Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
அக்டோபர் 2008 - மார்ச் 2009


இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அரங்கம் - உரையாடலுக்கான சில புள்ளிகள்
அ.மங்கை, நாடகவியலாளர்

அரங்கம் நேரடித் தொடர்புடைய வடிவம். பார்வை யாளர்களை ஓரிடத்தில் குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஒன்றிணைக்கும் வடிவம். ஒரு இனக்கூட்டத்தின் கூட்டு நனவிலி மனதின் படிமங்களைத் தொட்டெழுப்பும் வலுக் கொண்ட வடிவம். இன்று இக்கணம் நிகழும் நிகழ்வு களோடு நம்மைப் பிணைக்கும் வடிவம். அந்த வகையில், அரங்கத்தின் வீச்சு, அதன் மரபின் தொடர்ச்சியிலும் சமகாலத்தின் பொருத்தப்பாட்டிலும் தங்கியுள்ளது. இந்தப் புரிதலோடு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் அரங்கச் செயல்பாடுகளை அணுகும்போது நம்முன் எழும் விவாதங்களைக் கோடிட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

அருணாசலப்பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் தொகுதி வடகிழக்குப் பகுதி எனப்படுகிறது. ஆரிய, திராவிட இனக்கூறுகளில் இருந்து வேறுபட்ட மங்கோலியக் கூறுகள் கொண்ட மக்கள் வாழும் பகுதி இது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தன்மைகள் கொண்ட பகுதி. ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு மொழிபேசும் இனக்குழு (இப்ஹய்) மக்களைக் கொண்ட பகுதி.

ஒருபுறம் மெயின் லாண்ட் எனப்படும் இந்திய நாட்டுடனான உறவு, மறுபுறம் இம்மாநிலங்களுக்கிடையேயுள்ள உறவு, அவற்றைவிட முக்கியமாக ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் வாழும் இனக் குழுக்களுக்கு இடையே நிலவும் மோதல்கள் என நாளாந்தம் சிக்கலான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வரும் பகுதி. பல்வேறு தனித்தன்மைகளுடன், சமவெளிப் பகுதிகளிலிருந்து விலகியுள்ள பண்புகள் காரணமாக இந்திய அரசோடு தொடர்ந்து முரண்பட்டு வரும் இம்மாநிலங்கள் பிரிவினை கோருபவையாகக் கருதப்படும் பார்வை பொதுப்புத்தியில் உறைந்துபோன ஒன்று. அரசு விழாக்களில் இப்பகுதியின் ஆதிவாசித் தன்மைகளை ஆராதிக்கும் போக்கில் நடனங்களுக்கு இடமளித்துத் தனது பெருந் தன்மையைக் காட்டும் இந்திய அரசின் பண்பாட்டு மேலாதிக்க உணர்வு நமக்குப் பரிச்சயமான ஒன்று. தொடர்ந்த இராணுவ இருப்பு, இனக்குழுக்கள் தத்தம் உரிமைக்கென அமைத்துள்ள போராளிக்குழுக்கள் என அன்றாடம் அச்சத்தின் பிடியில் நகரும் வாழ்க்கையில் அரங்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து அணுகும்போது அதன் தீவிரத்தை உணர வேண்டியது அவசியம்.

வடகிழக்குப் பகுதியின் சமகால அரங்க முயற்சிகள் குறித்த முழுமையான புரிதலுக்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. எனவே இக்கட்டுரையின் தகவல்கள் முழுமையானவையல்ல என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். மணிப்புரி அரங்கம் இந்திய அரங்கின் மிக முக்கியப் போக்குகளில் ஒன்றாக உருவாகி உள்ளது. சுமார் இருபது நவீன அரங்கக்குழுக்கள் இயங்கும் மாநிலம் இது. பல தேசிய நாடகப்பள்ளி கலைஞர்களைக் கொண்டுள்ளது. மணிப்புரி பல்கலைக்கழகம் நிகழ்த்து கலைத்துறை, பயிற்சி, ஆய்வு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது.

அசாமில் அகோம் இனத்தின் சத்ரியா நடனம் செவ்வியல் மதிப்பைக் கோரி நிற்கிறது. பல்கலைக்கழகங்களில் நாடகம் ஒரு துறையாக அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கி உள்ளன. மொபைல் அரங்கம் எனப்படும் ஆண்டில் ஆறு மாதங்கள் அசாம் மாநிலம் முழுதும் பயணம் செய்து, இரண்டாயிரம் பேருக்கு மேல் பார்க்கக்கூடிய கொட்டகைகள் அமைத்து, இரு மேடைகள் அமைக்கப்பட்டு, காட்சி மாற்றங்களை மின்னல் வேகத்தில் நிகழ்த்தும் குழுக்கள் முக்கிய பொழுதுபோக்கு வடிவமாகத் திகழ்கின்றன. தேசிய நாடகப் பள்ளியில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு மலைப்பகுதிப் பல்கலைக் கழகத்தில் (சஉஏம) நிகழ்கலைத்துறை முதுகலை ஆய்வுப் படிப்புகளை வழங்குகிறது.

