்த முகமாகத் தோன்றியது!" என்றான்.

இதற்குள் அங்கு வந்து சேர்ந்த ஆழ்வார்க்கடியான், "அந்த ஸ்திரீ சோழநாட்டின் குல தெய்வமாகத்தான் இருக்கவேண்டும். அதோ பாருங்கள்! நாம் அச்சமயம் நகர்ந்திராவிட்டால் இத்தனை நேரம் புத்தர் பெருமானின் சரணங்களை அடைந்திருப்போம்" என்றான்.

திருமலை சுட்டிக்காட்டிய இடத்தைப் பார்த்தார்கள். அங்கே கட்டிடத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்திருந்த இடம் ஒரு சிறிய குன்றைப்போல் இருந்தது. ஒரு சிறிய யானையைக் கூட அந்தக் குன்று வெளியில் வரமுடியாதபடி அமுக்கிக் கொன்றிருக்கும். மூன்று சிறிய மனிதர்கள் எம்மாத்திரம்?

"நல்ல சமயத்திலேதான் நம் குலதெய்வம் தோன்றி நம்மைக் கையைத் தட்டி அழைத்தது" என்றார் பொன்னியின் செல்வர்.

"இளவரசே! அந்த ஸ்திரீ யார் என்று சொன்னீர்கள்?" என்று வந்தியத்தேவன் வியப்புடன் கேட்டான்.

"உமக்கு யார் என்று தோன்றியது? அவளைத் தொடர்ந்து போக ஏன் யத்தனித்தீர்கள்?" என்று இளவரசர் கேட்டார்.

"சோழர்களின் குல தெய்வம் என்றல்லவா இந்த வைஷ்ணவர் சொன்னார்; சோழர் குலத்துக்குக் கேடாக வந்த தேவதையாக எனக்குத் தோன்றியது."

"அப்படியென்றால்...? யார் என்று எண்ணிச் சொல்கிறீர்?"

"என்னுடைய பிரமைதானோ என்னமோ? பழுவேட்டரையர் இளைய தாரமாக மணந்திருக்கும் நந்தினி தேவி என்று தோன்றியது. உங்கள் இருவருக்கும் அப்படிப் படவில்லையா?" என்றான் வந்தியத்தேவன்.

"நான் நன்றாய்ப் பார்க்கவில்லை. ஆனாலும் அது உன் சித்தப் பிரமையாகத்தான் இருக்கவேண்டும். பழுவூர் ராணி இங்கு எப்படி வந்திருக்க முடியும்?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"இவர் சொல்வது முழுவதும் சித்தப் பிரமையன்று. கண்ணின் பிரமையும் அதில் சேர்ந்திருக்கிறது. அப்படி ஒரு அதிசயமான முக ஒற்றுமை இருப்பதாக எனக்குக் கூடச் சில சமயம் தோன்றியதுண்டு... வாருங்கள்! நடந்து கொண்டே பேசலாம்!" என்றார் இளவரசர்.

வீதி ஓரமாக வீடுகளின் நிழலில் நடப்பதற்குப் பதிலாக இப்போது மூவரும் நடுவீதியில் நிலா வெளிச்சத்தில் நடக்கத் தொடங்கினார்கள்.

சற்று நடந்ததும், "இளவரசே! தங்களைக் கையைத் தட்டி அழைத்து அந்த அம்மாள் என்ன சொன்னாள்?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.

"என்னைத் தேடிக்கொண்டு இரண்டு சத்துருக்கள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். அவர்கள் என்னைக் கொல்வதற்குச் சமயத்தை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதாகவும் சொன்னாள்."

"அடிப் பாவி! ஒரு வேளை எங்களைப் பற்றித்தான் அப்படிச் சொன்னாளா என்ன?" என்று வந்தியத்தேவன் திடுக்கிட்டுக் கேட்டான்.

பொன்னியின் செல்வர் சிரித்துவிட்டு, "இல்லை, நீங்கள்தான் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அப்படி நீங்களாகவே இருந்தாலும் கவலையில்லை. என் உயிர் மிகக் கெட்டியானது என்று அந்தத் தேவி சொல்லியிருக்கிறாள்! முன்னம் பல தடவை என்னைக் காப்பாற்றியும் இருக்கிறாள்!" என்றார்.

"ஐயா! அந்த இரண்டு பகைவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் பார்த்திபேந்திர பல்லவருடன் தங்களைக் தேடி வந்தவர்கள். இடிந்து விழுந்த மாளிகையில் இரண்டு உருவங்கள் தெரிந்தன. அவர்களாகத்தான் இருக்க வேண்டும்!" என்றான் திருமலை.

