Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 2
கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

13. "பொன்னியின் செல்வன்"


வந்தியத்தேவன் நாகத்தீவின் முனையில் இறங்கி மாதோட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த அதே சமயத்தில் - அநிருத்தப் பிரமராயரும் ஆழ்வார்க்கடியானும் சாம்ராஜ்ய நிலைமையைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் - குந்தவை தேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும், அம்பாரி வைத்த ஆனைமீது ஏறித் தஞ்சை நகரை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

இளைய பிராட்டி சில காலமாகத் தஞ்சைக்குப் போவதில்லை என்று வைத்துக் கொண்டிருந்தாள். இதற்குப் பல காரணங்கள் இருந்தன. தஞ்சையில் அரண்மனைப் பெண்டிர் தனித்தனியாக வசிக்கும்படியாகப் போதிய அரண்மனைகள் இன்னும் உண்டாகவில்லை. சக்கரவர்த்தியின் பிரதான அரண்மனையிலேயே எல்லாப் பெண்டிரும் இருந்தாக வேண்டும். மற்ற அரண்மனைகளையெல்லாம் பழுவேட்டரையர்களும் மற்றும் பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளும் ஆக்ரமித்துக் கொண்டிருந்தார்கள். பழையாறையில் அரண்மனைப் பெண்டிர் சுயேச்சையாக இருக்க முடிந்தது. விருப்பம் போல் வெளியில் போகலாம்; வரலாம். ஆனால் தஞ்சையில் வசித்தால் பழுவேட்டரையர்களின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத் தீரவேண்டும். கோட்டைக்குள்ளும், அரண்மனைக்குள்ளும் இஷ்டம்போல் வருவதும் போவதும் இயலாத காரியம். அம்மாதிரி கட்டுப்பாடுகளும், நிர்ப்பந்தங்களும் இளைய பிராட்டிக்குப் பிடிப்பதில்லை. அல்லாமலும் பழுவூர் இளையராணியின் செருக்கும், அவளுடைய அகம்பாவ நடத்தைகளும் குந்தவைப் பிராட்டிக்கு மிக்க வெறுப்பை அளித்தன. அரண்மனைப் பெண்டிர்கள் பழையாறையில் இருப்பதையே சக்கரவர்த்தியும் விரும்பினார். இந்தக் காரணங்களினால் குந்தவைப் பிராட்டி பழையாறையிலேயே வசித்து வந்தாள். உடம்பு குணமில்லாத தன் அருமைத் தந்தையைப் பார்க்கவேண்டும், அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.

ஆனால் வந்தியத்தேவன் வந்துவிட்டுப் போனதிலிருந்து இளைய பிராட்டியின் மனத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டிருந்தது. இராஜரீகத்தில் பயங்கரமான சூழ்ச்சிகளும், சதிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நாம் பழையாறையில் உல்லாசமாக நதிகளில் ஓடம் விட்டுக்கொண்டும், பூங்காவனங்களில் ஆடிப்பாடிக் கொண்டும் காலங் கழிப்பது சரியா? தமையன் தொண்டை நாட்டில் இருக்கிறான்; தம்பியோ ஈழநாட்டில் இருக்கிறான்; அவர்கள் இருவரும் இல்லாத சமயத்தில் இராஜ்யத்தில் நடக்கும் விவகாரங்களை நாம் கவனித்தாக வேண்டும் அல்லவா? தலை நகரில் அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகளை அந்தரங்கத் தூதர்கள் மூலம் அறிவிக்க வேண்டும் என்று தமையன் ஆதித்த கரிகாலன் கேட்டுக் கொண்டிருக்கிறானே? பழையாறையில் வசித்தால் தஞ்சையில் நடக்கும் காரியங்கள் எப்படித் தெரியவரும்?