தேசிய நாடகப்பள்ளி கடந்த ஐந்தாண்டுக்குள் நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் பகுதிகளில் நாடகப் பட்டறைகளை நடத்தியுள்ளது. நாடக விழாக்களும் நடத்தி யுள்ளது. சங்கீத நாடக அகாதமி பல்வேறு கருத்தரங்கங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. மேற்கூறிய தகவல்கள், இந்திய அரசின் பண்பாட்டு நிறுவனங்கள் இப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந் துள்ளன என்பதைக் குறிக்க உதவும். அதோடு, இப்பகுதிவாழ் கலைஞர்கள் தமது கலைகளின் தனித்துவத்தைக் காப்பதில் கொண்டுள்ள அக்கறையையும் இவை காட்டுகின்றன. (இதனோடு ஒப்பிடுகையில் தமிழகத்தின் மெத்தனப் போக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியது.)

இந்திய அரங்கத்துறையில் மணிப்புரி அரங்கிற்கான தனி இடத்தை உருவாக்குவதில் கணையாலால், ரதன்தீயம் ஆகியோருக்கு முக்கியப் பங்குண்டு. இவர்களிருவரோடு லோகேந்திர ஆரம்பம், ஹாரோக், சாம் ஈபோடொம்பி ஆகியோர் எண்பதுகளின் முக்கிய அரங்கத் துறையாளர் களாக உருவாகியுள்ளனர். ரதன்தீயத்தின் சக்கரவீயூக், உத்தரபிரியதர்ஷினி போன்ற நாடகங்கள் நவீன இந்திய அரங்கத்தின் மைல்கற்கள் எனப் போற்றப்படுகின்றன. மணிப்புரி அரசியலை நேரடியாகப் பேசிய இம்பால், இம்பால், இம்பால் கரூஸி (இம்பாலுக்குப் போவோம்) நாடகங்கள் தேசிய மேடைகளை எட்டவில்லை. மணிப்புரி மொழி, மணிப்புரி அரசியல் என்பதால் அவை தேசிய அரங்கத்திற்குள் சேரவில்லை என ரதன்தீயம் குறிப்பிடுகிறார்.

கணையாலால் சமகாலச் சிக்கல்களை நேரடியாகப் பேசுவதில்லை. மனித குலத்தின் அகவயப்பட்ட பயணத்தை, மனித உடலின் பல் பரிமாணங்கள் மூலம் தேடும் அரங்கத்தை அவர் தொடர்ந்து முயல்கிறார். அவரது துணைவியாரும், இந்தியாவின் தலைசிறந்த நடிகையுமான சாவித்ரி தேவி அவரது காட்சிகளுக்கு உருவம் கொடுத்து வருகிறார். லோகேந்திர ஆரம்பம் மாக்பெத் நாடகத்தைப் படகுக்குள் நிகழ்த்தினார். இரத்தமேடை என்ற பெயரில் வழங்கப்பட்ட இந்நாடகம் தேம்ஸ் நதியிலும் நிகழ்த்தப்பட்டது.

இவர்களது அரங்க மொழி காட்சிப் படிமங்களை மனதில் தக்கவைத்து, மேடையை உலகப் பொதுவான தளத்தில் இயங்க வைக்கின்றன. கன்னடத்தில் பி.வி.காரந்த், கேரளத்தில் நாராயண பணிக்கர் ஆகியோர் குறிப்பிட்ட வடிவத்தை, செழுமையான அரங்கப்போக்கை நிலை நிறுத்தியது போலவே மணிப்புரி அரங்கமும் நிலைபெற்று நிற்க இவர்களது மேடைமொழி உதவியுள்ளது. அதே சமயம் அத்தகு வடிவத்தை இறுக்கமான வகையில் உறுதிப்படுத்தியுள்ளது. சமகாலச் சிக்கல்களை நேரடியாகப் பேசுவதில் உள்ள சிக்கல், அன்றாடம் எதிர்கொள்ளும் உயிர் அபாயம், பெருகிவரும் பொருளாதாரச் சிக்கல்கள் ஆகியவற்றை தேசிய அளவில் வெளிப்படுத்தும் முயற்சிகள் வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது. அழகியல் கூறுகள் பொங்கிவழிந்து, எதார்த்தத்தின் குரூரங்களையும் அழகாக்கிவிட்ட கொடுமை இங்கு நிகழ்ந்துள்ளது எனலாம். மணிப்புரி அரங்கம் குறித்த தனி இதழ் ஒன்றை ஸீகல் தியேட்டர் குவாட்டர்லி 1997 இல் வெளியிட்டது.