"ஐயா! வைஷ்ணவரே! இதை முன்னமேயே ஏன் சொல்லவில்லை! நீங்கள் மேலே செல்லுங்கள். நான் போய் அந்த இடிந்த வீட்டைச் சோதனை போட்டுவிட்டு வருகிறேன்!" என்று வந்தியத்தேவன் திரும்ப யத்தனித்தான்.

இளவரசர் அவனை மறுபடியும் கையைப் பிடித்து நிறுத்தி, "அவசரம் ஒன்றுமில்லை. அந்தப் பாழடைந்த வீட்டில் அவர்களைக் கண்டுபிடிக்கவும் முடியாது. பிறகு பார்த்துக் கொள்ளலாம். நான் மறு உத்தரவு போடும் வரையில் நீர் என்னுடனேயே இருக்கவேண்டும், தெரிகிறதா? இந்தப் பாழடைந்த நகரத்தில் இன்னும் எந்த மூலை முடுக்குகளில் என்ன அபாயம் காத்திருக்கிறதோ, யார் கண்டது? வீர சிகாமணியே! உம்மை நம்பியல்லவா நான் வேறு யாரையும் மெய்க்காவலுக்கு அழைத்து வரவில்லை? இப்படி நடுவீதியில் என்னைக் கைவிட்டுப் போய்விட்டால் நான் என்ன செய்வேன்?" என்றார்.

இந்த வார்த்தைகள் வந்தியத்தேவனைப் போதை கொள்ளச் செய்தன. அவன் நாத் தழுதழுக்க, "ஐயா! உங்களை விட்டு இனி நான் ஒரு கணமும் அகலமாட்டேன்!" என்றான்.

ஆழ்வார்க்கடியான், "உன்னை விட்டு நானும் அகலமாட்டேன். இளவரசருக்கு நீ காப்பு; உனக்கு நான் காப்பு" என்று சொன்னான்.

சிறிது நேரத்துக்கெல்லாம், மகாஸேன சக்கரவர்த்தியின் பாழடைந்த மாளிகையின் உட்புறத்தை மூவரும் அடைந்தார்கள். விசாலமான ஓர் அறையில் மூன்று பேருக்கும் பழைய காலத்துக்கட்டில்களில் படுக்கை விரித்திருந்தது. மூவரும் படுத்துக் கொண்டார்கள். அறையின் ஒரு பக்கத்துச் சுவரில் இருந்த பலகணியின் துவாரங்கள் வழியாக நிலா வெளிச்சம் உள்ளே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது.

"பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த அரண்மனையில் இதே இடத்தில் இலங்கையின் சக்கரவர்த்திகளும், இளவரசர்களும் அவர்களுடைய அந்தப்புர மாதரசிகளும் படுத்திருப்பார்கள். அப்போதும் இதே மாதிரி நிலாவின் கிரணங்கள் இந்தப் பலகணியின் வழியாக எட்டிப் பார்த்திருக்கும். இப்போது அதே இடத்தில் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களைப் பார்த்துவிட்டு இந்த நிலாக் கிரணங்கள் ஏமாற்றமடையும், இல்லையா, வந்தியத்தேவரே!" என்றார் அருள்மொழிவர்மர்.

"ஐயா! தங்களையும், இந்த வைஷ்ணவரையும் பற்றி நீங்கள் எது வேணுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். என்னை மட்டும் சாதாரண மனிதன் என்று சொல்ல வேண்டாம்!" என்றான் வல்லவரையன்.

"மறந்து விட்டேன்; மன்னிக்க வேண்டும். தாங்கள் பூர்வீகமான வல்லத்தரசர்கள் குலத்தில் பிறந்த அரசிளங் குமரர் அல்லவா?..."

"ஆம், ஐயா, ஆம்! என் மூதாதை ஒருவரைப் பற்றி ஒரு புலவர் பாடியிருப்பதைக் கேட்டால் இந்த வீர வைஷ்ணவர் பொறாமையினால் புழுங்கிச் செத்துப் போனாலும் போய்விடுவார்."

"போனாலும் போகட்டும்! திருமலை நல்ல தமிழ் அபிமானி. பல்லவ குலத்து நந்திவர்மனைப் போல் தமிழ்ப் பாடலுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டார். ஆகையால் பாடலைச் சொல்லுங்கள் கேட்கலாம்."

கொஞ்சம் தயக்கத்துடன் வல்லவரையன் பின்வரும் பாடலைக் கூறினான்:

"என் கவிகை என் சிவிகை
என் கவசம் என்துவசம்
என்கரி யீ(து) என்பரி யீது
என்பரே - மன்கவன
மாவேந்தன் வாணன்
வரிசைப் பரிசு பெற்ற
பாவேந்தரை, வேந்தர்
பார்த்து!"

இதைக் கேட்ட பொன்னியின் செல்வர், "திருமலை, நீ தமிழ்ப் புலவனாயிற்றே! இந்தப் பாடலின் பொருள் என்ன, சொல்!" என்றார்.

