Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru KuthiraiVeeran
Ani Logo


அண்டா சுப்பன்
வேட்டைப் பெருமாள்

மறிங்கிப்பட்டி ரைஸ்மில் நிறுத்தத்தில் அவர்களை இறக்கி விட்டுவிட்டு பேருந்து கல்லலை நோக்கி நகர்ந்தது. மண்டையைப் பிளக்கும் வெயில், முகத்திலடிக்கும் அனல்காற்று, வேலிக்கருவை மரங்களால் அடர்ந்த முரட்டு நிலம்... இதையெல்லாம் மீறி காட்டுராஜாவின் நெஞ்சுக்குள் மெலிதாகக் குளுமை வேரோடத் துவங்கியது. அவர் பிறந்து வளர்ந்த மண்.

ரைஸ்மில் களத்தில் நெல்லை காலால் ஆலாட்டிக் கொண்டிருந்த நடுத்தர வயது பெண்ணொருத்தி நெற்றிக்கு மேல் கைவைத்து, கண்களை இடுக்கி, இவர்களை யாரென நிதானிக்க முயன்றாள். காட்ராஜாவின் ஒரு கையில் டிபன் கேரியரும், மறுகையில் அவர் பதின்மூன்று வயது மகனும். அவர் தன் பின்னால் கையில் ஒயர் கூடையுடன் நின்ற மனைவி ராஜத்தின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். காட்ராஜாவின் பிடியிலிருந்த மகனின் கை வேர்வையால் பிசுபிசுத்தது. அந்த வேலிக்கருவைக் காட்டுக்குள் தனியாக நின்று இரையும் ரைஸ்மில் வேறு மேலும் அவஸ்தையூட்டியது. கையை மெதுவாக தன் அப்பாவிடமிருந்து விடுவித்துக் கொண்டான். மீண்டும் கையை எட்டிப்பிடிக்க முயன்றவரிடமிருந்து விலகி நின்றுகொண்டு,

"வேர்க்குதுப்பா' என்றான் சிணுங்கலாக. காட்ராஜா மெல்ல சிரித்துக் கொண்டார். மனைவியைப் பார்த்து "என்னளா?' என்றார் சைகையோடு.

"மணி பன்னெண்டுக்கும் மேல இருக்கும் போலிருக்கு. புள்ளக்கி பசிக்கும். ரைஸ்மில்ல வச்சு சாப்பிட்டுப் போயிர்வம்' என்றாள் ராஜம். காட்ராஜா துண்டையெடுத்து முகத்தில் வடியும் வேர்வையைத் துடைத்துக் கொண்டு, "உஸ்... அப்பாடா... என்னடாய்யா ஊர் இது?' என்று குறைபட்டுக் கொண்டார்.

"இந்த நாறப்பய ஊர்ல தவிச்ச வாய்க்கு தண்ணி அம்புடாதே... நீ புளிச்சோறக் கொண்டாந்திருக்க. விக்கிக்கிட்டு சாகுறதா?' என்றார் சற்று எரிச்சலோடு.

ராஜத்திற்கு காது மந்தம். எப்படியோ தட்டுத்தடுமாறி "புளிச்சோறு' என்ற சொல் விழுந்து விட்டது. மேலும் சற்று கடுப்பான தொனியால் பேசியதைப் புரிந்து கொண்டாள்.

"புளிச்சோறா...' "ஏன் ஒங்க தம்பிப் பொண்டாட்டி வடிச்சுப் புளித்தடவி வெச்சிருப்பா, போய்த்திங்கிறது. வெக்கங்கெட்ட ஜென்மம்' என்று எரிந்து விழுந்துவிட்டு "டேய் நீ வாடா' என்று கருவைக் காட்டை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த மகனின் கையை வெடுக்கென்று பிடித்திழுத்தாள். எதிர்பாராத இழுவையால் நிலை தடுமாறி விழ இருந்தவனைத் தாங்கிப்பிடித்தாள்.

"திங்கிறதெல்லாம் எலும்புல வெச்சு சொருகிறும்போல இருக்கு... ஒடம்புல கொஞ்சமாவது தெம்பிருக்கான்னு பாரு... ஒங்க தாத்தாவ வந்து பாரு... இந்த வயசிலயும் எப்படி திண்டுதிடுக்கா இருக்கார்னு' என்றபடி ரைஸ்மில்லின் களம்நோக்கி "விடுவிடு'வென நடந்தாள்.

"களவாணி முண்ட' என்று வாய்க்குள் முனகியபடியே காட்ராஜா மில்லுக்குள் நுழைந்து, ஒரு சொம்பில் நீர் கொண்டுவந்து சாப்பிட களத்தில் உட்கார்ந்தார். கீழே நிழல் இருந்தாலும் தரை கொதியாய் கொதித்தது. நீர்க்கடுப்பு வந்துவிடும் போல் இருந்தது.

ராஜம் புளிச்சோறைப் பெயர்த்து இலையில் கணவனுக்கும் மகனுக்கும் வைத்தாள். தொட்டுக் கொள்ள துவையலும், உருளைக்கிழங்கு வறுவலும் அடுக்கில் இருந்தது.

களத்தில் நெல் ஆலாட்டிக் கொண்டிருந்தவள் வெயிலுக்காகப் போட்டிருந்த முக்காட்டை விலக்கி, இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிழலோரம் ஒதுங்கினாள். காட்டுராஜா குடும்பத்தை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவரும், மகனும் சாப்பிட்டதும், மகன் வைத்த மிச்சத்தில் இன்னும் கொஞ்சம் சோறை வைத்துக் கொண்டு, தான் சாப்பிட ஆரம்பித்த ராஜம் இடையில் யோசனையோடு கணவன் முகத்தைப் பார்த்தாள்.

"இப்பயே சொல்லிப்புட்டேன், அங்க வந்து இருந்துகிட்டு, இப்பப்போகலாம் அப்பப் போகலாம்னா..., நானும் எம்புள்ளையும் தனியாக் கெளம்பிருவம் ஆமா. நீங்க கோழிக்கறியும், சாராயமுமா சொந்தஞ்ஜோலியக் கொண்டாடிட்டு செளரியமா வாங்க. வந்தாலும் சரி... இல்ல இங்கேயே தங்கி, தம்பி, தம்பிப் பொண்டாட்டி சூத்தத் தாங்கிக்கிட்டு இருந்தாலும் சரி' என்று ஒரு வகையாக இழுத்தாள். அந்த இழுவையில் ஒருவித நக்கலும், குற்ற உணர்வைத் தூண்டும் வன்மமும் இருந்தது.

"சரி முண்ட' என்றார் ஆங்காரமாக. சோற்றை அள்ளி வாயில் வைக்கப் போனவள் அப்படியே வெறித்துப் பார்த்தாள். கையில் இருந்த சோற்றுப் பருக்கையை இலையில் உதறினாள். "முண்டையா!' என தனக்குள் ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டாள். செம்பை எடுத்துக் கொண்டு கை கழுவப் போனவளின் கைகளை காட்ராஜா அவசரமாகத் தடுத்து, "பேசாம சாப்புடுளா... இப்ப நானா இங்க வரணும்னு சொன்னேன். நீதானே உன் மாமனார்கிட்ட அவர் சாகறதுக்குள்ள ஒம்மகன காட்டணுமுன்னு கூட்டிட்டு வந்தே' என்று சமாதானப் படுத்தினார்.

ராஜத்தை சொல்லிக் குறையில்லை. காட்ராஜா அப்படிப்பட்ட ரெட்டை ஜீவன். செவரக்கோட்டை மண்ணை மிதித்த மறுநிமிடம் காட்ராஜாக்குள்ளிருந்து இன்னொரு காட்ராஜா எகிறிக்குதித்து, ராஜத்தின் முன்னால் கால்களை அகட்டி நின்று, இடுப்பில் கைகளை இறுமாப்பாக ஊன்றிக் கொண்டு "இப்ப என்னளா பண்ணுவ?' என்று கேட்பார். ராஜத்தின் சட்டதிட்டங்கள் எல்லாம் செவரக்கோட்டைக்குள் செல்லுபடி ஆகாது. வந்த வேலையை மறந்து கள்ளையும் சாராயத்தையும் எடுத்து தலைவழியாக ஊற்றிக் கொண்டு ஊரையே அலங்கமலங்கடிப்பார்.

