Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Koottanchoru
Kottanchoru Logo
அக்டோபர் 2005 - மார்ச் 2006

பிழைத்தல்

புதுகை சஞ்சீவி

மிகுந்த களைப்பும், வேலை தேடிப்போகிற ஆவலுமாக, அந்தப் பேருந்து நிலையத்தில், நான் இறங்கியபோது, ஊரெங்கும் மின் விளக்குகள் எரியத் துவங்கியிருந்தன. சற்று தூரத்திலுள்ள உயரமான கட்டிடங்கள், நியான் விளக்குகளில் அழகழகாய்த் தெரிந்தன.

வரிசையாய் நின்ற பேருந்துகளின் இடையில் நடந்தபோது, தோள் பையில் சட்டைத் துணிகளுக்கு நடுவேயிருந்த, இன்லேண்ட் கவரை எடுத்தேன். பொடி கையெழுத்திலிருந்த கண்ணனின் முகவரியையும், டவுன் பஸ் விபரத்தையும் மனதுள் குறித்துக் கொண்டேன். ஒரு தடவை வந்து பார்த்துப்போகச் சொல்லி எத்தனை கடிதம் எழுதிவிட்டான். ஒரு வேலை தேடிக்கொண்டு இங்கேயே தங்கப்போகிறேன் என்று சொன்னால் எவ்வளவு சந்தோஷப் படுவான்.

Father and Child கண்ணனைப் பார்க்க மனசு பரபரத்தது. அவன் எப்படியும் ஒரு வேலை வாங்கிக்கொடுத்து விடுவான் என்ற நம்பிக்கை மனசெங்கும் வியாபித்துக் கிடந்தது.

வருமானமில்லாத காரணத்தால் ஊரில் எத்தனை அவமானங்கள். இளக்காரப் பார்வைகள். ஏளனப் பேச்சுகள். எல்லாவற்றுக்கும் மேலாக, கீதாவைப் பெண் கேட்டுப்போனபோது, நேருக்கு நேராய், தயவு தாட்சண்யம் இல்லாமல் அத்தை வீசிய வார்த்தைக் கங்குகள்.

ஓட்டுனர் உட்கார்ந்து இன்ஜினை உயிர்ப்பிக்க, பஸ் குலுங்கியது. புறப்படப்போகும் சமிக்ஞைக்காக, அவர் ஒலிப்பானை விட்டுவிட்டு அழுத்த, வெளியே நின்று பேசிக்கொண்டிருந்த சிலர், சத்தம் கேட்டு வேகமாய் ஏறினார்கள்.

அகலப் சாலையில் மேற்கு நோக்கி ஓடிய பேருந்து, ஏதோ நிறுத்தத்தில் சிலரை உதிர்த்துவிட்டு, மூச்சிரைத்து புறப்பட்டபோது, “இறங்க வேண்டிய ஸ்டாப் இதுவாக இருக்குமோ?” என்ற சந்தேகம் எழுந்தது. ஊரின் பிரம் மாண்டத்தில் சரியான இடத்தில் இறங்க வேண்டுமென்ற பதைப்பும் வந்தது.

அருகில் மிலிட்டரி கவர் சூட்கேஸை, கால்களின் நடுவில் அணைத்து கம்பியைப் பிடித்து நின்றார் ஓர் வெள்ளைச் சட்டைக்காரர். ‘இவரும் வேலை தேடிவந்த வராக இருக்குமோ?’ என்று மனசுக்குள் தோன்றியது. “சார்...” என்று பவ்யமாய் அழைத்தேன்.

ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தவர் “ஆங்...” என்றவாறு உணர்வுக்கு வந்தார். இறங்க வேண்டிய நிறுத்தத்தைச் சொல்லி, “அந்த எடம் வந்ததும் சொல்றீங்களா?” என்றேன். “ம்...” என்று அலுங்காமல் தலையசைத்தார்.