வந்தியத்தேவன் அறிவித்த செய்திகளோ மிகப் பயங்கரமாயிருந்தன. பழுவேட்டரையர்கள் தங்கள் அந்தஸ்துக்கு மீறி அதிகாரம் செலுத்தி வந்தது மட்டுமே இதுவரையில் இளைய பிராட்டிக்குப் பிடிக்காமலிருந்தது. இப்போதோ சிம்மாசனத்தைப் பற்றியே சூழ்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பாவம்! அந்தப் பரம சாது மதுராந்தகனையும் தங்கள் வலையில் போட்டுக் கொண்டார்கள். சோழ நாட்டுச் சிற்றரசர்களையும், பெருந்தரத்து அதிகாரிகள் பலரையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டார்கள். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ, தெரியாது. இவர்களுடைய சூழ்ச்சியும், வஞ்சனையும், துராசையும் எந்த வரையில் போகும் என்று யார் கண்டது? சுந்தர சோழரின் உயிருக்கு உலை வைத்தாலும் வைத்துவிடுவார்கள்! மாட்டார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? சக்கரவர்த்தியின் புதல்வர்கள் இருவரும் இல்லாத சமயத்தில் அவருக்கு எதாவது நேர்ந்துவிட்டால், மதுராந்தகனைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்துவிடுவது எளிதாயிருக்கும் அல்லவா? இதற்காக என்ன செய்தாலும் செய்வார்கள்! அவர்களுக்கு யோசனை தெரியாவிட்டாலும் அந்த ராட்சஸி நந்தினி சொல்லிக் கொடுப்பாள். அவர்கள் தயங்கினாலும், இவள் துணிவூட்டுவாள். ஆகையால் தஞ்சாவூரில் நம் தந்தையின் அருகில் நாம் இனி இருப்பதே நல்லது. சூழ்ச்சியும் சதியும் எதுவரைக்கும் போகின்றன என்று கவனித்துக் கொண்டு வரலாம். அதோடு நம் அருமைத் தந்தைக்கும் ஆபத்து ஒன்றும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

சாதுவாகிய மதுராந்தகனை ஏன் இவர்கள் சிம்மாசனத்தில் ஏற்றப் பார்க்கிறார்கள்? தர்ம நியாய முறைக்காகவா? இல்லவே இல்லை. மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டினால் அவனைப் பொம்மையாக வைத்துக்கொண்டு தங்கள் இஷ்டம் போல் எல்லாக் காரியங்களையும் நடத்திக் கொள்ளலாம் என்பதற்காகத்தான். அப்புறம் நந்தினி வைத்ததுதான் சோழ சாம்ராஜ்யத்தில் சட்டமாகிவிடும்! அவளுடைய அதிகாரத்துக்குப் பயந்துதான் மற்றவர்கள் வாழ வேண்டும். அவளிடம் மற்ற அரண்மனை மாதர் கைகட்டி நிற்கவேண்டும். சீச்சீ! அத்தகைய நிலைமைக்கு இடம் கொடுக்க முடியுமா? நான் ஒருத்தி இருக்கும் வரையில் அது நடவாது. பார்க்கலாம் அவளுடைய சமார்த்தியத்தை!

தஞ்சாவூரில் இருப்பது தனக்குப் பல வகையில் சிரமமாகவே இருக்கும். தாயும், தந்தையும், "இங்கு எதற்காக வந்தாய், பழையாறையில் சுகமாக இருப்பதை விட்டு?" என்று கேட்பார்கள். 'சுயேச்சை என்பதே இல்லாமற் போய்விடும். தன்னுடைய திருமணத்தைப் பற்றிய பேச்சை யாரேனும் எடுப்பார்கள். அதைக் கேட்கவே தனக்குப் பிடிக்காது. நந்தினியைச் சில சமயம் பார்க்கும்படியாக இருக்கும். அவளுடைய அதிகாரச் செருக்கைத் தன்னால் சகிக்க முடியாது. ஆனால் இதையெல்லாம் இந்தச் சமயத்தில் பார்த்தால் சரிப்படுமா? இராஜ்யத்துக்குப் பேரபாயம் வந்திருக்கிறது. தந்தையின் உயிருக்கு அபாயம் நேரலாம் என்ற பயமும் இருக்கிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நாம் இருக்கவேண்டிய இடம் தஞ்சையேயல்லவா?'