காட்ராஜா ஊருக்குள் வந்துவிட்டால் தம்பி வீடுகளில் எந்நேரமும் ஆட்டுக்கறியும், கோழிக்கறியும் வெந்துகொண்டே இருக்கும். குறிப்பாக காட்ராஜாவின் கடைசித்தம்பி கருப்பையாவும், அவன் பொண்டாட்டி விசாலாட்சியும் விழுந்து விழுந்து கவனிப்பார்கள். கள்ளும் சாராயமும் ஊற்றி ஊற்றிக் கொடுத்து போதை குறையாமல் பார்த்துக் கொள்வார்கள். ராஜம் மட்டும் தேடுவார் நாதியற்று "உர்' என்று மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டு "ஊர்வந்து சேரு பேசிக்கிறேன்' என்று எண்ணிக் கொண்டு ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையில் கால்களைக் கட்டிக்கொண்டு குந்தியிருப்பாள்.

காட்ராஜா லேசில் அந்த ஊரை விட்டுக் கிளம்பமாட்டார். ராஜம் கத்திப் பார்ப்பாள்; கெஞ்சிப் பார்ப்பாள்; கூப்பாடு போட்டுப் பார்ப்பாள். ம்ஹூம், காட்ராஜாவிடம் எதுவும் எடுபடாது. போதை கக்கும் கண்களோடு, மூக்குக் கண்ணாடி கண்களை விட்டு மூக்கில் இறங்கி நிற்கும். ராஜம் வீச்வீச்சென்று கத்த கத்த "எஞ்சூத்துக்கு சொல்லு' என்ற விதமாக மீசையை முறுக்கிக்கொண்டு கோணலாக ஒரு சிரிப்பு சிரிப்பார். அந்த சிரிப்புதான் ராஜத்தின் எல்லா கேள்விகளுக்கும், கத்தலுக்கும் கூப்பாட்டிற்குமான பதில்.

ராஜம் அரட்டி உருட்டிப் பார்ப்பாள். "பிள்ளைகளெல்லாம் தனியா இருக்குதுகன்னு' கெஞ்சிப் பார்ப்பாள். "போடா சக்கைன்னான்னா' என்று அசைய மறுத்துவிடுவார். ராஜம் ஆத்திரம் தாளாமல் "நீ வா போ' என்று சகட்டு மேனிக்குப் பேசிவிடுவாள். காட்ராஜா, ராஜம் எவ்வளவு கத்தினாலும் பொறுத்துக் கொள்வார். ஆனால் "வா, போ' என்று ஒருமையில் அழைத்தால் உக்கிரமாகி, "நொப்பன ஓலி, இப்பப் போறியா, என்ன சொல்றே?' என்று அதட்டுவார். அவ்வளவுதான் ராஜத்திற்கு தாங்காது.

"நொப்பன ஓலியா? என்னப் பாத்தா நொப்பன ஓலின்ன? ஓம்பல்லுக்கறுவ, வாய்க்கூசாம நொப்பன ஓலிங்கிற?' என அழுகையும், ஆத்திரமுமாக அரற்றிக் கொண்டு தனியாகவே ஊர்வந்து சேர்ந்து விடுவாள்.

காட்ராஜா இருந்து இரண்டு மூன்று நாட்கள் சாவகாசமாக விருந்தை முடித்துக் கொண்டு போலிஸ் காலனிக்குத் திரும்புவார். வீட்டுக்குள் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஒன்றுமே தெரியாத அப்பாவியாக நுழைவார்.

"எங்க வந்த? இங்க எங்க வந்த? அவளுக "இத' தாங்கிக்கிட்டு அங்கேயே கிடக்க வேண்டியதுதானே... த்தூ... மானங்கெட்ட ஜிஞ்சனக்கு மாட்டுக்கறிய விழுந்து நக்குன்னு வந்து நிக்கிறிய, ஒனக்கு வெக்கம் சிக்கியில்ல?' என்று "வீல்வீல்'லென போலிஸ் காலனியே அதிரும்படி கத்தித் தீர்த்துவிடுவாள். காட்ராஜா வாங்கிவந்த தீனிப்பொட்டலத்தை தன் பிள்ளைகளிடம் நீட்டுவார். சொல்லி வைத்தது மாதிரி ஒன்றுகூட திரும்பிக்கூட பார்க்காதுகள். அதன்பிறகு ஒருவாரத்திற்கு ராஜம் இதேகதியில் கத்திக் கொண்டே இருப்பாள். அவள் சமாதானம் ஆக நெடுநாள் பிடிக்கும்.

வருடமெல்லாம் ராஜத்தின் கட்டுக்குள்ளிருக்கும் காட்ராஜா இப்படி வருடத்திற்கு ஒருமுறையாவது அவளுக்கு செமத்தியாக "தண்ணி காட்டி' விடுவார். செவரக் கோட்டைக்கு வந்து இருவரும் சேர்ந்து திரும்பியதே இல்லை.
ஆனால் நான்கு வருடங்களுக்கு முன் ஒருமுறை காட்ராஜா தன் பங்கை விற்பதற்காக ராஜத்தோடு செவரக்கோட்டைக்கு வந்தார். போலிஸ் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன், ராஜத்தின் சொந்த ஊரான வடக்கே பட்டுக்கோட்டைக்குப் பக்கத்திலுள்ள கொன்றைக் காட்டில் வீடு கட்டலாம் என்ற எண்ணம் இருவருக்கும் இருந்தது. எனவே தற்போது காட்ராஜாவின் பங்கை அனுபவித்துவரும் தம்பி கருப்பையாவிடமோ, இல்லை இன்னொரு தம்பியான வெளிச்சயனிடமோ விற்றுவிடும் எண்ணத்தோடு இருவரும் பொழுதுசாய செவரக்கோட்டைக்கு வந்து சேர்ந்தார்கள்.

அண்ணனைக் கண்டவுடன் கருப்பையா செம்பை எடுத்துக் கொண்டு சாராயம் வாங்க ஓடினான். தடுத்துவிட்டார் காட்ராஜா. கோழியடிக்கக் கிளம்பிய விசாலாட்சியிடம் "விடியட்டும் பார்த்துக்கலாம்' என்று ஆர்வமில்லாமல் சொல்லிவிட்டார். கருப்பையன் முகம் தொங்கிப் போய்விட்டது.

கறியையும், சாராயத்தையும் காட்ராஜா அலட்சியப்படுத்தியது ராஜத்திற்கு உள்ளூர நிம்மதியைத் தந்தது. விடிந்ததும் காட்ராஜாவும், கருப்பையனும் காட்டுப் பக்கம் கிளம்பினார்கள். ராஜத்திற்கு பயம் நெஞ்சைப் பிசைந்தது. கணவனை தவிப்பாகப் பார்த்தாள். பார்வையில் கொஞ்சமாய் கண்ணீரும், "காரியத்தக் கெடுத்துராதீக' என்ற கெஞ்சுதலும் இருந்தது. "வெளிய போயிட்டு வர்றேன்ளா' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

கருப்பையா நேராக பனங்காட்டுக்கு நடையைக் கட்டினான். "எனக்கு வேணாமுடா, வயித்துக்க சரியில்ல, நீ வேணா குடிச்சுட்டு வா, நான் வெளிய போயிட்டு வீட்டுக்குப் போறேன்' என்று திரும்பினார். "ஏன், அண்ணமுண்டி ஊருக்குப் போனதும் வீட்டுக்குள்ளவுடாதோ' என்றான் நக்கலும் கடுப்புமாக. காட்ராஜா ஒன்றும் சொல்லவில்லை.

