Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
அக்டோபர் 2008 - மார்ச் 2009


அண்ணா நூற்றாண்டுத் திருவிழாக்கள்
புதியமாதவி, மும்பை

திருவிழாவில் தொலைந்துபோன
சிறுமியைப்போல
அறிஞர் அண்ணாவின்
நூற்றாண்டுவிழாக்
கொண்டாட்டங்களில்
தனித்து நின்று
தவித்துக்கொண்டிருக்கிறேன்.

தேடித்தேடிப் பார்க்கிறேன்
தொலைந்துபோன உறவுகளையல்ல
தொலைக்கப்பட்ட அண்ணாவை.

அண்ணாவின் எழுத்தும் பேச்சும்
எனக்கொன்றும்
விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட
வேதவாக்கல்ல.

வேதங்களையும் வேதவாக்குகளையும்
விமர்சிக்கும் வித்தையை
நான் கற்றுக்கொண்டதென்னவோ
அண்ணாவின் கம்பரசம் வழியாகத்தான்.

நான்
அண்ணா உருவாக்கிய
அமைச்சர்களின் வாரிசல்ல.
அண்ணாவை நம்பிய
தொண்டனின் கடைசி வாரிசு.
அதனால்தான்
இன்னும் என்னிடம்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
அண்ணாவின் கண்ணியமும் நாணயமும்.
என் கேள்விக்கணைகள்
உங்கள் கருத்துகளுடன்
மோதும்போதெல்லாம்
ஆத்திரப்படும் உங்களைக் கண்டு
பலவீனமாகிப்போன
உங்கள் பாசறையைக் கண்டு
வருத்தப்படுகிறேன்.

காங்கிரசு போட்ட
தடையுத்தரவு
அண்ணாவின் ஆரியமாயைக்கு
மட்டும்தான்.
தம்பிகளின்
அரசுக்கட்டில் விதித்த
தடையுத்தரவு!?

தம்பியுடையான்
படைக்கஞ்சான்.
அண்ணாவுக்குத்தான்
எத்தனையெத்தனை
தம்பியர்!
அவர் அத்துணைப் பேருக்கும்
பட்டா போட்டு
பாடிக்கொண்டிருக்கின்றன
தொலைக்காட்சிப் பெட்டிகள்.
24 மணி நேரமும்
அண்ணாவின்
நூற்றாண்டுத் திருவிழாக் கூட்டத்தில்
கவியரங்கம்
கருத்தரங்கம்
அமைச்சர்கள்
வருங்கால அமைச்சர்கள்
எல்லார் முகங்களும்
வருகின்றன
போகின்றன.
வாசிக்கிறார்கள்
பேசுகிறார்கள்
கை தட்டுகிறார்கள்.

காத்திருக்கிறேன்
எப்போதாவது
காட்டமாட்டார்களா
அண்ணா பேசுவதை?
இப்போதாவது
பார்க்க முடியுமா
அண்ணாவின் வேலைக்காரியை?
ஓரிரவு மட்டுமல்ல
அண்ணா நூற்றாண்டு விழாவின்
ஒவ்வொரு இரவிலும்
கண்ணிமைகள் மூடாமல் காத்திருக்கிறேன்...
நீங்கள் இலவசமாகத் தந்த
தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால்.

கண்ணீர்த் துளிகளின் கடைசிப் பக்கம்

இயல்தமிழ்த் தந்தை- தமிழர்
இதயத்து வேந்தன்
காஞ்சியின் கவிதை- தமிழர்
காத்திருந்த கனவு
நாடகச் சோலை- கூத்து
நடனமிடும் மின்னல்
அரசியல் வானம்- அவனுள்
ஆயிரம் சூரியன்

காவியம் படைக்காத
கம்பரசம்
வேலைக்காரி பார்க்காத
பணத்தோட்டம்
தீ பரவட்டும்
சந்திரோதயம்
ஆரிய மாயை
பிணி தீர்த்த
திராவிட மருந்து
பகுத்தறிவு விருந்து

இந்தியக் கோட்டையில்- இவன்
எழுந்து நின்றபோது
இமயம் இவனை
அண்ணாந்து பார்த்து
அதிசயித்துப் போனது
இவன்- உலகின்
எட்டாவது அதிசயம்

இந்து சாம்ராஜ்யம்- இவன்
எழுத்து முனையில்
பொடிப்பொடியானது என்றாலும்
திருமூலருக்கு
இவன்தான் தேர்ப்பாகன்
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”
திருமந்திரம்
இவன் திருநா தொட்ட பின்னே
பொதுமந்திரமாகி
புதுமந்திரமானது
ஒரு புதிய சகாப்தம்

பூமி உருண்டையைப்
புரட்டிப்போடும்
வானம்பாடிக் கவிஞருக்கெல்லாம்
இவனே வாத்தியார்

"தம்பி” என்ற
ஒற்றைச் சொல்லால்- தமிழ்
உலகையே அளந்த
"வாமன” அவதாரம்
அடடா... மன்னியுங்கள்
இவன் அவதாரங்களை வென்ற
அதிசயப் பிறவி

ஈரோட்டுப் போர்முரசே- திராவிடர்
ஈடில்லாத் தமிழ்முரசே
நினைவிருக்கிறதா அண்ணா
அந்தக் கண்ணீர்த்துளிகளின்
கடைசிப்பக்கம்
"தலைவர் அவரே” என்றாய்
"பகை வெல்லும்
துப்பாக்கி ஒன்றே” என்றாய்
அண்ணா
ஈம் உலராத
கண்ணீர்த்துளிகளை
உன் இமைகளுக்குள்
புதைத்துவிடு.

இன்று
ஊரெல்லாம் தலைவர்கள்
ஒவ்வொரு நாளும்
புதிதுபுதிதாகப் பிறக்கும்
கழகக் கொடிகள்
இதயக் கனிகள்
அத்தனையும் உன்பெயரால்.

நித்தமும் தொடரும்
அறிக்கை யுத்தங்கள்
தொலைக்காட்சி சாம்ராஜ்ய
அடாவடிச் சண்டைகள்
வாரிசுகளின் பனிப்போர்
அண்ணா
காலம் எழுதாமல் விட்ட
கண்ணீர்த் துளிகளின்
கடைசிப் பக்கம்

அண்ணா...
"எதையும் தாங்கும் இதயம் உன்னிதயம்” என்று
எவர் சொன்னாலும்
நம்ப வேண்டாம்
அந்தக் கண்ணீர்த்துளிகளின்
சாட்சியாய்
சத்தியமாய்ச் சொல்கிறேன்
"இதையும் தாங்க உன்னால் முடியாது அண்ணா”

புறநானூறு படைத்த
சங்கத் தமிழனை
எத்தனை கடிதங்களில்
எழுதிஎழுதி வளர்த்தாய்
அத்தனையும் மொத்தமாக
கடல் தாண்டித் தெரிகிறது
தெற்கே "தமிழன் படை”
எட்டிப் பார்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
அண்ணா
உன் கண்ணீர்த்துளிகளால்
மீண்டும் எழுது

"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்”
"வெற்றி நமதே” என்று


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com