அதற்குப் பிறகு ஏதேனும் நிறுத்தத்தில் அவசரமாக சில பயணியர் இறங்கிய போதெல்லாம், வெள்ளைச் சட்டைக்காரரின் முகத்தையே கூர்ந்து பார்ப்பேன்.

அவர் தன் போக்கில் அமைதியாக இருந்துவிட்டு, திடீரென என் பார்வையைப் புரிந்துகொண்டவராக, “இது இல்லெ...” என்று உதடு பிரியாமல் சொல்வார்.

இப்படியே சில நிறுத்தங்களைக் கடந்து, பஸ் வேக மெடுத்த நேரம், என் வலது தோளில் கை வைத்து, அழுத்தியபடி சொன்னார், “வர்ற ஸ்டாப்ல எறங்குங்க...”

ஊரிலிருந்த போது ஓர் திரைப்படத்தின் மாலைக் காட்சியைப் பார்த்துவிட்டு, சைக்கிளில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் தான், முதன் முதலாய் அவன் சொன்னான், “நா, ஒரு பொண்ணக் காதலிக்கிறேண்டா...”

மிகுந்த சந்தோஷத்தில் கேலியும் கிண்டலுமாய், அவனை உற்சாகப்படுத்தினேன்.

கடைசியாக அவனைப் பார்த்தபோது, இரவில் மௌனமாய்க் கிடந்த எங்கள் வீட்டு வாசலில் நின்று “ரெண்டு நாள்ல வெளியூருக்கு, வேலைக்குப் போகலாம்னு இருக்கேண்டா...” என்று சுரத்தில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தான்.

அந்த வார இறுதியில், கண்ணன் அவளுடன் ஓடிய விஷயம், ஊரில் அவனைத் தெரிந்த எல்லோருக்கும், முதலில் ரகசியமாய் பரவி, பிறகு பகிரங்கமாய் கொஞ்ச நாட்களுக்கு அதையே பேசித் திரிந்தார்கள்.

பேருந்திலிருந்து இறங்கியதும், அது புறப்பட்டுப் போவதையே சற்று நேரம் பார்த்து நிற்க, அதிக நெரிசலால் ஒரு பக்கமாய் சாய்ந்தவாறே போய்க் கொண்டிருந்தது.

கடிதத்தில் தெரிந்து வைத்திருந்த தகவல் நினைவில் வர, பஸ் போன திசையிலேயே மெல்ல நடக்கத் துவங்கினேன்.

சாலையில் ஏகப்பட்ட இரு சக்கர வாகனங்கள் ‘ஹெட்லைட்’ வெளிச்சத்தில், விர்விர்ரென சீறிக் கொண்டு செல்வதைக் கண்டதும், “இது பணம் பெருத்த ஊரு” என்று கண்ணன், முன்பொரு முறை சொன்னது ஞாபகத்தில் வந்தது.

சில வருடங்களுக்கு முன்பு, அவன் இங்கே வந்து ஏதோ ஒரு கம்பெனியில் ஆறு மாதம் வேலை பார்த்து விட்டு, ஊருக்குத் திரும்பியதிலிருந்து அடிக்கடி சொல்வான், “அந்த ஊருக்குப் போனா, தாயில்லாப் புள்ளயும் பொழச்சுக்கும்டா...”

சாலையிலிருந்து கிளையாய் இடது பக்கம் வீதி பிரிந்திருக்க, அதன் முக்கத்தில், கண்ணாடிகளால் அலங்கரிப்பட்டிருந்த இனிப்பகக் கடையைப் பார்த்தேன். ஐம்பது ரூபாயின் முக்கால் பகுதிக்கு மிக்சரும், மைசூர் பாக்கும் வாங்கிக்கொண்டு, “இங்கன வருசயா தள்ளு வண்டியில இட்லி சுட்டு விப்பாங்களாமே... எங்கனன்னுத் தெரியுமா?” என்று விசாரித்தேன். கடைக்கார இளைஞர், கை நீட்டிய திசையில் நடக்கத் துவங்கினேன்.