கருப்பையா வேப்பங்குச்சியை ஒடித்து, பல்லில் வைத்துக் கடித்துக் கொண்டு வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்தான். அவன் பக்கத்தில் துண்டை எடுத்து தரையில் இரண்டு தட்டு தட்டிவிட்டு, மடித்துக் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து விட்டுக்கொண்டு காட்ராஜா உட்கார்ந்தார். வாசலில் பாயை விரித்து அதில் காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்து கடகாப்பெட்டி* முடைவதில் தீவிரமாய் இருந்தாள் விசாலாட்சி. அவளருகே ராஜம் கால்களைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். எதிரே இருந்த "போவானி'யில் பதநீர் இருந்தது. அதில் மொய்த்த ஈயை ஒரு கையால் விரட்டிய விசாலாட்சி, "எடுத்து குடிக்கா ஈ மொக்கிது' என்றாள். "குடிப்பம்' என்றால் ராஜம் அலுப்பாக.

ராஜம் காட்ராஜாவின் முகத்தை பார்த்தாள். கண்ணாடி மூக்கில் இறங்கவில்லை. காட்ராஜா குடித்திருந்தால், நூறடி தூரத்தில் வரும்போதே கண்டுகொள்வாள். காட்ராஜா முகம் அப்படியே காட்டிக் கொடுத்துவிடும். காட்ராஜா குடிக்கவில்லை என்று தெரிந்ததும் ராஜம் தைரியமாக உணர்ந்தாள். கணவனிடம் "கேக்குறதுதானே?' என்று பார்வையால் ஏவினாள். ஆனால் காட்ராஜா எப்படி துவங்குவதென்று தெரியாமல் விழித்தார்.

"என்ன சோலியா வந்தீக?' என்று கருப்பையாவே துவக்கி வைத்தான். காட்ராஜா அசட்டுத்தனமாக, "ஹெ... ஹெ...' என்று சிரித்துப் புறங்கையால் மீசையை ஒதுக்கியபடி, "அதையே கேளுடா' என்றார் ராஜத்தைக் காட்டி. அவருக்குக் கேட்க வாய் கூசியது.

"என்ன அண்ணமுண்டி, என்ன இந்தப் பக்கம்?' என்றான் கேலியும், சைகையுமாக.

"ஏன் வரப்புடாதுங்கிறியா? நீயே தனியா எல்லாத்தையும் கட்டியாளலாம்னு இருக்கபோல! எம்பங்குக்கு என்ன சொல்றே? நீ வாங்கிக்கிறியா இல்ல கேக்குறவுகளுக்கு வித்துட்டுப் போகவா?' என்றாள்.

"பங்கா? ஒனக்கேது பங்கு? இங்கே ஒங்கப்பன் சொத்துகித்து ஏதும் தேடிக் கொடுத்துட்டுப் போனாரா எங்களுக்கு? இங்க விக்கவும் முடியாது, நொட்டவும் முடியாது' என்றான் எகத்தாளமாக. காட்ராஜா தலைதாழ்ந்தபடி உட்கார்ந்திருந்தார். விசாலாட்சி கூடைமுடைவதை நிறுத்தி ராஜத்தையும், கணவனையும் மாறிமாறி பதட்டமாகப் பாத்தாள்.

ராஜம் கோபத்துக்கு ஆளானால் காது நன்றாகவே கேட்கும். அதுவும் கருப்பையா நன்றாகவே இரைந்து பேசினான். ராஜம் வாரிச்சுருட்டி எழுந்து நின்றுகொண்டாள்.

"எங்கப்பனப் பத்திப் பேசுன, மரியாத கெட்டுப்போயிரும் ஆமா... எம்புருசன் குடிச்ச எச்சிப்பாலக் குடிச்சி வளந்த நாயி நீ, ஒனக்கேது பங்குன்னா என்னக் கேக்குற? எனக்கு ஒதுக்கிவிட்ட நூத்தியிருவது பனமரம், நாலு மாமரம், நாலு புளியமரம், மூணு தேத்தா மரம், பொதுப்பங்குல நின்ன ஆடுமாடு அம்புட்டையும் என்ன பண்ணின? பங்காளி சொத்தத் தெத்தித்திங்க நெனக்கிறியே, உருப்புடுவியா நீ?' என்றாள்.

காட்ராஜா பதட்டமாக, "சே... சும்மாருளா... அப்படியெல்லாம் சொல்லாத. அவன் அதெல்லாம் கொடுப்பான்' என்றார். அவர் மெதுவாகப் பேசியதால், ராஜத்திற்கு காதில் சரியாக விழவில்லை. ஆனால், அவர் தம்பிக்கு ஆதரவாகப் பேசியதைப் புரிந்துகொண்டு,

"ச்சீ... சும்மாக்கெடங்க... வாயத் தொறந்து கண்ண முழிச்சி பங்கக் கேட்கத் துப்பில்ல... ஒறவாடுறியலோ ஒறவு, த்தூ... மானங்கெட்ட ஒறவு.'

கருப்பையா கேலியாக சிரித்தான். தன் பொண்டாட்டியிடம் "இங்க பார்றி அண்ணமுண்டி ஆடுற ஆட்டத்த' என்றான். அதற்கு அவள் "ச்சூ, சும்மாயிரு, ஆந்த வார்த்தை தாந்த வார்த்தை எதையாவது சொல்லுவியா, இப்பத்தான்...' என்றாள் சங்கடமாக.

கருப்பையா மிகவும் நிதானமாகவும், சத்தமாகவும், சைகையுடனும், "இங்க பாரு, மரமட்டையை வித்துத் தின்னாச்சு, ஆடு மாட்ட அடிச்சுத் தின்னாச்சு, மிச்சம் கிடக்கிறது இதேன்!' என்றபடியே குனிந்து ஒரு பிடி மண்ணை அள்ளினான்.

"இத அள்ளிக் கரச்சிக் குடிச்சிட்டுப் போ, இல்ல கட்டி இழுத்துக்கிட்டு போ' என்று கையினூடே மண்ணை நழுவவிட்டுச் சொன்னான். காட்ராஜா அப்படியே மலைத்துப் போனார். ஆனால் ராஜம் அசரவில்லை.

"நீ கரைச்சிக் குடி... ஒம் பொண்டிபுள்ளக்கிம் கரைச்சிக்கொடு. நான் ஒத்தப்புள்ளையை பெத்து வச்சிருக்கேன். அதுக்கு நீ துரோகம் நெனச்சா உருப்புட முடியாது. எனக்கும், எம்புள்ளக்கிம் தேவையானத எம்புருசன் ஒழச்சு தேடி வச்சிருக்காரு, அதோட ஊரக் கொள்ளையடிச்சி சம்பாதிச்ச சொத்து எங்களுக்கு வேண்டாம். எத்தனை வருத்தாட்டுக்காரன் வயத்தெரிச்சலோ, அத்தனையும் நீயே தித்துவுலி* பண்ணு' என்றவள் விடுவிடுவென ரோட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். காட்ராஜாவும் எழுந்து அவள் பின்னே நடக்க ஆரம்பித்தார். "ராசம்... ராசம்....' என்று பதறியவளாய் விசாலாட்சி பின்னால் ஓடிவந்தாள். இருவரும் காதில் வாங்காமலே நடந்து கொண்டிருந்தார்கள். வரும் வழியில் பெரிய கருப்புக் கோயிலில் காட்ராஜா மண்ணை வாரித் தூற்றினார். ராஜம் ஓடிவந்து தடுத்து,

"இங்க வந்து ஏன் வாரித் தூத்துறீங்க, என் வயிறு எரியுதே அது பத்தாது? அவன் குட்டிச் செவராப் போக' என்றால் வயிற்றில் அடித்துக்கொண்டு.

* * *
கையில் காலியான டிபன்கேரியரை எடுத்துக் கொண்டு செவரக் கோட்டையை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார் காட்ராஜா. அவர் மனைவியும், மகனும் இரண்டடி இடைவெளிவிட்டு பின்தொடர்ந்தார்கள். சாலையின் ஒருபுறம் காரக் கம்மாயும் மறுபுறம் அடர்ந்த கருவேல மரங்களும் வெயிலின் உக்கிரத்தைத் தணித்தது.