இந்தப் பின்னணியில், தொண்ணூறுகளில் இருந்து அரங்கத் துறையில் இயங்கிவரும் ரபோஜிதா கோகோய் என்ற அசாமைச் சேர்ந்த பெண் இயக்குநரின் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஜிர்சாங், தியேட்டர் குழுவின் அமைப்பாளர்; தேசிய நாடகப்பள்ளிப் பட்டதாரி; வடகிழக்குப் பகுதியின் அரசியல் மற்றும் பண்பாட்டு வெளிப்பாடுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவரைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட செவ்வி அடிப்படையில் பின்வரும் தகவல்களை முன்வைக்கிறேன்.

அசாம் மாநிலத்திற்குள் உள்ள பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே உள்ள மோதல்கள் சிரத்தையாக அணுகப்பட வேண்டியவை. போடோ இனப்போராட்டம் குறித்து நாம் நன்கறிவோம். அசாமின் ஒரு பகுதியில் வாழும் கார்பி இன மக்கள் மத்தியில் வாழ்ந்த அனுபவம் காரணமாக, அவர்களது பண்பாட்டு வெளிப்பாட்டில் அக்கறை கொண்ட ரபோஜிதா அவர்களது மொழியில் (கார்பி யோலோங்) அவர்கள் மத்தியில் புழங்கும் நாட்டார் கதையை நாடகமாக்கினார்.

கார்பி மொழியில் மேடையேறிய முதல் நாடகம் ரங்க *பார்பி ரங்பீ (2001) என்ற நாடகம். கார்பி இனத்தைச் சேர்ந்த அரசி அவர்களைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சியே இங்கு நாடகமாயிற்று. அதிகாரம் கொண்ட பிற இன அரசுகள் கார்பி இனத்தாரை அடக்கி ஆள பல வகைகளில் முயன்றனர். அவர்களது விளைபொருளான இஞ்சியிலிருந்து வெள்ளி வரை பேரம் பேசப்பட்டன. ஒருமுறை டிமாசாவில் வசித்துவந்த அரசன் வளர்த்து வந்த புலிக்குட்டி நோய்வாய்ப்பட்டது. மருத்துவர்கள் ஆலோசனைப் படி முலைப்பால் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. முலைப் பால் வழங்கும் பொறுப்பு கார்பி இனத்திடம் வந்து சேர்ந்தது.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த இளம்தாய் புலிக்குட்டிக்குப்பால் கொடுக்க வேண்டும் என்ற முடிவை ரங்க *பார்பி மீறினாள். அதற்காக அவளைப் பிடிக்க வந்த போர்வீரர்களைக் கையில் இருந்த கோடாரியால் விரட்டினாள். அச்சமுற்ற கார்பி இன மக்களிடம் அஞ்சிஅஞ்சி சாவதை விட, இதிலிருந்து மீள்வதற்கு வழி தேட வேண்டும் என அறிவுறுத்தினாள். அவளது ஆலோசனைப்படி அரசனின் படை இவர்களைப் பிடிக்க முடியாதபடி பாதைகளை மறித்து, மாற்றி அமைத்துவிட்டு மக்கள் தப்பியோடினர்.

கார்பி இன வரலாறாக, கதைப்பாடலில் வரும் கதைத் தலைவியை பாத்திரமாக்கியது இந்நாடகம். அசாம் மாநிலத்திற்குள் உள்ள பல்வேறு இனக்குழுக்களின் அடையாளத்தை முன்னெடுப்பதன் அவசியத்தை முன்வைத்து இந்நாடகத்தை இயக்கியதாக ரபோஜிதா தெரிவித்தார். தேசிய நாடகப் பள்ளியின் பயிற்சி முகாம் ஒன்று நாகாலாந்தில் 1999 இல் நடைபெற்றது. அதில் நிஷேலி என்ற நாடகம் தயாரானது. பதினான்கு நாகா இனக் குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளைக் கொண்டு இந்நாடகம் உருவாக்கப்பட்டது. சேமநாகா இனத்தில புழங்கும் நாட்டார் கதை நிகழ்த்தப்பட்டது. நாகாலாந்து இனக் குழுக் கள் இடையே உருவாக்கப் பட்டு வரும் நாகாமிஸ் மொழியில் இது நிகழ்த்தப் பட்டது.