சற்று தூரத்திலேயே கண்கள் பரபரவென தள்ளு வண்டிகளைத்தேட ஆரம்பித்தது. சாலையின் இடது ஓரம், பிளாட்பாரத்தில் வடக்குப் பார்த்த முகமாக, நான் கைந்து தள்ளுவண்டிகள், பெட்ரோமாஸ் வெளிச்சத்தில் வரவேற்றது. கண்ணனை நெருங்கிவிட்ட ஆவலில், நரம்புகளுள் ஓர் துள்ளல்.

சாலையில் போவோரை ஈர்க்கும் விதமாக, முதல் வண்டியில், கத்தரிக்காய் அளவு வெளிர் பச்சை குடை மிளகாய்களை, சணலில் மாலையாகக் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள். வண்டிக்கு முன்பாக சிதறி நின்று வட்டமான பிளாஸ்டிக் தட்டுகளை, இடக் கைகளில் ஏந்தி யிருந்த சிலர், வடையையோ, பஜ்ஜியையோ, சட்னியில் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நரைத்த மீசையிலிருந்த, அந்தக் கடைக்காரரின் முகம் கண்ணன் முகமில்லை.

உட்கார்ந்து சாப்பிடுவதற்காக நான்கைந்து பிளாஸ்டிக் ஸ்டூல்களைப்போட்டு வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருந்த, இரண்டாம் வண்டியிலும் கண்ணனைக் காணவில்லை.

அவசரமும், ஆர்வத்தேடலுமாய், மூன்றாம் வண்டிக்கு நகர்ந்த போது, அதில் விளக்கெரியவில்லை. ஓர் பெண் மங்கிய வெளிச்சத்தில் நின்று, வண்டியின் மூலையில், அடுப்பு மேலிருந்த இட்லிச் சட்டியில், மாவை ஊற்றிக்கொண்டிருந்தாள். ‘இவள்தான் கண்ணன் பொண்டாட்டியா?’ என்று உற்றுப்பார்த்தேன். அவன் ஊரில் காதலித்துக்கொண்டிருந்தபோது, இரண்டொரு முறை காண்பித்திருக்கிறான். மனதின் ஆழத்தில் புதைந்திருந்த, அவளின் முகத்தை ஞாபகப்படுத்தி, இவளின் முகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.

நிறைய வேறுபாடுகள் தெரிந்தாலும், ஏதோ ஒரு சாயல் ஒத்துப்போக, அவள்தான் என்று மனம் ஊர்ஜிதப்படுத்தியது. அவள் என்னைக் கவனிக்காமல், வேலையில் மும்முரமாய் இருக்க, வண்டியை நெருங் கினேன்.

தள்ளு வண்டி சக்கரத்திற்கு அருகில், குத்துக்காலிட்டு உட்கார்ந்து, முதுகைக் காண்பித்தவாறு ஏதோ செய்துகொண்டிருந்தவனை, அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. சந்தோஷத்தில், நடையில் ஓர் மிடுக்கு வர, புன்முறுவலுடன் அவனருகில் நின்ற போது, கழுத்தைத் திருப்பி ஏறிட்டுப் பார்த்தான்.

மறுகணம், என் பெயரைக் கூவிக்கொண்டே, ஸ்பிரிங் போல துள்ளி எழுந்து, இறுகக் கட்டிப் பிடித்தான். அவளும் சட்டென மலர்ந்து “வாங்கண்ணா...” என்று பிரியமாக அழைத்தாள். அந்தச் சூழலில் அவள் குரல் மட்டுமே இனிமையாயிருந்து.

சந்தோஷங்களைப் பரிமாறிக்கொண்டு, நல விசாரிப்புகளுக்குப் பிறகு, அவன் சொன்னான், “கொஞ்சம் இருடா, லைட்ல மேண்டில் ஒடஞ்சு போச்சு, கட்டிட்டு வந்தர்றேன்...” உட்கார்ந்து மேண்டிலைக் கையிலெடுத்தான்.