காட்ராஜா மனதை நமநமவென பல எண்ணங்களும் நினைவுகளும் அரிக்கத் துவங்கின. "ஏன் இந்த மண் கடைசிவரைக்கும் ஒட்டாமலே போனது?' என தனக்குள்ளே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டார்.

காட்ராஜா சின்ன வயதாயிருக்கும் போது அவருடைய அப்பா சுப்பையா நாடார் எத்தனை செல்லமாய், அருமை பெருமையாய் வளர்த்தார். ஊருக்கே ராசா போல் சுற்றித் திரிந்தார். இன்று ஒருபிடி மண்கூட சொந்தமில்லாமல் போய்விட்டது. பெத்த அப்பனைப் பார்க்கவே, வேற்று மனிதனைப் போல கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்து தின்றுவிட்டு பார்த்து செல்ல வேண்டியிருக்கிறது. கருப்பையன் அடாவடியாய் சொத்தை அபகரித்து வைத்துக்கொண்ட போது கூட சுப்பையா நாடார், "ஏண்டா, இப்படிப் பண்றே'ன்னு ஒரு வார்த்தைகூட தடுத்துச் சொல்லவில்லை. ஆனால் சுப்பையா நாடாருக்கு நிச்சயமாக தான் பெற்ற நான்கு பிள்ளைகளில் தலைச்சன் பிள்ளை காட்ராஜா மேல்தான் உயிர். ராஜம் சொன்னதுபோல் ஊரைக் கொள்ளையடித்து சேர்த்த சொத்து தன் மூத்த பிள்ளைக்கு வேண்டாம் என்று நினைத்தாரோ என்னவோ.

* * *

சுப்பையா நாடார் என்றால் பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. "அண்டா சுப்பன்' என்றால் தெருநாய்கூட அவரிருக்கும் திசையைச் சொல்லும். அவ்வளவு பிரபலம்! "அண்டா சுப்பன்' என்பது ஒரு காரணப்பெயர். சுப்பையா நாடார் வீட்டில் எந்நேரமும் அண்டாவில் கறி வெந்துகொண்டே இருக்கும். சுப்பையா நாடாருக்கு கிடாய்கறி மேல் அப்படியொரு அலாதியான பிரியம். அண்டா அண்டாவாகக் கறியாய் தின்று வளர்ந்த உடம்பு. ஆகையால் "அண்டா சுப்பன்' என்ற பெயர் நிலைத்துவிட்டது.

வயற்காட்டில் கிடையமர்த்த* தன் ஆடுகளை ஓட்டிச்செல்லும் கீதாரிகள் செவரக்கோட்டைப் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கமாட்டார்கள். செவரக்கோட்டை வழியே செல்ல வேண்டியிருந்தாலும், பத்து இருபது மைல் சுற்றிக் கொண்டுதான் செல்வார்கள். எங்கு சுற்றினால் என்ன? அண்டா சுப்பனின் அருட்பார்வையிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது. கீதாரிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அண்டா சுப்பனுக்குரிய அவிர் பாகத்தை கொடுத்தே ஆகவேண்டும்.

சுப்பையா நாடார் "ஆடுதூக்கும்' (திருடும் என்ற வார்த்தை அண்டாசுப்பனின் கீர்த்திக்கு கேடு விளைவிக்கக்கூடும்) முறையே அலாதியானது. மசண்டையான மாலைப்பொழுதில் பெரும்பாலும் கீதாரிகள் ஆடுகளை ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு ஓட்டிச்செல்வார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் காணமுடியாதபடிக்கு இருள் கவிழ்ந்திருக்கும். அண்டாசுப்பன் தன் சேக்காலிகள் மூன்று நான்கு பேரோடு கம்மாய் கரையோரம் பதுங்கியிருப்பார். கரையோரமாக வரும்செம்மறி ஆட்டுக்கூட்டத்தில், நல்ல வாலிப்பான கிடாவாக தேர்வு செய்து நாலுகால் பதுங்கலில் போய் கிடாயின் கழுத்தைப் பிடித்து மிக லாவகமாய் சங்கை ஒதுக்கிவிடுவார். அதனால், அதற்குமேல் கத்தமுடியாது. ஆனால் பாட்டுப்பாடும், "தலப்புலக் குட்டையா தம்பட்டக் குட்டையா என்னப் பதம் பார்த்து இறக்குடா குட்டையா' என்று அண்டாசுப்பன் வீட்டில் அண்டாவில் வெந்துகொண்டு.

செவரக்கோட்டையைச் சுற்றியுள்ள பொரண்டி, குருந்தம்பட்டு, கல்லல், காடனேரி என்று எந்த கிராமத்தில் ஆடு திருடுபோனாலும் பஞ்சாயத்து, செவரக்கோட்டையில் சுப்பையா நாடார் வீட்டில்தான்.

பஞ்சாயத்துத் தலைவர் "அண்டா சுப்பன்' என்று ஊர்மக்களால் செல்லமாக அழைக்கப்படும் சுப்பையா நாடார். கீதாரிகள் ஆட்டைப் பறிகொடுத்த வயிற்றெரிச்சலில் எதையெதையோ சொல்ல நினைப்பார்கள். ஆனால் சுப்பையா நாடாரைப் பார்த்த மாத்திரத்தில் எல்லாம் மறந்துபோகும். எச்சில்கூட தொண்டையை விட்டு வெளியே வராது. பின் எங்கிருந்து வார்த்தை வர.

அண்டாசுப்பனின் "நெடுநெடு'வென்ற ஆறடி வளத்தியும், முழம்போட்டு அளக்கும்படியான நெஞ்சும், முரட்டு முறுக்கு மீசையும், எந்நேரமும் கள்ளுச் சாராயத்தால் நெருப்புத் துண்டுகளாக உருளும் விழிகளும், எப்பேரியப்பட்டவனின் அடிவயிற்றிலும் புளியைக் கரைக்கும்.

ஆட்டை களவு கொடுத்த கீதாரி, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, தயங்கி தயங்கி சுப்பையா நாடார் முன் வந்து நிற்பான்.

சுப்பையா நாடார் மடித்துக்கட்டிய வேட்டியோடு தொடைகள் பிதுங்க, ஒரு காலை தொங்கப்போட்டு, ஒரு காலைக் குத்துக்காலிட்டு, திண்ணையில் லேசாக சாய்ந்தபடி உட்கார்ந்திருப்பார். எதிரே ஒரு வட்டியில் கறித்துண்டுகள் ஆவிபறக்க இருக்கும். கையில் அனேகமாக கள்ளுமுட்டியிருக்கும். அவருக்கு இருபக்கமும் தன் சகாக்களான பெரியாம்பிள, முத்தழகு, நாச்சியப்பன் ஆகியோர் புடைசூழ மிகவும் கம்பீர கதியில் ஆரோகணித்திருப்பார்.

கீதாரி துண்டையெடுத்து கக்கத்தில் வைத்துக்கொண்டு "கும்புடுறேம்ப்பு' என்பான் மிகவும் பயபக்தியோடு.

"ம்ம்... என்னடே இந்த பக்கம்?' என்று மிகவும் பாந்தமாய் கேட்பார் அண்டாசுப்பன்.

"எங்... எங்குட்டிய ரெண்டக் காணுமப்பு'

"அட... இங்க பார்ய்யா... நீ எப்படே குட்டிபோட்டே? அதிசயமாயிருக்கு!' என்று சொல்லி முடிக்குமுன் இதற்காகவே காத்திருந்தது போல, அவரைச் சுற்றியிருக்கும் கோதா "ஓஹோய்...' என்று சிரிப்பால் வெடிக்கும். அண்டாசுப்பனும் தொடையில் பலமாக தட்டிக்கொண்டு சிரிப்பார். கீதாரியும் வேறு வழியில்லாமல் சிரிப்பதுபோல் "ஈ'ன்னு வழிந்து கொண்டு நிற்பான். உள்ளுக்குள் குமுறும்.