இவ்வளவையும் தவிர, வேறொரு, முக்கிய காரணமும் இருந்தது. அது வந்தியத்தேவனைப் பற்றி ஏதேனும் செய்தி உண்டா என்று தெரிந்துகொள்ளும் ஆசைதான். வந்தியத்தேவன் கோடிக்கரைப் பக்கம் போயிருக்கிறான் என்று தெரிந்து அவனைப் பிடித்து வரப் பழுவேட்டரையர்கள் ஆட்கள் அனுப்பியிருப்பதைப்பற்றி இளைய பிராட்டி கேள்விப்பட்டாள். 'புத்தி யுத்திகளில் தேர்ந்த அந்த இளைஞன் இவர்களிடம் அகப்பட்டுக் கொள்வானா? ஒருவேளை அகப்பட்டால் தஞ்சாவூருக்குத்தான் கொண்டு வருவார்கள். அச்சமயம் நாம் அங்கே இருப்பது மிகவும் அவசியமல்லவா? ஆதித்த கரிகாலன் அனுப்பிய தூதனை அவர்கள் அவ்வளவு எளிதில் ஒன்றும் செய்து விடமுடியாது. ஏதாவது குற்றம் சாட்டித்தான் தண்டிக்க வேண்டும். அதற்காகவே சம்புவரையர் மகனை முதுகில் குத்திக் கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அது பொய் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது பொய் என்பதை நிரூபிக்க வேண்டும். கந்தன் மாறனுடன் பேசி அவனுடைய வாய்ப் பொறுப்பை அறிந்து கொள்வது அதற்கு உபயோகமாயிருக்கலாம்...'

இவ்விதமெல்லாம் குந்தவையின் உள்ளம் பெரிய பெரிய சூழ்ச்சிகளிலும் சிக்கலான விவகாரங்களிலும் சஞ்சரித்துக் குழம்பிக் கொண்டிருக்கையில், அவளுடன் யானைமீது வந்த அவள் தோழி வானதியின் உள்ளம், பால் போன்ற தூய்மையுடனும், பளிங்கு போன்ற தெளிவுடனும் ஒரே விஷயத்தைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது. அந்த ஒரு விஷயம் இளவரசர் அருள்மொழிவர்மர் எப்போது இலங்கையிலிருந்து திரும்பி வருவார் என்பது பற்றித்தான்.

"அக்கா! அவரை உடனே புறப்பட்டு வரும்படி ஓலை அனுப்பியிருப்பதாகச் சொன்னீர்கள் அல்லவா? வந்தால், எவ்விடம் வருவார்? பழையாறைக்கா? தஞ்சாவூருக்கா?" என்று வானதி கேட்டாள்.

தஞ்சாவூருக்கு இவர்கள் போயிருக்கும்போது இளவரசர் பழையாறைக்கு வந்து விட்டால் என்ன செய்கிறது என்பது வானதியின் கவலை.

வேறு யோசனைகளில் ஆழ்ந்திருந்த குந்தவைப் பிராட்டி வானதியைத் திரும்பிப் பார்த்து, "யாரைப்பற்றியடி கேட்கிறாய்? பொன்னியின் செல்வனைப் பற்றியோ?" என்றாள்.

"ஆமாம், அக்கா! அவரைப் பற்றித்தான். இளவரசரைப் 'பொன்னியின் செல்வன்' என்று நாலைந்து தடவை தாங்கள் குறிப்பிட்டு விட்டீர்கள், அதற்குக் காரணம் சொல்லவில்லை. பிற்பாடு சொல்வதாகத் தட்டிக் கழித்துக்கொண்டு வந்திருக்கிறீர்கள். இப்போதாவது சொல்லுங்களேன். தஞ்சாவூர்க் கோட்டை இன்னும் வெகுதூரத்தில் இருக்கிறது. இந்த யானையோ ஆமை நகர்வதுபோல் நகர்கிறது!" என்றாள் வானதி.