தள்ளு வண்டிகளுக்குப் பின்னால், நீள காம் பவுண்டுச் சுவரை ஒட்டி, குப்பைகள் இடுப்பு உயரத்திற்கு விரிந்து கிடந்தன. எல்லா வண்டிகளிலும் கை, தட்டு, கழுவுகிற தண்ணீர் நெளிந்தோடி, ஒன்றாய்த் தேங்கி துர்நாற்றம் வீசியது.

கண்ணன் மேண்டில் கட்டுவதை பாதியில் விட்டுவிட்டு, இடையிடையே எழுந்து, வட்டமான உள்ளங்கை அகல சில்வர் தட்டால், தோசைக்கல் மீது, வெந்து சிவந்திருந்த கறியை புரட்டி வழித்துக்குவித்தான். பிறகு, வண்டிக்குக் கீழ்தட்டிலிருந்த அலுமினிய தேக்சாவிலிருந்து, சிறிய கிண்ணத்தில் குழம்பு மொண்டு, கறியின் மேல் ஊற்றி, திரும்பவும் பரப்பிவிட்டான்.

“இது சிக்கனா? மட்டனா?” என்று நான் சந்தேகமாய்க் கேட்டபோது, குறும்பாகச் சிரித்தான். “அதல்லாம் வித்தாக் கட்டுபடியாகுமா? பீப்ஃபுடா...” என்றான்.

கண்ணனின் அப்பா நான்கைந்து பேரோடு, அவள் வீட்டிற்குப் போய் சண்டையிட்டது-அவருக்கு இன்னும் கோபம் குறையாமல் இருப்பது-இவன் அம்மா இவனைப் பற்றியே கவலைப்படுவது-என்று வெகு நேரம் அவன் வீட்டுக் கதைகளைப் பற்றி, சொல்லிக் கொண்டேயிருந்தேன். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே வியாபாரம் செய்துகொண்டிருந்தவன், ஊரடங்கிய நேரத்தில், இருளுக்குள் விழுந்து கிடந்த சந்து வழியாக, வண்டியைத் தள்ளிக்கொண்டு வீட்டுக்குக் கூட்டிப்போனான்.

அந்தச் சிறிய அறையில், பிளாஸ்டிக் குடங்கள், இட்லி சட்டி, ஸ்டவ் அடுப்பு, கிரைண்டர்கள் என பாதி இடம் அடைபட்டிருந்தது.

சிமிண்ட்டுத் தரையில் அழுக்குத் துண்டு விரித்து, என்னைப் படுக்கச் சொல்லி விளக்கை அணைத்தான். விடிவிளக்கு இல்லாததால், கரேலென்ற இருட்டு. கிழக்கில் தலை வைத்து, சுவரை ஒட்டிப் படுத்தேன். கண்ணன் ஒரு பழைய சேலையை விரித்து அருகில் படுத்தான். அவன் மார்புக்கு நேர்தலை வைத்து, வடக்கே கால் நீட்டி, குறுக்காகப் படுத்தாள் அவள்.

விரித்திருந்த துண்டு நீளம் போதாமல், தரையின் குளிர்ச்சியால் கால்கள் சில்லிட்டன. இப்போது குளிர் அதிகமாகி, உடல் வெடவெடத்தது. ‘என்ன வேலை கிடைக்குமோ?’ என்ற பயம் சூன்யமாய் மிரட்டியது. புறப்பட்டபோது, போனில் அழுது கதறிய கீதா, நினைவில் வந்தாள். விடிய விடிய சிள் வண்டுகளின் ரீங்காரத்தைக் கேட்டுக்கொண்டும், கொசுக்களை அடித்தவாறும், புரண்டு புரண்டு படுத்திருந்தேன்.