"இல்லப்பு, என் உருப்படில ரெண்டக் காணல'

"என்னடாய்யா இது..., குண்டித்துணியக் காணாட்டாக்கூட இந்த சுப்பையா நாடார்தான் கெடச்சானா ஒங்களுக்கு, உருப்படியக் காணாட்டா வண்ணாங்கிட்ட போய்க் கேளு...' என்று கூறவும், அவர் கூட்டாளிகளும், இந்தக் கூத்தைக் காணக்கூடிய கூட்டம் மொத்தமும் விழுந்து விழுந்து சிரிக்கும். சுப்பையா நாடாரின் இடைவெட்டுப்பேச்சால் கீதாரி, "ஏண்டா வந்தோம்' என்ற நிலைக்கு ஆளாகிவிடுவான். கூனிக்குறுகி அப்படியே ஆவி ஒடுங்கி நிற்பான்.

"இல்லப்பு... எங்கெடையில ரெண்டு கிடாய்க் குட்டியக் காணமப்பு' என்பான் மிகப் பரிதாபமாக.

"அப்படியா சங்கதி, அதுக்கு நானென்ன செய்யோணும்?'

"நீங்கதானப்பு ஆளம்பவிட்டு எங்குட்டிகளக் கண்டுபிடிச்சித் தரோணும். பிள்ளகுட்டிக்காரன் தாங்கமாட்டேம்ப்பு' என்பான் கண்ணீர் வழிய.

சுப்பையா நாடார் தொடையைத் தட்டிக்கொண்டே தீவிரமாக யோசிப்பார். அவர் கூட்டாளிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சப்தமில்லாமல் நமட்டுச்சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள்.

"என்னாத்தக் கண்டுபிடிக்க, இந்தா இத வச்சுக்க, ஆட்டுக்குட்டி இந்நேரம் எவன் வயித்துக்குள்ள இருக்கோ' என்று தன் வயிற்றைத் தடவியபடி, தன் கூட்டாளிகளிடம் கண்ணடித்துக் கொண்டே, கீதாரியிடம் ஐம்பதையோ நூறையோ நீட்டுவார். கீதாரியும் கிடைத்தமட்டும் லாபம் என்ற கணக்கில் நன்றிப்பெருக்கோடு பெற்றுக்கொள்வான். இதற்கெல்லாம் மேலாக, கீதாரி போகும்போது "சாப்புட்டுப் போறது! வெஞ்சனம் கிடாக்கறிதேன்!' என்பார். மீண்டும் ஒரு வெடிச்சிரிப்பு அங்கே கிளம்பும்.

சுப்பையா நாடார் கிடாய் தூக்கும்போது பல வேடிக்கையான சம்பவங்களும் நிகழ்ந்திருக்கிறது. ஒருமுறை சிறு வயலில் கீதாரிகள் இரவில் கிடை அமர்த்தி இருந்தார்கள். சுப்பையா நாடார் தன் படையோடு வேட்டைக்குப் புறப்பட்டிருக்கிறார். ஐந்தாறு வயல் தள்ளியே மற்றவர்கள் நின்று கொள்ள, சுப்பையா நாடார் மட்டும் பதுங்கிப் பதுங்கி ஆட்டுக் கிடையை அணுகியிருக்கிறார். நல்ல இருட்டு. அசலூரில் ஆடு தூக்கும்போது கவனமாகவும், துரிதமாகவும் செயல்பட வேண்டியிருக்கும். கரணம் தப்பினால் மரணம்தான். கிடந்ததிலேயே சற்று பெரிதாகக் கிடந்த கிடாயை தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு, நாலுகால் பாய்ச்சலில் மின்னலாக, ஏழுவயலைக் கடந்துவிட்டாராம். "ஐய்யோ அப்பா... ஐய்யோ அப்பா...' என்று ஒரே சத்தம். சத்தம் சுப்பையா நாடாரின் தோளிலிருந்து கேட்டிருக்கிறது. ஆடுதூக்கும் அவசரத்தில் கிடாய்க்கு பதிலாக, கருப்புத் துப்பட்டி போர்த்தியிருந்த கீதாரியைத் தூக்கி வந்திருக்கிறார். அவனை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்துவிட்டார்கள்.

விடியும்போதே ஊருக்குள் எப்படியோ விசயம் பரவியிருந்தது. ஊரே சொல்லி சொல்லி சிரித்தது. சுப்பையா நாடாருக்கு வெளியில் தலைகாட்ட முடியாமல் வெட்கம் பிடுங்கித் தின்றது.

பொழுதுவாக்கில் தன் கூட்டாளிகளோடு தெருவில் நடக்கும்போது அவர் வயதை ஒத்த முறைப் பெண்கள் வாயில் கைவைத்துத் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள். அவரோடு தைரியமாகப் பேசும் உடையம்மை,

"என்ன அம்மேம் மகனே! கெடாக்கறி அலுத்துப்போயி மனுசக்கறி மேல ஆச வந்துடுச்சோ?' என்றாள்.

"ஆமாளா, ஒஞ்சோலிக் கழுதையப் பாத்தக்கிட்டுப் போளா...' என்று செல்லமாக அதட்டிச் சமாளித்தார்.

ஒருநாள் சுப்பையா நாடார் சாவகாசமாக திண்ணையில் அமர்ந்து மாயாவு, முத்தழகு, பெரியாம்பிள, நாச்சியப்பன் ஆகியோரோடு ஊர்கதை பேசிக்கொண்டிருந்தார். அடுப்பில் கிடாய்கறி வெந்துகொண்டு இருந்தது. சுப்பையா நாடார் கிடாய் உறிப்பதற்குள், அவர் மனைவி கண்ணாத்தாள் தனியாளாய் நின்று, மொத்த மிளகாய் மற்றும் மசாலா முழுவதையும் அம்மியில் அரைத்துவிடுவாள். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் குழம்பு தயாராகிவிடும். அலுக்காமல் ஆக்கிப்போடுவாள், வடித்துக் கொட்டுவாள். அப்போது வெந்து கொண்டிருந்த கிடாய்க்கு சொந்தக்காரன் வந்துவிட்டான்.

"ஐயா' என்றோ, "சாமி' என்றோ கூழைக்கும்பிடு போடவில்லை. நெஞ்சை விடைத்துக் கொண்டு சுப்பையா நாடாரின் எதிரே நின்றான். அவனை மேலுங்கீழுமாக பார்த்தார். பிராது எதுவும் சொல்லுவான் என்று எதிர்பார்த்தார். வந்தவன் வாயைத் திறக்கவில்லை. நேருக்கு நேர் சுப்பையா நாடாரை "குருகுரு'வென பார்த்துக் கொண்டு நின்றான். மாயாவுதான் கேட்டான்.

"என்னங்கப்பு, இப்படி நெஞ்சைவெடச்சிக்கிட்டு வந்து நிக்கிறீங்க, யாரு என்ன விவரமுன்னு சொல்லோணுமுல்ல?'

"என் கெடையில மூணு குட்டியக் காணல.'

"அதுக்கு' என்றான் பெரியாம்பிள. சுப்பையா நாடார் பெரியாம்பிளயப் பார்த்து கையமர்த்திவிட்டு, இடையிலிருந்த பச்சை இடைவாரிலிருந்து நூத்தைம்பது ரூபாயை எடுத்து, "இந்தா' என்று கீதாரியிடம் நீட்டினார். அன்று சுப்பையா நாடார் நல்ல மனநிலையில் இருந்திருக்க வேண்டும்.

அதை வாங்கிய கீதாரி, அவர் முகத்தில் விட்டெறிந்து, "கிடாயக் களவாண்டுட்டு இப்பக் காசக் குடுத்து சமாளிக்கிறியா? என் கிடாக் குட்டிங்க உன்வீட்டு அடுப்படி அண்டாவுல வேகுறது எனக்குத் தெரியாதுன்னு நெனச்சியோ... ஒனக்கென்ன நாக்கு அவ்வள நீளமோ... த்தூ... இந்த பொளப்பு பொளைக்கிறதுக்கு நாக்கப் புடுங்கிக்கிட்டு நாண்டுக்கிட்டு சாகலாம்' ஒரு நொடிக்குள் படபடவென வாயில் வந்ததையெல்லாம் பேசிவிட்டான்.