"இதற்குமேல் யானை வேகமாய்ப் போனால் நம்மால் இதன் முதுகில் இருக்க முடியாது. அம்பாரியோடு நாமும் கீழே விழவேண்டியதுதான்! அடியே! தக்கோலப் போரில் என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமா?"

"அக்கா! 'பொன்னியின் செல்வன்' என்னும் பெயர் எப்படி வந்தது என்று சொல்லுங்கள்!"

"அடி கள்ளி! அதை நீ மறக்கமாட்டாய் போலிருக்கிறது; சொல்கிறேன், கேள்!" என்று குந்தவைப் பிராட்டி சொல்லத் தொடங்கினாள்.

சுந்தர சோழ சக்கரவர்த்தி பட்டதுக்கு வந்த புதிதில் அவருடைய குடும்ப வாழ்க்கை ஆனந்த மயமாக இருந்தது. அரண்மனைப் படகில் குடும்பத்துடன் அமர்ந்து சக்கரவர்த்தி பொன்னி நதியில் உல்லாசமாக உலாவி வருவார். அத்தகைய சமயங்களில் படகில் ஒரே குதூகலமாயிருக்கும். வீணா கானமும் பாணர்களில் கீதமும் கலந்து காவேரி வெள்ளத்தோடு போட்டியிட்டுக் கொண்டு பெருகும். இடையிடையே யாரேனும் ஏதேனும் வேடிக்கை செய்வார்கள். உடனே கலகலவென்று சிரிப்பின் ஒலி கிளம்பிக் காவேரிப் பிரவாகத்தில் சலசலப்பு ஒலியுடன் ஒன்றாகும்.

சிலசமயம் பெரியவர்கள் தங்களுக்குள் பேசி மகிழ்வார்கள். படகில் ஒரு பக்கத்தில் குழந்தைகள் கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பார்கள். சில சமயம் எல்லோருமாகச் சேர்ந்து வேடிக்கை விநோதங்களில் ஈடுபட்டுத் தங்களை மறந்து களிப்பார்கள்.

ஒருநாள் அரண்மனைப் படகில் சக்கரவர்த்தியும் ராணிகளும் குழந்தைகளும் உட்கார்ந்து காவேரியில் உல்லாசப் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது, திடீரென்று, "குழந்தை எங்கே? குழந்தை அருள்மொழி எங்கே?" என்று ஒரு குரல் எழுந்தது. இந்தக் குரல் குந்தவையின் குரல் தான். அருள்மொழிக்கு அப்போது வயது ஐந்து. குந்தவைக்கு வயது ஏழு. அரண்மனையில் அனைவருக்கும் கண்ணினும் இனிய செல்லக் குழந்தை அருள்மொழி. ஆனால் எல்லாரிலும் மேலாக அவனிடம் வாஞ்சை உடையவள் அவன் தமக்கை குந்தவை. படகில் குழந்தையைக் காணோம் என்பதைக் குந்தவைதான் முதலில் கவனித்தாள். உடனே மேற்கண்டவாறு கூச்சலிட்டாள். எல்லாரும் கதிகலங்கிப் போனார்கள். படகில் அங்குமிங்கும் தேடினார்கள். ஆனால் அரண்மனைப் படகில் அதிகமாகத் தேடுவதற்கு இடம் எங்கே? சுற்றிச் சுற்றித் தேடியும் குழந்தையைக் காணவில்லை. குந்தவையும், ஆதித்தனும் அலறினார்கள். ராணிகள் புலம்பினார்கள், தோழிமார்கள் அரற்றினார்கள். படகோட்டிகளில் சிலர் காவேரி வெள்ளத்தில் குதித்துத் தேடினார்கள். சுந்தர சோழரும் அவ்வாறே குதித்துத் தேடலுற்றார். ஆனால் எங்கே என்று தேடுவது? ஆற்று வெள்ளம் குழந்தையை எவ்வளவு தூரம் அடித்துக்கொண்டு போயிருக்கும் என்று யார் கண்டது? குழந்தை எப்போது வெள்ளத்தில் விழுந்தது என்பதுதான் யாருக்குத் தெரியும்? நோக்கம், குறி என்பது ஒன்றுமில்லாமல் காவேரியில் குதித்தவர்கள் நாலாபுறமும் பாய்ந்து துழாவினார்கள். குழந்தை அகப்படவில்லை. இதற்குள் படகில் இருந்த ராணிகள் - தோழிமார்களில் சிலர் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டார்கள். அவர்களைக் கவனிப்பார் இல்லை. உணர்ச்சியோடு இருந்த மற்றவர்கள் 'ஐயோ!' என்று அழுது புலம்பிய சோகக் குரல் காவேரி நதியின் ஓங்காரக் குரலை அடக்கிக்கொண்டு மேலெழுந்தது. நதிக்கரை மரங்களில் வசித்த பறவைகள் அதைக் கேட்டுத் திகைத்து மோனத்தில் ஆழ்ந்தன.