வெயில் வந்து நீண்ட நேரம் கழித்த பின் எழுந்து, சுவரில் சாய்ந்து கால்களை நீட்டி உட்கார்ந்தேன். கண்ணன் இரவு விரித்துப்படுத்திருந்த சேலை, சுருண்டு விலகியிருக்க, வெறும் தரையில் குப்புறப்படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். அவளைக் காணவில்லை.

வாசலில் நெளி நெளியாய் சிறிய கோலம். கொஞ்சம் தள்ளியிருந்த வேலைக்கருவை மரத்தடியில், தாயும் குட்டியுமாய் நான்கைந்து வெள்ளாடுகள் நின்று கொண்டிருந்தன. கிளை வழியாக ஊடு பாய்ந்திருந்த வெயில், ஆடுகளின் முதுகில் சித்திரம் வரைந்திருந்தது.

கண்ணன் புரண்டு படுத்தான். இடது கையைத் தலைக்கு மேல் நேராக நீட்டியவாறு, புஜத்தில் தலை வைத்துப் படுத்திருந்தான்.

கையில் தூக்குச் சட்டியோடு நுழைந்த அவள், தெத்துப்பல் தெரிய சிரித்து, “எந்திரிச்சிட்டீங்களா, அண்ணா...?” என்றாள்.

புன்னகைத்துத் தலையசைத்தேன். பிறகு, கண்ணனின் தொடையில் ஓங்கி அடித்தவாறு, “என்னடா, இன்னும் தூக்கம் கலையலையா?” என்று அதட்டினேன். அவன் கண்கள் திறக்காமலே புரண்டு படுத்தான்.

“இந்தாங்கண்ணே...” என்றவாறு தம்ளரை அவள் நீட்டியபோது கையில் ஒரேயொரு மெட்டல் வளையல் வெளுத்துத் தெரிந்தது. இட்லிக் கடையில் கை கழுவவோ, தண்ணீர் குடிக்கவோ போட்டிருந்த, தம்ளராக இருக்க வேண்டும். அழுக்கேறி நிறம் மங்கியிருந்தது. வாயருகே கொண்டு போனபோது, பிளாஸ்டிக் நாற்றம் வீசியது.

கண்ணன் எழுந்து இரண்டு தொடைகளிலும், முழங்கைகளை ஊன்றி, தாடைக்கு முட்டுக்கொடுத்து உட்கார்ந்தான். கொஞ்ச நேரத்தில், அறை வாடகை வண்டி வாடகை என்று பல்வேறு செலவு அயிட்டங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அவள் குடத்தை எடுத்துக் கொண்டு தண்ணிக்குப் போன பின்பு சொன்னான்.

“வியாபாரத்துல தெனம் நஷ்டம் வருதுரா. சனி, ஞாயிறு லாபம் கெடைக்குது. மத்த நாள்ல முந்நூறு ரூவா மொதலு போட்டா, எரநூறுக்குத்தான் ஓடுது. நேத்து ஒன்னெயப் பாத்ததுமே அவ சொன்னா. நாம படுற கஷ்டங்கள அண்ணேங்கிட்டச் சொல்லிராதீகன்னு...”

வெகு நேரத்திற்குப் பிறகு, அவள் பச்சை நிற பிளாஸ்டிக், குடத்தில் தண்ணீரோடு நுழைந்து, பழைய இட்லிகளை அடுக்கியிருந்த சட்டிக்கு அருகில் குடத்தை இறக்கியபோது, அவளிடம் கேட்டேன், “மீந்த இட்லியெல்லாம் நட்டம்தானா?”

பட்டென்று சொன்னாள், “நட்டம் இல்லீங்கண்ணா, எல்லாத்தையும் வித்துருவோம்...”

கேள்விக்குறியாய் ஏறிட்டபோது, கண்ணன் சொன்னான், “சாயங்காலம் இட்லி சட்டியில் அடுக்கி சூடு பண்ணிருவோம். சாப்டவர்றவங்களுக்கு புதுசுல ரெண்டு, பழசுல ரெண்டுன்னு கலந்து வச்சிருவோம்.”