தேசிய நாடகப்பள்ளியின் தயாரிப்பாக மேம்ஸôகேப் பிரித்வி என்ற நாடகம் 2006 இல் இந்தியில் தயாரிக்கப்பட்டது. தண்ணீருக்காக பலியாக்கப்படும் பெண் குறித்த ராஜஸ்தானி கதையை கதைக்கூற்றாகக் கொண்டு மணிப்புரியில் இரண்டாயிரம் ஆண்டிலிருந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் ஷர்மிளா சானு, மணிப்புரியின் பெண்கள் அமைப்பான மெய்ரா பைபீ குழுவின் போராட்டங்கள், பண்பாட்டு நிகழ்வுகளைப் பொட்டலமாகக் கட்டி வெளிநாடுகளில் நிகழ்த்த முன்வரும் உலக மயமாக்கலின் பண்பாட்டு நிகழ்வுகள், ஆயுத பேரம் என பல கதைகள் ஊடும்பாவுமாக வெளிப்படுத்தப்பட்டன. இந்நாடகத்தின் தலைப்பு உல்*பா இயக்கத் தலைவர்களில் ஒருவரான மெகன் கச்சோரியின் கவிதையிலிருந்து எடுக்கப்பட்டது.

வடகிழக்குப் பகுதியின் மிக முக்கியச் சிக்கலான இராணுவச் சிறப்புப் படையின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களின் அடி நீரோட்டமாகக் கொண்ட முக்கிய படைப்பாக இந்நாடகத்தைக் கொள்ளலாம். இந்நாடகம் இந்தி மொழியில் தேசிய நாடகப் பள்ளியின் கலைஞர்களால் நிகழ்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் அடையாள அரசியலின் அங்கமாக கார்பி, நாகாமிய மொழிகளில் நாடகங்களை இயக்கியுள்ள ரபோஜிதா இந்தியில், டெல்லி நகரில் வடகிழக்குப் பகுதியின் அரசியல் சிக்கல்களை மையமாகக் கொண்ட நாடகத்தை மேடையேற்றியது முக்கிய நிகழ்வாகும். மஞ்சயாத்ரா எனும் நகரும் அரங்க நிகழ்வை ஜிர்ஸôஸ் குழு 2007 இல் மேற்கொண்டது. முதல்கட்ட பயணம் ஏப்ரல் 21 முதல் மே 12 வரையில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட பயணம் ஜூன் 20 முதல் ஜூலை 5 வரை நடைபெற்றது. வடகிழக்குப் பகுதி முழுவதும் பயணிக்க முற்பட்ட அரங்க முயற்சி இது. பல்வேறு அமைப்புகளின் உறுதுணையோடு, முதன்முதலாக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

வடகிழக்குப் பகுதியினர் தமக்குள் உரையாடுவதற்கான வாய்ப்பை இம்முயற்சி தொடங்கி வைத்தது. காதா- முதல்பாடம் என்ற இந்நிகழ்வு பல பனுவல்களை இணைத்த முயற்சி. அரசியல், பொருளாதாரம், பண்பாடு என அனைத்துத் தளத்திலும் நடக்கும் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய நிகழ்வாக இது அமைந்தது. வணிகமயமாக்கும் போக்கிற்கெதிரான கனவுகளைக் காணும் அறைகூவல் இந்த யாத்திரை.
ரபோஜிதா கூறுவது: "வடகிழக்குப் பகுதிச் சிக்கல்கள் என்னுடைய சிக்கல்கள்; அவை எனக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. எனது தலைமுறையைச் சேர்ந்த பலர் இறந்துள்ளனர்; ஆயுதக் குழுக்களில் இணைந்துள்ளனர்; ஆயுதங்களைக் கைவிட்டு அரசிடம் பணிந்துள்ளனர்; அவர்களில் பலர் என்னோடு படித்தவர்கள் என் நண்பர்கள். இது எனக்குரிய சிக்கல்.”

மொழி, அரங்கவடிவம், கதைக்கரு, அரங்கப் பார்வை யாளர்கள், உலகளாவிய மனித உரிமை, ஆழமும் வீரியமும் மிக்க வெளிப்பாடு என அனைத்து வகையிலும் நம்மை உலுக்கக்கூடிய பல கேள்விகளைக் கேட்டபடி ரபோஜிதாவின் அரங்கமுயற்சிகள் தொடர்கின்றன. மேலும் தொடரும் என நம்புகிறோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com