சட்டென்று ஓர் அற்புதக் காட்சி தென்பட்டது. படகுக்குச் சற்றுத் தூரத்தில் ஆற்று வெள்ளத்தின் மத்தியில் அது தெரிந்தது. பெண் உருவம் ஒன்று இரண்டு கைகளிலும் குழந்தையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நின்றது. அந்த மங்கையின் வடிவம் இடுப்புவரையில் தண்ணீரில் மறைந்திருந்தது. அப்பெண்ணின் பொன் முகமும், மார்பகமும், தூக்கிய கரங்களும் மட்டுமே மேலே தெரிந்தன. அவற்றிலும் பெரும் பகுதியைக் குழந்தை மறைத்துக் கொண்டிருந்தது. எல்லாரையும் போல் சுந்தர சோழரும் அந்தக் காட்சியைப் பார்த்தார். உடனே பாய்ந்து நீந்தி அந்தத் திசையை நோக்கிச் சென்றார். கைகளை நீட்டிக் குழந்தையை வாங்கிக் கொண்டார். இதற்குள் படகும் அவர் அருகில் சென்றுவிட்டது. படகிலிருந்தவர்கள் குழந்தையைச் சுந்தர சோழரிடமிருந்து வாங்கிக் கொண்டார்கள். சக்கரவர்த்தியையும் கையைப் பிடித்து ஏற்றி விட்டார்கள். சக்கரவர்த்தி படகில் ஏறியதும் நினைவற்று விழுந்துவிட்டார். அவரையும், குழந்தையையும் கவனிப்பதில் அனைவரும் ஈடுபட்டார்கள். குழந்தையைக் காப்பாற்றிக் கொடுத்த மாதரசி என்னவானாள்? என்று யாரும் கவனிக்கவில்லை. அவளுடைய உருவம் எப்படியிருந்தது? என்று அடையாளம் சொல்லும்படி யாரும் கவனித்துப் பார்க்கவும் இல்லை. "குழந்தையைக் காப்பாற்றியவள் நான்!" என்று பரிசு கேட்பதற்கு அவள் வரவும் இல்லை. ஆகவே காவேரி நதியாகிய தெய்வந்தான் இளவரசர் அருள்மொழிவர்மரைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கவேண்டும் என்று அனைவரும் ஒரு முகமாக முடிவு கட்டினார்கள். ஆண்டுதோறும் அந்த நாளில் பொன்னி நதிக்குப் பூஜை போடவும் ஏற்பாடாயிற்று. அதுவரை அரண்மனைச் செல்வனாயிருந்த அருள்மொழிவர்மன் அன்று முதல் 'பொன்னியின் செல்வன்' ஆனான். அச்சம்பவத்தை அறிந்த அரச குடும்பத்தார் அனைவரும் பெரும்பாலும் 'பொன்னியின் செல்வன்' என்றே அருள்மொழிவர்மனை அழைத்து வந்தார்கள்.


முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com