அவன் பேச்சை நிறுத்துவதற்குள் அவளின் வார்த்தைகள் அவசரமாய் தொடர்ந்தது, “அண்ணா, இவரு பழய இட்லிய வைக்கவே மாட்டாரு... புது இட்லியாத் தூக்கித் தூக்கி வச்சிருவாரு. நா வச்சுக்குடுக்கயிலதான் கலந்து வச்சுக் குடுப்பேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, தெருவில் அந்தச் சத்தம் கேட்டது.

டமடமவென்ற சத்தமும், “ஹோய்... ஹோய்...” என்ற கூவலும், ஏதேதோ புரியாத வார்த்தைகளும்...

திரும்பிப் பார்த்தபோது, ரோட்டோரமாக ஓர் கூத்தாடிக் குடும்பம் வித்தை காட்டிக்கொண்டிருந்தார்கள்.

கிழக்கு மேற்காக இருபதடி தூரத்தில் மூங்கில்களைப் பெருக்கல் குறி மாதிரி எதிர் எதிர் திசையில் வைத்து, அதன் மேல் கனமான நைலான் கயிறை இழுத்துக்கட்டியிருந்தார்கள். கயிறின் மீது ஏழெட்டு வயது மதிக்கத்தக்க அழுக்கு சுரிதார் சிறுமி, இயேசுநாதர் போல கைகளை விரித்து, வர்ணம் அடித்த நீள மூங்கிலை, குறுக்காகப் பிடித்தவாறு மெல்ல நடந்து கொண்டிருந்தாள்.

சற்று நேரம் வேடிக்கைப் பார்ப்பதில் கவனம் செலுத்தியிருந்த கண்ணன், இடையிடையே என் அம்மாவைப் பற்றியும், கீதாவைப் பற்றியும் விசாரிக்கத் துவங்கினான்.

அம்மாவுக்கு முதுகில் சிறிய கட்டி வந்து, பெரியாஸ் பத்திரியில் அறுவை சிகிக்சை செய்தது-கடன் கொடுத்தவர்கள் கடுமையாய் நடந்துகொள்வது-அத்தை கேவலமாய்ப் பேசியது-எப்படியாவது ஒரு வேலை தேடிக் கொள்’ என்று கீதா அழுது தீர்த்தது-ஆகிய எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, இறுதியாய் அவன் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தவாறு கேட்டேன், “இங்கே எனக் கொரு வேல கெடைக்குமாடா?”

அவன் வலது கன்னத்தைச் சொறிந்தவாறு, என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டுச் சொன்னான், “நாந்தான் காதலிச்சத் திமிர்ல, வாழ்க்கையில முன்னேறிக் காட்றேன்னு ஊர்ல சவால் விட்டு வந்துட்டேன். இப்படியே முன்னேறி ஒரு ஓட்டல் வைக்கனும்னு கனவு” என்றவன் பிறகு எதுவும் பேசாமல் அண்ணாந்து பார்த்து நீண்ட யோசனையில் ஆழ்ந்தான்.

வெளியே, வித்தை காட்டி முடித்திருந்த சிறுமி, டோலக்காரனின் உதவியோடு கீழே இறங்கினாள். அலுமினியத் தட்டை கைகளில் ஏந்தி, வேடிக்கை பார்ப்பவர்களிடம் சென்று, முறத்தை புடைப்பதுபோல், தட்டை ஆட்டி ஆட்டிக் காண்பித்தாள்.

அதைப் பார்த்ததும் “அந்த ஊருக்குப் போனா, தாயில்லாப் புள்ளையும் பொழச்சுக்கும்டா...” என்று, கண்ணன் சொன்னது நினைவில் வந்தது.

இப்போது, அதைப்பற்றி அவனிடம் கேட்க வேண்டுமென்று தோன்றினாலும், என் வேலை பற்றிய பயம் சூன்யமாய் இறுக்க அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com