அண்டாசுப்பன் ஒருநிமிடம் பொறிகலங்கிப் போனார். கூட இருந்த கூட்டாளிகள் பேயறைந்தவர்கள் போல் உறைந்துபோனார்கள். அடுப்படியில் இருந்த கண்ணாத்தாள் ஆப்பையும் கையுமாக, நெஞ்சு படபடக்க வாசல்நடையில் வந்துநின்றாள்.

சுப்பையா நாடார் சுதாரித்து எழுந்து கீதாரியின் நெஞ்சில் எட்டி ஒரு உதைவிட்டார். அவன் தெருவில் போய் மல்லாக்க விழுந்தான். "நாறத் தாயோலி, யாரப்பாத்து என்ன சொன்ன? ஒங்காத்தா தாலி அந்துபோகும் பாத்துக்க...' என்றபடி மல்லாக்க விழுந்தவன் எழமுடியாதபடி நெஞ்சிலேயே நங்கு நங்கென்று மிதித்தார்.

"என்னையே மிதிக்கிறியா கச்சேரிக்குப்போறேன் பாரு' என்றபடி தட்டுத்தடுமாறி எழுந்தான். கீதாரியும் நல்ல உடற்கட்டோடு இருந்ததால் சுப்பையா நாடாரோடு மல்லுக்கட்ட ஆரம்பித்து விட்டான். சுப்பையா நாடாருக்கு ஆத்திரம் தலைக்கேற, கண்கள் ரத்தம் கக்க, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க

"தேவுடியாக் கண்டார ஓலிமகனே, ஒஞ்சங்க அறுத்திருவேன் பாத்துக்க, கச்சேரிக்குப் போறியா... ஒன்னே உசுரோட வுட்டாத்தானே போவே?' என்று ஓங்கிதாடையில் ஒரு குத்துவிட்டார். இரண்டு கடவாய்ப் பல் அங்கேயே கழண்டு விழுந்தது. வாயெல்லாம் ரத்தம் கொட்டியது. அவன் தலைமயிரை கொத்தாகப் பிடித்து, இழுத்துக்கொண்டுபோய் வீட்டுத் திண்ணையில் இருந்த தூணில் மடேர் மடேரென்று மோதினார்.

"ஐயோ! விட்டுரங்களேன்!' என்று கதறிய கண்ணாத்தாளைப் பார்த்து, "போளா வீட்டுக்குள்ள, ஒஞ்சோலி மயிரப் பாத்துக்கிட்டு' என்று அதட்டினார். தெருவே கூடிவிட்டது.

முத்தழகைப் பார்த்து, "என்னங்கடே, பாத்துக்கிட்டு நிக்கிறிய புடிச்சிக் கட்டுங்கடா இவன' என்றார். கீதாரி வலி தாங்கமுடியாமல், "ஐயோ... கொல்றானே... என்னக் கொல்றானே... அனாதையா சாகப்போறேனே, எம் பொண்டாட்டிப் புள்ளையெல்லாம் சந்தில நிக்கப் போதே' என்று அலறினான். அவனைப் பிடித்து தூணில் வரிகயிறால் கட்டினார்கள். "தாயோலி, ஒனக்கு என்னநெஞ்சுத்துணிச்சல் இருந்தா என்ன நாண்டுக்கிட்டு சாகச் சொல்லுவ... டேலே, பெரியாம்பிள இவன் பட்டில அடச்சிருக்கிற அம்புட்டு ஆட்டயிம் பத்திகிட்டு வாங்கடா, இவன் எம்மயித்தப் புடுங்கறானான்னு பாத்துர்றேன்' என்று சொல்லிவிட்டு ஓடிப்போய் அவன் உயிர்நாடியில் ஒரு உதைவிட்டார்.

"என்னப் பெத்த ஆத்தா... கொல்றானே... அனாதையா சாகப்போறேனே' என்று கதறினான்.

அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் அவன் பட்டியிலிருந்த இருநூறு முந்நூறு ஆடுகளையும் மாயாவும், பெரியாம்பிளயும் தெருவில் தூசுகிளம்ப ஓட்டி வந்துவிட்டார்கள்.

பொழுது சாயும்வரை அவனை அவிழ்த்துவிடவில்லை. இருட்டோடு அவனை அவிழ்த்துவிட்டு புரடியில் கையைக் கொடுத்து, எக்கித்தள்ளி, "போடா... போய் எங்கனாலும் புகார் கொடு, எவன் வந்து எம்மயித்தப் புடுங்கறான்னு பாக்குறேன். இனி, இந்தப் பக்கம் தலைவைத்துப் படுத்த ஒங்காத்தா கொடுத்த *சேன வெளிவந்துரும் பாத்துக்க' என்று விரட்டிவிட்டார் சுப்பையா நாடார். இவ்வளவு அடித்தும், அவன் ஆடுகளை ஓட்டிவந்தும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை.

"கவோதிப்பய, என்ன நாண்டுகிட்டு சாகச்சொன்னானே' என்று சொல்லி ஆத்தாத்துப் போனார்.

விடியற்காலையில் மாயாவும், முத்தழகுவும் மூச்சிரைக்க சுப்பையா நாடாரிடம் ஓடிவந்தார்கள். அவர் காதில் குசுகுசுவென்று ஏதோ சொன்னார்கள். சுப்பையா நாடார், "தொங்கிட்டானா... தொங்கிட்டானா... என்ன நாண்டுகிட்டு சாகச் சொன்னானே...' என்று பல்லை நறநறவென்று கடித்தபடி தொடையில் ஆங்காரமாக தட்டிக் கொண்டார்.

* * *

சுப்பையா நாடாருக்கு தன் மூத்தமகன் காட்ராஜாவின் பெயரில் கட்டுக்கடங்காத பாசம். அவரோடு சரிக்கு சரியாக நின்று பேசும் ஒரே ஆள் காட்ராஜாதான். புதிதாகப் பார்ப்பவர்கள் "அப்பன் புள்ளை' என்று எண்ணமாட்டார்கள். கூட்டாளிகள் என்றோ, அண்ணன்தம்பி என்றோதான் நினைத்துக் கொள்வார்கள்.

எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்வார்கள். சுப்பையா நாடார், "அண்டா சுப்பன்' அவதாரம் எடுத்து ஆடுதூக்கச் செல்லும்போது தவிர. ஏனோ ஆடுதூக்கச் செல்லும் போது மட்டும், "வேணாம்ப்பு, நீங்க வீட்ல தூங்குங்க..., பூச்சி பட்ட எளயும். ராவுல கண்ணு முழிச்சா உடலுக்காவாது' என்று திட்டவட்டமாக மறுத்துவிடுவார். அவர் தன்மகனை செல்லமாக "வாங்கப்பு போங்கப்பு' என்று அழைப்பது வழக்கம். இருவரும் கள்ளுக்கடைக்கு ஒன்றாகவே செல்வார்கள். காட்ராஜா கள்ளுக்குடிக்கத் திணறுவார். சுப்பையா நாடார் ஒரு மூச்சுக்கு ஒரு முட்டி என உறிஞ்சித் தள்ளுவார்.

"என்னப்பு, இப்படி தெனர்றீக... உங்க வயசில நான் ஒம்பது முட்டிய ஒரே மூச்சுல இழுத்துருவனாக்கும்' என்பார். காட்ராஜா கூச்சமாக சிரிப்பார். அப்பாவைப்போல குடிக்க முடியவில்லையே என வருந்துவார். எப்படியாவது ஒரே மூச்சில் ஒரு முட்டியை காலி செய்ய வேண்டுமென்ற வைராக்கியத்தோடு, பானைமுட்டியை வாயில் வைத்து ஒரே இழுப்பாக இழுப்பார். புறை ஏறிவிடும். சுப்பையா நாடார் பதறிப்போய், "பாத்துப்பு... நிதானமாக்குடிங்க, முடியாட்டி விட்டுருங்க.. எதுக்கு மல்லுக் கட்டுறீக...' என்றபடி தலையில் தட்டுவார்.