"ஐயா! என்னைப் பரிசோதிக்கிறீர்கள் போலும். ஆகட்டும், இதோ சொல்லுகிறேன்: மாவேந்தர் வாணரின் அரண்மனை வாசலில் சிற்றரசர்கள் பலர் இராஜ தரிசனத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இலேசில் தரிசனம் கிட்டவில்லை. ஏனெனில், பாவேந்தர்களாகிய கவிராயர்கள் முன்னமே அரண்மனைக்குள் சென்றிருந்தார்கள். அவர்களுடைய பாடலைக் கேட்டுவிட்டு வாணப் பேரரசர் மனமகிழ்ந்தார். அவர்களுக்குப் பரிசில்கள் கொடுத்து அனுப்பினார். பூச்சக்கரக் குடைகள், தந்தப் பல்லக்குகள், முத்துக் கவசங்கள், ரத்தினத் துவஜங்கள், யானைகள், குதிரைகள் முதலிய பலவகைப் பரிசுகள் கொடுத்து அனுப்பினார். ஆசார வாசலில் காத்திருந்த சிற்றரசர்கள் அந்தப் பரிசில்களைப் பார்த்து வயிறெரிந்து, 'அடடா! இது என் குடை அல்லவா? என் பல்லக்கு அல்லவா? என் யானை அல்லவா? என் குதிரை அல்லவா? இந்தப் பாழும் புலவர்கள் கொண்டு போகிறார்களே!' என்று புலம்பினார்கள். அந்தச் சிற்றரசர்கள் மாவேந்தர் வாணருக்கு காணிக்கைகளாகக் கொண்டுவந்து கொடுத்திருந்த பொருள்களை வாண மன்னர் புலவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்து அனுப்பிக் கொண்டிருந்தார். இளவரசே! பாடலுக்குப் பொருள் சரிதானே?"

"நீ சொல்லுவதில் தவறு இருக்குமா! அடாடா, என்ன அற்புதமான பாடல்! எவ்வளவு நயமான கற்பனை! இதைப் பாடிய மகாகவி யாரோ தெரியவில்லை! வாணர் குல திலகமே! வந்தியத்தேவரே! உமது மூதாதைகளின் ராஜ்யம் பெரிதோ சிறிதோ, அதைப்பற்றிக் கவலையில்லை. இந்த மாதிரி ஒரு பாடலைப் பெற்றார்களே, அதைக் காட்டிலும் அவர்களுக்குச் சிறப்பு என்ன வேண்டும். அவர்களுடைய குலத்திலே பிறந்த நீர் இந்த அரண்மனையில் படுக்கத் தகுந்தவர் தான்! மகாஸேனரின் கட்டில் மாத்திரம் என்ன? சாக்ஷாத் துஷ்டகமனு சக்கரவர்த்தி படுத்திருந்த கட்டில் இப்போது கிடைக்குமானால் அதிலேயே நீர் படுக்கலாம். நீர் அதற்குத் தகுதி வாய்ந்தவர்தான்!"

"ஆமாம், ஐயா! ஆமாம்! நான் எதற்கும் தகுதி வாய்ந்தவன் தான். ஆனால் இந்த நாளில் தகுதிக்கு யார் மதிப்புக் கொடுக்கிறார்கள்? அந்த பிக்ஷுக்கள் இந்த இலங்கா ராஜ்யத்தின் கிரீடத்தை எனக்குக் கொடுத்தார்களா? வேண்டாம் என்று மறுதளிக்கக் கூடிய தங்களைப் பார்த்துத்தானே கொடுத்தார்கள்? அப்போது எனக்கு என்ன ஆத்திரம் வந்தது தெரியுமா? கிரீடத்தைத் தூக்கி என் தலையில் நானே சூட்டிக் கொண்டு விடலாமா என்று பார்த்தேன்! இந்த வீர வைஷ்ணவர் போட்டிக்கு வந்து விடுவாரே என்று சும்மா இருந்து விட்டேன்!"

இதைக் கேட்டதும் அருள்மொழிவர்மர் கலகலவென்று உரத்துச் சிரித்தார். அந்தச் சிரிப்பின் ஒலியைக் கேட்டு வந்தியத்தேவன் உள்ளம் மகிழ்ந்தது. வெளிப்படையில் மேலும் கோபத்தைக் காட்டி, "சிரித்தால் மட்டும் சரியாகப் போய் விட்டதா? செய்த தவறுக்குப் பரிகாரம் என்ன?" என்றான்.

"ஐயா! வாணர்குல திலகமே! சத்தியம், தர்மம் என்று சொன்னேனே! சிம்மாசனம் வேண்டாம் என்று மறுத்ததற்கு அவை சரியான காரணங்கள் என்று தங்களுக்குப் படவில்லையா?"

