 |
பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள்
பணிப்பெண்
புரண்டெழும் பேச்சை
உள்வாங்கிய ஒலிகளை
திறவுகோல் இழந்த
மெளன அடுக்கில்
இட்டிருப்பாள்
அழுக்காடைகள்
அலம்பாத வீடு
இத்தியாதிகளை
இலங்கச்செய்து
குழப்பங்கள் பரிமளிக்கா முகத்தோடு
எதிர்வீட்டு எஜமானியை
எதிர்கொள்ளப் படியேறுவாள்
பெட்டிப் பொறியில் சிக்கிய
எலி குறித்த தர்க்கங்களிடை புகுந்து
தண்டவாள கல்சரளைக்கப்பால்
அடர்ந்த முட்புதரில்
பாய்ந்தோட விடுகையில்
எலிப்பாஷாணம் அருந்தி
செவிட்டூமையாய் மீண்டவளின்
கழிவிரக்கம் காணக்கிடைக்கும்
******
காட்டை அழித்ததை
காகிதங்களில் எழுதுகிறேன்
*
ஆளற்றபோதும்
பார்வை சென்று படியும்
பெண்கள் படித்துறை
*
குளிர்கால இரவொன்றில்
நிழல்கள் பனிசுமந்த வீதியில்
எதேச்சையாய் எதிர்ப்பட்டோம்
அவரவர்க்கான கவலைகளோடு கடக்கையில்
உலர்ந்த உதடுகள் உதிர்த்த
பரஸ்பர சிரிப்பு
இன்னல்களையெங்கோ
இடம்பெயரச் செய்தது சற்றுநேரம்
*
நீர்கலைத்து
நிலவை நிரப்பிக்கொள்கிறது
குடம்
*
காலை பொழுதை கையகப்படுத்தாவிடில்
மறுநாளுக்குள் நழுவிக்கொள்கிறது
நாள்
*
கலைஞன் லாவகத்தோடு
வாத்தியத்தில் இயங்க
வேசியின் தாராளத்தோடு
விரிகிறது இசை
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|