"கள்ளு வேண்டாம், இந்த சாக்கினாவத் தின்னுங்க' என்று நண்டு, கறி வறுவலை வாங்கித் தருவார். கள்ளு குடித்துவிட்டு செல்லும்போது, கள்ளோ சாக்கினாவோ காட்ராஜாவின் மீசையில் ஒட்டியிருந்தால் தன் துண்டையெடுத்து துடைத்துவிடுவார்.

சுப்பையா நாடார் பெரும்பாலும் வீட்டிலிருக்கமாட்டார்; பிஞ்சைக் காட்டிலுள்ள கூடத்தில்தான் அவர் கூட்டாளிகளோடு இருப்பார். சாப்பாட்டு வேளைக்குதான் வீட்டுக்கு வருவார். வரும்போதே, "கண்ணாத்தா, காட்ராஜா சாப்டாச்சா' என்று கேட்டுக் கொண்டுதான் வருவார். காட்ராஜாவும் அப்பாவின் வருகைக்காகக் காத்திருப்பார். இருவரும் சேர்ந்தே சாப்பிடுவார்கள். சாப்பிடும்போது கறியை மொண்டு மொண்டு காட்ராஜாவின் தட்டில் போடுவார்; "போதும்ப்பு... போதும்ப்பு' என்றாலும் விடமாட்டார்.

"சாப்பிடுங்கப்பு... பருக்கையைத் தின்னு பிரயோசனமில்ல, வெஞ்சனந்தேன் உண்டனத் திங்கோணும், அப்பு உடலப் பாத்தியளா, இம்புட்டு வயசிலயும் எம்புட்டு வலுவா இருக்கேன்னு, அம்புட்டும் கறிதேன்' என்று வலது கையை மடித்துக் காட்டுவார்.

அப்பனும் புள்ளையும் தெருவில் இறங்கி நடந்தால், எட்டு கண்ணும் விட்டெரிக்கும். காட்ராஜாவிற்கு தன் அப்பாவோடு ஊருக்குள் நடந்து செல்லுகையில் பெருமை பிடிபடாது. அவருக்கு எல்லாம் அப்பாதான். எப்படியாவது தானும் அப்பாவைப் போல் பேரெடுக்க வேண்டும். தானும் கம்பீரமாக ஊரை வலம் வரவேண்டும் என்று காட்ராஜாவிற்கு ஆசை. அவரைப்போல நல்ல உடற்கட்டும், உயரமும் இருந்தது. கருகருவென மீசையும் வளரத் துவங்கிற்று. இன்னும் கொஞ்சம் வளரவிட்டு மீசையை முறுக்கினால் போதும். அடுத்து... அடுத்து... அவரைப்போல் திறமையாக ஆடு தூக்க வேண்டும்.

காட்ராஜா, தன் கூட்டாளிகள் இரண்டு மூன்று பேரை திரட்டிக்கொண்டு ஆடுதூக்கக் கிளம்பிவிட்டார். அப்போது கீதாரிகள் குருந்தம்பட்டியில் கிடையமர்த்தி இருந்தார்கள். அப்பாவின் அனைத்து தொழில் நுணுக்கங்களையும் கையாண்டு நாலாம்பேருக்குத் தெரியாமல், ஒரு வாலிப்பான கிடாயை வெற்றிகரமாக தூக்கி வந்துவிட்டார். அதிகாலை கதவைத்தட்டி, பெருமையான குரல்கொண்டு தன் தாயை எழுப்பினார். கண்ணாத்தாள் கொட்டாவி விட்டபடி, "ராவெல்லாம் எங்கய்யா போனே?' என்றபடி எழுந்து வந்தாள். காட்ராஜா, "ஒம்மயன் என்ன கொண்டு வந்திருக்கேன்னு வந்து பாராத்தா' என்று தன் தோளிலிருந்த கிடாயை பொத்தென்று கீழே போட்டார்.

"ஏதய்யா இது, அப்பு கொடுத்து வுட்டாகளா?'

"இல்லாத்தா, இத நானே தூக்கினேன் ஆத்தா' என்றார் பெருமை பொங்க.

"ஆத்தே... ஒனக்கேன்யா இந்த பொழப்பு, ஒங்க அப்பனுக்குத் தெரிஞ்சா சங்கடப்படுவாக'

"போ ஆத்தா, ஒனக்கு ஒண்ணுந் தெரியாது, கத்தியஎடு, நான் உறிச்சித் தர்றேன். அப்பு காலசாப்பாட்டுக்கு வரதுக்குள்ள கொழம்பு தயாராகோணும், ஆமா..' என்றார் ஆர்வமாக.

"என்னமோ போ... எனக்கொண்ணும் சரியாப்படல' என்றபடி கண்ணாத்தாள் அரைமனதோடு மசாலா அரைக்கக் கிளம்பினாள்.

காலை ஒன்பது மணிக்கெல்லாம் குழம்பு தயாராகிவிட்டது. சுப்பையா நாடார் காலை சாப்பாட்டிற்கு பிஞ்சை கூடத்திலிருந்து வீட்டிற்கு வந்தார். வரும்போதே கறிக்குழம்பு வாடை ஆளைத் தூக்கியது.

"ஏதுளா, பெரியாம்பிள எதுவும் கறிகிறி கொடுத்தானா' என்று கேட்டார் சுப்பையா நாடார்.

காட்ராஜா அவசரமாக, "இல்லப்பு, நாந்தேன் ராத்திரி குருந்தம்பட்டிக்குப் போய் தூக்கிட்டு வந்தேம்ப்பு' என்றார்.

சுப்பையா நாடார் நிமிர்ந்து மகனின் முகத்தைப் பார்த்தார். காட்ராஜா ஆர்வமாக, அப்பு என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். சுப்பையா நாடார் ஒன்றும் சொல்லாமல் அமைதியாகத் துண்டையெடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தார். மகனை சாப்பிட அழைக்கவில்லை. கண்ணாத்தாள் இரண்டு தட்டில் சுடுசோற்றைப் போட்டு வைத்தாள். ஒரு குண்டானில் கறிக்குழம்பை கொண்டுவந்து வைத்தாள்.

"பட்ட மொளகாயிம், பழய தண்ணியும் கொண்டாளா' என்றார். காட்ராஜா ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

கண்ணத்தாள் பட்டமொளகாயும், பழைய தண்ணீயையும் கொண்டுவந்து வைத்துவிட்டு, "ஏன் கொழம்பு ஊத்திக்கிறது' என்றாள் தயங்கி. நிமிர்ந்து மனைவியை ஒரு பார்வை பார்த்தார். அவள் சுவரோடு ஒதுங்கி நின்றுகொண்டாள்.

கும்பாவில் இருந்த நீராகாரத்தை எடுத்து சுடுசோற்றில் மடமடவென்று ஊற்றினார். பதறிய காட்ராஜா,

"ஐயோ, அப்பு ஏன் இப்படி செய்றீக?' என்று கையைப் பிடித்தார்.

"ச்சீ... கைய எடுறா கபோதி, இருக்கிறதா இருந்தா, ஒழுங்கு மரியாதையா இரு. இல்லாட்டா எங்கியாச்சும் ஓடிப்போயிரு ஆமா' என்றார் கையைத் தட்டிவிட்டு. காட்ராஜா நடுநடுங்கிப் போனார். இப்படி ஒரு வார்த்தையை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. சுப்பையா நாடார் மூசுமூசென்று தண்ணிச் சோற்றை பட்டமொளகாயை கடித்துக்கொண்டு தின்றுவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கூடத்திற்குப் போய்விட்டார்.

காட்ராஜா நிலைகுலைந்துபோனார். கண்ணீர் கண்களில் வழிந்து கொண்டிருந்தது. கண்ணாத்தாள் எவ்வளவு சமாதானம் சொல்லியும், அவருக்கு மனது ஆறவில்லை.