"சத்தியம், தர்மம் இவற்றின் பேரில் ஏற்கனவே எனக்குக் கொஞ்சம் சபலம் இருந்தது. இனிமேல் அவற்றின் முகத்திலேயே விழிப்பதில்லை, எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை என்று முடிவு செய்து விட்டேன்."

"அடாடா? ஏன்? எதற்காக அப்படிப்பட்ட முடிவு செய்தீர். அவற்றின் பேரில் என்ன கோபம்?"

"கோபம் ஒன்றுமில்லை சத்தியம், தர்மம் என்னும் கன்னியர் மீது தாங்கள் காதல் கொண்டுவிட்டதாகச் சொல்லவில்லையா? அதற்காக இந்த இலங்கா ராஜ்யத்தைத் தியாகம் செய்ததாகவும் சொல்லவில்லையா? வேறொருவர் காதலித்த பெண்களை நான் மனத்தினாலும் நினைப்பதில்லை!"

பொன்னியின் செல்வர் மறுபடியும் கடகடவென்று சிரித்தார். "உம்மைப்போல் வேடிக்கைக்காரரை நான் பார்த்ததே இல்லை!" என்றார்.

"ஆம், ஐயா! தங்களுக்கு வேடிக்கையாயிருக்கிறது. எனக்கு வயிறு எரிகிறது. இலங்கைச் சிம்மாதனம் தங்களுக்கு வேண்டாம் என்றால், பக்கத்தில் நான் நின்றேனே, என் பக்கம் கைகாட்டி 'இவனுக்குக் கொடுங்கள்!' என்று சொல்லியிருக்கக் கூடாதா?" என்றான் வந்தியத்தேவன்.

அருள்மொழிவர்மர் சிரித்து ஓய்ந்த பிறகு, "வந்தியத்தேவரே! இராஜ்யத்தை ஏற்றுக்கொள்வது அவ்வளவு எளிய காரியமா? அதிலும் புத்த பிக்ஷுக்கள் கொடுத்து ஏற்றுக்கொள்வது சிறிதும் முறையல்ல. பின்னால் பெரிய விபரீதங்களுக்கு இடமாகும். மதத்தலைவர்கள் மத விஷயங்களுடன் நிற்க வேண்டும். மதத் தலைவர்கள் இராஜரீக காரியங்களில் தலையிட்டால் மதத்துக்கும் கேடு; இராஜ்யத்துக்கும் கேடு. மேலும் இன்று எனக்குச் சிம்மாசனம் கொடுக்க வந்த புத்த பிக்ஷுக்கள் இந்த நாட்டிலுள்ள எல்லா புத்த மதத்தாருக்கும் தலைவர்கள் அல்ல. இவர்கள் ஒரு கூட்டத்துக்குத் தலைவர்கள். இவர்களுடைய சங்கத்தைப்போல் இன்னும் இரண்டு சங்கங்கள் இருக்கின்றன. இவர்களிடம் நாம் இராஜ்யத்தை ஒப்புக் கொண்டால் இவர்களுடைய இஷ்டப்படி இராஜ்யம் ஆளவேண்டும். மற்ற இரு சங்கத்தாரும் உடனே நம் விரோதிகள் ஆவார்கள்!" என்றார்.

"வல்லத்து இளவரசருக்கு இப்போது இவ்விடத்து நிலைமை புரிந்ததா?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"புரிந்தது, புரிந்தது! அங்கே விஷ்ணு பெரியவரா, சிவன் பெரியவரா என்று சண்டை போடுகிற மூடர்களைப் போல் இங்கேயும் உண்டு என்று புரிந்தது!" என்றான் வந்தியத்தேவன்.

"நீங்கள் இங்கே சண்டை ஆரம்பித்து விடாதீர்கள். இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. அதோ பெரஹரா ஊர்வலத்திலிருந்து ஜனங்கள் கலைந்து வரும் சத்தமும் கேட்கிறது. இனிமேல் சற்றுத் தூங்கலாம்" என்றார் இளவரசர்.

"எனக்குத் தூக்கம் வராது. நடு வீதியில் கையைத் தட்டி அழைத்து, நம்மை உயிருடன் சமாதியாகாமல் காப்பாற்றிய அம்மாள் யார் என்று தெரிந்து கொண்டால்தான் தூக்கம் வரும்."

"அவள் யார் என்பது இன்னும் எனக்கும் தெரியாது. ஆனால் அவளைப் பற்றி எனக்குத் தெரிந்த செய்திகளை வேணுமானால் சொல்லுகிறேன். கேட்க விரும்பினால் என் அருகில் வந்து உட்காருங்கள்!" என்று சொன்னார் இளவரசர்.


முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com