சுப்பையா நாடார், தன் மகனை ஒருநாள்கூட கடிந்து கொண்டதில்லை. "வா போ' என்றுகூட அழைக்கமாட்டார். அப்படிப்பட்ட அப்பா, "தெருநாயை அடித்து விரட்டுவது போல்' ஒரு வார்த்தையை வீசிச் சென்றுவிட்டார். காட்ராஜா தூக்கில் தொங்கிவிடலாமா இல்லை காஞ்சிரம் பழத்தை பிடுங்கித் தின்போமா என்று பலவாக்கில் எண்ணங்களை ஓடவிட்டார். சாக மனம் வரவில்லை.

கடைசியாக யாரிடமும் சொல்லாமல் பட்டுக்கோட்டைக்குப் பக்கத்தில் கொன்றைக் காட்டிலுள்ள தாய்மாமனான பெரியசாமி நாடார் வீட்டிற்கு ஓடிவந்துவிட்டார். செவரக்கோட்டையிலிருந்து ஆள்தேடி வந்தும் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டார்.

கொன்றைக் காட்டிலிருந்து போலீஸ் வேலைக்கு எழுதிப்போட்டு ஒரு வேலையையும் தேடிக்கொண்டார். திருமணங்கூட அப்படித்தான் என்று சொல்லலாம். அன்றிலிருந்து இன்றுவரை செவரக்கோட்டைக்கு காட்ராஜா ஒரு விருந்தாளிதான்.

இதோ இன்றுகூட தன் பிரியத்திற்குரிய தந்தையைக் காண தன் மனைவி மகனோடு ஒரு மூன்றாவது மனிதனாக கட்டுச்சோற்றை தின்றுவிட்டு, கையில் காலியான டிபன்கேரியரை தூக்கிக் கொண்டு செல்கிறார். ராஜமும் காட்ராஜாவும் பெரியாம்பிள வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டனர். பெரியாம்பிளயும், அவர் மனைவியும் சாப்பிடுமாறு வற்புறுத்தினார்கள். தாங்கள் சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டதாக டிபன்சேரியரைக் காட்டினார்கள்.

"ஏம்ப்பு! ஒந்தம்பிகதான் பகையாளி... நாங்கெல்லாம் என்னப்பு செஞ்சம்' என்று பெரியாம்பிள வருத்தப்பட்டார்.

கருப்பையன் மகள் மீனாவும், பெரியாம்பிள மகளும் சுப்பையா நாடாரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தார்கள். மீனா காட்ராஜாவையும், ராஜத்தையும், "பெரியப்பா... பெரியம்மா...' என்று அழைத்தாள்.

தன் மாமனார் வரவும் ராஜம் எழுந்து நின்றுகொண்டு, "கும்புடுறேன் மாமா' என்றாள் கைகளைக் குவித்துக் கொண்டு. அடிமேல் அடிவைத்து நடந்துவந்து காட்ராஜாவின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டார். காட்ராஜா அப்பாவைப் பார்த்து சிரித்தார். குழந்தையைப் போல் தானும் சிரித்தார் சுப்பையா நாடார். மருமகளை தன் இன்னொரு பக்கம் உட்காருமாறு சைகையில் சொன்னார்.

"இருக்கட்டும் மாமா'

"சும்மா உட்காருத்தா' என்றார் மெலிதாக. ராஜம் உட்கார்ந்து கொண்டு எட்டிநின்ற மகனை அழைத்தாள். வெயிலில் அவன் முகமெல்லாம் சிவந்து வியர்வை வழிந்து கொண்டிருந்தது. தயங்கித் தயங்கி அம்மாவின் அருகில் வந்தான். அவன் காதில் ராஜம் "தாத்தான்னு கூப்பிடு' என்றாள் கிசுகிசுப்பாக.

அவன் கிட்ட வந்து "தாத்தா' என்றான் ஒப்புக்காக. சுப்பையா நாடார் சிரித்துக்கொண்டு தோளிலிருந்து துண்டை எடுத்து அவன் முகத்தில் வடியும் வியர்வையை துடைத்துவிட்டார். அந்தத் துண்டின் நெடி தாங்காமல் சற்று விலகி நின்றுகொண்டான்.

ராஜம் தான் கொண்டுவந்திருந்த ஒயர்கூடையிலிருந்து அல்வா, ஜாங்கிரி பொட்டலங்களை எடுத்துப் பிரித்து சுப்பையா நாடாரிடம் நீட்டினாள். நடுங்கும் கைகளால் வாங்கி அல்வாவைக் கொஞ்சம் எடுத்து வாயில் வைத்துக்கொண்டார். இன்னொரு துண்டை எடுத்து பேரன் வாயில் வைக்கப் போனார். அவன் வேண்டாமென தலையாட்ட "தாத்தா கொடுக்கறாருல்ல வேணாம்னு சொல்லாம வாங்கிக்க' என்றார் காட்ராஜா. முகத்தை சுளித்துக்கொண்டு, வேண்டா வெறுப்பாக, வேறு வழியில்லாமல் அதை வாங்கிக் கொண்டான்.

சுப்பையா நாடார் பெரியாம்பிளயைப் பார்த்து "கொஞ்சம் துன்னூரு எடுத்துட்டு வாடே' என்றதும், அவர் ஓடிப்போய் ஒரு தட்டில் திருநீறைக் கொண்டுவந்தார். சுப்பையா நாடார் தட்டை வாங்கி, திருநீறை எடுத்து விரல்நடுங்க மகனின் நெற்றியில் பூசியதும், காட்ராஜாவிற்கு கண்ணிலிருந்து "பொல பொல'வென கண்ணீர் உதிர்ந்தது. துண்டையெடுத்து துடைத்துக்கொண்டார். மீண்டும் திருநீறை எடுத்து திரும்பி தன் மருமகள் நெற்றியில் கைகள் நடுங்க பூசிவிட்டு, குரல் நடுங்க, நா தழுதழுக்க

"ஆத்தா மனசில எதையும் நெனச்சுக்காதே, ஒனக்கு ஒரு கொறையும் வராது. மகராசியா இருப்ப' என்றார். மாமனார் சொல்வது ராஜத்தின் காதில் அரையும் குறையுமாக விழுந்தது. அழுதாள் ராஜம். ராஜத்தின் தாடையைப் பிடித்து ஏத்தி, "ஆயா... அழுவாதய்யா, எல்லாம் நல்லதுக்குதேன்' என்றார்.

திருநீறை எடுத்து பேரன் தலையில் போட்டு நெற்றியில் பூசினார். ஏனோ அவனுக்கும் கண்கள் கலங்கிநின்றன. ராஜம் இடுப்பிலிருந்து சுருக்குப்பையை எடுத்து, நெருடி நெருடி நூறு ரூபாயை எடுத்து மாமனார் கையில் கொடுத்தாள். அவர் அதை வாங்கி விரித்து உற்றுப்பார்த்தார். சிரித்துக்கொண்டு, மீண்டும் ராஜத்திடம் கைநீட்டினார். காட்ராஜா, "இன்னும் நூறு ரூபாக் குடு ராஜம், அப்பு கேக்குறாகல்ல' என்றார்.

"எல்லாம் போதும்' என்றாள் ராஜம். சுப்பையா நாடார் நீட்டிய கையை மடக்காமல் அப்படியே வைத்துக்கொண்டு "கொடுத்தா' என்றார். மீண்டும் சுருக்குப்பைக்குள் தடவித்தடவி இன்னுமொரு நூறு ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தாள். வாங்கி மடியில் சுருட்டி வைத்துக்கொண்டார்.

"அப்ப நாங்க புறப்படுறம் மாமா' என்று ராஜம் எழுந்துகொண்டாள். காட்ராஜா எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு, வேட்டியை அழுத்தி சரிசெய்து கொண்டார்.

காட்ராஜா எழுந்து தன் பின்புறம் ஒட்டியிருந்த மண்ணை தட்டிவிட்டு மறிங்கிப்பட்டி ரைஸ்மில்லை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவர்பின்னே ராஜம், "வேகமா நடங்க, மூன்றரை மணி பஸ்ஸை பிடிச்சாதான் ஊருபோய் சேரமுடியும்' என்றபடி ஒயர்கூடையை கக்கத்தில் வைத்துக்கொண்டு, "விக்கு விக்'கென்று நடக்க ஆரம்பித்தாள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com